‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ்.
கேள்வி : ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற உங்களுடைய நூலை வாசித்து விட்டேன். கடின உழைப்பின் ஊடாக, பல சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உள்ளீர்கள். அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக இருக்கிறார்; ஆதர்சம் தருகிறார். பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் அவரை விமர்சித்து இப்போது புத்தகம் எழுத வேண்டிய அவசியம் என்ன?
பதில் : அம்பேத்கர் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். நீங்கள் சொல்லுவதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அம்பேத்கரை பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ஆவணப்பூர்வமாக அணுகவில்லை. அதே சமயம் அம்பேத்கர் பற்றி பல விமர்சனப்பூர்வமான நூல்கள் ஏற்கனவே வந்துள்ளன. இது ஒன்றும் முதல் நூல் அல்ல. இங்கும் கூட எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் ‘அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான்’ என்று கூறியிருக்கிறார். அவரும் தலித்திய ஆய்வாளாராக இருக்கிறார். டெல்டும்ப்டேவின் நூல்களை தமிழாக்கம் செய்கிறார். ஆய்வுத்தளம் இப்படி இருக்க, இவர்கள் ஏன் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அம்பேத்கருக்கு ‘மார்க்சிய நூட்கள் கிடைக்கவில்லை’ என்று, ஏன் சொல்லுகிறார்கள் என்பதுதான் என் கேள்வி. அம்பேத்கர் குறித்த பல ஆய்வுநூல்கள் வருவதற்கான அடிப்படையை இவர்கள் ஏன் செய்யவில்லை. பௌத்தரை கடவுளாக மாற்றிவிட்டார்கள். விடுதலையை பௌத்தம் தராது. அதனால்தான் இந்த நூலே பிறக்கிறது.
அதற்கு முன்னதாக ரங்கநாயகம்மா நூலை (சாதியப் பிரச்சினைக்கு புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை) இவர்கள் அணுகிய விதம் என்பது முக்கியமானது. விமர்சனம் என்று வந்துவிட்டாலே இவர்கள் ஏன் பதட்டம் அடைகிறார்கள். மார்க்ஸ் இறந்து 200 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மார்க்சியத்தை சிதைத்தும், திரித்தும், தத்துவம் போதவில்லை என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளன. மார்க்சியவாதிகள் யாரும் பரபரப்பு அடையவில்லை; பதட்டம் அடையவில்லை. அதனை தத்துவார்த்த ரீதியாக எதிர் கொண்டுள்ளனர். மார்க்சியம் பெண்ணியத்தை பேசவில்லை, சூழலியலை பேசவில்லை என்று பல விமர்சனங்கள் வந்துள்ளன. இதை எதிர்த்து மார்க்சியர்கள் சமர் புரிந்துள்ளனர். மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது என்று விவாதிக்கிறார்கள். ரங்கநாயகம்மா நூல் தமிழில் முதலில் வந்தது. அது மொழிபெயர்ப்பு நூல். இப்போது என் நூல் வந்துள்ளது. அதற்கு ஏன் வசைகளையே பதிலாக சொல்லுகிறார்கள்.
அம்பேத்கரது எழுத்துக்களைக் காலவரிசைப்படி தொகுக்கவில்லை. உதாரணமாக பூனா ஒப்பந்தம் முடிந்தவுடன் அதனைப் பாராட்டுவார். ஆனால் பிறகு பூனா ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டோம் என்பார். கலப்புத் திருமணத்தை ஆதரிப்பார். வேறு ஒரு இடத்தில் கலப்புத் திருமணம் பெரிதாக ஒன்றும் செய்துவிடாது என்பார். இதில் எது அவரது கருத்து? எது அவர் இறுதியாக சொன்ன கருத்து என்ன என்று நமக்குத் தெரிய வேண்டாமா? அவரது நூல்களை காலவரிசைப்படி தொகுத்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
அம்பேத்கரை அரசியல் நிர்ணயசபை தலைவர் என்பார்கள், தேசியத் தலைவர் என்பார்கள். ஆனால் அவரை விமர்சித்தவுடன் எங்கள் சாதித் தலைவரை எப்படி விமர்சிக்கலாம் என்று சொல்லத்தொடங்கிவிடுவார்கள்.

கேள்வி: அப்படி என்றால் சமூக விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் புறக்கணித்து விட முடியுமா?
பதில்: அம்பேத்கர் தலித் அரசியலை மையப் பகுதிக்கு கொண்டு வந்தவர். அம்பேத்கரை விட்டுவிட்டெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நாம் பேச முடியாது. அந்தக் கவனமெல்லாம் எனக்கு இருக்கிறது. மகத்தான பங்களிப்பு அவருடையது. ஆனால், அதற்கான விளைச்சல்கள் என்ன ? என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கேள்வி.
அம்பேத்கரை மகாத்மாவாக அழைக்கலாமா என்று சொல்லுகிறார்கள். எனவே, அந்த சட்டகத்துக்குள் என் கேள்வியை வைக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் ஆளும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு பத்து நிமிடம் கூட அவர் ஆட்படவில்லை. அவரை நான் எப்படி மகாத்மா என்று அழைப்பேன். தங்கள் ஆளுகைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவராக அம்பேத்கரை ஏன் பிரிட்டிஷ் அரசு ஏன் நினைக்கவில்லை. அவருடைய நோக்கம் அற்புதமான நோக்கம். அவருடைய நோக்கங்களையோ, எண்ணங்களையோ நான் தவறு சொல்லவில்லை. ஆனால் போய்ச் சேர்ந்த வழிகள் எல்லாம் தவறுதலாகவே இருக்கின்றன. அவருடைய தொகுப்பு நூட்களை படித்தாலே தெரியும். அவருடைய முடிவுகள் அனுமானங்கள் அடிப்படையில் வைக்கப்பட்டவை.
கேள்வி : நீங்கள் தலித்தாக இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் என்கிறார்களே? ஆதிக்க சாதி மனோபாவம் என்கிறார்களே இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : முதலில் தங்களை தலித்தாக நினைக்கிற அறிவுஜீவிகள் ஏன் அம்பேத்கர் குறித்து ஆவணப்படுத்துகிற வேலையைச் செய்யவில்லை. இரண்டாவது நான் என்னுடைய செயல்பாடுகளில் எப்போதாவது ஆதிக்கச்சாதி மனநிலையோடு செயல்பட்டு இருக்கிறேனா? ஆதிக்கசாதிக்கு ஆதரவாக நான் எதுவும் எழுதியுள்ளேனா? ஒருவன் மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்ட பிறகு அவன் எழுத்துக்களைப் பார்க்காமல் அவன் சாதியைப் பார்ப்பது ஆதிக்கப் பார்வை. இதுதான் பார்ப்பனக்கூறு. இது எங்கே போய் முடியும் என்றால் அம்பேத்கர் எழுத்தை ஒரு தலித் எழுத்தாக பார்ப்பதில் முடியும். இவர்கள் எனக்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு அம்பேத்கருக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
இந்திய தத்துவ மரபில் 80 சத நூல்கள் இறைமறுப்பு நோக்கம் கொண்ட நூல்களே. நான் சமஸ்கிருத நூல்களையும் சேர்த்துதான் சொல்லுகிறேன். பார்ப்பனியத்தை தோலுரித்துக் காட்டியவர்களில் பெரும்பாலர் பார்ப்பனர்களே. அவர்களை இவர்கள் எப்படி பார்ப்பார்கள்.
ஆதிக்கச் சாதியாக இருப்பவர்கள் அம்பேத்கரை பாராட்டிவிட்டால் தலித் விடுதலையாளராகவும், விமர்சித்து எழுதிவிட்டால் ஆதிக்கச் சாதியினராக முத்திரை குத்துவதும்தான் இவர்களின் தூய பார்ப்பனியமாக இருக்கிறது. வாக்குவங்கி அரசியலில் தலித் தலைவர்கள் கூட்டணி வைக்கும் போது அவர்களின் சாதி குறித்து இவர்கள் பேசுவது இல்லையே. அம்பேத்கரை பெருமளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது கம்யூனிஸ்டுகளும் இடைநிலைச்சாதியனரும்தான் என்று எஸ்.வி.ராஜதுரை சொல்லுகிறாரே? கம்யூனிஸ்டுகளும், என்சிபிஎச் போன்ற கம்யூனிஸ்டு பதிப்பகங்களும்தானே இதை செய்தன. அம்பேத்கரை பாரட்டுபவர்களைப் பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை. ஒரு நூலை ஆய்வாளன் எழுதிய நூலாக பார்ப்பதா ? அல்லது அவன் சாதியைப் பார்ப்பதா?
இந்த நூலைப் படிப்பதனால் இவர்களின் பிழைப்புவாதத்திற்கு இடைஞ்சல் வருகிறது. அதனால்தான் இதனை நான் தலித் அடையாள அரசியல் என்று சொல்லுகிறேன்.
கேள்வி: தலித் அடையாளத்தை மையப்படுத்தி பேசுகிற விஷயம் நல்லதுதானே ? இதை ஏன் தவறாகப் பார்க்க வேண்டும்.
பதில்: அடையாள அரசியலில் இருந்துதானே இதற்கான கேள்வியே வருகிறது. கம்யூனிஸ்டுகள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.’ பார்ப்பன கம்யூனிஸ்டுகள்’ என்று பேசுகிறார்கள்.பெரியார் தலித்துக்களைப் பற்றி யோசிக்கவே இல்லை என்ற குரல் எங்கிருந்து வருகிறது. அடையாள அரசியலை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியானால் இடைநிலைச் சாதியினர் தங்கள் சாதி குறித்துப் பேசுவார்களே? இப்படிப்பட்ட பார்வை சாதிப் பார்வைக்கு உதவும் அடையாள அரசியலாகத்தான் இருக்குமே ஒழிய அது எப்படி சுதந்திர அரசியலாக இருக்க முடியும். நான் ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். அம்பேத்கரை புகழ்ந்து எழுதியவர்களைப் பார்த்து உங்கள் சாதித் தலைவர்களை புகழ்ந்துவிட்டு உங்கள் சாதி அம்பேத்கரை புகழுங்கள் என்று சொல்லுவார்களா ? இதில் ஏதும் logic இருக்கிறதா? நூல் குறித்துப் பேசாமல் பார்ப்பனியம் குறித்து ஏன் பேசுகிறார்கள். இவர்கள் தலித் பார்ப்பனர்களுக்கான மனநிலையை வைத்துள்ளார்கள். அதனால்தான் இவர்களை தலித் பார்ப்பனர்கள் என்று சொல்லுகிறேன். ஒரு சில தலித் அறிவுஜீவிகள் பார்ப்பான் புத்தி பார்ப்பான் புத்தி என்று சொல்லும் போது, மற்ற சாதி புத்திகளும் தானாகவே வந்து விடும்தானே ? பிறப்பின் அடிப்படையில் ஒரு புத்தி இருக்கும் என்பது அசல் பார்ப்பனியம் இல்லையா ?
கேள்வி: இந்த புத்தகத்திற்கு நீங்கள் எவ்வளவு காலம் உழைத்தீர்கள் ?
பதில் : எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் உழைத்து இருப்பேன். மற்றபடி நான் தொடர்ந்து வாசித்து வருபவன்.
கேள்வி: நீங்கள் எதுவும் அரசியல் கட்சியில் இருக்கிறீர்களா ?
பதில் : இளவயதில் மூன்று ஆண்டு காலம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், இளைஞர் பெருமன்றத்திலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். மாவட்ட அலுவலக ஊழியனாகவும் இருந்திருக்கிறேன். சென்னை வந்த பிறகு ஆறுமாத காலம் தாமரையில் பணியாற்றி இருக்கிறேன். இப்பொழுது எந்தக் கட்சியிலும் இல்லை. வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: உங்கள் சினிமா அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
பதில்: என் வாழ்நாள் தோழி கொற்றவை மூலம் சசிகுமார் அறிமுகம் கிடைத்தது. கிடாரி,அசுர வதம் படங்களில் நடித்தேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்.
கேள்வி: உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு க.சந்தானம், மொழிபெயர்ப்பாளரும்,மார்க்சிய ஆய்வாளரான கோவை.எஸ்.பாலச்சந்திரனை அழைத்து உள்ளீர்கள். இருவருமே இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர்கள். அதற்கு ஏதும் விசேஷமான காரணம் உண்டா?
பதில் : தோழர் கோவை பாலச்சந்திரன் தத்துவ அளவிலும் இலக்கியத்திலும் தேர்ந்தவர். அவருடன் பலமுறை விவாதித்திருக்கிறேன். கற்றிருக்கிறேன். மிகுந்த வாசிப்பும் களச் செயல்பாடும் கொண்டவர். அதே போல்தான் தோழர். க.சந்தானம் அவர்களும். கட்சியில் பணிபுரிந்த போது எனக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தவர். இவர்கள் இருவருமே கறாரான தத்துவப் பின்புலத்தைக் கொண்டவர்கள். எனவே இவர்களை அழைத்தேன். மற்றபடி கட்சி வித்தியாசமெல்லாம் எனக்கு இல்லை.
கேள்வி: மார்க்சிஸ்ட் கட்சியை, எம்.எல்.கட்சியையோ சார்ந்த யாரையும் அழைக்கவில்லையே?
பதில் : ரங்கநாயகம்மா புத்தகங்களை தெலுங்கில் உள்ள மார்க்சிய கட்சி பதிப்பகம் இன்றும் விற்பனை செய்து வருகிறது. அவருடைய கட்டுரைகளை மார்க்சிஸ்ட் கட்சி நாளிதழ் இன்றும் வெளியிடுகிறது. ஆனால் இங்குள்ள பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த சிலர் குழுவாதச் செயல்பாடோடு அவதூறுகளை பரப்பினர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றதோடு, அங்கு அது அடுத்த அம்பேத்கரைக் கூட அவசரத்தில் கண்டெடுத்த நிலைமையும் நடந்தது. அவர்களைத் தவிர ஏன் மற்றவர்களுக்கு கருத்துரிமை கிடையாதா? அவர்கள் வலதுசாரிக்கு எதிரான கருத்துரிமையைத்தான் ஆதரிப்பார்களா? தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி நிகழ்வில் எஸ்.வி.ராஜதுரையை ‘மார்க்சிய அறிஞர் ‘ என்று அழைப்பிதழில் போட்டு இருந்தார்கள். எஸ்வி.ராஜதுரையை திரிபுவாதி என எஸ்.தோதாதிரி எழுதிய கட்டுரை செம்மலரில் வெளியாகி இருக்கிறது. பிரகாஷ் காரத்திற்கும், டபுள்யூ.ஆர்.வரதராஜனுக்கும் அரசியல் அறிவு குறைவாக இருக்கிறது என எழுதியவர். அவர் எப்போது மார்க்சிய அறிஞரானார் என்று நான் கேள்வி கேட்டேன். என்னை கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். அப்போது அங்கு இருந்த தமிழ்ச் செல்வனும், எஸ்.ஏ.பெருமாளும் மார்க்சிய அமைதியோடு இருந்தனர்.. எஸ்.வி.ராஜதுரை பேசுவது பிராங்க்பர்ட் மார்க்சியம்தானே என்று தி.சு.நடராசன் அங்கேயே பேசியதாக தமிழ்ச்செல்வன் பின்னர் கூறினார். மேலும் ரங்கநாயகம்மா நூல் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக கி.இலக்குவன் அவர்கள் மிக மோசமான ஒரு பொய்யை பொதுத்தளத்தில் வைத்து, அதற்கு பதிலும் எழுதியிருந்தேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், குழுவாதத்தை இலக்கியமாகவும், சார்பை முன்னெடுப்பவர்கள் கோலோச்சும் இடமாகவும் அது இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ரங்கநாயகம்மா புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தில் வைத்து விற்பதா வேண்டாமா என்பது அங்கு தனிநபர் முடிவாக இருந்தது. முரண்பாடுகளை தனிநபர் ரீதியாகப் பேசும்பொழுது என்னால் வேறு என்ன செய்ய முடியும்.
கேள்வி: புத்த மதம் ஒப்பீட்டளவில் முற்போக்கான மதம் தானே! அதை ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?
பதில்: பார்ப்பன கம்யூனிஸ்டுகள் என்றும், பெரியாரை பொம்பிள பொறுக்கி என்றும் சொல்லும் தைரியம் எப்படி அவர்களுக்கு வந்தது. இதைத்தான் நான் என்னுடைய நூலில் கேள்வி கேட்கிறேன். இந்து மதத்தை எப்படி வரையறை செய்வீர்கள். இங்கு சிறுதெய்வ வழிபாடுகள் உண்டு. ஆனால் அம்பேத்கர் கிருஷ்ணனை கடவுளாக வைக்கிறார். இது அனுமானத்தின் உச்சமாகும். பகவத் கீதையை எத்தனை பேர் படிக்கிறார்கள்.பௌத்தம் வைதிக பௌத்தம், அவைதீக பௌத்தம் என்று இல்லையா? காஞ்ச அய்யலய்யா புத்தரை, அம்பேத்கரை, கார்ல் மார்க்சை இறைதூதர் என்று அடித்துக் கூறுகிறாரே. இதற்கான காரணங்கள் என்ன..?
கேள்வி: அனைத்து அறிவுஜீவிகளையும் கேள்வி கேட்கிறீர்களே?
பதில்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாக, தத்துவரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை. அ.மார்க்ஸ் ,வ.கீதா இருவரும் காந்தி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அம்பேத்கர் பற்றி எழுதவில்லை. ந.முத்துமோகன் மூளை களவாணித்தனம் செய்கிறார். எந்த அறிவுஜீவியும் செய்யக் கூடாத ஒன்றை செய்கிறார். அம்பேத்கரின் பௌத்தமும், அயோத்திதாசரின் பௌத்தமும் ஒன்று என்று கூறுமளவுக்குச் சென்றதோடு, ஒரே கட்டுரையில் பெயரை மட்டும் மாற்றிப் போட்டு எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு அறிவுஜீவி செய்யக் கூடாத செயல்கள். மார்க்சியர்கள் தத்துவ தளத்தில் மாபெரும் உழைப்பைக் கொட்டியவர்கள். ந.முத்துமோகன் உழைக்க மறுப்பது ஏன் ?
கேள்வி : கி.வீரமணியைப் பற்றி கூட விமர்சித்து எழுதி யிருக்கிறீர்களே?
பதில்: அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்வி கி.வீரமணி மொழிபெயர்ப்பில் வெட்டப்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலின் முன்னுரை பெரியார்தாசன் மொழிபெயர்ப்பில் வெட்டப்பட்டுள்ளது. (இந்த முன்னுரையை அம்பேத்கரை எழுதவில்லை என்பது இன்னொரு செய்தி).இது போன்ற நழுவல்வாதங்கள் எல்லாம் தேவையில்லை. இது எப்படி இறைமறுப்பு பௌத்தமாகும். அம்பேத்கர் எங்குமே நவயான பௌத்தம் என்று பேசவில்லை. அம்பேத்கர் புத்தரின் 32 அங்கலட்சணங்களை விதந்தோதுகிறாரே? புத்தரின் ஆணுறுப்பு ‘உறைபோட்டு ‘ இருந்தது என்கிறாரே? அதோடு மட்டுமல்லால், அவ்வுறுப்பை சிலருக்கு மாயம் செய்து காட்டி தன்னை ததாகதராக நிரூபித்தார் என்கிறாரே? இவையெல்லாம் எப்படி பகுத்தறிவாகும். ஆனால், ஒன்றை சொல்கிறேன் மேலே நான் விமர்சித்த முத்துமோகனோ, ராஜதுரையோ, அ.மார்க்ஸோ, வ,கீதா உட்பட யாவரும் மதவாதத்திற்கு எதிராக உறுதியாக நின்றவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் அவர்களது சார்பையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
கேள்வி: அம்பேத்கர் மகர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்லுகிறீர்களே?
பதில்: ஆமாம். மத மாற்ற முடிவு உட்பட பல முக்கியமான முடிவுகளை அம்பேத்கர் மகர் சாதிக் கூட்டத்தில்தான் அறிவித்தார். மாங்க்குகள், சாம்பர்கள் சாதி குறித்து அவரது பார்வை சரியானதாக இல்லை.
கேள்வி: அருண்சோரி Worshiping false gods* என்ற நூலை எழுதி யிருக்கிறாரே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : அந்த நூலை நான் படித்தது இல்லை. தமிழில் வந்திருக்கிறதா?

கேள்வி: அம்பேத்கரை இந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்றனரே?
பதில்: அதற்கான கருத்தியலை அம்பேத்கரே வழங்கியிருக்கிறார். அம்பேத்கரிடம் உள்ள கம்யூனிச வெறுப்பும், இஸ்லாமியர்கள் குறித்து அவர் முன்வைத்துள்ள சில பதிவுகளும்தான் அவரை இந்துத்துவர்களுக்கு உகந்தவராக மாற்றியிருக்கிறது. மேலும் அம்பேத்கரின் பௌத்தமும் மதவகைப்பட்ட புராணங்களை முன்னெடுக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் நாம் எதை எதிர்பார்க்க முடியும். ஆர்எஸ்எஸ் தனது இறை வணக்கப் பாடலில் எப்போதோ அம்பேத்கரை இணைத்துக் கொண்டு விட்டது. நான் ஏற்கனவே கூறியதுதான், இந்துத்துவ அம்பேத்கர் சாத்தியம், இந்துத்துவ காந்தியோ, இந்துத்துவ பெரியாரோ சாத்தியமில்லை. காந்தியின் புகைப்படத்தைக்கூட அவர்கள் இன்னமும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேள்வி : நீங்கள் வேறு எதுவும் எழுதியிருக்கிறீர்களா?
பதில் : நான்கு கவிதை நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு தொகுதிகள் கருப்புப் பிரதியிலும், இரண்டு தொகுதிகள் உயிர் எழுத்து பதிப்பகத்திலும் வந்துள்ளது. இப்பொழுது ஐந்தாவதாக ‘தடை செய்யப்பட்ட புத்தகம்’ என்ற கவிதை நூல் சிந்தன் பதிப்பக நூலாக வெளிவந்துள்ளது. புத்தர் குறித்த புனைவு ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் ‘புத்தனின் மதுக்குடுவை’.
கேள்வி: உங்கள் இயற்பெயரே இதுதானா?
பதில்: என் இயற்பெயர் வடிவேல் முருகன். எனது நண்பனின் பெயரையும், தோழமை என்னும் பொருள்படும் மித்ர-வை பெயரில் சேர்த்துக்கொண்டேன்.
கேள்வி: இவ்வளவு நேரம் நீங்கள் எங்களோடு பேசியதற்கு நன்றி.
பதில்: மிக்க நன்றி. ஒரு வாசகனாக முதலில் இந்த நூலை நீங்கள் படித்து இருக்கிறீர்கள். எனது விமர்சனம் அனைத்தையுமே நட்புமுரணாகத்தான் நான் பார்க்கிறேன். இதற்கு அது பரவாயில்லை என்ற வாதம் ஒரு பகுத்தறிவுவாதிக்கு தேவையில்லை. தத்துவத்தில் சமரசமும் தேவையில்லை.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
* பதிப்பாளர் குறிப்பு : பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் சோரி, அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதிய நூல் ‘Worshiping false gods'(2012). பக்க சார்புடன் இந்நூல் எழுதப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் நூல் வெளியான காலத்தில் வைக்கப்பட்டன. இந்திய வரலாறு மார்க்சியர்களால் எழுதப்படுகிறது என்பதை விமர்சித்து Eminent Historians: Their Techniques, Their Line, Their Fraud என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். கே.என். ஜா போன்ற வரலாற்றாசிரியர்கள், அவதூறாக எழுதப்பட்ட நூல் இது என இந்நூலை ஒதுக்கிவிட்டனர். மோடிக்காக பிரச்சாரம் செய்த இவர், தற்போது மோடியை விமர்சிக்கும் பிரதான பாஜக பிரமுகர் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.