பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

பிரபாகரன் அழகர்சாமி

உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செய்த முயற்சிக்கு சி.பி.எம் ஆதரவளித்தது, அதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் டி.கே.ரங்கராஜன் கனிமொழிக்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறார். அவர் நேற்று அவையில் பேசிய உரையிலும் இந்த மசோதவின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துதான் பேசியிருக்கிறார். மசோதாவில் இரண்டு திருத்தங்களை சி.பி.எம் முன்மொழிந்தது, அதுவும் பாஜகவால் நிராகரிக்கப்பட்டது.

இத்தனைக்கு பிறகும், சிபிஎம் இறுதி வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறது.

“பாஜக தேர்தல் நாடகம் நடத்துகிறது. அந்த நாடகத்துல வெற்றி பெற்றதா காட்டக்கூடாது அவ்வளவுதான்.” என்று தோழர் டி.கே.ரங்கராஜன் விமானநிலைய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

அதாவது , வரும் தேர்தலை மனதில்வைத்துக்கொண்டு இதை ஒரு அரசியல் லாபத்திற்கு பாஜக கொண்டுவருகிறது,

இந்த மசோதாவின் மூலம் ஒரு பிளவினை ஏற்படுத்தி அதன் அரசியல் லாபத்தை அறுவடை செய்வதுதான் பாஜகவின் நோக்கம் என்று எதிர்கட்சியினர் கணிக்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், மசோதாவை ஆதரித்து வெற்றிபெற செய்வதை ஒரு உத்தியாக பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் இந்த உத்தி எதிர்கட்சியினருக்கு பயன் தருமா என்பதும் சந்தேகமே! இந்த மசோதா வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்திருந்தாலும் இதனால் ஒரு அரசியல் பலன் கிடைக்குமானால் அது பாஜகவுக்குதான் கிடைக்கும். ஒருவேளை, இந்த பிரச்சனையை பூதாகரமாக்கி மற்றதோல்விகளை மறைப்பதற்கு பாஜக பயன்படுத்திக்கொள்ளாமல் தடுத்துவிட்டார்கள் என்று இதை எடுத்துக்கொள்ளவேண்டுமோ, என்னவோ?

சி.பி.எம் இப்படி ஒரு உத்தியை எடுப்பதனால், அவர்களுக்கு பெரிய நட்டம் எதுவும் கிடையாது. காரணம், அவர்களே சொல்வதைப் போல மண்டல் கமிசன் காலத்தில் இருந்தே Economically Weaker Section(EWS)க்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நிலைப்பாடு. யார் EWS என்று வரையரை செய்வதிலும், அவர்களுக்கு எவ்வளவு இடங்களை கொடுக்கவேண்டும் என்பதிலும்தான் அவர்களுக்கு பாஜகவோடு முரண்பாடு.

ஆனால் திராவிட இயக்கத்தரப்பில் இருந்து பார்த்தால், இந்த உத்தி ஒரு மோசமான விபரீதமான உத்தி. அடிப்படை கொள்கையை பந்தயம் வைத்து விளையாடுகிற ஒரு உத்தி. எனவே, திமுக இத்தகைய ஒரு உத்தியை பயன்படுத்தாமல் அழுத்தம் திருத்தமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. பாஜகவிடம் தன்னுடைய குடுமியை கொடுத்துவிட்டு, ஏதோ தன்னால் முடிந்த அளவு அதிமுகவும் தமிழகத்தின் குரலை ஒலித்திருக்கிறது, வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

ஒரு உத்தியாகதான் இதை ஆதரித்ததாக ரங்கராஜன் சொன்னாலும், அதில் முழு உண்மை இருப்பதாக நாம் எடுத்துக்கொள்ளவும் முடியாது. காரணம், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் அரசியல் சூழலை கணக்கில்கொண்டு பார்த்தால், EWS இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சிபிஎம்மும் ஆர்வமாக இருக்கிறது. அதனால் இதை எதிர்த்து அவர்களால் வாக்களித்திருக்க முடியாது.

பார்ப்பனர்களுக்காக மட்டுமே இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை என்பதும் உண்மையே. ஜாட், படேல், மராத்தா, ஆந்திரா நாயிடு போன்ற பல FC ஜாதிகள தங்களை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை பலமாக எழுப்பிவருகின்றனர். இதை தோழர் ரங்கராஜனும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு நிலைமை வேறு, மற்ற மாநில நிலைமை வேறு என்கிறார்.

சரி இதற்கு என்னதான் தீர்வு? தமிழ்நாடு மாடல்தான் தீர்வு. தம்பிதுரை அவருடைய உரையில் அதைதான் பரிந்துரைத்தார். படேல், ஜாட், மராத்தா எல்லோருக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள். தமிழ்நாட்டை போல இடஒதுக்கீட்டின் அளவை 69 அல்லது 70ஆக உயர்த்துங்கள். (படேல். ஜாட், மராத்தா போன்ற ஜாதியினரை “பிற்படுத்தப்பட்டவர்கள்” என்று அழைப்பதில் நமக்கு உடன்பாடில்லையென்றால் வேறு ஏதோ ஒரு பெயர்கூட கொடுத்துவிடுங்கள்).

உண்மையில், இடஒதுக்கீட்டின் அளவு 50% க்கு மேல் போகக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புதான் அடிப்படையான சிக்கல். அதை உடைப்பதற்கான அரசியல் சட்டத்திருத்தம்தான் உடனடி தேவை. எதிர்க்கட்சியினருக்கு அருமையான வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இதையே அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கவேண்டும். இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய அனைத்து சமூகங்களுக்கும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியை தரவேண்டும். அதற்கு தடையாக இருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை முறியடிக்கும்விதமாக சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கவேண்டும்.

இதுவே நிரந்தரமான நிலையான தீர்வு!!!

பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்; பதிப்பாளர்.

2 thoughts on “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

  1. முதலாளித்துவ சமூக அமைப்பினுள் இருந்தவண்ணமே, அவ் அமைப்பை பாதுகாப்பதைத்தான் குறிக்கோளாகக் கொண்டவண்ணம் சமூகத்தில் எழும் ஏழை-பணக்காரப் பிணக்குகளின் தீவிரத்தன்மையைத் தணிப்பது என்பது வேறுவிடயம், சாதிய சமத்துவத்தை நிலைநிறுத்துவது என்பது வேறுவிடயம். பின்னையது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு. இதில் முதலாழித்துவத்தின் இருத்தலுக்கும், தொடர்வளர்ச்சிக்கும் அவசியமானது முன்னையதே தவிர பின்னையதல்ல. பிணக்குகளை தணிப்பதற்கான வேலைத்திட்டம் அனைத்து முதலாளித்துவ நாடுககளுக்கும் பொதுவானது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான மானியம், விவசாயக் கடன் தள்ளுபடி, வேலையில்லாதோர்களுக்கான மானியம், இலவச நுகர்வுப் பொருள் வழங்கல், இலவசக் கல்வி, என அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது புதிதாகவொன்று சேர்க்கப்பட்டுள்ளது. அதுதான் உயர் சாதி வறியோர்களுக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு.

    சாதிகள்தான் வர்க்கங்களாக அமைந்திருந்த நிலையில் சாதிகளாக பிளவுண்டு கிடந்த இந்தியா, இன்று இந்த நிலையில் இருந்து மாறிவருகிறது. ஒவ்வொரு சாதிப்பிரிவுகளும் வெவேறு வர்க்கங்களை உள்ளடக்கியதாகப் பிரியத் தொடங்கிவிட்டன. ஒடுக்கப்பட்ட சாதியில் ஒடுக்கும் வர்க்கங்களும் உருவாகத் தொடங்கிவிட்டன. தலித் கலக்டரும், தலித் வாயில் காப்போனும் ஒன்றல்ல.

    அடுத்த பக்கத்தில் ஒவ்வொரு வர்க்கங்களும் பல சாதிப்பிர்வுகளை உள்ளடக்கியதாக வளரத் தொட்ங்கிவிட்டன. இது இயல்பானது. இது வரவேற்கப்படவேண்டியது. இக்கோணத்தில் இருந்துதான் 10விகித இடஒதுக்கீடு நோக்கப்பட வேண்டும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.