சதீஸ் செல்லதுரை
எனது முதல் போஸ்டிங் காஷ்மீர் புல்வாமாவில். அது பார்டர் அல்ல.. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது.
அடுத்து நான் பஞ்சாப் வந்த போது வேலியினை கடந்து ஜீரோ லைன் என நாங்கள் அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்கும் ,போதை பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் காவலுக்கு நிற்போம். புதியதாக போன நிலையில் பாகிஸ்தான் நிலத்தில் மூத்திரம் பெய்து பெரும் வெறி ஒன்றை தணித்துக்கொண்டிருந்தேன். பின்னாளில் அப்படியான காவல் நிலையின் போது ரோந்து வந்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ( பாக் எல்லை வீரர்கள்) வயதில் மூத்தவராக இருந்தும் மிகுந்த மரியாதையோடு ‘ஜனாப் நலமா’ என விசாரித்து கை குலுக்கி சென்ற போதும் அவர்கள் நிலப்பரப்பில் விளைந்த இலந்தைப்பழங்களை பகிர்ந்து சென்ற போதும் எனக்கு அந்த மூத்திர நெடி மூஞ்சில் அறைந்து சொன்னது.. நாம் நினைத்தது போல அல்ல பாகிஸ்தான்.
சில இடங்களில் 50 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் அப்சர்வேசன் போஸ்ட் இருக்கும். நமது ஆபிசர்கள் நம்மை கண்காணிக்க வரும்போது சமிக்ஜை தருவார்கள். மாலையில் தேசிய கொடி இறக்க மறக்கும் நிலையில் விசிலடித்து நியாபகப்படுத்தும் அளவு நட்பாகவே அணுகியிருந்தனர். ( அப்டிலாம் மறக்கலாமா என பக்தாள்ஸ் குதிக்க வேண்டாம். மறதியும், சூழலும் அனைவருக்கும் பொதுவானது)
ஜம்மு சாம்பா எல்லையில் எனது பட்டாலியனில் ஸ்நைப்பர் தாக்குதல் நடந்தது. எவ்வித சேதமுமில்லை எனினும் சட்டென flag meeting என வந்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கூறியது நாங்களும் நீங்களும்தான் பார்டரில் இருப்போம். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளது. உங்களுக்கும் உள்ளது. நாங்க சுடவில்லை. சுட்டது எங்களை மீறியது என தெரிவித்த போது அவர்களின் நிலை குறித்து சிந்திக்க தோன்றியது. அதன் பின்பும் முன்பும் பல துப்பாக்கிச்சூடுகள் ரேஞ்சர்சுக்கும் நமக்கும் நடந்திருந்தாலும் இந்திய சிப்பாயின் மீதான தாக்குதலுக்கு பதிலுக்குப் பதிலாக இந்தியாவும் ஸ்நைப்பர் வைத்து காத்திருந்து டவரில் நின்ற ஒரு ரேஞ்சரை சுட்டுத்தள்ளியது. அன்றைய நாள் ஈத் என்பது துரதிருஷ்டவமானது. சொல்ல வந்த செய்தி என்னவெனில் பஞ்சாப்பில் கை குலுக்கிய நாங்கள் ஜம்முவில் ரத்தக்கறையை பூசிக்கொண்டோம்.
இருவருக்குமே இயல்பாக ரத்தம் காண விருப்பமில்லை. ஆனால், ஒரு சாதாரண விளையாட்டுப் போட்டியிலேயே ஒரு டீமின் சார்பாக வெறித்தனமாக ஆட ,ஜெயிக்க முற்படும் நாம் சிறுவயதிலிருந்து எதிரி எதிரி என கற்பிக்கப்பட்ட சூழலில் மிக எளிதாக பதிலுக்கு பதில் சண்டையில் இறங்கி விடுகிறோம். இருதரப்பும் அப்படித்தான் செயல்படுகிறோம்.
பஞ்சாபில் கை குலுக்கிய பாகிஸ்தானியை ஜம்முவில் எதிரியாக சந்திக்க வேண்டிய சூழலை இன்னும் இன்னும் முன்னெடுக்கிறார்களே அன்றி அதன் அடிப்படை பிரச்சனையை தீர்க்க யாரும் முன்னெடுப்பதாக தெரியவில்லை. அதிலும் தற்போதைய சூழல் முழுக்க முழுக்க தேர்தலுக்கு தேசபக்தியையும் ராணுவத்தினரின் உயிர்களையும் பலி கொடுப்பதாகவே சந்தேகிக்க தோன்றுகிறது.
பொதுமக்களுக்கு அரசியல் அறிவை கொடுக்க வேண்டிய ஊடகங்கள் மேலும் மேலும் அவர்களை சிந்துக்க விடாமல் சிந்திக்க தூண்டாமல் ராணுவத்துக்கும், சி ஆர் பி எப்-க்கும் வித்தியாசம் கூட தெரியாமல் அள்ளித்தெளிக்கும் செய்திகளையும் காணும்போது கேவலமாக இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை, வெட்கமுமில்லை.
ப்ருத்விராஜ் நடித்த மலையாளப்படம் ஒன்று…பிக்கெட் என பெயர் வரும். ஹிந்திப்படமும் அப்படியொன்று வந்தது… பாகிஸ்தான் இந்திய வீரர் இருவரும் சந்திக்கும் ஒரு சினிமா.. கொஞ்சமேனும் யதார்த்தம் நிறைந்த அந்த சினிமாவைக் கண்டாலோ உணர்ந்தாலோ ஒவ்வொரு சீருடைக்குள்ளும் தேங்கி கிடக்கும் சமாதானத்தை புரிந்து கொள்வீர்கள். சாதாரண மக்களுக்கு தீங்கிழைக்கும் போது அவனை பயன்படுத்துங்கள் அன்றி தேர்தலுக்கும் வீணாப்போன பக்திக்கும் பலியிடாதிர்கள்.
ராணுவமற்ற உலகம் ஒன்றை நோக்கி உலக மக்கள் பயணிக்கட்டும். அப்படியான பயணம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்.
சதீஸ் செல்லதுரை, இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றுகிறார்.