மேக்ஸ் முல்லர் பவனில் , சென்னை ஏழாவது ஆவணப்பட குறும்பட விழா (7th Chennai International Documentary and Short Films Festival 2019) 10.2.2019 வரை நடைபெறுகிறது. காய்தே நிறுவனமும், மறுபக்கம் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த ஐந்து நாள் விழாவை புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் தொடங்கி வைத்து பேசினார்.
“மேல்தட்டு மக்களைப்பொறுத்த வரையில் இந்த அமைப்பு (system) ஒழுங்காக உள்ளது. வலதுசாரிகளும், பெரு முதலாளிகளும் ( Crony Capitalism) கை கோர்த்து செயல்படுகின்றனர். மத்திய புலனாய்வு நிறுவனம் பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு சட்டப்பூர்வ அமைப்பு (not constitutional)அல்ல.” என்றவர், சமீபத்தில் நடந்துவரும் காந்தி மீதான தாக்குதல் குறித்தும் பேசினார்.

“தனது கழிப்பறையை தாமே சுத்தம் செய்யும் அளவுக்கு காந்தி இருந்தார். சாதி குறித்த அவர் கருத்துக்கள் வெகுவாக பின்னாளில் மாறிவிட்டன. கலப்புத் திருமணம் நடக்கும் திருமணத்திற்குத்தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். தன் செயலாளர் வீட்டு திருமண நிகழ்விற்கு கூட அவர் செல்லவில்லை. ஆனால் அவர் ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களையே நாம் சொல்லி அவரை அவதூறு செய்கிறோம். காந்தியை வில்லனாக சித்தரிப்பது நமக்கு ஒரு பாணியாக (fashion) மாறிவிட்டது. அவரும் அம்பேத்கரும் விடுதலை இறையியலை (Liberation Theology) பின்பற்றி னார்கள். அதனால்தான் 1934 -லிலேயே காந்தியைக் கொல்ல முயற்சி செய்தார்கள்; அப்போது பாகிஸ்தான் குறித்த சிந்தனையே வரவில்லையே.
தற்போது ‘Reason’ என்ற புதிய ஆவணப்படத்தை எடுத்து வருகிறேன். பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. இதனை மக்களிடம் பரவலாக கொண்டு செல்வோம்” என்றார்.
ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் இந்த திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து வருகிறார்.
– பீட்டர் துரைராஜ்