அம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்

ப. நரேந்திரன்

சமீபத்தில் “அம்பேத்கரும் அவரது தம்மமும்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தோழர் பாலசந்திரன் பேசிய காணொளியையும் அந்த புத்தகத்தின் ஆசிரியர் வசு மித்ர அந்த புத்தகம் குறித்து அளித்துள்ள youtube பேட்டியையும் பார்க்க நேர்ந்தது. வசு மித்ரவின் பேச்சை 10 நிமிடத்துக்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என்று தெரிந்ததால் நிறுத்திவிட்டேன். ஆனால் பாலச்சந்திரனின் உரையை முழுவதுமாக கேட்டேன். அந்த உரைசார்ந்த என்னுடைய பார்வையிது…

பதினாறாம் நூற்றாண்டுக்கு மேல் அறிவியல் பெரிதும் போற்றுதலுக்குரியதாயிற்று. அதற்கு முக்கியமானதொரு காரணம் அறிவியல் கோட்பாடுகளும், விதிகளும், ஆய்வுகளும் universalலாக இருந்ததுதான் (irrespective of the tester). அதாவது புவி ஈர்ப்பு விசையை ஒரு அமெரிக்கன் ஆய்வு செய்தாலும் சீனாவை சார்ந்தவன் ஆய்வு செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவுகளையே அவர்கள் அடைவார்கள். சாதிய அமைப்பில் உயர்ந்தவர்களாய் தங்களை கருதிகொள்ளும் பார்ப்பனர்களை அடியொத்தி சாதி இந்துக்களும், சில தலித்துகளும் கிரகப்பிரவேசம் முதலான பார்ப்பனிய கலாச்சாரத்தை உள்வாங்குவதை போல அன்று பெரிதும் மதிக்கப்பட்ட அறிவியல் துறைக்கு சமூகத்திலிருந்த மதிப்பை பார்த்த வரலாறு மற்றும் புதிதாக தோன்றியிருந்த சமுதாயவியல் அறிஞர்களும் தங்களது துறைகளை அறிவியல் என்று நிறுவ முயன்றார்கள்.

Jhon Locke தான் முதல்முறையாக அரசியல் தத்துவவியலில் ஒரு universal law சொல்ல முயன்றார்; “மனிதர்களால் உண்டானது இந்த அரசாங்கம்; மனிதனுக்கு இயற்கையிலேயே இயல்பிலேயே அதிகாரப் பசி இருப்பதனால் போரும், சர்ச்சைகளும், வன்கொடுமைகளும் நான் தான் மனித அரசியல் வரலாற்றின் எதார்த்தம்” என்றார். இதையே பின்னாளில் மாக்கிய வில்லியம், ஜான் ஸ்டூவர்ட் மில் பின்பற்றி சொல்ல முயன்றனர்.

பின்னாளில் Adam smith பொருளாதாரத்தில் ஒரு universal law சொல்ல முயன்றார். அது அவரது “Laissez Faire theory”க்கு அடித்தளமானது. “Consumer is rational”. அதாவது நுகர்வோர் பகுத்தறிந்து நுகர கூடியவர்கள். ஆனால் அறிவியலில் பெரும்பாலும் உயிரற்ற பொருட்களுக்கு பொருந்திப்போகும் இந்த விதிகள் மானுடவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பொருந்துமா என்ற சந்தேகம் எழுகிறது. உதாரணத்திற்கு ஒரு நுகர்வோர் பகுத்தறிவு உள்ளவனாக இருக்கும் பட்சத்தில் ஐந்து ரூபாய்க்கு தேநீர் கிடைக்கையில் ஏன் அவன் நூறு ரூபாய்க்கு தேநீர் அருந்த வேண்டும். அதற்கு ஏன் 18 ரூபாய் வரி கொடுக்க வேண்டும்?. சமூகவியல்/பொருளாதார கோட்பாடுகளை அறிவியல் கோட்பாடுகளாக வடிவமைப்பதில்/நிறுவுவதில் இது போன்ற பல கேள்விகளும்/சவால்களுமிருந்தன. கருத்தியலுக்கு எதிர் கருத்தியல் உருவாகும் என்ற இயங்கியல் தத்துவத்திற்கு ஏற்ப அன்றே சமூக அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு அறிவியல் மீது இருந்த மோகம் விமர்சிக்கப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள்

  1. Thomas Khun போன்றோர் கூறியது. அதாவது அறிவியல் ஆய்வுகளே சுய சார்பற்ற முறையில் நிகழ்த்தப்படுவது இல்லை, விஞ்ஞானிகள் ஒரு கோணத்தை உருவாக்கி விட்டு (first constructing a paradigm) அதனை நிரூபிக்க போராடுகிறார்கள். ஆய்வில் வரும் முடிவுகள் உண்மையாகவே இருந்தாலும்அவை தங்கள் கோணத்திற்கு முரணாக வரும்பொழுது, அதை ஆய்வு முறையில் நடந்த தவறுகளாக புறந்தள்ளுகின்றனர் என்றார். இதையே ரசவாதிகள் (alchemist) தங்கம் செய்கிறோம் என்று தங்கத்தை விடவும் மதிப்பு மிக்க பொருட்களை செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம், தேவை இல்லாதவை என்று புறந்தள்ளி விட்டதாக குறிப்பிடுகின்றார் Paulo Cohelo.

     

  2. சமுதாயவியளாளர்கள் ஒரு சமுதாயத்தில் இருந்து வருவதனால் அந்த சமுதாயம் சொல்லிக்கொடுத்த values(anything considered worth striving for by that particular community) ஆய்வின் முடிவை ஒரு சுயசார்பற்ற கருத்தியலாக வருவதை தடுத்துவிடுகிறது. எனவே சமூகவியலில் universal law கூறுவது சாத்தியமில்லை என்றவர்களை non-positivist என்று அழைக்கிறோம். உதாரணத்திற்கு பறை இசை கலைஞனை ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வாளர் பறை இசைக்கலையை பயிலாத/உள்வாங்காத சமுதாயத்திலிருந்து வரும் பட்சத்தில் அந்தக் கலையை சிறப்பற்றதாக புரிந்துகொள்ளக்கூடிய/உணரக்கூடிய வாய்ப்பு உள்ளது. So இதில் ஒரு bias வந்துவிடுகிறது.

M N. srinivas இந்தியர்கள் westernizeஆக வில்லை மாறாக sanskritise or brahmanise ஆகிறார்கள் என்றார். உண்மைதான். இன்று தலித்துக்களும் பார்ப்பனிய குருக்களை அழைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள், மாட்டிறைச்சி உண்பது அவமானம் என்றும், சைவ உணவுகள் உண்பது உயர்வானது என்று நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை non-positivist என்று அழைக்கிறோம். ஆனால் இதில் அவர் ஒன்றை வசதியாக மறைக்கிறார். முதலில் westernize ஆனது பார்ப்பனர்கள்தான். உயர்ந்து வரும் பெண் கல்வி சதவீதம் பார்ப்பனிய தொடர்புடையதா?மாட்டிறைச்சி ருசியானது என்று சீமானும் ரஞ்சித்தும் கூறுகிறார்களே இது பார்ப்பனிய தொடர்புடையதா? ஆக ஆய்வாளர்கள் தாங்கள் உண்மை என கூற விரும்பியவற்றை உயர்த்திப்பிடிக்க மற்ற சில உண்மைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். இது மனிதர்களுக்கு உரித்தான குணம். எனவே சமூகவியலில் பொது விதி சாத்தியமற்றதாகி விடுகிறது. man by nature is biased and is incapable of making objective, value neutral universally acceptable laws. இதன்மூலம் அது அம்பேத்கரோ அல்லது மார்க்ஸோ யாராகியிருந்தாலும் அவர்களுடைய கூற்றுகள் அல்லது கருத்தியல்கள் சார்பற்றது என்றோ பரிபூரணமானது (absolute) என்றோ கூறமுடியாது. என்ன நோக்கத்திற்காக அல்லது என்ன விளைவை நோக்கி அவர்கள் தங்களது கருத்தியல்களை முன்னிறுத்தினார்கள் என்று பார்ப்பதே முறையாகும்.

மார்க்சும்,அம்பேத்கரும் இந்த மனித குலத்திற்கு கிடைத்த இருபெரும் மகாத்மாக்கள்; ஏன்? இந்த இருவருமே மனித மாண்பை எப்படி மீட்டெடுப்பது என்று தங்கள் வாழ்நாள் முழுவதும் சிந்தித்தவர்கள். ஒரு சமத்துவமான சமுதாயத்தை எப்படி படைப்பது? exploitation/சுரண்டலை எப்படி தடுப்பது என்பதை ஆய்வதே தங்கள் வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தவர்கள் இவையெல்லாம் ஒருசேர இருந்தும் இவர்கள் இருவரையும் ஒருசேர தராசின் எதிர் முனைகளில்வைப்பது சரியா? இரண்டும் கனிகள் தான் என்ற போதிலும் “dont compare apples with oranges” என்பார்கள். ஆனால் இங்கு சில அறிவுஜீவிகள் ஏற்கனவே அந்த பணியை தொடங்கி விட்டார்கள்.

Marx பிறப்பிலே ஒரு யூதர். பின்பு அவரது குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது. அவருடைய இளமைக் காலம் சராசரி இளைஞனை போல காதலும் கவிதையுமாக சென்றது. இளம் வயதில் அவர் ஷேக்ஸ்பியரை வாசித்தார், பாடல் பாடினார். பின்பு Bonn பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகும் கூட பிறப்பின் அடிப்படையிலான சுரண்டலை அவர் எதிர்கொள்ளவில்லை. ஆனால் Marx வறுமையால் துரத்தப்பட்டார். சுரண்டலினால் ஏற்பட்ட வறுமையைப் கண்கூடாகப் பார்த்தார். அவருடைய பெண் குழந்தை வறுமையினால் மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போனது .

அம்பேத்கரின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு இந்தியன் அடையக்கூடிய உயர்பதவியான subedar majorராக இருந்தார். அவரது முன்னோர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஏற்கனவே பணிபுரிந்து இருந்தனர் . Marxயை துரத்திய வறுமை அம்பேத்கரை துரத்தவில்லை. ஆனால் பிறப்பின் அடிப்படையிலான சுரண்டலை இளம் வயதிலேயே சந்திக்க வேண்டியதாயிருந்தது. பள்ளியில் அவரால் சக மாணவர்களைப் போல இருக்க முடியவில்லை. தான் உட்காருவதற்கு ஒரு தனி சாக்குப்பையை தினமும் அவர் எடுத்துச் செல்லவேண்டும். தாகமாய் இருக்கும் பொழுது அவரால் மற்ற மாணவர்களைப் போல தண்ணீர் பருக முடியாது. அதற்கு ஒரு பியூன் இருந்தார். அவர் தண்ணீரை உயரத்திலிருந்து ஊற்றுவார். அதை அம்பேத்கர் இருகைகூப்பி கீழிருந்து குடிக்கவேண்டும். பின்னாளில் தன்னுடைய சுயசரிதையை எழுதுகையில் அவர் கூறுகிறார், ‘அந்த பியூன் இல்லாதபட்சத்தில் நாள் முழுவதும் தாகத்துடனேயே இருக்க வேண்டும்.’

ஒருமுறை தன் தந்தையை பார்க்க சிறுவயதில் ரயிலில் சென்றார். ரயில் நிலையத்தில் அவர் அணிந்திருந்த சுத்தமான நல்ல உடைகளை பார்த்து , அங்கே இருந்த வண்டிக்காரன் அவருடைய பைகளை ஏற்றுக்கொண்டதாகவும் பின்பு அவருடைய சாதி தெரிந்து இறக்கி விட்டதாகவும் கூறுகிறார். மேலும் அவர் மற்றவர்கள் கொடுப்பதைவிட அதிக வாடகை கொடுக்க தயாராக இருந்ததாகவும் அதை மறுத்துவிட்டு, எப்படி இந்த கீழ்சாதி சேர்ந்த சிறுவன் இவ்வளவு நல்ல உடைகளை அணிந்து இருக்கிறான் என்று வண்டிக்காரன் ஆச்சரியப்பட்டதாக அம்பேத்கர் கூறுகிறார். அவர் அமெரிக்கா சென்றார். அங்கு பட்டம்பெற்றார், பரோடா அரண்மனையில் வேலை செய்தார், இங்கிலாந்து சென்றார்,டாக்டர் பட்டம் பெற்றார், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு குழுவின் தலைவரானார். இந்த எல்லா நிலைகளிலும், காலத்திலும் பிறப்பின் அடிப்படையிலான சுரண்டல் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

மனிதன் எதனால் துரத்தப்படுகிறானோ அதனை எதிர்க்க ஒரு கட்டத்தில் தயாராகிறான். Marx வாழ்ந்த இங்கிலாந்தில் அனைவரும் ஆங்கிலம் பேசினர், கிட்டத்தட்ட எல்லோருமே ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் தான், அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்(homogeneous). அமெரிக்காவில் இருந்தது போல அப்பொழுது அங்கே கருப்பர்கள் இல்லை. எல்லாம் ஒன்றாக இருக்க சிலர் மட்டும் தேவைக்கும் அதிகமான பண வசதியோடிருக்க, சிலர் சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பதை கண்டார். இந்த ஏற்றத்தாழ்வுக்கு சுரண்டல்(misappropriation of surplus value by bourgeoisie) தான் காரணம் என்று கண்டுபிடித்தார். இவர்கள் அனைவருமே சுரண்டப்பட்ட போதும் இவர்கள் ஒன்றாக இல்லை என்பதையும் கண்டறிந்தார். அதற்கு முக்கிய காரணம் “division of labor” அதாவது தைப்பவன், mechanic, etc அவர்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லாம் ஒரே வர்க்கம்தான்(class in itself) என்றார். அதாவது உங்களுக்கும் class consciousness வரும் பொழுதுதான் நீங்கள் class for itself ஆக மாறி class struggle வரும் என்றார். Marx வரலாறு முழுவதும் இருபிரிவினர் இருந்ததாக கூறுகிறார். ஒன்று oppressor and the oppressed or owner, non-owner or bourgeoisie and proletariat.

அம்பேத்கர் வாழ்ந்தது heterogeneous society. இங்கே அதிகமாக சுரண்டப்படுவது தீண்டத்தகாதவர்கள. மார்க்ஸைப் போலவே அம்பேத்கரும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான சாதிகள் division of labourரால் பிரிந்து இருப்பதைக் கண்டார். உதாரணத்திற்கு மகர், பறையன். இருந்தும் இவர்களை ஒரு group in itselfஆக பார்த்தார். இவர்கள் அனைவரையும் இணைக்க “dalit”(like proletariat for marx) என்ற ஒரு சொல்லை பயன்படுத்தினார். அப்படி செய்யும் பொழுது அவர்களுக்கு ஒரு group consciousness வரும். அதனால் அவர்கள் group for itself ஆக மாறி group struggle வரும் என்று நம்பினார். இதையே அவர் educate(group consciousness), organize(group for itself), revolt (group struggle) என்று கூறினார். மார்க்ஸ் bourgeoisie and proletariat போராட்டமாக கருதியதை அம்பேத்கர் பார்ப்பன/சாதி ஹிந்து உடனான தலித்துகளின் போராட்டமாக கருதினார்.

தமிழகத்தில் தன்னை மார்க்ஸியர்களாக சொல்லிக்கொள்ளும் சில மேதைகள் அம்பேத்கர் பொருளாதார சீர்திருத்தத்திற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் தன்னுடைய சாதியை அழித்தொழிப்பது எப்படி என்ற புத்தகத்தில் பொருளாதார சீர்திருத்தத்தை தான் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது நிகழ, அதற்கு முன்பாக சமுதாய சீர்திருத்தம் நிகழ வேண்டும் என்கிறார். அவருடைய வார்த்தைகள் கூற வேண்டுமென்றால் “how can there be a revolution if the proletariat cannot present a united front?” என்று கூறுகிறார். அதேபோல மார்க்ஸ் கூறிய “எல்லாவற்றுக்கும் அடிப்படை பொருளாதாரமே” என்ற அடித்தளத்தை அவர் மறுக்கவில்லை மாறாக அதனோடு மதத்தையும், சமுதாய அந்தஸ்தையும் இணைகிறார். மதம் மேல் தளத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தை அவர் விரிவாக விவரிக்கிறார். உதாரணத்திற்கு Rome வரலாற்றை பயன்படுத்துகிறார். இந்தியாவில் அத்தனை செல்வங்களும் படைத்த பெருமுதலாளிகள் ஏன் ஏதுமற்ற சாதுக்களின் காலில் விழுகிறார்கள்? அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறார்கள்? என்று கேள்வி எளிமையான ஆனால் புறம்தள்ளமுடியாத கேள்வியை எழுப்புகிறார். உதாரணத்திற்கு அம்பானியும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்.

மார்க்சும் அம்பேத்கரும் division of labourயை division of laborers என்று அழைத்தனர். மார்க்ஸ் class consciousnessக்கு மதம் தடையாக இருப்பதாக உணர்ந்ததைப்போல அம்பேத்கரும் ஹிந்து மதம் group consciousnessக்கு தடையாக இருப்பதாக உணர்ந்தார். ஆனால் இருவரும் கொடுத்த தீர்வுகள் வெவ்வேறு. மதத்தை முற்றிலுமாக விட்டுவிட சொன்னார் மார்க்ஸ். ஆனால் அம்பேத்கர் அதற்கு பதிலாக வேறொரு மதத்தை தந்தார். அதற்கான காரணம் அம்பேத்கருக்கிருந்த இறையியல் தேடலோ அல்லது ஆன்மீகத்தின் மீதானா நாட்டமோ அல்ல. அதற்கு முக்கிய காரணம் இருவரும் வாழ்ந்த வெவ்வேறு சமுதாயமே. இந்தியர்களுக்கு இயற்கையிலேயே “salvation/இரட்சிப்பு” போன்ற கூற்றுகளில் நம்பிக்கை இருந்ததை அம்பேத்கர் உணர்ந்தார். அதனால் தான் வழிநடத்தும் எளிய பாட்டாளி வர்க்க தலித் மக்களுக்கு உடனடியாக சாத்தியப்படக்கூடிய ஒற்றை முன்மொழிந்தார். அதுதான் தலித்துகளின் group consciousnessக்கு தடையாகவிருக்கும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தமேற்பது. அதிலும் அம்பேத்கர் கடவுள் என்னும் கோட்பாட்டை புறந்தள்ளும் பௌத்த மதத்தையே தழுவினார். பௌத்த சித்தாந்தங்களும் மார்க்ஸின் சித்தாந்தங்களும் ஒன்றுதான் என்று ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்.

இதற்கு வியாக்கியானம் சொல்லும் இன்றைய தமிழகத்து மார்க்ஸிய மேதைகள் சிலர் அம்பேத்கர் அடையாள அரசியலில் நுழைந்து அதில் தோல்வியும் கண்டுவிட்டார் என்று பறைசாற்றுகின்றனர். கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த கியூபாவிலும் ரஷ்யாவிலும் மதம் முற்றிலுமாக அழிந்து விட்டதா? அடையாளமற்று வர்க்கம் என்னும் ஒற்றையடையாளத்தோடு புரட்சி நடப்பது சாத்தியம்தானா? “வர்க்கம்” என்பதே ஒருவகையில் அடையாளம் என்ற கோட்பாட்டிற்கு உள்ளே வராதா?

மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் கருத்துக்களுக்கு வலுவூட்ட “பொருளாதாரம்” என்ற அடித்தளத்திற்கு கொஞ்சம் exaggeration செய்துவிட்டோம் என்று கூறியுள்ளார்களா இல்லையா? அதே போல தலித்துகளின் ஹிந்து மத வெளியேற்றத்தை வலியுறுத்திய/விரும்பிய அம்பேத்கர் பௌத்தத்திற்கு சற்று exaggeration செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. மார்க்சை போல கருத்தாக்க தளம் மட்டுமில்லாமல் களத்தில் நின்ற அம்பேத்கருக்கு அதற்கான தேவையும், உரிமையுமிருந்தது.

சோவியத் ரஷ்யா உடைந்து விட்டதால் மார்க்ஸின் பார்வையில் அவரதுகருத்தியலில் சறுக்கல் ஏற்பட்டு விட்டது என்று கூறுவது சரியா? சோவியத் ரஷ்யாவின் தோல்வியில் marshall aidம் , truman doctrineம் பங்காற்ற வில்லையா? அதேபோல தலித்துகள் பெரிய அளவில் பௌத்த மதத்திற்கு மாறவில்லை என்பதற்காக அம்பேத்கரின் முடிவில் சறுக்கல் என்று கூறுவது சரியா?

இந்த அடிப்படை புரியாமல் சிலர் அம்பேத்கரின் மீது அவதூறுகளையும் தங்களின் அம்பேத்கரிய போதாமையையும் அம்பேத்கரிய வெறுப்பையும் வீச பார்க்கிறார்கள். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும்.

தன்னை மார்க்சிஸ்ட் என்று சொல்லிகொண்டே அம்பேத்கர் என்ன nationalistஆ என்று ஒரு அறிவுஜீவி கேட்கிறார். மார்க்ஸ் என்ன nationalistஆ? அதனை bourgeoisie construct என்று கூறியதை அவர் தானே? அவரது கல்லறையில் எழுதி இருப்பது “workers of ALL lands unite”என்பது தானே? என்னுடைய (kauvundampalayam) தொகுதியிலேயே திமுகவும், அதிமுகவும், கம்யூனிஸ்டுகளும் நிறுத்திய வேட்பாளர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அது எப்படி? சிலர் தலித்துகளுக்காக நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் அதனால் எங்களுக்கு பல சேதங்கள் வந்தது, அதையெல்லாம் தாங்கி கொண்டோம் என்று கூறுகின்றனர். நீங்கள் செய்வதை சிறப்பாக செய்திருந்தால் தனியாக தலித் கட்சிகள் ஏன் உருவாகின்றன? இதற்கு காரணம் என்னவென்றால்; பெண்களின் பிரச்சனைகளை ஆண்களால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிவதில்லை. அதைப்போலவே சாதி இந்துக்களால் தலித்துகளின் பிரச்சனைகளை ஒருபோதும் முழுவதுமாக உள்வாங்கி கொள்ளமுடியாது. இது தெரிந்திருந்தும் அம்பேத்கரியத்தை போலவே மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கு, விடுதலைக்கு பங்காற்றிய, பங்காற்றும் மார்க்சியத்தை நாங்கள் நேசிக்கிறோம். இங்கு மார்க்சியத்தின் பெயரால் அம்பேத்கரின் சித்தாந்தந்தை தொடர்ந்து உதாசீனப்படுத்தும் அற்ப பதர்களை தாண்டியும் மார்க்சியத்தை நாங்கள் கனிவோடு பார்க்கிறோம்.

நாங்கள் இந்திய/குறிப்பாக தமிழகத்தின் சாதி ஹிந்து பின்புலத்திலிருந்து வந்து மார்க்ஸையும் அம்பேதகரையும் விஜய் பெருசா அஜித் பெருசா என்னும் ரீதியில் விவாதித்து தலித்துகளுக்கு பாடம் எடுக்கும் மார்க்சியர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது உங்கள் முயற்சிக்கு நன்றி. நாங்கள் எங்களை அம்பேத்கரின் வழிநடத்துதலில் பார்த்துக் கொள்கிறோம். அம்பேத்கர் கூறியதை போல நாங்கள் விரும்பும் சாதியற்ற சமத்துவ சமூகம் முதலில் இங்கு மலரட்டும். பிறகு வர்க்க போராட்டத்தில் உங்களுடன் நாங்களும் கை கோர்க்கிறோம். ஏனென்றால் how can there be a revolution if the proletariat cannot present a united front? என்ற அம்பேத்கரின் கேள்விக்கு இந்திய/தமிழகத்து மார்க்சியர்கள் எங்களுக்கு திருப்திகரமான, நேர்மையான பதிலை சொல்லாமல் இன்னமும் மண்டையை சொரிந்து கொண்டுதான் நிற்கிறார்கள்.

கட்டுரையாளர் ப. நரேந்திரன் UPSC தேர்வுக்கு தயாராகிவருபவர். தொடர்புக்கு narendran.val@gmail.com.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.