சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ தமிழக பத்திரிகையாளர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பத்திரிகையாளர் மு. குணசேகரன் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பு குறித்த தொடர்ச்சியான பதிவுக்காகவும், மக்களின் குரலை ஒலிக்க வைத்தமைக்காவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது.

2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது. 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தி சொல்கிறது.

ஊடகவியலாளர்களால் தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும், பெருமதிப்புமிக்க இவ்விருதை தமிழ் ஊடகங்களிலிருந்து பெறும் முதல் பத்திரிகையாளர் மு.குணசேகரன். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் அரசு பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முடித்தவர், இதழியில் பணியை தினமணி நாளிதழில் தொடங்கினார். பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மு. குணசேகரன், “எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்” என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மு. குணசேகரன்

மேலும், அந்தப் பதிவில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முழு பதிவு…

“பாராட்டு, வாழ்த்துகள் வழியே நண்பர்கள் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். ராம்நாத் கோயங்கா விருது பெற்றது பெருமிதம் தந்த தருணம்.

இந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.

ஊதியம் கிடைக்கும் பணி என்றாலும், ஊடகப் பணியை, மக்கள் நலன், எளியோர் நீதிபெற உழைப்பது, மக்கள் ஆற்றாது அல்லல்படும் தருணத்தில் அவர்களோடு நிற்பது என்ற உணர்வை எல்லோரும் பெற்றிருந்தது எமது நியூஸ்18 குழுவின் சிறப்பு என்றே கூறுவேன்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், துயரம் கவ்விய கொந்தளிப்பான மனநிலையிலும் குமரிக் கடலோர கிராமங்களில் திரண்டிருந்த ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு சூடான சொற்கள் இருந்தன.

தங்கள் துயரத்தை பரிவிப்பை அரசு எந்திரம் மட்டுமல்ல; கடற்கரைக்கு அப்பால் நிலப்பரப்பில் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அவர்கள் வெளிப்படுத்தி ஆதங்கம் இன்னும் செவிகளில் எதிரொலிக்கிறது. நடுக்கடலிலும் கடலோரத்திலும் மீனவர் வாழ்வின் துயரை, அவர்களது வாழ்க்கை பற்றிய புரிதலை, பரந்துபட்ட பொதுசமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக அது விரிவடைந்தது.

12 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, தமிழ் அச்சு, ஊடகத்துறை சார்பில் முதல்முறையாக நான் பெற்றிருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் திறமையான எனது இளைய தலைமுறை இன்னும் அதிகம் பெற்று சாதிக்கும்; தமிழ்க்கொடியை டெல்லியில் உயரப் பறக்கவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகம்.

தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் காத்திரமான பங்களிப்பை, அற்புதமான களப்பணியை இதழியலில் மேற்கொள்ளும் பலர் வெளிச்சம் பெறாமலே போய்விடுகின்றனர். அந்த நிலை நிச்சயம் மாறும்; மாற வேண்டும்!

எனது கரங்கள் ஏந்தி இருக்கும் இந்த விருதை தங்கள் கரங்களுக்கானது என நினைத்து பெருமிதம் கொள்ளும் நண்பர்களே எனது பெரும்பேறு! ஆம், எல்லா உயர்வும் வெற்றிகளும் சமூகம் தருபவை; நம் சமூகத்திற்கானவை.
நன்றி நண்பர்களே!”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.