சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

ப. ஜெயசீலன்
முதல் மூன்று பகுதிகளை படிக்க

<

div>

சமூக விலங்கான மனிதர்கள் அடிப்படையில் கூடி, இசைந்து வாழக்கூடியவர்கள். கூடியிருத்தல்,கூடுதல் எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆதி மனிதர்கள் கூடிஇருக்கையில் பயமற்று,ஆபத்துகளை சந்திக்கும் வல்லமையோடும், தேவையான உணவை கண்டடையும் வாய்ப்புகளோடும் இருந்தார்கள்.எனவே by instinct அவர்கள் கூடியிருப்பதை விரும்பினார்கள். அதனால் தான் இன்றும் நாம் மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், சடங்கின் பெயரால், கலையின் பெயரால்,விளையாட்டின் பெயரால் என ஏதோ ஒன்றின் அடிப்படையில் ஒன்றுகூடுகிறோம்.இது நமது ஆதி survival instinct.

மேற்கத்திய நாடுகளில் வருடம் முழுவதும் ஒன்றுகூடுதலுக்கான வாய்ப்புகளை அந்த சமுதாயங்கள் உருவாக்கி வைத்துள்ளன. பெரும்பாலும் அவை இசை நிகழ்ச்சிகளாவும், விளையாட்டு போட்டிகளாவும் இருக்கும். குறைந்தபட்சம் வார இறுதியில் நல்ல பப்பிற்கு சென்று 50,60 பேர் புழங்கும் இடத்தில நின்று சத்தமாக இசைகேட்டு, ஆடி,குடித்து ஒன்று கூடுதலுக்கான ஆதி வேட்கையை தனித்து கொள்கிறார்கள். நமது சமூகத்தில் ஒன்று கூடுதலுக்கான வாய்ப்புகள் மிக குறைவு. பொதுவில் வழிபாட்டு தளங்களும், கட்சி கூட்டங்களும் மட்டுமே பெரிய மக்கள் திரளுக்கான வாய்ப்பை வழங்குகின்றன. லண்டனை எடுத்து கொண்டால் அவர்களுக்கு கண்டு களிக்க புட்பால், ரக்பி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும், உலகம் முழுவதும் இருந்து வரும் இசை கலைஞர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

இப்பொழுது சென்னையில் ipl போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பும், திரளும் கூட்டமும் கூட ஒன்று கூடுதலுக்கான தேவையும்,ஏக்கமும் இருந்ததையே உணர்த்துகிறது. அது போன்ற ஒரு மாபெரும் ஒன்று கூடுதலுக்கான வாய்ப்பை வழங்கிய நிகழ்வுதான் “மெரினா புரட்சி”.

“புரட்சி” என்ற சொல்லின் மீதும், புரட்சியாளர்களின் மீதும் பொதுவில் எல்லோருக்குமே ஒரு கிளர்ச்சி உண்டு. சமூக விலங்கு என்னும் அடிப்படையில் நாம் பொதுவில் சமூகத்தின் விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், விழுமியங்களுக்கும் உட்பட்டே நமது வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் நாம் எல்லோருக்கும் நமக்கென்று ஓவ்வொரு விஷயத்திலும் ஒரு கருத்து இருக்கிறது. இவை இதனால் இப்படி இப்படி நிகழ்ந்தால், செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்று மாற்றத்தை நோக்கிய ஆசையிருக்கிறது. சமூகத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் legitimate/illegitimate அதிகார வர்க்கத்தினர் மீது ஒரு கோபமும், எரிச்சலும் எப்போதும் நமக்கு இருக்கும். ஆனால் நாம் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு, பொறுத்து கொண்டு நமது வாழ்வை நகர்த்துகின்றோம்.

ஆனால் புரட்சியாளர்கள் தான் நம்புகின்ற கருத்திற்காக சமூகத்திற்கு எதிராக கலகம் செய்ய துணிகிறார்கள். சாமானியர்களுக்கு அவர்களின் அரசியல் புரிதலுக்கு உட்பட்டு அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தின் மீதும், புரட்சியின் மீதும் கிளர்ச்சி இருக்கிறது. ஆனால் புரட்சியின் விலையான ரத்தத்தையும் தேவைப்பட்டால் உயிரையும் தரும் தைரியம் அவர்களுக்கு இருக்காது. அதிகாரத்திற்க்கு எதிரான புரட்சியை நிகழ்த்திய/நிகழ்த்தும் புரட்சியாளர்கள் தந்த/தரும் விலை நமது கற்பனைக்கு எட்டாதது.

பொதுவில் வடக்கத்திய ஊடகவியலாளர்ளுடன் ஓப்பிடும் போது தமிழக ஊடகவியலாளர்களுக்கு இயல்பிலேயே கொஞ்சம் இடதுசாரி அரசியல் கருத்துகளோடும், முற்போக்கு கருத்துகளோடும் ஒரு ஈர்ப்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். அதற்கான வரலாற்று பின்னணி, அரசியல் எனக்கு தெரியவில்லை. பொதுவில் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருந்தாலும் ஒரு ஊடகவியாளாராக அவர்கள் பிற்போக்குத்தனங்களையும், வலதுசாரி அரசியலையும் எதிர்ப்பது தங்கள் தொழில் அறத்தின் பகுதி என்னும் அளவிற்கு செயல்படுகிறார்கள். of course with their own limitations and reservations.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மருத்துவமனையில் இருக்கையில் உலக வரலாற்றில் எங்குமே நிகழாத, நிகழ போகாத வகையில் ஜோசியர்களுடன் முதல்வரின் உடல்நல முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் பொறுக்கித்தனமான வலதுசாரி தனத்துடன், மக்களை மடையர்களாக்கி பழமைவாதத்தின் பக்கம் வழிநடத்தும் சில மூட ஊடகங்களும் தமிழக்தில் இருக்கின்றன என்றாலும் பெரும்பான்மையான சாதி ஹிந்து, ஆதிக்க சாதி பிண்ணனியில் வந்த ஊடகவியலாளர்கள் குறைந்த பட்சம் பெரியாரிய, திராவிட அரசியல் கருத்துக்களுடன் பற்று இருப்பவர்களாவே தெரிகிறார்கள்.

பல்வேறு ஆதிக்க சாதியினர் இருந்தாலும் பல்வேறு வகையான சாதி ஹிந்துக்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் உள்ளாடும் ஒரு பொதுவான கலாச்சார மெல்லுணர்வுகள் உள்ளன. அதாவது தங்களுக்கு ஒரு அதி பயங்கரமான கேட்போர் குலை நடுங்கும் வகையில் ஒரு வீர ஆண்ட வரலாறு உண்டென்றும், தாங்கள் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு இணையான ஒரு அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு இணையான கலை, கலாச்சாரங்களை கொண்ட இன்னொரு இனக்குழு இல்லையென்றும், தங்கள் பிராந்தியத்தில் எல்லாமே தாங்கள்தான் என்றும் முழுமையாக நம்புகிறார்கள். அவர்களின் இந்த நம்பிக்கையை establish செய்யும் வகையில் மதம் சார்ந்து, திருவிழாக்கள் சார்ந்து, குடும்ப விழாக்கள் சார்ந்து பல சம்பிரதாயங்களை பயில்கிறார்கள்.

இவை சாதிக்கு சாதி வேறாக இருந்தாலும் ஆதிக்க சாதியினரின் பொதுவான பண்புகளையும் (ஆதிக்கத்தை நிறுவுதல், கட்டிக்காத்தல்), கலாச்சார மெல்லுணர்வுகளையும் கொண்டிருக்குகிறது. உண்மையிலேயே பெரியாரியத்தின் மீது, திராவிட அரசியலின் மீது பற்று கொண்டு சாதிய அமைப்பை சாடும் சாதி ஹிந்துக்களுக்கு கூட அவர்களின் சாதிய ஆதிக்கத்தை நிறுவும் பாரம்பரிய,கலாச்சார அடையாளங்களை விட்டு முன்னகர முடியவில்லை.

இப்படிப்பட்ட ஆதிக்க சாதி ஹிந்து ஊடகவியலாளர்கள் சல்லிக்கட்டு தடை என்பது தங்களது மரபான சாதிய ஆதிக்கத்தை நிறுவும், பெருமையை பறை சாற்றும் ஒரு சடங்கின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாக உணர்ந்தார்கள். சல்லிக்கட்டு பொதுவில் இரண்டு ஆதிக்க சாதியினர் முன்னெடுக்கும் மரபு என்றாலும், பிற ஆதிக்க சாதியினருக்கு தங்கள் ஆதிக்க சாதி பங்காளிகளின் கலாச்சார மெல்லுணர்வு உடனடியாக புரிந்து அவர்களுக்கு தோள் கொடுத்தார்கள். இன்றளவும் நான் மதிக்கும் தமிழகத்தை வலதுசாரி அரசியலிடமிருந்து காக்கும் முனைப்புடன் செயல்படும் சில மதிப்புக்குறிய ஊடகவியலாளர்களும் சல்லிக்கட்டு விஷயத்தில் எந்த கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் சல்லிக்கட்டை புனிதப்படுத்தியது ஏமாற்றத்தையே தந்தது. anyway காட்சி ஊடகத்தின் முக்கிய இடத்திலிருந்த சாதி ஹிந்துக்களால் சல்லிக்கட்டு தடை என்பது தமிழ்நாட்டிற்கு எதிரான, பரிசுத்தமான வீரம் செறிந்த தமிழரின் தொன்ம மரபான சல்லிக்கட்டிற்கு எதிரான ஒரு அடக்குமுறையாக/தாக்குதலாக நிறுவப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திரு பன்னீர்செல்வம் அவர்களே ஒரு ஆதிக்க சாதி ஹிந்து என்னும் வகையில் இயல்பில் அவருக்கும் கூட இந்த போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கும். தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டியோ, பன்னீர்செல்வம் தங்கள் சாதியினரின் அழுத்தத்திற்கு பணிந்தோ, அல்லது இந்த போராட்டத்தின் வீரியத்தை குறைத்து மதிப்பிட்ட உளவுத்துறையின் தோல்வியோ அல்லது நமக்கு தெரியாத வேறொரு காரணத்தாலோ, மெரினாவில் ஒரு மக்கள் திரளுக்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. கோரிக்கைக்காக கூடிய core protesters 5% இருந்திருந்தால் அதிகம். மற்றவர்கள் இதற்குமுன் நிகழாத அரசியலுக்கு, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆண்,பெண், சாதி,மதம் பேதமில்லாமல் திரண்ட அந்த மக்கள் திரளின் ambiance காகவும், தங்கள் கண்முன் அதிகாரத்திற்கு எதிராக “அதிகாரத்தின் அரவணைப்போடு”,பாதுகாப்போடு நிகழும் ஒரு ஜாலியான புரட்சியில் பங்கெடுக்கவும் தூண்டப்பட்டு திரண்டார்கள். காட்சி ஊடகங்கள் இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் தங்களின் பலம் என்னவென்று வெளிப்படுத்தினார்கள். ஒரு செய்தியை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், எப்படி manipulate பண்ணவேண்டும், எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதிற்கு சல்லிக்கட்டு சமயத்தில் தமிழக காட்சி ஊடகங்கள் செயல் பட்ட முறைகள் கிளாசிக் உதாரணங்கள்.

துவக்கத்தில் இந்த மக்கள் திரளின் கோபம் மத்திய அரசின் மீதே இருந்தது. அதனால்தான் பெருவாரியாக இசுலாமிய மக்களும்,அதன் இயக்கங்களும் கூட தீவிரமாக பங்கெடுத்தனர். தலித் இஸ்லாமியர் மீதான வடஇந்திய தாக்குதல் போன்ற காரணங்களால் சிறுபான்மையினரும்,தலித்துகளும், தமிழ் நாடு பேரரசின் மீதான இந்தியாவின் தாக்குதல் என தமிழ் தேசியரும், வலதுசாரிகளை அம்பலப்படுத்த ஒரு வாய்ப்பு என்று இடதுசாரியினரும், முற்போக்களர்களும் என ஒரு பரந்துபட்ட மக்கள் திரள் கூடி மத்தியை ஆளுகின்ற பிஜேபிற்கு எதிராக திரண்டது. ஒரு வகையில் இது நியமானதும் கூட. பசு புனிதம் போன்ற என்னற்ற பிற்போக்குத்தனங்களின் அரசியல் சித்தாந்த முகமாக,வடிவமாக பிஜேபி இருக்கிறது. அதை எதிர்த்ததில் ஒரு நியாயம்,தர்க்கமிருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் out of no where PETA, a2 பால், பாரம்பரிய விவசாயம் போன்ற குரல்கள் கேட்கத்தொடங்கின.

எந்த அமைப்பும்,நிறுவனமும் தவிர்க்கவே முடியாமல் அது இயங்கும் பிராந்தியத்தின் தன்மையை கொண்டுயிருக்கும். அது போல PETA அமெரிக்காவை தலைமையாக கொண்டு இயங்கும் ஒரு சர்வதேச அமைப்பு என்றாலும், அதன் இந்திய இயக்கத்தில் இந்திய தன்மை நிச்சயம் கலந்திருக்கும். இந்தியாவில் மனிதர்கள் மீது துவேஷத்தை கடைபிடித்து கொண்டே விலங்குகள் நலன், விலங்குவதை என்று போலி மனிதாபிமானத்தை பேசும் பார்ப்பினிய அடிப்படைவாதிகளை நாம் அறிவோம். இவர்கள் தான் PETA போன்ற அமைப்புகளின் இந்திய செயல்பாடுகளை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். பசு புனிதம் பேசும் பார்பனியர்களுக்கு என்னதான் ஆதிக்க சாதி ஹிந்துக்கள் பார்ப்பனியத்தை பயிலும் நல்ல விசுவாசமான அடிமைகளாக இருந்தாலும் சல்லிக்கட்டு போன்ற சாதி ஹிந்துக்களின் மரபான பழக்கங்கள் எரிச்சலூட்டக்கூடியதாகவே உள்ளது. தங்களை ஹிந்துக்களாக உணரும்,உணரவைக்கப்பட்ட சாதி ஹிந்துக்களின் சில மரபுகள் அவர்கள் ஹிந்து கலாச்சாரத்தின் கீழ் வரவில்லை என்பதை நிறுவுகின்றன. அது போன்ற மரபுகள் பார்ப்பினியர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன.

இது போன்ற நிலையில்தான் இந்தியாவில் இயங்கும் PETAவின் இந்திய செயல்பாடுகளை தீர்மானிக்கும் இடத்திலிருக்கும் பார்ப்பினியர்கள் தங்களது பசு புனித கோட்பாட்டிற்கு எதிரான சாதி ஹிந்துக்களின் சல்லிக்கட்டு குறித்து எரிச்சலுற்று அதை தடை செய்ய விரும்பினார்கள். உண்மையில் இது PETA vs தமிழக சாதி ஹிந்துக்கள் மோதல் இல்லை. மாறாக பார்ப்பனியம் vs தமிழக சாதி ஹிந்துக்கள். பார்ப்பினியத்தின் மீதான கோபம் பார்ப்பனியத்தின் அரசியல் முகமான பிஜேபி என்று நிகழ்ந்திருக்க வேண்டும். மாறாக முதலில் பிஜேபி மீதானா கோபமாக தொடங்கியது PETA என்ற அமைப்பின் மீதானதாக மடைமாற்றப்பட்டது. திடிரென்று காளைமாட்டு ஆராய்ச்சியாளர்கள், காளைமாட்டை தெய்வமாக மதிப்பவர்கள், பசுசானத்தை போட்டால் செவ்வாய் கிரகத்திலேயே பொன்னி அரிசி பயிரிடலாம் என்னும் அளவில் பேசும் நம்மாழ்வார் ஆதரவாளர்கள், காஞ்சனா லாரன்ஸ், பணமதிப்பு நீக்க அறிவித்தவுடனேயே அதை புரிந்து, அலசி,ஆராய்ந்து,சீர்தூக்கி பார்த்து ஒருமணிநேரத்தில் நல்ல திட்டம் என்று முரசறிவித்த மேதமை rj பாலாஜி, சேட்ஜி உன்பொண்ணு எனக்கு பொண்டாட்டி என்று ஒரு இன சிறுபான்மையினரை பார்த்து பாடிய ஆதிக்க சாதி பெடியன் ஹிப்பாப் தமிழன் என்று கலந்துகட்டி களமிறங்கினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக அரசும் தாங்கள் ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கவில்லை என்று அறிவித்தது. மத்திய அரசும் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதில் தங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்று அறிவித்தது. அப்படி என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் யாருக்கு எதிராக நடைபெற்றது? PETA என்ற ஒற்றை ngoஒக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் பேர்தான் புரட்சியா? சரி அந்த புரட்சி ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தின் பின்பு political hound dogs போல பயிற்றுவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரால் கடுமையான வன்முறையை ஏவி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதே அப்பொழுது புரட்சியாளர்கள் எங்கு போனார்கள்? சல்லிக்கட்டு போராட்டத்திற்கான விலையை கடைசியில் மீனாவகுப்பங்கள் தானே கொடுத்தன.

மீனவ குப்பத்தில் போலீசார் நுழைந்து பெண்கள் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி அடித்து ஒடுக்கினார்களே புரட்சியாளர்கள் எங்கு போனார்கள்? சல்லிக்கட்டு போராட்டமும் அதில் பங்குபெற்றவர்களும் எவ்வளவு பலகீனமானது/பலகீனமானவர்கள் என்பதற்கு உதாரணம் திருச்சியில் போலீஸ் அதிகாரி மயில்வாகனன் விஜயகாந்த் பாணியில் பேசி போராட்டக்கார “தம்பிகளை” கலைத்து விட்டதே சாட்சி. அரசியல் புரிதலும் இல்லை, அரசியல் ஒருங்கிணைப்பும் இல்லை, அரசியல் தலைமையும் இல்லை, வழிநடத்த கொள்கை கோட்பாடுகளும் இல்லை, வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளும் இல்லை. எதுவுமே இல்லாமல் கூடுவது ஒரு கோமாளித்தனம் என்றால் அதை புரட்சி என்பது அதை விட கோமாளித்தனம்.

சரி ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி. இப்பொழுது a2 பால் உற்பத்தி எத்தனை சதவிகிதம் உயர்ந்திருக்கிறது? எத்தனை பேர் a2 பாலை குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்? தமிழக இயற்கை விவசாயம் கண்ட மறுமலர்ச்சி என்ன? காளைமாடுகளின் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம் உயர்ந்திருக்கிறது? காளை மாடு வளர்ப்போருக்கு தமிழக அரசு என்ன மாதிரியான ஊக்க தொகை/உதவி வளர்ந்திருக்கிறது? காளைமாடுகளின் சந்தை மதிப்பு எவ்வளவு வளர்ந்திருக்கிறது? சல்லிக்கட்டு விளையாட்டின் தரம் என்ன உயர்ந்திருக்கிறது? சல்லிக்கட்டு விளையாட்டை மற்ற மாநிலங்களில் பிரபலப்படுத்த என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்குறது? சல்லிக்கட்டு போராட்டம் தமிழர்களின் ஓற்றுமைக்கு என்ன பங்கு ஆற்றியிருக்கிறது? சல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்னமாதிரியான மாற்றங்களை உள்வாங்கியிருக்கிறது? அந்த அரசியல் மாற்றங்கள் வலது சாரி தன்மையுடையனவா அல்லது இடது சாரி தன்மையுடையனவயா? போன்ற கேள்விகளை நாம் கேட்கவேண்டியிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி சல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆங்காங்கு தமிழகம் முழுவதும் நிகழ்ந்த மக்கள் திரட்சியும் பாராட்டத்துக்குரியதே. ஆணும் பெண்ணும், சாதி மதபேதமற்று தோழர்களாக ஒரு களத்தில் நிற்க கூடிய வாய்ப்பை வழங்கியதற்கும், பெரும் திரளான மக்கள் கடற்கரையில் கேம்பிங் செய்ய வாய்ப்பளித்தற்கும்.மேலும் நானும் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். ஆனால் சல்லிக்கட்டை பயிலும் சாதி ஹிந்துக்கள் இது தங்கள் சாதியின் மரபான ஒரு கேளிக்கை விளையாட்டு/திருவிழா. இதை தடை செய்ய துடிக்கும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக இந்த இக்கட்டான நேரத்தில் மற்ற தமிழ் சாதியினர் தங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று பணிவோடு கேட்டிருக்கவேண்டும். ஆனால் ஆதிக்க சாதி திமிரோடு தங்களது மரபான நாகரீகத்தை உள்வாங்காத ஒரு கேளிக்கை விளையாட்டை தமிழரின் கலாச்சாரமாக நிறுவ முயன்றது ஆதிக்க சாதி திமிரின் ஒரு பகுதியாகவே பார்க்கவேண்டியுள்ளது. சாதி ஹிந்துக்கள் தாங்கள் ஆதிக்கம் செய்யும் தலித்துகளின் உதவியை எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் தங்களுக்கு தேவையான நேரத்தில் யாசித்து பெற்றுக்கொண்டு பின் கசக்கி எறிவார்கள் என்பதிற்கு சல்லிக்கட்டு போராட்டமும் அதை தொடர்ந்த மீனவ குப்ப போலீஸ் தாக்குதல் மீதான மௌனமும் ஒரு சாட்சி. தலித்துகளுக்கு, இஸ்லாமியர்களுக்கு இன்னமும் அரசியல் விழிப்புணர்ச்சி வரவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணமே சல்லிக்கட்டு போராட்டதில் அவர்களின் கேள்விகளற்ற பங்கெடுப்பு.

வியட்னாம் போரில் ராணுவத்தில் பங்கெடுக்க விடுக்கப்பட்ட அழைப்பை மறுத்து என்னை கருப்பன் என்று ஏளனம் பேசி ஏய்ப்பது வியட்னாமிலிருக்கும் மக்கள் அல்ல. அவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்னையுமில்லை. நான் சண்டையிட வேண்டும் என்றால் அமெரிக்காவிலிருக்கும் இனவெறி வெள்ளையினத்தவருக்கு எதிராகத்தான் சண்டையிடுவேன் என்று சொன்ன முகமது அலியின் கருத்துதான் இங்கு நினைவுக்குவருகிறது. அதுபோன்றதொரு அரசியல் விழிப்புணர்வு, assertiveness இன்னும் இங்கு தலித்துகளுக்கு வரவில்லை. வந்திருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது போடா பொச்சு. 2 சாதி விளையாடும் காட்டுமிராண்டி விளையாட்டுக்கு தமிழர் பாரம்பரியம்னு சொல்லி நீங்க கூப்ட நாங்க வந்துருவமா. இத்தனாயிரம் வருஷம் எங்க பிரச்சனைக்கு எந்த தமிழ் மயிராண்டிட வந்திங்க என்று சொல்லியிருப்பார்கள்.

சாதி என்னும் சாக்கடையில் அனுதினமும் பன்றிகளை போல உழலும்,பயிலும் இவர்களுக்கு புரட்சியும், சல்லிக்கட்டும் ஒரு கேடு.

ப. ஜெயசீலன்,  சமூக-அரசியல் விமர்சகர்.

One thought on “சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

 1. ஜெயசீலன் மிக அதிக அளவு விஷயங்களை படித்தும் அதை விளக்குபவராகவும் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆனால் அவரது பார்வை தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு ஏளனம் கொண்ட பார்வையாக மட்டுமே மிஞ்சி நிற்கிறது. அவருடைய நான்கு பாகத்திற்கும் பெரிய மறுப்பு விளக்கமே தரமுடியும் தான்.

  ஜல்லிக்கட்டின் காரணம் ஆதிக்க சாதியம். சாதியம் ஆரியர்களால் தமிழரிடம் நுழைக்கப்பட்டதால் தமிழனிடம் சாதியம் நுழைந்தது. அது ஜல்லிக்கட்டிலும் நுழைந்திருக்கிறது. இந்த சாதியம் நுழைந்திருப்பது மாபெரும் குற்றம் எனவே அதை தூக்கிப் பிடிக்க வேண்டாம். மற்றபடி அந்தக் கலாச்சாரத்தால் எந்தப் பயனுமில்லை என்று கூறுவது வரலாற்றை அவர் சரியாகப் புரிந்துகொள்ளாததையே காட்டுகிறது. மாடுபிடித்து யாரும் ஒரு லட்சம் சம்பளம் வாங்கப்போவதில்லை தான். அந்த அளவிற்கு நம் கலாச்சாரத்தை நுண்ணிய அளவில் வளர்த்தெடுக்கப் போதுமான பலம் நம் நாட்டு அரசியல் அமைப்பில் இல்லை. பாதிக்கும் மேல் சாப்பாட்டுக்கே வழியில்லாமல், ஐக்கிய நாட்டு சபை கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றும் இந்த மத்திய மாநில அரசுகளை நம்பி வாழும் மக்கள் தான்.

  கலாச்சாரம் என்பது ஒரு மக்கள் திரளின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், சமூக செயல்பாடுகளைக் குறிக்கிறது. அது ஸ்பெயினின் காளைகளுக்கும் பொருந்தும். நம் நாட்டு காளைகளுக்கும் பொருந்தும். மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேல்நாட்டினர் மற்ற நாடுகளின் கலாச்சாரங்களின் மேல் தங்களது கலாச்சார ஆதிக்க வழிகளில் நயவஞ்சக வன்முறையாக அக்கலாச்சாரங்களை ஒழிக்கும் பண்பு இருப்பதை ஆசிரியர் மறந்து விட்டாரா ? தெரியவில்லை.

  இன்று அக்கலாச்சாரத்தின் பிடியில் வெப்பமான இந்த நாட்டிலும் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு திரியும் அதே இளைஞர்கள் மேற்கத்திய மனோபாவத்திற்கு எதிராகத் திரண்டெழுந்ததே ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு அவர் சொல்வது போல் புரட்சியல்ல. ஆளும் அரசின் அனுமதியோடு மக்கள் இணைந்த ஒரு நிகழ்வு. ஆனால் அந்த ஒன்றிணைவு தங்களை பலவகைகளிலும் அடிமைப்படுத்தும் வட இந்திய, மேற்கத்திய அதிகாரங்களுக்கு எதிராக தமிழன் என்னும் அடையாளத்தை காட்டுவதாகவே நிகழ்ந்தது.

  இதில் பங்கு கொண்ட சாதாரண மனிதர்களுக்கு இதன் முழு நியாய அநியாயங்கள் தெரிய வாய்ப்பில்லை தான். அது அவசியமும் இல்லை. பெருந்திரளான மக்களுக்கு தங்கள் கலாச்சாரமும், பண்பாடும் ஆதிக்க மனோபாவம் கொண்ட அந்நிய சக்திகளுக்கு எதிராகத் திரள்கிறோம் என்கிற புள்ளியில் தான் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். அது ஆசிரியர் சொல்வது போல் கேம்ப்பிங் ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

  ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற இரு வேறு விளையாட்டுக்கள் உண்டு. ஏறு தழுவுதல் நிஜமாகவே வீர விளையாட்டு தான். ஒரு ஆண் ஒரு மாட்டை நேருக்கு நேர் சந்தித்து அடக்க முயல்வது ஏறு தழுவுதல். மஞ்சு விரட்டு தான் தற்போது ஜல்லிக்கட்டு என்று பிரபலமாகியுள்ளது.
  சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே சாதிய அடையாளத்தை முன்னித்தியது இவ்வீர விளையாட்டு. ஆனால் அதன் இன்றைய அடையாளம் சாதிய அடையாளமல்ல.
  அதில் இன்னும் சாதிச் சண்டைகள் நடப்பதும் உண்டுதான். ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி இது நமது பாரம்பரியம் என்கிற அளவிலே தான் தற்போது உணரப்பட்டதேயன்றி ஒரு சாதிய அடையாளமாக அல்ல.

  இதிலுள்ள சாதிய அடையளாத்தை துறப்பது என்பது வேறு. ஜல்லிக்கட்டையே புறந்தள்ளுவது என்பது வேறு.

  இன்று பறையடிப்பது என்கிற மேள இசையானது, (மதுரை வாடிப்பட்டி ட்ரம்ஸ் இதில் பிரபலம்) அதை உயர்சாதியினர் தவிர அனைத்து பிற சாதியினரும் பயன்படுத்தும் ஒரு இசையாக மாற்றியிருக்கிறார்கள். இது ஒரு முன்னேற்றமே.

  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு முறைகள் நவீன அறிவியல் முறைக்கு எதிராகத்தான் எப்போதும் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. பொங்கலன்று பொங்கல் வைத்து, மாட்டுக்கு பெயிண்ட் அடித்து, அழகு படுத்தி , வெள்ளை வேட்டிகட்டி சந்தோஷமாக இருப்பதற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை.

  கலாச்சாரம் கலக்கலாம். ஆனால் அது தனித்தும் காணப்படவேண்டும். ஒவ்வொரு இனமும் தன்னை மற்றொரு இனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவது மனித இனக்குழுவின் இயற்கையான குணம்.

  மேற்கத்தியர்கள் தங்கள் சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே கலாச்சார ஆக்கிரமிப்பும் செய்கிறார்கள். பன்னாட்டு நிறுவன பெப்ஸியும், KFCம் , பர்கர் கடைகளும் தாமிரபரணியோடும் திருநெல்வேலிக்கு வந்து சிக்கன் விற்று கல்லா கட்ட மட்டுமே இதைச் செய்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம்.

  கலாச்சார அழிப்பு என்பதன் ஒரு அங்கமாக அவர்கள் கலாச்சார கலப்பு செய்கிறார்கள். அதில் 80 சதவீதம் அவர்கள் கலாச்சாரம் கலந்திருக்கும். இவற்றுக்கு எதிரான மனநிலையே ஜல்லிக்கட்டின் பின்னால் மக்கள் திரண்டு நின்றதன் காரணம். இது போன்ற பல விஷயங்கள் இதன் பின்னே உண்டு. அவற்றையெல்லாம் மேற்கத்திய நாட்டிலிருக்கும் இக்கட்டுரை ஆசிரியர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது பார்க்க விரும்பவில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.