சபரிமலை வழிபாட்டு உரிமைக்காக போராடும் பெண்களை ஆதரித்து எழுதும் சில முஸ்லிம்களை நோக்கி பல்வேறு தளங்களில் தொடர்ந்து இக்கேள்வி எழுப்பப்படுகிறது. எவ்வித அறிவார்ந்த பதிலையும் எதிர்நோக்கி எழுப்பப்படும் கேள்வி அல்ல இது. வழக்கமான இஸ்லாமியர்கள் மீதான வன்மத் தாக்குதல் மட்டுமே. இருந்தாலும் இஸ்லாமியர்கள் இப்படியான மேம்போக்கான கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் சென்று தொழ எவ்வித தடையுமில்லை. இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளான குர் ஆன், ஹதீஸ் உள்ளிட்ட எந்த நூல்களும் பெண்கள் பள்ளி வாசலுக்குள் நுழைய தடை விதிக்கவில்லை. மாறாக, பெண்கள் பள்ளிவாசலுக்குள் சென்று தொழ விரும்பினால் அவர்களை தடுக்க வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் சென்று தொழ விரும்பினாலும் கூட அவர்களைத் தடுக்காதீர்கள் என்று நபியவர்கள் கூறியதாக “புகாரி, முஸ்லிம்” போன்ற ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. நபியவர்களின் காலங்களிலேயே ஆண்களும் பெண்களும் ஒரே மஸ்ஜிதில் தொழுததாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
உலகெங்கும் இருக்கும் மஸ்ஜிதுகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து தான் தொழுகின்றனர். தனித்தனி இட ஒதுக்கீடுகள் இருக்கின்றன என்றாலும் மஸ்ஜிதுகளில் நுழைந்தால் “புனிதம் கெட்டுவிடும்” போன்ற கூச்சல்கள் இல்லை. உலகின் மிகப்பெரிய பள்ளிவாசலான, மக்காவின் “மஸ்ஜிதுல் ஹரம்” மற்றும் மதீனாவின் “மஸ்ஜிதுல் நபவி” யிலும் ஆண்களும் பெண்களும் கூட்டங்கூட்டமாக சேர்ந்து தொழுவதைப் பார்க்கிறோம்.கட்டுப்பெட்டியான இந்திய சமூகத்தில் மட்டும் ஆண்களுக்காகவே பள்ளிவாசல்கள் அமைக்கப்படுவதும் பெண்களுக்கான இடவசதி மேற்கொள்ளப்படாத சூழலும் நிலவுகிறது. தற்போது அதுவும் தகர்க்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாமா என்கிற கேள்வி பழங்கேள்வியாகி, பெண்கள் இமாமாக தலைமையேற்று ஆண்களுக்கு தொழுகை நடத்தலாமா என்கிற அளவுக்கு விவாதம் வலுப்பெற்றிருக்கிறது. ஆமினா வதூத் என்கிற அமெரிக்கப் பெண்மனி, 2005 இல் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகைக்கு தலைமையேற்று தொழ வைத்தது முதல் ஆரம்பம். தொழுகைக்கு முன்பாக குத்பா ஓதியது, பாங்கு சொல்லியது என அனைத்தும் பெண்களே.இப்படி பல ஜூம் ஆக்களுக்கு இமாமத் செய்து விட்டார் ஆமினா வதூத். சில வாரங்களுக்கு முன், கேரளாவில் மலப்புரம் பகுதியில், ஜமீதா என்கிற இஸ்லாமிய ஆசிரியர் வெள்ளிக்கிழமை ஜூம் ஆ அன்று 50 ஆண்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்திருக்கிறார். சபரிமலைக்காக தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் கேரள மண்ணில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரு பாலருக்குமான பள்ளிவாசல்களாக மாறி விட்டன. பள்ளிவாசல்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருக்கும் தர்காக்களில் பெண்கள் செல்ல எவ்வித தடையும் இல்லை. மும்பையில் ஹாஜி அலி தர்காவின் பிரதான எல்லைக்குள் நுழைய பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடும் தற்போது தகர்க்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக கடந்த இரண்டாண்டுகளாக பெண்கள் ஹாஜி அலி தர்காவின் “ஷெரின்” என்கிற புனித நுழைவாயிலுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வழிபாட்டு தளத்துக்குள் பெண்கள் நுழையும் உரிமை பெற்று விட்டால் சமத்துவம் கிடைத்து விட்டது என்பது பொருளல்ல. கிறித்தவம், இஸ்லாம் போன்ற உலகளாவிய மதங்களில் வழிபாட்டுரிமை இரு பாலருக்கும் பொதுவானதாக மாறி விட்டாலும், மத நிர்வாகம், தலைமை, ஜமா அத்துகள் அனைத்தும் இன்று வரை ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஒரு போப்பாக, பாதிரியாராக ஏன் ஒரு பெண் வர முடியவில்லை என்கிற கேள்வி தொடர்ந்து அந்தரத்தில் நிற்கிறது. இஸ்லாமிய ஜமா அத்துகள், மொஹல்லா நிர்வாகங்கள் போன்றவைகளில் பெண்களின் பங்களிப்புகள் என்ன என்பதும் கேள்விக்குரியவையே. ஆண் நிறுவனமாக்கப்பட்ட மதங்களில், ஆண் பெண் சமத்துவதுக்கான போராட்டம் என்பது நீண்ட நெடியது.
இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் முதற்படி, அந்த வழிபாட்டுத் தளத்துக்குள் பெண்கள் நுழைவது தான்.பெண்கள் நுழைந்தால் தீட்டுப்படும், புனிதம் கெட்டுவிடும் என்றால், அத்தீட்டைக் கழிப்பது தான் பெண்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும்.சபரிமலை உள்ளிட்ட மத நிறுவனங்களின் அச்சம் என்பது வழிபாட்டு தளங்களுக்குள் பெண்கள் நுழைவது குறித்தோ அல்லது புனிதம் கெட்டு விடும் என்பதோ அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆண்கள் கையில் இருக்கும் மத அதிகாரம் சரிந்து விழுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டின் மனிதிகள், சிந்து கனகதுர்கா போன்ற பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் ஆணாதிக்க மத நிறுவனங்களின் எதேச்சதிகாரத்தை உடைத்து, ஆண் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் அதிகாரத்தை பெயர்த்தெடுக்கும் வல்லமை கொண்டவை.
அ.மு.செய்யது தனது முகநூலில் எழுதிய பதிவு.
யாருப்பா இந்தாளு? சரியா சமாளிக்க கூட தெரியாம உளறிட்டிருக்கான். இந்தியாவில நடக்கிறத பேச சொன்னா அமெரிக்கால கூப்டாக.. அண்டார்டிகால கூப்டாக ன்னு பினாத்துறான். பெண்கள் மசூதிக்குள் செல்ல தடை இல்லையாம்.. ஆனால் இவங்க வூட்டு பெண்களை அனுப்பவே மாட்டாங்களாம்.. நேரடியா பதில் சொல்ல வக்கில்ல.. இதுல அடுத்த மத பிரச்சனையயில மூக்க நுழைக்கிறானுங்க தூ. அடுத்தவன் சட்டை கிழிஞ்சிருக்கு ன்னு குறை சொல்லும் முன்னால முதல்ல அவுந்து கிடக்கிற உங்க வேட்டிய சரியா கட்டுட்டுங்கடா சிப்ஸூகளா.
LikeLike