ராஜராஜன் ஆர்.ஜெ.
இன்றைய நவீன உலகில், ஆபத்தான ஒரு அரசியல் கோட்பாடு இருக்கிறதென்றால், அது தூய்மைவாதம் தான்.
தூய்மைவாதம் என்றால் என்ன?
என் இனம் தான் உலகத்திலேயே சிறந்த இனம், பிற இனங்கள் என் இனத்திற்கு கீழானது.
என் மதம் தான் உலகத்திலேயே சிறந்த மதம், பிற மதங்கள் என் மதத்திற்கு கீழானது.
என் மொழி தான் உலகத்திலேயே சிறந்த மொழி, பிறமொழிகள் என் மொழிக்கு கீழானது.
என் நாடு தான் உலகத்திலேயே சிறந்த நாடு, பிற நாடுகள் என் நாட்டிற்கு கீழானது.
என் கொள்கை தான் உலகத்திலேயே சிறந்த கொள்கை, பிற கொள்கைகள் என் கொள்கைக்கு கீழானது.
என் சாதி தான் உலகத்திலேயே சிறந்த சாதி, பிற சாதிகள் என் சாதிக்கு கீழானது.
இதில் உலகத்தில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு தூய்மைவாதம் வேரூன்றிய ஒரு நாடு இந்தியா. அந்த தூய்மைவாத கொள்கைக்கு பெயர் சாதி. சாதியின் அடிப்படையே தூய்மைவாதம் தான். எந்த ஒரு சாதியவாதியும் தன் சாதியே உயர்ந்தது என்று கருதி கொள்வான். இதில் மேலிருந்து கீழ் வரை அனைவரும் தன்னை உயர்ந்தவன் என கருதிக்கொள்ளும் வகையில் எல்லா சாதிகளுக்கும் கீழ் ஒரு சாதி இருக்கும் வகையில் படிநிலை சமத்துவமின்மையால் கட்டமைக்கப்பட்ட ஒரு கோட்பாடு சாதி. நிற்க!
இவ்வகை தூய்மைவாத கோட்பாடுகளை காக்கும் வகையில் தோன்றும் கட்சிகள், தலைவர்கள் அனைவருமே ஆபத்தானவர்கள். இவர்கள் தங்களை இந்த உலகை காக்க வந்த ரட்சகர்களாக காட்டிக்கொள்வார்கள். நம் கண்ணுக்கு தெரியாத, அறிவுக்கு முழுமையாக எட்டாத ஒரு கனவு உலகத்தை தங்கள் வார்த்தை ஜாலத்தால் நமக்கு காட்டி நம்மை மயக்கி வைத்திருப்பார்கள். அவர்களின் அடிப்படை கொள்கையான தூய்மைவாதம் என்ற பாசிசத்தை மறைத்து வளர்ச்சி, வல்லரசு, மரபை மீட்போம், நம் முன்னோர்களின் வாழ்வை மீட்டெடுப்போம், நாதியற்ற சமூகமே நான் தான் உன்னை காக்க வந்த கடவுள் என தொடர் பரப்புரைகளால் நம்மை வசியம் செய்ய அவர்களால் முடியும்.

ஆனால்,இவ்வகை வளர்ச்சி, வல்லரசு, மரபு, முன்னோர்கள் என பேசி ஆட்சியை பிடித்த பாசிஸ்டுகள் மக்களை கொடுமைப்படுத்தியதும், கொன்றதும் தான் வரலாறாக இருக்கிறது. இதில் உலகளாவிய ஒரு உதாரணம் ஹிட்லர். தற்கால அரசியலில் இந்த வரிசையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று இதை படிக்கும் போதே உங்கள் சிந்தனைக்கு வந்திருக்கும். அவர்களை புறந்தள்ளுங்கள்.
உலகம் ஆதிக்கத்தினால் கட்டமைக்கப்பட கூடாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற மானுடத்தால் தான் கட்டமைக்கப்பட வேண்டும்.
கடைசியாக ஒன்று, இன்றைய அரசியலில் பலர் ஒரு கனவு உலகத்தை கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதி என்பவன் மிக மோசமானவன் என்று யோசிக்கும் ஒரு பெரும் தலைமுறை உருவாகி இருக்கிறது. அவர்களிடம் சொல்லுங்கள், உலகில் அப்பழுக்கற்ற கொள்கை இல்லாத மாதிரியே அப்பழுக்கற்ற மனிதர்கள் என்று யாரும் இல்லை. அப்படி யாரேனும் நான் தான் சிறந்தவன் என்று சொன்னால், அவன் மேற்சொன்ன தூய்மைவாதம் பேசுபவனாக தான் இருப்பான். அவனை கவனித்து புறந்தள்ளுங்கள்.
எவனொருவன், திறந்த மனதுடன் இருக்கிறானோ, எல்லா மக்களையும் சமமாக பார்க்கிறானோ, தன் தவறுகளை ஒத்துக்கொள்கிறானோ, மக்களை இயல்பாக சந்தித்து உரையாடும் தன்மையில் இருக்கிறானோ, அவனை கவனியுங்கள். அவன் பேசும் அரசியல் அனைவருக்குமானதா?அவனிடம் ஏதேனும் வெறுப்பரசியல் வெளிப்படுகிறதா? அவனிடம் ஏதேனும் தூய்மைவாதம் தென்படுகிறதா? என்பதையெல்லாம் பார்த்து, அப்படி இல்லையென்றால் அவனை தேர்ந்தெடுங்கள். அவன் தான் இன்றைய உலகின் நல்ல அரசியல்வாதி!
ராஜராஜன் ஆர்.ஜெ., சமூக-அரசியல் விமர்சகர்.