சந்திரமோகன்

18.2. 1860 ல் மீனவர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து,1903 ல் பவுத்தத்தை தேர்ந்து, சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் சோசலிச முகாமில் பணியாற்றி,
1918 ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை – MLU மெட்ராஸ் லேபர் யூனியன் _ அமைத்து, 1923 ல் நாட்டிலேயே முதன் முறையாக மே தினத்தை கொண்டாடி, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியை HLKP உருவாக்கி,
பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, அதன் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சிங்காரவேலர்; நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 11.2.1946 ல் மறைந்தார்.
அண்ணாதுரை அன்று சொன்னார்: “சிங்காரவேலர் (கிருஷ்ணசாமி ) சர்மாவாக இருந்திருந்தால் மாஸ்கோவில் சிலை வைக்க வேண்டுமென்று மயிலாப்பூர் போராடியிருக்கும் !”
இன்றைக்கு சிங்காரவேலருக்கு புதுச்சேரியிலும், சென்னையிலும் சில சிலைகள் இருக்கிறது என்றாலும் … தமிழ் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் உரிய முக்கியத்துவம் பெற்றாரா என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது.
தொழிலாளர் தலைவராக …
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமாக அவர் உருவாக்கிய சென்னை தொழிலாளர் சங்கம் Madras Labour Union [ இதுதான் பிந்திய நாட்களின் சென்னை பி & சி மில் தொழிலாளர் சங்கம் ] துவங்கி …. தென்னிந்திய , வட இந்திய இரயில்வே தொழிற்சங்கத்தை கட்டி காப்பாற்றியது வரையில் … சிங்காரவேலர் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் ஆவார். தொழிற்சங்க இயக்கத்தில் பலருக்கும் அவர்தான் வழிகாட்டி!
கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பாளராக…
1920 களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், (குறிப்பாக பம்பாய், கல்கத்தா, பெசாவர், கான்பூர், சென்னை போன்ற இடங்களில் ) கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போது, தமிழ் நாட்டில் சிங்காரவேலர் அதன் கருவாக, முதல் கம்யூனிஸ்ட் ஆகத் திகழ்ந்தார்.
ரஷ்யாவில் நடைபெற்ற போல்ஸ்விக் புரட்சி கண்டு பீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் முளையிலே கிள்ளி எறிய விரும்பியது. கம்யூனிஸ்ட் அகிலத்துடன் நேரடியாக, கடிதம் மூலமாக தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை உருவாக்கி பொய் வழக்கு 8 பேர் மீது போட்டது .அதுதான் கான்பூர் போல்ஸ்விக் சதி வழக்கு என்பதாகும். 1923, பிப் 27 ல், எம்.என்.ராய் துவங்கி சிங்காரவேலர் வரை வழக்கு பாய்ந்தது.
அதற்குப் பிறகு, நாடு முழுவதுமிருந்து பங்கேற்ற 500 பிரதிநிதிகளுடன்,1925 டிசம்பர் 26 ந் தேதி கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவிற்கேற்ற புரட்சிப்பாதையில்….
பெரியார், ஜீவானந்தம், திரு. வி.க, நீலகண்ட பிரமச்சாரி எனப் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தார். புரட்சி பாதையில் நம்பிக்கை கொண்டு இருந்தார் ; பல்வேறு ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்து இன்னல்களை சந்தித்தார்.
கான்பூர் முதல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலேயே, ரஷியாவில் இருந்தது போன்று ஒரு போல்ஸ்விக் கட்சியை கட்ட முடியதென்றும் “இந்திய நிலைமைகளுக்கேற்ப கட்சி உருவாக்க வேண்டும் ” என வலியுறுத்தினார்.
பிந்திய நாட்களில் சமதர்ம கட்சியும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் கரங்கோர்த்து செல்ல வேண்டுமென விரும்பினார். ஈரோட்டு திட்டம் வாயிலாக, 1930 களில் சுயமரியதை சமதர்ம கட்சிகள் சிங்காரவேலர் _ பெரியார் தலைமையில் கரங்கோர்த்து பயணித்தது. மக்களிடையே நல்லதொரு வரவேற்பும் இருந்தது. ஜஸ்டிஸ்/நீதி கட்சியை முதலாளிகள் – நிலச்சுவான்தாரர்களின் கட்சி எனவே சிங்காரவேலர் வரையறுத்தார்.
ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தாக்குதல், தடையை தொடர்ந்து, சுயமரியாதை சமதர்ம கட்சி மீதும், பெரியார் மீதும் தாக்குதல் வந்தது. அரசின் அடக்குமுறை மற்றும் ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பணக்காரர்கள் கொடுத்த நெருக்கடியும் இணைந்து கொள்ள பெரியார் விலகிச் சென்றார்.
சிங்காரவேலரின் இந்த அரசியல் முயற்சி கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டிய அனுபவம் ஆகும்.
சிங்காரவேலருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறதா?
சிந்தனை சிற்பி, தலைசிறந்த வழக்கறிஞர், தொழிற்சங்க தலைவர், தொழிலாளன், லேபர்கிசான், கெசட் என்ற தமிழ் & ஆங்கில பத்திரிகைகளை நடத்தியவர், பகுத்தறிவு, பொதுவுடமை சார்ந்து பல நூல்களை எழுதியவர், மொழிபெயர்த்தவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் பணியாற்றியவர்,
மே நாள் கொண்டாடியதால் வீட்டை ஆங்கிலேயரிடம் இழந்தவர். இன்னும் பல சிறப்புகள் இருப்பினும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உரிய வகையில் அவர் அங்கீகரிக்கப் படுகிறாரா என்ற கேள்வியும் விவாதிக்கப் படுகிறது.
பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
ஏற்றத்தாழ்வு, தீண்டாமை இழிவை கற்பிக்கும் இந்திய சாதீய சனாதான அமைப்பு மீது கொண்டு இருந்த வேறுபாடுகள் காரணமாக, சிங்காரவேலர் 1900 களின் துவக்க காலத்தில் பவுத்தம் நோக்கி ஈர்க்கப்பட்டார். சென்னை மகாபோதி சொஸைட்டியை, அனகாரிக தர்மபாலா & கர்னல் ஆல்காட் உதவியுடன் நிறுவியதில் முக்கிய பங்கு வகித்தார். 1903 இலண்டனில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் பங்கேற்றார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் சமதர்ம கட்சி இணைந்து பயணிக்க வேண்டும் என்பது அரசியல் ரீதியாக அவர் எடுத்த முக்கியமான முன் முயற்சியாகும். ஆனால், பெரியார் போல பார்ப்பனீயத்தை மூர்க்கத்தனமாக அவர் தாக்கவில்லை. அன்றைய பாரம்பரியமான கம்யூனிஸ்டுகளைப் போல சமூகத்தை மதிப்பீடு செய்வதில் பொருளாதார அடிப்படை முக்கியமானது எனவும் கருதினார்; எனினும், இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பு இயக்கத்தின் அவசியத்தை அங்கீகரித்து இருந்தார்; அதற்காகவும் செயல்பட்டார்.
இந்தி திணிப்பை எதிர்த்தார் ; “இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும் ” என்றார். பிளவுபடாத, ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர், தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் இன்றைக்கு உரியவகையில் போற்றப்படுகிறாரா? என்பது குறிப்பாக தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.
இந்திய உபகண்ட கம்யூனீஸ இயக்கத்தை வளர்த்துச் செல்லல் தொடர்பாக இரு தனித்துவ அம்சங்கள் உண்டு. ஒன்று- சாதியம் , மற்றையது -தேசியம். சாதியம் வேறெங்கணும் இல்லாதது. இந்திய உபகண்டத்திற்கு மட்டும் தனித்துவமானது. ஆனால், தேசியம் அவ்விதமல்ல. கம்யூனிஸத்தின் மூலோபாய விவகாரங்களை வளர்த்தெடுத்த ருஷ்யா எதிர்கொண்ட பல தனித்துவ பிரச்சனைகளில் தேசியம் ஒன்று. ஆனாலும் இந்தியத் தேசியம் ருஷ்யாவின் தேசிய இனச்சிக்கலைவிட வேறுபட்டது. இங்கு அவ்விதமல்ல, அவை முதலாளித்துவ ஜனநாயக எதிர்ப்புத்தன்மை கொண்டவை, ஏகாதிபத்தியங்களின் எடுப்பார்கைப்பிள்ளைத் தன்மை கொண்டவை.
LikeLike