ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 7

ப. ஜெயசீலன்

சென்ற மாதத்தில்BBC உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த சினிமா விமர்சகர்களை கொண்டு அறிவித்த 100 சிறந்த வெளிநாட்டு படங்களின் பட்டியலில் செவென் சாமுராய் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பதேர் பாஞ்சாலிக்கு 15ஆவது இடம். சிறந்த 100 படங்களை தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்ட ஜப்பானிய திரைப்பட விமர்சகர்கள் யாருமே செவென் சாமுராயையோ அல்லது வேறந்த அகிராவின் திரைப்படங்களையோ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஜப்பானிய இயக்குனர்களான Yasujirô Ozu மற்றும் Kenji Mizoguchi போன்ற இயக்குனர்களின் படங்களையே பரிந்துரைத்திருக்கிறார்கள்.

அகிரா உயிருடன் இருந்த காலத்திலும் இதுதான் நிலைமை. அகிராவின் படங்களிலேயே ஜப்பானுக்குள் பெரிய வணிக வெற்றி பெற்ற படம் செவென் சாமுராய் மட்டுமே. அவர் எடுத்த படங்கள் ஜப்பானுக்குள் எந்த பெரிய சலனத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு செவென் சாமுராய் வெளியான அதே ஆண்டில் வெளியான “twenty four eyes” என்ற திரைப்படத்தை இயக்கிய மற்றுமொரு ஜப்பானிய புகழ்பெற்ற இயக்குனரான Keisuke Kinoshita தான் அந்த ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான ஜப்பானிய விருதை பெற்றார்.

ஜப்பானிய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வணிக சாதியில் பிறந்த Keisuke Kinoshita பற்றிய dawn of a film maker(2013) என்ற படத்தை எதேச்சையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது மனதிற்கு நெருக்கமான படங்களில் ஒன்றாக அது மாறிப்போனது. அந்த திரைப்படத்தை நீங்களும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.ஓரின சேர்க்கையாளராக அறியப்பட்ட Keisuke Kinoshita 1959ல் இயக்கிய Farewell to Spring என்ற திரைப்படம்தான் ஜப்பானின் முதல் gay திரைப்படம் என்று அறியப்படுகிறது. இதை எதற்கு சொல்கின்றேன் என்றால் பழமைவாதத்தில், பிற்போக்குத்தனத்தில் காலூன்றியிருந்த ஜப்பானிய சமூகம் Keisuke Kinoshitaவை முழுமையாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதின் காரணம் அவருடைய படங்கள் ஜப்பானிய சமூகத்தின் உணர்வுகளை நிஜத்திற்கு நெருக்கத்தில் அழைத்து சென்றதால்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

அகிராவின் படங்களை எடுத்துக் கொண்டால் ஜப்பானிய கலாச்சாரத்தை சமூகத்தை அவர் படங்கள் பிரதிபலிப்பதாக மேற்கத்திய பார்வையாளர்களும், விமர்சகர்களும் நினைத்து கொண்டாட, ஜப்பானிய மக்கள் அகிராவின் படங்களையோ, அகிராவையோ கொண்டாடவில்லை. எப்படி தமிழகத்தின் சமூக கலாச்சார பின்புலத்தை எந்தவகையிலும் நேர்மையாக அணுகாமல் போலித்தனமான அருவருக்கத்தக்க அழகியலை மணிரத்னத்தின் படங்கள் கட்டமைத்து, அந்த கட்டமைப்பையே தமிழகத்தின் சார்பாக இந்திய அளவிலும் உலக அளவிலும் அவரால் சந்தைபடுத்த முடிகிறதோ அதே போலத்தான் அகிராவாலும் அவருடைய படங்கள் சந்தைபடுத்தப்பட்டிருப்பதாக நான் புரிந்துகொள்ள நேர்கிறது.

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நான் சுட்டியிருந்த அகிராவின் நீண்ட பேட்டியை பார்த்ததின் மூலமும், ஜப்பானிய உணவு வகைகளின் மீது எனக்கு ஏற்கனவே உள்ள ஈர்ப்பின் மூலமும், ஜப்பான் பற்றிய பல டாக்குமென்டரிகளின் மூலமும் எனக்கு ஜப்பானிய சமூக/சாதிய அமைப்பும், சாமுராய்களின் சமூக அந்தஸ்து குறித்தும் மெல்ல அறிமுகமாகியது. அதன் பின் நான் செவென் சாமுராய் படத்தை மீண்டும் பார்த்தபொழுது எனக்கு அது வேறொரு அனுபவத்தை தந்தது. செவன் சாமுராய் படத்தில் இருக்கும் ஆதிக்க சாதி/சமூக அரசியல் குறித்து நான் இணையத்தில் தேடியபோது வெகு சொற்பமான தரவுகளே இருந்தது அல்லது என்னால் கண்டடைய முடிந்தது. மேற்கத்திய பார்வையில் செவென் சாமுராய் திரைப்படத்தில் நிலவும் class struggle பற்றி இரண்டு மிக நல்ல கட்டுரைகள் என் கண்ணில் பட்டது. (https://www.criterion.com/current/posts/443-a-time-of-honor-seven-samurai-and-sixteenth-century-japan,

http://filminnit.blogspot.com/2014/09/an-appreciation-of-seven-samurai-in.html ).

சாதிய சமூகம் குறித்து முழுதாக புரிந்து கொள்வது மேற்கத்தியர்களுக்கு ஒரு சவாலான அல்லது இயலாத காரியம். இதை நானே ஆஸ்திரேலியர்களுக்கு சாதியை பற்றி விளக்கி சொல்ல முயன்று அவர்கள் அதை புரிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை பார்த்திருக்கிறேன். ஏனென்றல் பிறப்பின் அடிப்படையில் கேள்விகளற்று கட்டமைக்கப்படும் ஒருவனின் உயர்வு/தாழ்ச்சி ஜனநாயக முதிர்ச்சியில்/அறிவியலில் வெகு தூரம் வந்துவிட்ட அவர்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமமிருக்கிறது. எனவே ஜப்பானிய நிலவுடமை சமூக அமைப்பை ஒரு class structure அல்லது class struggle என்று புரிந்து கொள்கிறார்கள்.

ஆனால் சாதியில் உழலும் பன்றிகள் உலவும் நமது சமூகத்தில் புழங்கும் நமக்கு ஜப்பானிய சாதிய அமைப்பையும் அங்கு மங்கூஸ் மண்டை சாமுராய்கள் செய்த சில்லறைத்தனங்களையும் புரிந்து கொள்வதில் எந்த சிரமுமில்லை. அப்படியிருக்க செவென் சாமுராய் திரைபடத்தை பற்றிய காத்திரமான ஒரு விமர்சன பார்வை நம் சூழலில் ஏன் உருவாகாமல் போனது என்று நாம் யோசிக்கவேண்டும். நான் இந்த கட்டுரைத்தொடரின் முதல் பகுதியில் சொன்னதை போல புற காரணிகளும், social conditioning, social conformity போன்றவை நம்முடைய மனதில் எவ்வளவு வலுவான ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்று நாம் யோசித்தால் மிகவும் வியப்பாகயிருக்கும். இவைகள்தான் நம்முடைய சினிமா சார்ந்த ரசனைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எப்படி இந்தியாவின் பார்ப்பனர்கள் தங்களுடைய கலை பண்பாட்டை மொத்த இந்தியாவிற்குமான கலை பண்பாடாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிறுவுகிறார்களோ, அதே போல வெளிநாடுகளின் பார்ப்பனர் வகை ruling class சாதிகளின், இனக்குழுக்களின் கலை, பண்பாட்டை அந்த நாட்டின் ஒட்டுமொத்த கலை பண்பாடாக இங்கு கொண்டுவந்து நம்மை நம்ப வைக்கிறார்கள். ஏனென்றால் இங்கிருக்கும் சாதி வெறியர்களின் மன நிலையம் sensibilitiesம்சாமுராய் போன்ற சில்லறை பசங்களின் sensibilitiesம் ஒன்றுதான். மணிரத்னம் படத்தை அகிரா பார்த்தால் அவருக்கு தனது வாழ்க்கை தெரியும். அகிரா படத்தை மணிரத்னம் பார்த்தால் மணிரத்னத்துக்கு அவருடைய வாழ்க்கை தெரியும். அதில் வியப்பில்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையை, sensibilitiesயை நம்மையும் பார்த்து விசிலடிக்க வைத்ததுதான் வியப்பு.

செவென் சாமுராய் மிஸ்கினுக்கும், ரஞ்சித்துக்கும், மணிரத்னத்திற்கும், கமலுக்கும் என்று எல்லோருக்குமான பிடித்த படமாக மாறியதில் அல்லது மாற்றப்பட்டதின் நுட்பம் அசாத்தியமானது. இறுதியாக எல்லாவற்றிலும் குறிப்பாக கலையிலக்கிய படைப்புக்களை நாம் அணுகுவதில் உள்ள சவால்கள் குறித்தும் கலையிலக்கியத்தின் உள்ளாக உள்ள அரசியலை நாம் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியத்துவம் மற்றும் சவால்கள் குறித்தும் இந்த கட்டுரை ஒரு புதியகோணத்தை என்னோடு சேர்த்து உங்களுக்கும் அளித்திருக்கும் என்ற நம்பிக்கையில்….

ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர். சினிமாக்களில் சாதி அடையாளங்கள் குறித்த சிறப்புக் கட்டுரைகளை த டைம்ஸ் தமிழ் டாட் காமில் எழுதிவருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.