பீட்டர் துரைராஜ்

“என் ஆசான் காரல் மார்க்ஸ்” என்ற பெருமிதத்தோடு தொடங்கும் இந்த நூல் அம்பேத்கரை ஆய்வு செய்கிறது. அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூல் புத்தர் குறித்து பேசுகிறது.அது பரவலாக வாசிக்கப்பட்டும் வருகிறது. இந்து மதத்திலிருந்து விலகிய அம்பேத்கர் பகுத்தறிவுவாதியாக மாறவில்லை; கிறிஸ்தவ மதத்திற்கோ,இஸ்லாமிய மதத்திற்கோ,சீக்கிய மதத்திற்கோ மாறவில்லை. அவர் பௌத்த மதத்தை தழுவினார்.இதன் காரண,காரியங்கள் குறித்து வசுமித்ர நூல் விரிவாக,மிக விரிவாக ஆய்வு செய்கிறது.
“எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா,அ.மார்க்ஸ், ரவிக்குமார், பிரேம்,முத்துமோகன்,அருணன் என எவரும் அம்பேத்கர் குறித்து ஆய்வுப்பூர்வமான ஒரு நூலைக்கூட மார்க்சியத்தின் அடிப்படையில் அம்பேத்கரது பார்வையை வைத்து ஒரு கட்டுரையைக் கூட எழுதியதில்லை” என்று சொல்லுகிற வசுமித்ர அந்தப் பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.
தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, கோசாம்பி,ராகுல சாங்கிருத்யாயன், போன்ற மார்க்சிய அறிஞர்கள் வழிநின்று ஒரு நெடிய நூலைப் படைத்துள்ளார்.புத்தகம் 920 பக்கங்களில் உள்ளது.இந்தப் புத்தகம் உடனடியாக கவனம் பெறாமல் போகலாம்;வசுமித்ர அவதூறுகளுக்கு ஆளாக நேரிடலாம்.ஆனாலும் இது ஒரு முக்கியமான நூல்.
நடை சாதாரண நடை; கடினமான சொற்கள் இல்லை.’வாசகனிடம் நேரடியாக பேசுவது போல இருந்தது’ என்று வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த க.சந்தானம் பேசினார். அவர் சொன்னது உண்மைதான்.
பௌத்த மதத்தை விமர்சனப் பார்வையோடு அம்பேத்கர் அணுகினாரா என்பதுதான் இந்த நூல் எழுப்பும் ஆதாரமான கேள்வி. “அம்பேத்கரது பௌத்தத்திற்கு மாறியவர்கள் இதுவரையிலும் சாதியை ஒழித்துக்கட்டியதற்கான சிறு தடயம் கூட இதுவரை கிடைக்கவில்லை” என்கிறார் வசுமித்ர. பௌத்தம் தோன்றியதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம்.ஆனால் பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்ற ஒரே நோக்கத்தில் பௌத்தத்தை விமர்சனம் இன்றி அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார் என்கிறார் நூலாசிரியர்.
புத்தரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்திற்கு ஏற்றாற்போல விஷயங்களை சொல்லியும், சொல்லாமலும், வெட்டியும், ஒட்டியும் அம்பேத்கர் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் எழுதி இருக்கிறார் என்று விமர்சிக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகளை இன்றைய ஒழுக்க மதிப்பீடுகளை அளவுகோல்களாகக் கொண்டு அம்பேத்கர் பார்க்கிறார் என்று சொல்லுகிறார்.
புத்தரை ஆய்வு நோக்கில் அம்பேத்கர் பார்க்கவில்லை. பௌத்தம் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்தது; வட்டித் தொழிலுக்கு ஆதரவாக இருந்தது. அதானால்தான் கடனாளிகளையும், அடிமைகளையும் புத்த பிக்குகளாக புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. வியாபாரிகள் ஆதரவு அளித்ததால்தான் பௌத்தம் அவ்வளவு வேகமாகப் பரவியது; பெருஞ்செல்வம் சேர்த்தது. அரசர்களை பௌத்தம் எதிர்க்கவில்லை. அதனால்தான் படைவீரர்கள் பிக்குகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு பலநூறு கிராமங்களில் இருந்து மானியம் வந்ததால்தான் அத்தனை ஆயிரம் பிக்குகளுக்கு உணவளிக்க முடிந்தது. இப்படி அரச ஆதரவோடு, வியாபாரிகள் ஆதரவோடு இருந்த மதம் புத்தரை கடவுளாக பார்த்தது. அவரை சிலைகளாக்கி வழிபட ஆரம்பித்தது என்கிறார் வசுமித்ர. அம்பேத்கரது பௌத்தம் சுரண்டலுக்கு ஆதரவாக இருந்தது; ‘பொருளாதார அமைதியை’ சீர்குலைக்கவில்லை. பௌத்தர் சொத்துடமை வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தது பிரச்சனை இல்லை. ஆனால், எந்தவித விமர்சனப் பார்வையும் இல்லாமல் அம்பேத்கர் புத்தரை ஏற்றுக்கொண்டதைத்தான் வசுமித்ர கேள்விக்குள்ளாக்குகிறார்.
ஆய்வுத் தளத்தில் இது போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய அறிவுப் பகுதியினரும் அதற்குரிய பங்களிப்பை செலுத்தவில்லை என்கிறார் வசுமித்ர. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாக, தத்துவ ரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை” என்கிறார்.
“அமைப்புசாரா மார்க்சியர்களில் சிலர், உள்ளார்ந்த அக்கறையோடு அம்பேத்கரை மார்க்சியத்தின் பக்கம் இழுத்து நிறுத்துவதன் மூலம், ஏதேனும் மாற்றம் நடக்கலாம் என்ற கனவோடு,அம்பேத்கரை மார்க்சியத்தின் பக்கம் இழுக்கும் முயற்சியில், மார்க்சியத்தை திரிபுக்குள்ளாக்குவதில் போய் நிற்கின்றனர். மறுபுறத்தில், பௌத்தத்தை மார்க்சியத்திற்கு ஏற்றாற் போல வளைப்பதில் பௌத்தத்தையும், அம்பேத்கரையும் பொருந்தாத சித்திரத்தில் அடைக்கின்றனர்” என்கிறார் வசுமித்ர. அடையாள அரசியலினால் உண்மையில் பலனடைவது ஆதிக்க சக்திகளே என்கிறார்.
தான் சொல்லுவதை நிரூபிக்க கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட நூல்களை பயன்படுத்தி உள்ளார். அவை மிக விரிவாகவே மூல ஆசிரியர்கள் மொழியில் மேற்கோள்களாக காட்டப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் அவர்கள் அடையாள அரசியல் பேசுபவர்களாக இருந்தாலும் சரி, மார்க்சிய அரசியல் பேசுபவர்களாக இருந்தாலும் சரி விவாதத்தில் வந்து செல்கின்றனர். அவர்கள் சொன்னவைகளை அப்படியே எடுத்தாண்டு இருப்பதால்தான் இது நெடிய நூலாகிவிட்டது போலும். ஒரு சில இடங்களில் கூறியது கூறல் வருகிறது.
எப்படி இருந்தாலும் நூல் வெற்றி பெற்று இருக்கிறது. நூலைப் படித்துவிட்டு பேசுங்கள் என்கிறார். ‘ஆதிக்க சாதி’ என முத்திரை குத்துவது விவாதத்திற்கு பலன் அளிக்காது என்கிறார். முன்னோட்டமாக 120 பக்கங்களில் தன் கருத்தை பதிவுசெய்துள்ளார் வசுமித்ர. இதை நிரூபிப்பதற்காகத்தான் எஞ்சிய பக்கங்களை பயன்படுத்தி இருக்கிறார். புத்தரது குலம், பிறப்பு, துறவு, ஞானம், துக்கம், மறு உடல் என பல அத்தியாயங்கள் உள்ளன.
‘தீண்டப்படாதவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆதரவாக இருந்ததை தவிர அவருடைய பிற கருத்துக்களில் முரணற்ற உறுதியில்லை’ என்று W.N .குபேர் வார்தைகளில் அம்பேத்கர் பற்றி கூறுகிறார். புத்தரா? காரல் மார்க்ஸா? என்ற நூலில் புத்தரை காரல் மார்ஸை விட மேலானவராக அம்பேத்கர் சித்தரிப்பதில் எந்த நியாமும் இல்லை என்கிறார்.
பேரா.தி்.சு.நடராசன் ‘சமயம்-சாதி-அரசியல் என்ற இந்த மூன்றையும் அடிமொத்தமாக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது என்பது தர்மசஙகடமானது. துணிச்சலுடன் இந்தக் காரியத்தை செய்கிறது இந்த நூல்” என்று முன்னுரையில் சரியாகவே மதிப்பீடு செய்கிறார். “அம்பேத்கரை புறவயமான ,வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பார்வையோடு அணுகி விமர்சிக்கின்ற முதல் தமிழ் நூல் இது ” என்று மொழிபெயர்ப்பாளரும்,மார்க்சிய ஆய்வாளருமான கோவை எஸ்.பாலச்சந்திரன் இந்த நூல் பற்றிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
எப்படி இருந்தாலும் இந்த நூலை புறக்கணித்து விட்டு சமூகநீதி பேசும் யாரும் பயணிக்க முடியாது.
குறளி பதிப்பகம்/ 920 பக்கம்/ ரூ.890/ஜனவரி 2019.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.