இர. அருள்
தமிழ்நாட்டின் முன்னணி சைவ உணவக நிறுவனமான ஓட்டல் சரவணபவன், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அப்பட்டமாக மீறிவருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலையும், எதிர்காலத்தையும் காப்பாற்றும் இந்த தடையை அனைவரும் வரவேற்று முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த தடை குறித்த அரசாணை 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, அதுகுறித்த முறையான அறிவிப்புகள், விளம்பரங்களுக்கு பின்னர் 1.1.2019 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. (இந்த தடைகுறித்து 25.7.2018 பசுமைத் தாயகம் நாளில் பசுமைத் தாயகம் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது).
இந்நிலையில், இப்போதும் கூட, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஓட்டல் சரவணபவன் பார்சல் விநியோகம் செய்கிறது. 5.1.2018 ஆம் நாள் ஓட்டல் சரவணபவன், கோடம்பாக்கம் கிளையில் பார்சல் வாங்கியபோது அளிக்கப்பட்ட பொருட்கள் படத்தில் உள்ளன. அவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
படத்தில் உள்ள – பிளாஸ்டிக் டப்பாக்கள், பைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், சரவணபவன் என்கிற லோகோவுடன் உள்ள கைப்பையும் கூட தடை செய்யப்பட்டது தான். ஏனெனில், இது துணிப்பையோ, மறுசுழற்சி செய்யத்தக்க பையோ அல்ல. மாறாக, ‘நான் ஓவன்’ என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பை இதுவாகும். இவ்வாறாக, ஓட்டல் சரவணபவன் அப்பட்டமாக சட்டத்தை மீறுகிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.
சராசரி கடைக்காரர்களிடம் சோதனை நடத்துவது தேவையான நடவடிக்கை தான். ஆனால், அதை விட மிக முக்கியம், பெயர் பெற்ற பெரிய நிறுவனங்கள், பிராண்ட் நிறுவனங்களில் சோதனை நடத்துதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பரிமுதல் செய்தல், தண்டம் விதித்தல் மிக மிக அவசியமாகும்.
எனவே, ஓட்டல் சரவணபவன் உள்ளிட்ட பெரிய நிறுவங்களில் பிளாஸ்டிக் தடை விதிகள் முழுமையாக செயலாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
இர. அருள், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் arulgreen1@gmail.com