ப. ஜெயசீலன்
ஏழு சாமுராயின் இறுதி பகுதி என்பது கிராமத்திற்கு வரும் சாமுராய்கள் தங்களின் மீது அச்சத்தோடும், சந்தேகத்தோடும் இருக்கும் கிராமத்தினரின் நன்மதிப்பை பெற்று, கிராமத்தினருக்கு போர் பயிற்ச்சியளித்து இறுதி காட்சியில் எப்படி வடிவேலுவை போல பிளான் பண்ணி கொள்ளைக்காரர்களை கொன்று வெல்கிறார்கள் என்பதை அகிரா நின்று நிதானமாக பின் உட்கார்ந்து பின் ஒருகளித்து படுத்து பின் மல்லாக்க படுத்து நிதானமாக கதை சொல்கிறார். மூன்றரை மணிநேரம் கிட்ட ஓடும் இந்த படத்தில் அகிரா இந்த பகுதிக்கு மட்டுமே கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் செலவிடுகிறார். இந்த பகுதியில் நீங்கள் எந்த 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்கு போய் தம் போட்டுவந்தாலும் கூட நீங்கள் எதையும் தவறவிடப்போவதில்லை. இந்த இறுதிப்பகுதியின் திரைக்கதை என்பது அகிரா ரசிச்சு ருசிச்சு என்ஜாய் செய்து எடுத்துள்ள கிட்டத்தட்ட கடைசி 1 மணிநேரம் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை நோக்கி நகர்த்தும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கிறது.
இந்த இறுதி பகுதியில் அகிரா ஆணித்தரமாக ஜப்பானிய நிலவுடமை சமூகத்தின் சாதிய அமைப்பை தமிழ் சினிமாவில் சாதிய படங்களை எடுக்கும் சில்லறை இயக்குனர்களே வாய்பிளந்து போகும் அளவுக்கு லாவகமாக நிறுவுகிறார். இந்த பகுதி நெடுகிலும் அகிராவின் சாமுராய் குடுமி டகடகவென்று ஆடுகிறது என்றாலும் சில முக்கியமான கூறுகளை மட்டும் நான் விவரிக்கிறேன். இந்த இறுதிப்பகுதியில் அகிரா ஒரு காதல் கதையை விவரிக்கிறார். கிராமத்திற்கு வந்துள்ள சாமுராய்களிலேயே இளையவனான உகமோடோ(okamoto) மன்சோ என்ற விவசாயியின் மகள் ஷினோ(shino) மீது ஈர்ப்பு கொள்கிறான். சாமுராய்கள் பெண்கள் விஷயத்தில் ஒரு சில்லறை பசங்கள் என்று நான் போன கட்டுரைகளில் சொல்லியிருந்தேன். அதை படத்தில் வரும் அந்த கிராமத்தினரும் அறிந்திருந்ததால் மன்சோ தனது மகளை ஒரு ஆணை போல முடிவெட்டி வேஷமிட்டு கொள்ளச்சொல்கிறார். இது நடக்கும்போதே அந்த கிராமத்து பெரியவர் மண்டையன் தலைக்கு ஆபத்து என்று கிராமம் கவலைபட்டால் நீ உன் தாடி மயிருக்கு கவலைப்படுகிறாய் என்று கண்டிக்கிறார்.
அதாவது தனது மகளை சாமுராய் மண்டயன்கள் வன்புணர்ந்து விடுவார்கள் என்று ஒரு தகப்பன் அஞ்சுவதை அகிராவே தனது திரைக்கதையில் கண்டிக்கிறார். இதைத்தாண்டி ஷினோ ஆணாக வேடமிட்டு புழங்கினாலும் எப்படி வடசென்னையில் ஐஸ்வர்யாவின் மாரை தொட்டுணர்ந்து பெண்ணென்று தனுஷுக்கு தெரிந்து டுபுக்கென்று லவ் பார்ம் ஆகின்றதோ அதேபோல உகமோடோவுக்கும் ஷினோவுக்கும் நடந்து லவ் பார்ம் ஆகிறது. சாமுராய்கள் தங்களுக்கு கீழுள்ள சாதிகளின் பெண்களை வன்புணர்ந்தார்கள், பொறுக்கி தனமாக நடந்து கொண்டார்கள் என்ற வரலாறை அகிரா மிக கவனமாக பிழை நீக்குகிறார். எப்படி ? அந்த இருவருக்குமான காதலை பாலியல் தேவையை தாண்டிய பரிசுத்தமான ஒன்று என்று தனது காட்சிளின் மூலம் கட்டமைக்கிறார். அவளுக்கு இவன் தனது உணவின் ஒரு பகுதியை எடுத்து சென்று தரும் அந்த மழை காட்சி ஒரு உதாரணம்.
யார் உயிரோடு இருப்பார்கள் யார் சாவார்கள் என்று தெரியாதா இறுதி யுத்தத்திற்கு முந்தய இரவு ஷினோ உகமோடோவை புணர விருப்பம் தெரிவிக்கறாள். சின்ன புள்ள ஆசபடறா கழுத செஞ்சு விடுவோம் என்னும் தொனியில் உகமோடோ இசைகிறான். இந்த கலவிக்கு பின்பு ஷினோவின் தந்தையிடம் இருவரும் கையும் களவுமாக மாட்ட, தக்காளி உகமோடோவை தூக்கிப்போட்டு மிதிப்பார் என்று பார்த்தால் நாம் எல்லோரும் மண்டை காயும் வகையில் ஷீனாவை அவர் கன்னம் கன்னமாக அறைந்து ஒரு விவசாயியின் மகள் சாமுராய்யை புணரலாமா? சாமுராய்களின் ஆண்குறி என்றால் அவ்வளவு அசால்ட்டா என்று தனது மகளை அடிக்கிறார். இடையில் புகும் கம்பி விடுங்கஜி இது எல்லாம் ஒரு விஷயமா..சின்ன புள்ளைங்க எதோ பண்ணிட்டாங்க..எப்பவுமே சண்டைக்கு முன்னாடி ராத்திரி இதுயெல்லாம் இல்லாம இருக்குமா என்று அந்த தந்தையை கூல் பண்ணுகிறார்.
இறுதிக்காட்சியில் எல்லாம் முடிந்து உகமோடோ அந்த கிராமத்தை விட்டு கிளம்பும் முன் ஷினோவை பார்க்கிறான். ஷினோவும் இவனை பார்க்கிறாள். பின்பு இவன் பார்த்து கொண்டிருக்கும்போதே அவள் பாட்டுக்கு இவனை விட்டு விலகி சென்று வயலில் இறங்கி நாத்துநட தொடங்குகிறாள். விவசாயியின் மகளும் சாமுராய்யும் ஈர்ப்பு கொள்ளலாம் கலவிக்கொள்ளலாம் ஆனால் ஒருபோதும் கணவன் மனைவியாக சேர்ந்துவாழ முடியாது கூடாது என்ற உண்மையை அறிந்துவைத்துள்ள கம்பி உகமோடோ அருகில் அந்த காட்சியில் சலனமில்லாமல் நிற்கிறார். கதையில் கூட தலித் கதாபாத்திரங்களை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள முடியாத நம்முடைய சினிமா இயக்குனர்களை போலவே அகிராவும் கதையில் கூட சாமுராய் சாதி இன்னொரு சாதியை துணையாக ஏற்றுக்கொள்ள கூடாது என்று யோசித்திருப்பது ஒரு அடடே ஆச்சர்யக்குறி.
சாமுராய்களின் ஒழுக்கம் பற்றிய பிம்பத்தை அகிரா சிரமமேற்கொண்டு படம் நெடுகிலும் நிறுவுகிறார். அந்த முனைப்பை படத்தின் மூன்றாம் பாகத்தில் பலவிடங்களில் காணலாம். தன்னை சாமுராய் என்று அழைத்துக்கொள்ளும் விவசாய சாதியில் பிறந்த கிக்கு பலவிடங்களில் தனது பாலியல் தேவையை சொல்லி தனக்கு பெண்கள் வேண்டும் என்று சொல்கிறான். அவன் அவ்வாறு சொல்லும்போதெல்லாம் மற்ற சாமுராய்கள் தங்களது கடமையிலும் கண்ணியத்திலும் மிக கறாராக இருக்கிறார்கள். ஒரு மழை காட்சியில் கிக்கு தனக்கு உடனே பெண்கள் தேவை என்று சலம்ப எச் ராஜா போன்று ஓங்கி அப்பினால் செவுனி சிதைந்து விடும் அளவில் உடல்வாகு கொண்ட டெர்ரரான சாமுராய் குயூசு தான் பயிற்சி செய்ய மலைக்கு போகிறேன் என்று போய் கொட்டும் மழையில் வாள்வீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த இரு கதாபாத்திரங்களின் contrast என்பது சாமுராய்களின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் நிறுவவே பயன்படுகிறது.
கொள்ளைக்காரர்கள் தங்கியுள்ள இடத்தை preemptive strike செய்ய சாமுராய்களும் சில கிராமத்தினரும் போய் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்பொழுது ரிக்ச்சி என்ற விவசாயி தன்னிடமிருந்து கொள்ளையர்கள் கடத்திய தனது மனைவி கொள்ளையர்களின் கூடாரத்திலிருந்து வெளிவருவதை பார்த்து விடுகிறார். அதாவது கடத்தப்பட்ட தனது மனைவி அந்த கொள்ளையர்களால் ஒரு comfort girlலாக பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து விடுகிறான். தனது மனைவி கடத்தப்பட்ட இத்தனைகாலமும் அவளை மீட்க எந்த முயற்சியுமில்லாத ரிக்ச்சி சாணி மாதிரி நிற்க தனது கணவனின் முன் தனது “கண்ணியம்/மானம்” பறிபோனதாய் உணரும் அந்த பெண் நெருப்புக்குள் பாய்ந்து உயிரை விடுகிறாள். இது அகிராவின் பிற்போக்கு சாதிய ஆணாதிக்க மனநிலைக்கு இன்னொரு உதாரணம்.
சேரனின் பாரதி கண்ணம்மா படத்தில் “யார்ரா தேவன்?” என்று தொடங்கி விஜயகுமார் ஒரு நீண்ட வசனம் பேசுவார். மேலோட்டமாக கேட்டால் தேவர்களை கண்டிப்பதைப் போலவும் அவர்களுக்கு அறிவுரை சொல்வதைப் போலவும் இருக்கும் அந்த வசனம் கூர்ந்து கவனித்தால் தேவர்களுக்கு குறி நீவி விடுவதை உணர முடியும்”
இந்த வசனம் எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்கவேண்டும். பொதுவாக எந்த திரைப்படத்தை பற்றியும் விமர்சனம் செய்யாத அண்ணன் திருமாவளவனே ஒருமுறை இந்தக் காட்சியை குறிப்பிட்டு இந்த மண்ணின் பூர்வகுடிகளை எதோ அகதியாக வந்தவர்களை போலவும் சாதி ஹிந்துக்கள் தான் அவர்களுக்கு இங்கு இடமளித்ததை போன்றும் தோற்றம் தரும் அந்த வசனத்தை குறித்து கொந்தளித்தார். அதே போன்ற ஒரு காட்சியை அகிராவும் அமைத்துள்ளார்.
ஒரு காட்சியில் கிராமத்தினர் காயம்பட்ட சாமுராய்களை கொன்று தாங்கள் எடுத்து வைத்திருந்த சாமுராய்களின் ஆடைகளையும், ஆயுதங்களையும் கிராமத்திற்கு வந்த சாமுராய்களுக்கு தர 6 சாமுராய்களும் கொந்தளிக்கிறார்கள். எப்படி எங்கள் சாதிக்காரனை நீங்கள் கொன்று அவர்களது ஆடைகளையே எங்களுக்கு தரலாம் என்று. ஒரு சாமுராய் மொத்த கிராமத்தையும் கொன்றுவிட்டு போய்விடுவேன் ராஸ்கல்ஸ் என்று மிரட்டி தனது ஈட்டியை வாசல்படியில் வீச வெறும் அந்த ஈட்டியை மட்டுமே பார்த்து அந்த கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள். உடனே கிக்கு இப்போ எதுக்கு விவசாயிகளின் மீது கோபப்படுகிறீர்கள்? அவர்களை என்ன புத்தர் என்று நினைத்து கொண்டிருந்தீர்களா? உண்மையில் விவசாயிகள் சில்லறை பசங்கள் திருட்டு பசங்கள் என்று தொடங்கி ஓத்தா ஒம்மா என்று திட்டிவிட்டு ஆனால் அவர்கள் இப்படியாக சாமுராய்கள் நீங்கள்தான் காரணம் ஏனென்றால் விவசாயிகளை நீங்கள் ஓடவிட்டு அடித்தீர்கள் உங்களது வீரமான போருக்காக வரி வசூலித்தீர்கள் என்று திரும்பவும் சாமுராய்களுக்கு buildup தருவத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்.
அந்த கிராமத்தில் 20 வீடுகளிருப்பதாய் அகிராவே தனது திரைக்கதையில் சொல்கிறார். ஒரு வீட்டுக்கு இரண்டு ஆண்கள் என்று வைத்தால் கூட மொத்தமே 40 ஆண்கள்தான் வருவார்கள். ஆனால் படத்தில் சகட்டுக்கேணிக்கு 10,15 வயதானவர்களும், குழந்தைகளும் 30,40 ஆண்களும் புழங்குக்குகிறார்கள். அகிராவே அந்த கிராமம் மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் கிராமம் என்று காட்டிவிடுகிறார். அதாவது அந்த கிராமத்தை மலையின் எந்த பக்கம் வேண்டுமானாலிருந்தும் அடையலாம். ஆனால் கம்பி மிக பெரிய ராணுவ மேதையை போல ஒரு பக்கம் பாலத்தை உடைத்துவிடுங்கள் என்கிறார். அந்த பாலத்தின் அகலம் என்பது ஒருகரையிலிருந்து இன்னொரு கரைக்கு சிறுநீர் கழிக்கலாம் என்னும் அளவில் உள்ளது. இன்னொரு புறம் வயலில் தண்ணீர் நிரப்பி விடுகிறார்கள். அதாவது குதிரையில் வரும் கொள்ளையர்கள் சேரும் சகதியில் சிக்கிக்கொள்வார்களாம். இன்னொரு பக்கம் வேலி அமைக்கிறார்கள். இன்னொரு பக்கம் காட்டுவழியில் கொள்ளையர்களை மறிக்கிறார்கள். அதாவது 360 டிகிரியில் எந்த பக்கம் வேண்டுமானாலும் உள்ளே வர கூடிய இடத்தில் அமைந்துள்ளதாய் காட்சி அழகிற்காக காட்டிவிட்டு அகிராவே பார்வையாளர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்னும் நம்பிக்கையில் நான்கு முனைகளில்தான் கொள்ளையர்கள் வருவார்கள் என்று நிறுவி அரண் அமைத்து சண்டை காட்சி அமைக்கிறார்.
நடக்கும் சண்டையில் கொள்ளையர்களை முழுக்க முழுக்க வீழ்த்துவது சாமுராய்களும், சாமுராய்களின் யுக்திகளும் மட்டுமே.கிராமத்தினர் எடுபிடி வேலைக்கும், குருட்டாம்போக்கில் சில கொள்ளையர்களை வீழ்த்தவும் பயன்படுகிறார்கள். அந்த கிராமத்தினரை சண்டைக்கிடையில் சாமுராய்கள் 2ம் வகுப்பு குழந்தைகளை பள்ளி தலைமையாசிரியர் வழிநடத்துவதை போல அதட்டி தட்டி குடுத்து வேலை வாங்கி வழிநடத்துகிறார்கள். ஒருவழியாக அந்த கருமாத்திரம் பிடித்த சண்டை ஓய்ந்து ஒழிய முடிவில் 7 சாமுராய்களில் 3 பேர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். தன்னை சாமுராய் என்று கூறிக்கொண்டு திரிந்த கிக்கு தனது அவசரகுடுக்கை தனத்தாலும், புத்தி கூர்மையற்ற தனத்தாலும் சண்டையில் இறந்துவிட்டிருக்கிறான். அவனது கல்லறையும் இறந்த மற்ற சாமுராய்களின் கல்லறையோடு புதைக்கப்பட்டிருக்கிறது. விவசாயக்குடியில் பிறந்து சாமுராயாக தன்னை உணர்ந்த கிக்கு கதாபாத்திரத்தின் முடிவு அகிராவின் சாதிய இறுக்கம் சார்ந்த திரைக்கதை போக்கிற்கு இன்னொரு உதாரணம். பரியேறும் பெருமாளில் நல்லா படிங்க தம்பி என்ன வேணும்னாலும் ஆகலாம் என்று மாரி செல்வராஜ் தலித்துகளுக்கு ஆறுதல் சொன்னதை போல அகிராவும் எங்களுக்காக சண்டையிட்டு சாகுங்கள் சாமுராய்களோடு உங்களை புதைத்து கௌருவபடுத்துகிறோம் என்று பிற சாதியினருக்கு ஆறுதல் சொல்கிறார்.
இறுதிக்காட்சியில் கம்பி மிச்சமிருக்கும் இரண்டு சாமுராய்களிடமும் இந்த சண்டையிலும் நாம் தோர்த்துவிட்டோம். இந்த சண்டையில் ஜெயித்தது விவசாயிகள்தான் என்று எதோ சாமுராய்கள் எல்லோரும் தியாக தீபங்கள் போலவும் எங்கு எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கு எல்லாம் சாமுராய்கள் களமிறங்கி விவசாயிகளின் இன்னல் துடைக்க போராடி ஆயிரக்கணக்கான சாமுராய்கள் இன்னுயிரை நீத்த தியாகிகள் போலவும் ஒரு தோரணையை உருவாக்குகிறார். படம் நெடுகிலும் வித விதமாக வெட்டுவது குத்துவது எல்லாவற்றையும் காண்பித்துவிட்டு தேவர்மகன் கமல் பணியில் டேய் போங்கடா புள்ள குட்டிய படிக்கவைங்கடா என்னும் தொனியில் நாம தோத்துட்டோம் ஜி ஜெயிச்சது விவசாயிகள்தான் என்று படத்தை முடிக்கிறார்.
அடுத்த பகுதியில் முடியும்.
ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர். சினிமாக்களில் சாதி அடையாளங்கள் குறித்த சிறப்புக் கட்டுரைகளை த டைம்ஸ் தமிழ் டாட் காமில் எழுதிவருகிறார்.