“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது”

செ. அன்புச்செல்வன்

இந்திய அறிவியல் மாநாட்டில், நம்முடைய பிரதமர் மற்றும் முனைவர் கண்ணன் ஜெகதள கிருஷ்ணன் மற்றும் பேரா.ஜி. நாகேஸ்வரராவ் ஆகியோர் பேச்சுகளின் சாரம் இவைதாம்…

1) மகாபாரதக் காலத்திலேயே சோதனைக்குழாய் முறையில் குழந்தைப் பிறப்பு இருந்தது.

2) ஐன்ஸ்டினின் கொள்கைகள் பொய்யானவை, மேலும் அவைகள் உலகிற்கு பொய்யான அறிவியலைக் கற்பிக்கின்றன.

3) இராமாயண காலத்தில் பல்வேறு வகைப்பட்ட விமானங்களும், அவற்றை இறக்க ஓடுதளங்களும் இருந்தன.

இவை மூன்றும் போலி அறிவியலைக் கட்டமைக்கும் கருத்துகள் என்பதால் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. பிரதமரை விட்டுவிடலாம்… அறிவியல் படித்தவரல்ல, கதைகளை அறிவியலாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரியாமல் பேசியிருக்கலாம். ஆனால், மின்னியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் கண்ணன் ஜெகதளகிருஷ்ணன், ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் ஆராய்ச்சிக்கூடத்தில் மூத்த விஞ்ஞானியாக இருப்பதாக ஊடகங்கள் பேசுகின்றன. அவரும் தனது LinkedIn பக்கத்தில் (உலக அறிவியலாளர்களுக்கே பெரும் சவாலாக இருக்கும்) கருந்துளைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை வரையறை செய்துவிட்டதாக எழுதியிருக்கிறார். அப்படி ஏதேனும் கண்டுபிடிப்புகள் இதுவரை இவரால் நிகழ்த்தப்பட்டு இருக்கிறதா என்றுத் தேடிப் பார்த்தால் எதுவும் கிடைக்கவில்லை. கூர்ந்து பார்த்தால் இவரின் பின்புலமும் முன்னிறுத்த விரும்பும் கருத்துகளும் முற்றிலும் போலி அறிவியல் என்பது விளங்கும்.

இன்னொருவர் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வரராவ் (என்னுடைய அறிவியல் புலமான) கனிம வேதியியல் துறைசார் பேராசிரியர். இவர் முன்னிறுத்துவது விமானங்களும் ஓடுதளங்களும் இராமாயண காலத்தில் இருந்தன என்பது. இதுவரைக்கும் கனிம வேதியியல் புலத்தில் 338 ஆய்வுக்கட்டுரைகளை இவர் வெளியிட்டு இருந்தாலும், உலக அறிவியலாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்ததொரு படைப்பை யாங்கனும் காண இயலவில்லை. ஆனால் யாருக்காகவோ இராமாயணக்காலத்து விமானம் பற்றிப் பேசியிருக்கிறார்.

ஆனால், தம் செயற்கரிய செயல்களால் உலகையே இந்தியாவை நோக்கிப் பார்க்க வைத்த, பார்க்க வைக்கின்ற எண்ணற்ற அறிவியலாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற அடிப்படைச் சான்றுகளற்ற, வெறும் ஊகத்தினடிப்படையில் வளரிளம் தலைமுறைக்குப் போதிக்கமாட்டார்கள். அறிவியல் இரக்கமற்றது, யாருக்காகவும், எதற்காகவும் சாராமல் தனித்தே உண்மையைப் பேசுமென்று அவர்களுக்குத் தெரியும்.

சில கேள்விகளும் என்னுடைய விடைகளும்….

  1. கட்டுக்கதைகள், புராணங்களில் இடம்பெற்ற சம்பவங்களை அறிவியல் எனலாமா?

புராணங்கள் என்பவை, அதை எழுதிய புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கும் பண்டு நடந்ததாகச் சொல்லப்பட்ட கதைகளை அல்லது செவிவழிச் செய்திகளைக் கொண்டு புனையப்பட்டவை. ஆகவே, அதில் துளியளவாவது உண்மையிருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் மனிதர்களை நெறிப்படுத்தத் தோன்றியிருக்கலாம். கதைகளைப் புனையும்போது சில நிகழ்வுகளை உணர்த்த, சில உயர்வு நவிற்சிகளை, இல்பொருள்களைச் சேர்த்துக்கொள்வது இலக்கிய மரபு.

ஆனால், அவற்றை அறிவியல் என்று நிறுவ முயல்வது சரியாக இருக்கமுடியாது. உதாரணமாக, ஜான் டால்டன் என்ற ஆங்கிலேய அறிவியலாளர்தான், பல்லாண்டுகள் ஆய்வுசெய்து இந்தப் பேரண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் மீச்சிறு பொருளான அணுவினால் ஆக்கப்பட்டவை என்றும் அதன் (அணு) பண்புகள் பற்றியக் கொள்கையை வகுத்தளித்தவர். ஆனால், ஜான் டால்டனுக்கு முன்னமே நம் தமிழ் மூதாட்டி “ஔவையார்” அணுவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அவர்தான் முதல் அணுஅறிவியலாளர் என்று நிறுவ முயல்வதற்கும், இராமாயணத்தில் பலவகை விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன என்று சொல்வதற்கும் வேறுபாடே இல்லை என்பேன் நான். ஔவையார், திருக்குறளின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது,

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”

என்கிறார். அதாவது, அணுவென்னும் மீச்சிறு துகளுக்குள் ஏழு கடல்களையும் அடக்கி வைத்தது போல, வெறும் ஏழு சீர்கள் கொண்ட ஒரு சிறிய குறட்பா தன்னுள் ஏழுகடலளவு செய்திகளைப் பொதிந்து வைத்திருக்கிறது என்றுதானே பொருள் கொள்ளவேண்டும்.

இந்தப்பாடலில், ஒளவை கையாண்ட “அணு” உவமை மிகுந்த வியப்பையும், மலைப்பையும் தருவது உண்மைதான். ஆனால் அனுமானம் செய்வது மட்டும் அறிவியல் அல்லவே. ஒளவையின் தமிழுக்குத் தலைவணங்கி அவருக்குச் சிலை எழுப்பலாம், அவரின் புலமை பற்றியும், வாழ்ந்த காலம் பற்றியும் பட்டிமண்டபங்கள் நிகழ்த்தலாம். ஏன் பொதுவாக ஒரு உருவை வைத்துக்கொண்டு கோவில் கூடக்கட்டலாம். தவறில்லை, தமிழ் வளரும். ஆனால் ஒளவையை அறிவியலாளராகக் கொள்ளும்போது அத்தனையும் நொறுங்கிவிடுகிறது. அணுவைத் துளைப்பதால் வெளிவருகின்ற ஆற்றலைக் கொண்டு ஏழு கடல்களையும் ஆவியாக்கிவிட இயலும் என்று கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளுவது தமிழுக்கு வேண்டுமானால் அழகு. அறிவியலுக்கு ஒவ்வுமா?? ஒற்றை அணுவுக்குள் ஏழு கடல்கள் சாத்தியமா?? புராணக்கதைகளை அறிவியலாக்க முயன்றால் அறிவிலிகள் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.

  1. இத்தகைய அணுகுமுறை வளரிளம் பருவத்தில் இருப்பவர்கள் மத்தியில் எத்தகைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். இன்றைய இளையதலைமுறையினரை வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களும், தாம் எதற்காகப் படிக்கிறோம் என்ற எண்ணமற்றும், அறிவியல் பற்றி, புது கண்டுபிடிப்புகள் பற்றி விழிப்புணர்வு இல்லாமல், வாட்சாப் செய்திகளின் மூலம் அறிவியலைப் புரிந்துகொள்ளும் சமூகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான கிராமப்புற இளவல்கள் பற்றித்தொடரப் பற்றுக்கோல் இன்றி, வழிகாட்டிகள் இன்றி சாதி தலைவர்கள் பின்னாலும், நடிகர்கள் பின்னாலும் அணிசேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது எதிர்கால வளமிக்க இந்தியாவுக்கு நல்லதல்ல.

மிகச்சிலர்தாம் அறிவியலின்மீது ஈர்ப்புகொண்டு சாதனையாளர்களாகத் துடிக்கிறார்கள். ஆனால், அவர்களை மடைமாற்ற இதுபோன்ற போலி அறிவியல் கருத்துகளும், பழமைவாதங்களும் திணிக்கப்படுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ இலங்கையில் விமான ஓடுதளம் இருந்ததாக நம்புவார்கள். நாளடைவில் அதையே உண்மையென்று தம்மைச் சுற்றியுள்ளோருக்கும், தம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லித்தருவார்கள். நாம் மீள வழியே இருக்காது. என்னுடைய பதிமூன்று ஆண்டுகள் வேதியியல் ஆராய்ச்சிப் பட்டறிவைவிட, நானிருக்கும் பிரித்தானிய நாட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களின் அறிவியல் அறிவுப்புலம் மிகப்பரந்தது. இப்படியே தொடருமானால், எதிர்காலத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம். உலகம் நம்மை ஆளும். நாம் வீழ்வோம்.

  1. இந்தியாவைப் போல பிற நாடுகளிலும் போலி அறிவியலைக் கட்டமைக்கும் போக்கு உள்ளதா? அப்படி நிகழும்போது எத்தகைய எதிர்வினை உள்ளது?

அண்மைக்காலத்தில் இந்தியாவைப்போன்று தீவிரமாக, போலி அறிவியலைக் கட்டமைக்கும் நாடுகள் எதையும் நான் பார்க்கவில்லை. உலகப் பல்கலைகளிலிருந்து மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று கனிமவேதியியல் ஆராய்ச்சிக்கட்டுரைகள் தரமதிப்பீட்டுக்காக என்னிடம் வருகின்றன. அவற்றுள் ஒன்றாவது சீன பல்கலைகளிலிருந்து வருகிறது. அவற்றை, தரமதிப்பீடு செய்யும்போது, ஆராய்ச்சியின் தரம், பயன்பாடு, தற்காலத்தியத் தேவை, மனிதகுல மேம்பாட்டிற்கு அந்த ஆராய்ச்சியின் பங்கு மற்றும் கட்டுரையாக்கம் ஆகியவற்றைக் கொண்டே அந்தக் கட்டுரையைக் குறிப்பிட்ட ஆராய்ச்சி இதழில் பதிவிடப் பரிந்துரைப்பேன்.

அவற்றில் பெரும்பாலானவைகளில், ஆங்கில இலக்கணப்பிழைகள் தவிர அடிப்படை அறிவியலிலோ அல்லது ஆராய்ச்சித்தரத்திலோ என்னால் குறைகாண முடிந்ததில்லை. அதோடு, ஆராய்ச்சியில் புலப்பட்டதை எவ்வாறு பயன்பாடுடையதாக மாற்றமுடியும் என்ற நுட்பத்தை அறிந்தும் இருக்கிறார்கள். சீனாவுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று உலக வங்கியின் அண்மை அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியா முழுவதுமான பல்கலைக்கழகங்களில் 1996 ஆண்டில் வெறும் 152 ஆராய்ச்சி மாணவர்களும், அதுவே, 2015 ஆம் ஆண்டில் 215 பேராக (42%) மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஆனால், அதே 1996 இல் 438 ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு இருந்த சீனா, 2015 இல் 1176 பேராக கிட்டத்தட்ட 168% ஆக நெடிதுயர்ந்து நிற்கிறது. தற்போதைய சூழலில் 200% மேல் அதிகமாகியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். நாம் இப்படியே தொடர்ந்தால் இன்னும் கீழே போகும் சூழல் வருவதற்கு நிறைய நாள்கள் தேவைப்படாது.

செ. அன்புச்செல்வன், ஆய்வாளர். முகநூலில் அவரை தொடர Devanurpudur DrAnbu Selvan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.