கண. குறிஞ்சி
கடந்த 10 ஆண்டுகளாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவாகத் திருப்பூர் வழக்குரைஞர் அருமைத் தோழர் செ. குணசேகரன் அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
திருப்பூரிலுள்ள தனது வாழ்விடத்தையே இதுவரை கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லமாக மாற்றிச் சாதி மறுப்பு இணையர்களுக்கு ஆதரவு நல்கி வந்தார்.
இணையர்களைப் பெற்றோர் மற்றும் உறவினர்களது தாக்குதலிலிருந்து பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தருவது மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வது எனக் காத்திரமான பங்களிப்பைத் தோழர் செ.கு. தொய்வின்றி வழங்கி வந்தார்.
மேலும் ஆண்டுதோறும் காதலர் நாளான பிப்ரவரி 14 அன்று, சாதி மறுப்பு இணையர்களின் குடும்பங்கள் சந்திப்பு, இணை ஏற்பு மற்றும் இணை தேடும் திருவிழாவையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.
தவிரவும், ஆணவக்கொலை பாதுகாப்புப் படை ஒன்றையும் அவர் உருவாக்கி உள்ளார். தமிழகம் முழுவதும் சாதி ஒழிப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவு தரக் கூடிய வழக்குரைஞர்களை இதன் பொருட்டு ஒரு வலைப்பின்னலாக அவர் ஒருங்கிணைத்து உள்ளார். அவர்களது தொடர்பு எண்களை அனைவரும் அறியும் வண்ணம் பரப்புரை செய்து வருகிறார்.
திருச்சி காவலர் குடியிருப்பில் சாதி மறுப்பு இணையர்களுக்காகவே “கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லம் ” எனப் புதிதாக ஒரு இல்லத்தை உருவாக்கி உள்ளார். அதன் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் இன்று கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். அந்த சமயத்தில் அவர்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் இல்லாமல் அல்லலுக்கு உள்ளாகின்றனர். அப்படிப்பட்ட நெருக்கடியான தருணத்தில் இத்தகைய பாதுகாப்பு இல்லம், அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மேலும் அவர்களது பாதுகாப்பிற்காக ஓய்வு பெற்ற காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லங்கள் அரசு சார்பாகப் பஞ்சாப்பில் நிறுவப்பட்டுள்ளன. இப்பொழுது தனிப்பட்ட முறையில் வழக்குரைஞர் செ.கு. திருச்சியில் உருவாக்கி உள்ளார்.
10 இலட்சம் ரூபாய் செலவில் “ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை” சார்பாக நிறுவப்பட்டுள்ள இதற்குச் சமூக நலத்துறையிடமிருந்து அங்கீகாரம் பெற உரிய முறையில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லங்கள் தமிழகம் முழுவதும், அரசால் நிறுவப்பட வேண்டும்.
சாதி ஒழிப்பையே தனது முக்கியச் செயல் திட்டமாகக் கொண்டு களமாடி வரும் தோழர் செ.கு. அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவராவார்.
கண. குறிஞ்சி, செயல்பாட்டாளர்.
மேலும் அவர்களது பாதுகாப்பிற்காக ஓய்வு பெற்ற காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.????????????????
LikeLike