ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

ஆழி. செந்தில்நாதன்

ஆழி செந்தில்நாதன்

2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 – உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்…

அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய போஸ்டரைக் கொடுத்தார். நாங்களும் மொழிக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறினார். அந்த போஸ்டரில் உலகத் தாய்மொழிகள் நாள் குறித்து ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாசகங்கள் இருந்தன.

அந்த டென்ட்டில் இருந்த ஒருவர் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னிடம் இந்தியில் என்னவோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று கேட்டேன்.

பிறகு நல்ல அழகான ஆங்கிலத்தில், இந்த போஸ்டரில் இருக்கும் “International Mother Languages Day” என்று ஆங்கிலத்தில் இருந்ததை குறிப்பிட்டு, இந்த ஆங்கிலத்தை எடுத்துவிடுங்கள், வேண்டும் என்றால் தமிழிலேயே போஸ்டரை போடுங்கள், நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்றார்கள். தமிழ் அழகான மொழி என்றார் அவர்களில் ஒருவர்.

நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆரிய எதிர்ப்பு தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தவன் என்பதால், அவர்களின் தமிழ்ப்பாசத்தைக் கண்டு நான் உருகவில்லை.

அந்த டென்ட் கொட்டாய் பேர்வழிகள் எந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிய அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. பிறகு இரண்டு மணி அவர்களோடு அங்கே விவாதம் நடந்திருக்கும்.

ஆங்கிலத்தை ஒழித்தே கட்டவேண்டும். அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்கள். அதற்கு நான், ஆங்கில ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் இந்தியாவிலுள்ள மொழிகள் என்ன உலகம் முழுக்கவே பல மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதெல்லாம் உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டேன்.

ஆனால் இந்தியாவில் ஒரு கூட்டுச் செயல்பாடு செய்வதென்றால், பல மொழியினர் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது, நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடுவது என்று கேட்டேன். ஆங்கிலம் வேண்டாம் என்றால், இந்தியில் உரையாடுங்கள் என்று கூறவருகிறீர்களா என்று கேட்டேன்.

“அது வந்து, அது வந்து… ”

என்னோடு இருந்த பிற மொழிக்காரர்களையும் சுட்டிக்காட்டி, “நான் தில்லிக்கு வந்தால் உங்களோடு இந்தியிலும் இதோ இவர் இருக்கிறாரே இவர் பெங்களூர், பெங்களூருக்கு போனால் இவரோடு கன்னடத்திலும், கொல்கத்தா போனால் இவரோடு பெங்காலியிலும் பேசவேண்டுமா? அல்லது இவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தால் என்னோடு தமிழில் பேசுவார்களா?” என்று கேட்டேன்.

“ஆங்கிலம் அந்நிய மொழி!” என்று அதற்கு பதில் வந்தது. இந்தி மீதான துவேஷம் என்று கோபத்தோடு கத்தினார் டென்ட்வாசி ஒருவர்.

“இந்தியும் எங்களுக்கு அந்நிய மொழிதான். அப்புறம் இதோ நீங்க எங்கிட்ட ஆங்கிலத்தில பேசறீங்க.. உங்க வசதிக்காகத்தானே கத்துக்கிட்டீங்க! அப்படித்தான் நாங்க எங்க வசதிக்காகத்தான் கத்துக்கிட்டோம்!”

இப்படி தொடர்ந்தது விவாதம்.

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, இந்த டென்ட் கொட்டாய்காரர்களோ இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழிப்பது என்று பேசுவது இந்திக்கு எந்தப் போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் நமது அரசியல் தலைவர்கள் இந்திக்கு எதிராக ஆங்கிலத்தையும் உறுதியாக பயன்படுத்தினார்கள்.

ரங்கராஜ் பாண்டே அந்த டென்ட் கொட்டாக்காரங்களுக்குச் சொந்தக்காரர்தான். அவங்களோட அதே ஆர். எஸ். எஸ். சித்தாந்தத்தைத்தான் இங்கே வந்து கொட்டுகிறார் பாண்டே. தமிழை ஆதரித்து ஆங்கிலத்தை எதிர்ப்பது போல பாசாங்கு செய்கிறார் அவர்.

நம்மூர் முட்டாள்கள், “பாண்டே சொல்றது கரெக்ட்தான் இல்லே!”ன்னு கெக்கே பிக்கேன்னு சிரிப்பார்கள். ஆங்கிலம் வெளிநாட்டு மொழி, இந்தி நம்ம நாட்டு மொழி என்று குதர்க்கவாதம் புரிவார்கள்.

ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்.

ஆழி.செந்தில்நாதன், பதிப்பாளர்; அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.