ஜி. கார்ல் மார்க்ஸ்

எதிர்பாராத திருப்பமாக நடந்து முடிந்திருக்கிறது பாக் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல். அரசு நிறுவனங்களின் இறுக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் மக்கள் அபிநந்தனின் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்பா, மகன், சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரன் போன்ற அவர் மீதான பிம்பங்கள் ஊதப்பட்டதில், மோடி ஊதிப்பெருக்க விரும்பிய “இந்திய பராக்கிரமம்” எனும் பிம்பம் அதன் வசீகரத்தை இழந்து மூலையில் சாத்தப்பட்டதுதான் இந்த சம்பவத்தின் துயரம்.
இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது, நாற்பது CRPF வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்திய அரசு அணுகியதற்கும், பாஜக அரசு அணுகியதற்கும் இருந்த வேறுபாடுதான். இரண்டும் வேறு வேறா என்று கேட்டால் எனது பதில் “ஆம்” என்பதுதான். இந்த வேறுபாட்டை இனம்காணுவதில், அதைக் களைவதில் மோடி காட்டிய மெத்தனமே, அவர் இன்று குறுகிப் போய் நிற்பதற்குக் காரணம்.
தற்கொலைத் தாக்குதல் நடந்தவுடனேயே, “அரசு இதற்கு பதிலடி கொடுக்கும்” என்று யூகங்களைக் கசிய விட்டார்கள். ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட கூலி நாய்களின் இரைச்சல் உக்கிரம் அடையத் தொடங்கியது.
இத்தகைய தாக்குதல்கள் நடக்கிறபோது, இதற்கு முந்தைய அரசுகள் கடைபிடித்த எந்த வழக்கமான விசாரணைப் போக்குகளையும் கடைபிடிக்காமல், அல்லது அது ஒரு புறம் நடந்துகொண்டிருக்கும்போதே, “பழி வாங்குதல் அல்லது எதிர்தாக்குதல்” எனும் சொற்களை பாஜகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்கள் வீராவேசத்துடன் உளறத் தொடங்கினார்கள். அரசு வேக வேகமாக காஷ்மீரின் விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களை கைது செய்து அந்த உளறல்களுக்கு மதிப்பு கூட்டியது.
“எந்த சட்ட முகாந்திரத்தின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடக்கின்றன” என்ற மெகபூபாவின் கவலைகளை அரசு புறம் தள்ளியது. நடந்த சம்பவத்தின் மீதான காவல் விசாரணை, ஆதாரங்களை பாக் தூதரிடம் கையளிப்பது, சர்வதேச அழுத்தம் மற்றும் சந்திப்புகள் போன்ற மரபான வழிமுறைகளைக் கடந்து, “நேரடியான தாக்குதல்” எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதன் ஊடாக, “கடும் நடவடிக்கைகளுக்குப் பெயர் போன மோடி, இந்தத் தாக்குதலை சும்மா விடமாட்டார்” எனும் எக்காளங்கள் எழுந்தன. வழக்கம் போல காஷ்மீர் பிராந்திய அரசியல் தலைவர்களின் கருத்து என்ன என்று கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை. மோடியின் பாஜக அரசு இந்த எக்காளத்தை ரசித்து அனுமதித்தது. இதுவே மோடி கால் வைத்த சுழலின் புள்ளி.
இந்த முஸ்தீபுகளுக்கு இணையாக, இந்த பயங்கரவாதத் தாக்குதலே வலதுசாரி அரசின் சதி என்றும், தாக்குதல் நடக்கும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் அதை நிகழ அனுமதித்துவிட்டு, அதையொட்டி போர்ப் பதட்டத்தை உருவாக்குவதும் அதைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதுமே காவிகளின் திட்டம் என்பதாகவும் உரையாடல்கள் உயர்ந்துவந்தன. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதைவிட உக்கிரமாக பதான்கோட் இராணுவத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அப்போது, இதே பாஜக அரசு அதை எவ்வாறு எதிர்கொண்டது எனும் உதாரணம். முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் அதே வழிமுறையைத்தான் பின்பற்றியது. நேரடித் தாக்குதல் எதிலும் ஈடுபடுவதான பிரகடனங்கள் நிகழ்த்தப்படவில்லை.
இரண்டாவது “ஏன் இந்த மாறுபாடு” என்று மக்கள் கேட்பார்கள் என்பதை இந்த அரசு கணிக்கத் தவறியது. அல்லது அலட்சியப்படுத்தியது. மக்கள் அரசின் மீது சந்தேகப்பட்டார்கள். இந்த அரசின், மூர்க்கமான நடவடிக்கைகளால் சலிப்புற்றிருக்கும் அவர்கள், இந்த போர்ப் பிரகடனத்தின் மீது தங்களது ஒவ்வாமையை வெளிப்படையாக சொல்லத் தொடங்கினார்கள். தமிழகம் அதன் முன்னோடியாக இருந்தது. இத்தகைய போக்குகள், “மோடிக்கு மக்களிடம் முழு ஆதரவு இல்லை” எனும் கருத்தாகத் திரண்டது. அதை மிகவும் தந்திரமாக இம்ரான்கான் பயன்படுத்தும் அளவுக்கு அந்த அதிருப்தியின் செறிவு இருந்தது.
ஆனாலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலை இந்த வலதுசாரி அரசு தெரிந்தே அனுமதித்தது என்கிற conspiracy theory யை நான் ஏற்கவில்லை. அதற்கு எவ்வகையிலும் சாத்தியமில்லை. ஏன் என்பது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம். ஆனால் இந்த அரசு அந்தத் தாக்குதலை தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்த முனைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அற்பத்தனமே மோடியை ஒரு சீரழிந்த அரசியல் தலைவராக நம்முன் நிறுத்தியிருக்கிறது.
நடந்து முடிந்திருக்கிற எதிர்த்தாக்குதல் தோல்விக்கு முகம் கொடுக்க முடியாமல் இன்று அவர் முடங்குவதற்கு இராணுவமோ, போர் வேண்டாம் என்று தெருவுக்கு வந்த மக்களோ, அவரை விமர்சிக்கும் மாற்றுக்கருத்து கொண்டவர்களோ காரணம் அல்ல. அதற்கு முழுதும் பொறுப்பேற்க வேண்டியவர் மோடியே. ஆனால் வழக்கம் போல அவர் அருவருப்பின் உச்சத்தை நமக்குப் பரிசளிக்கிறார்.
அவர் முன்வைத்த “சீர்திருத்தங்களின் வன்முறைகளின்” போதெல்லாம் எங்ஙனம் அமைதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை அவமதித்தாரோ அதையே இப்போதைய உணர்வுப்பூர்வமான தருணத்திலும் செய்கிறார். பாசாங்கான, நேர்மையற்ற இம்ரான்கான் போன்ற எளிய தலைமைகளின் முன்னால் கூட மோடியின் ஆகிருதி சிதறிப் போவது அதனால்தான்.
ஏனெனில் முதல் நோக்கத்தில் நேர்மையில்லாத போது, அதன் தோல்விக்குப் பொறுப்பேற்கும் நேர்மை கைகூடாது. குமைச்சலாக மாறி தன்னை எங்காவது புதைத்துக்கொள்ளும் செயலாகவே அது உருமாறும். மோடி இன்று தப்பித்து ஓடுவது தனது நேர்மைக்குறைவை மறைத்துக்கொள்வதற்காகத்தான். இதன் பொருள் அவர் விளக்கம் தர அஞ்சுபவர் என்பதோ கள்ளம் உரைக்கத் தயங்குபவர் என்பதோ அல்ல. மாறாக இதில் அவர் வாய் திறக்க திறக்க மேலும் அம்பலப்பட நேரிடும் என்கிற எதார்த்தம். அது வாக்குகளைக் குறைத்து, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் எனும் பாஜகவின் கனவை ஆவியாக்கி விடும் என்கிற அழுத்தம்.
இந்த விவகாரத்தில் என்னவெல்லாம் தவறு நிகழ்ந்திருக்கின்றன என்று பார்க்கலாம். முதலில் இராணுவத்தின் ஒப்புதல் மற்றும் தயார் நிலை. இந்தத் தாக்குதலுக்கு இராணுவம் தயாராக இருந்ததா என்பதே கேள்வியாக இருக்கிறது. அதைப் பற்றிய தகவல்கள் மெதுவாகத்தான் பொதுவெளிக்கு வரும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், “இந்தத் தாக்குதலின் பின்னால் அரசுக்கு இருந்த நோக்கம்” என்ன கேள்வியை நோக்கி நாம் செல்லவேண்டும்.
தீவிரவாதிகளின் புகலிடத்தைத் தாக்கி அழிப்பதுதான் அரசின் நோக்கம் என்றால், அது முழுக்க முழுக்க மூடத்தனம் என்று நமது இராணுவத்தின் இன்னொரு பிரிவே சொல்லும். கிடைக்கும் சொற்ப நேரத்தில், விமானத்தின் மூலம் குண்டுகளை வீசி, கொத்து கொத்தாக தீவிரவாதிகளைக் கொன்றுவிட முடியும் என்றால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் போர் இத்தனை பத்தாண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்க முடியாது.
மேலும், பாக் இராணுவத்தின் வழிகாட்டுதலில், அவர்களது உளவுப் பிரிவின் மேற்பார்வையில் நடக்கும் பயங்கரவாத முகாம்கள் அவை. நேரடித்தாக்குதல் என்பதை நாம் உலக சமூகத்திற்கு அறிவித்துக்கொண்டே இருக்கும்போது, அவர்கள் தீவிரவாதிகளை வெட்ட வெளியில் பாய் விரித்துப் படுக்க வைத்திருப்பார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இத்தனைக்கும் ட்ரம்ப் கூட, india is looking for something big என்று அறிவித்த பிறகு, தாக்கியழிக்கப்படும் அளவில் தீவிரவாதிகள் exposed ஆக இருப்பார்கள் என்று மாலன், அர்னாப் போன்றவர்கள் வேண்டுமானால் நம்புவார்கள்.
ஆக தீவிரவாதிகளை அழிப்பது நோக்கமல்ல என்றால் வேறு என்ன?
பாகிஸ்தானின் உள்ளே நுழைந்து சில குண்டுகளை வீசுவதன் வழியாக, அவர்களுக்கு நேரடியான சமிக்ஞைகளை வழங்குவது. கடுமையாக எச்சரிப்பது. அதன் மூலம் ஒருவித அழுத்தத்தை அங்கு ஆளும் அரசுக்கு உருவாக்குவது. அந்தப் பதட்டத்தின் வழியாக, பாகிஸ்தான் மீதான உலக நாடுகளின் அழுத்தத்தை சாதிப்பது. மசூத் ஆசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக இருக்கும் சீனாவின் மீது இந்த அழுத்தம் கவிவதை உறுதி செய்வது. மீண்டும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் இந்தியாவின் வழிமுறை வேறாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வது போன்றவையே இந்த நேரடித் தாக்குதலின் நோக்கங்களாக இருக்க முடியும். அது ஓரளவுக்கு நிறைவேறவும் செய்தது. இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த நேரடியான நோக்கங்களுக்கு இடையே, இதன் மூலம் தேர்தல் காலத்தில் ஆதாயம் அடைவது என்பது பிஜேபி அரசின் மறைமுகமான நோக்கம். அது வெளிப்படையாகத் தெரிய அனுமதித்ததுதான் இந்த அரசின் தோல்வி. ஆம். இந்தக் தாக்குதல் நடவடிக்கைக்கு நாம் கொடுத்த விலை அதிகம் என்பதே நாம் கவனிக்க வேண்டியது. இந்தத் தாக்குதலின் வழியாக, தேர்தலை மனதில் கொண்டு இந்த வலது சாரி அரசு செய்து பார்த்த துடுக்குத்தனத்தின் வழியாக, இந்தியா பெற்றதை விட இழந்தது அதிகம் என்றே நான் அவதானிக்கிறேன்.
இதை வெற்றி என்றும் கொண்டாட முடியாத, தோல்வி என்றும் ஒத்துக்கொள்ள முடியாத மோடியின் அபத்த மவுனத்திற்குப் பின்னால் இருப்பது இந்த ஆழ்ந்த கசப்புதான். தனது சகா நிர்மலா சீதாராமனைக் கூட “மூடிக்கொண்டிருங்கள்” என்று அவர் நிறுத்தி வைத்திருப்பது அதனால்தான் என்று நினைக்கிறேன். டோக்லாம் விவகாரத்தில், வலிமையான எதிரியான சீனாவை உறுதியுடன் எதிர்கொண்ட தனது அரசின் முந்தைய சாதனையைக்கூட இந்தத் தோல்வி மண்ணில் புதைத்துவிட்டது எனும் வருத்தமாகக் கூட இருக்கலாம்.
இதை நாம் ஏன் வெற்றியாகக் கருதமுடியாது? பிடிபட்ட நமது விங் கமாண்டரை இரண்டே நாட்களில் அவர்கள் திருப்பி அனுப்புவது நம்மீதான அச்சத்தில் இல்லையா என்ற கேள்விகள் எழலாம். இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
நாம் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்திவிட்டு வந்த மறுநாள், பாகிஸ்தான் நமது நாட்டின் உள்ளே வந்து சில குண்டுகளை வீசிச் செல்கிறது. அதை எதிர்கொள்ளும் விதமாக நாம் நிகழ்த்திய தாக்குதலில் அதிகாரப் பூர்வமாக ஒரு ஜெட்டை இழந்திருக்கிறோம். நமது விமானி சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார். பாக்கின் ஒரு ஜெட்டை தாக்கியழித்ததாக நாம் சொல்லியிருக்கிறோம். அதை பாக் மறுத்தாலும் அதில் உண்மை இருக்கவே வாய்ப்புண்டு.
இப்போது, “தாக்கும் திறன் சார்ந்த ஒப்பீட்டில், நமது பலத்தை நாம் எவ்வகையில் வெற்றிகரமாக பிரகடனம் செய்திருக்கிறோம்” என்பதுதான் அடிப்படையான கேள்வி. அதில் நாம் தோற்றிருக்கிறோம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதன் பொருள், பாக்கை ஒப்பிட நாம் திறனற்றவர்கள் என்பதல்ல, மாறாக இந்த நிகழ்வில் நமது திறனை விட நமது பலவீனத்தையே நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதுதான் நான் சொல்லவருவது. எச்சரிக்கை விடுப்பதற்கே நமது திறன்களை இவ்வளவு இழக்கவேண்டும் என்றால், நிஜமான போர் என்று வருகிறபோது வெற்றியை எட்டுவதற்கு நாம் நிறைய தரவேண்டியிருக்கும் என்று அறிவித்துக்கொண்டிருக்கிறோம்.
தங்களது திறன்களை சோதித்துப் பார்க்கும் வாய்ப்பு என்ற அளவில், இந்த சம்பவம் இராணுவத்துக்கு ஓரளவுக்கு உதவியிருக்குமே ஒழிய, தார்மீக ரீதியில், போர் வெற்றி என்னும் அளவில் நாம் சாதித்தது என்ன என்ற கேள்விக்கு பதில் என்ன? ராஜாங்க ரீதியாக சாதிக்க முடியாத எதை இந்தத் தாக்குதல் நமக்கு சாதித்துக் கொடுத்திருக்கிறது?
அடுத்து இந்தத் தோல்விக்காக நாம் வருந்த வேண்டுமா எனும் கேள்வி மிக முக்கியமானது. இங்குதான் இந்தியா ஒரு அபத்தச் சூழலில் சிக்கியிருக்கிறது. அதற்குக் காரணமும் மோடியே. இந்தியாவின் வெற்றியை தனது வெற்றியாக உருமாற்ற முயன்ற மோடியின் தவறான வழிமுறை, இந்தியாவின் தோல்வியை மோடியின் தோல்வியாக உருவகித்துக் கொண்டாடும் அபத்தத்தை நோக்கி உந்தும் பண்பாக சமூகத்தில் திரிந்தது. இது மிகவும் ஆபத்தானது. உடனடியாக களையப்பட வேண்டியது. இதுவும் இந்த அரசின் தவறான யுக்திகளால் விளைந்ததுதான். ஆனால் இதைக் கூட மிகவும் லாவகமாக மாற்றுக் கொள்கையாளர்கள் மீது சுமத்துகிறார்கள் காவிகள். அவர்கள் தங்களை தீவிரமாக மறுபரிசீலனை செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில், இந்தப் பிரிவு மனநிலையை ஊன்றியதிலும் அதை வளர்த்தெடுத்ததிலும் வலதுசாரி சித்தாந்தத்துக்கு இருக்கும் பங்கை அவர்கள் வெளிப்படையாக விவாதிக்கவேண்டும். இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், வாக்கரசியலின் பொருட்டு, தனது சித்தாந்த மூர்க்கத்தின் பொருட்டு, மக்களை பிளவுபடுத்தி வைத்ததன் பலனை மோடி இந்த இக்கட்டான நேரத்தில் அறுவடை செய்கிறார்.
இப்போது கூட, பெரும்பான்மை மக்கள் அவரை நம்பத் தயாரில்லை என்பது ஒரு தலைவராக அவருக்கு இருக்கும் மிகப்பெரிய இடர்பாடு. “என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றாதீர்கள்” என்று மன்றாடுகிறார். ஆனால் அவர் மீதான வெறுப்பு ஏன் வந்தது, அதைக் களைய அவர் என்ன செய்தார்? இதே குரலில் மக்கள் மன்றாடியபோது, பெரும்பான்மை எனும் மதர்ப்பில் அதை எதிர்கொண்டவர். விமர்சித்தவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தினார். இப்போதும் அந்த வழிமுறையில் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு போரை நடத்துவதற்கு, நவீன ஆயுதங்களை விட அதிகமும் தேவைப்படுவது, எளிய மக்களின் ஆன்மா அந்த நாட்டுத் தலைவனுடன் உறுதியாகப் பிணைக்கப்படுவதே. வரலாறு முழுக்க, வெற்றிகரமான யுத்தங்கள் அவ்வாறே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைவு என்பதன் பொருள் அதுதான். நவீன அரசியலில், “தேசத்திற்குள்ளே உள்ள மாற்று உறுப்புகளுடன் கொள்ளும் சமரசம் என்பதே ஒருமைப்பாட்டிற்கான நிபந்தனை” என்பதாக அது வளர்ந்திருக்கிறது. அவ்வாறுதான் ஒரு தேசத்தின் ஒருங்கிணைந்த திரட்சியை சாதிக்கமுடியும்.
இந்த கருத்தாக்க அடிப்படையில்தான் மோடி எவ்வளவு பாதாளத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஒரு வார கால அரசியல் நிகழ்வுககள் அதற்கான உரைகல். மோடி இந்த நாட்டு மக்களுக்கு யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் பெருவாய்ப்பு இது என்பதுதான் இதன் முக்கியத்துவம். மற்ற யாரையும் விட இது அவருக்கும் அவரது சித்தாந்தத்தை உருவாக்கி அளிக்கும் வலது சாரி தரப்புக்கும் மிக முக்கியம்.
இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற, நீங்கள் ஒரு “தரப்பாக” இருந்தால் போதும். ஒரு தரப்பின் ஓட்டுக்கள் மட்டும் போதும், ஆனால் ஒரு தலைவனாக மாறுவதற்கு, ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு, தேசத்தின் எதிரிக்கு அழுத்தமான செய்தியைச் சொல்வதற்கு, நீங்கள் அதிகாரத்திற்கு வந்த அந்த வழிமுறை மட்டும் உதவாது என்பதுதான் மோடி கற்க வேண்டிய பாடம். இம்ரான் கானுக்கு வாழ்த்தனுப்பும் மக்கள் அவருக்குச் சொல்லும் செய்தி அதுவே.
“மற்றமை உருவாக்கம்” என்பது முரண்களின் வழியாக அரசியலில் வெற்றிகளை தேடித்தரும். ஆனால் அதன் உபவிளைவாக அது தேசத்தின் ஒருமித்த குரலை சிதறடித்துவிடும். அத்தகைய காத்திரமான குரலில்லாமல் நம்மால் எளிய பிரகடனங்களைக் கூட முன்வைக்க முடியாது.
போர் என்று வருகிறபோது, தேசத்தின் பொருட்டு திறந்த நெஞ்சுடன் திரள்பவனை, பொய்களால் ஒருங்கிணைக்க முடியாது. அதற்கு விரிந்த கரங்கள் வேண்டும். சமமாகத் தழுவும் விரல்கள் வேண்டும். அவைதான் ஆயுதங்களை விட வலிமையானவை. எளிய மக்களின் யுத்தங்கள் அவ்வாறே வெல்லப்பட்டன.
பழைய ஆயுதங்களைத் தூக்கி எறியும்போது பழைய சிந்தனைகளையும் தூக்கி எறியவேண்டும் என்பதுதான் வெற்றிக்கான ஒரே வழி!
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்.
One thought on “தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!”