அப்பணசாமி
இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக ‘தமிழ் இந்து’ எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும்.
காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு இந்திய விடுதலையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல செங்கொடி சங்கத்தையும் பொதுவுடைமை இயக்கங்களின் பெயரையும் மறைத்து விட்டுத் தஞ்சைக் களஞ்சியில் நிலவிய நிலவுடைமைத்துவக் கொடுமைகளுக்கு எதிராக நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களை நினைவு கூர இயலாது.
தஞ்சையில் இருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய கோயில்கள், மடங்கள், பண்ணகள் கைகளில் குவிந்துள்ளதே அங்கு பண்ணை அடிமை முறை ஆழமாக இறுகியிருந்ததற்குக் காரணம். இந்தப் பண்ணை அடிமை முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர். இவர்களோடு குத்தகை வார விவசாயிகளும் இருந்தனர். இவர்களிலும் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர்.
பண்ணைகள் விவசாயத் தொழிலாளர்களையும் வார விவசாயிகளையும் கொத்தடிமைகள் போல் நடத்தினர். இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் செங்கொடி இயக்கம். இது 25 ஆண்டுகளில் பல களங்களைக் கண்டது. கூலிகளாகவும் வார விவசாயிகளாகவும் இருந்தவர்கள் ஒன்று திரண்டனர். ஒவ்வொரு போராட்டத்திலும் களப்பலி கொடுத்துப் படிப்படியாக முன்னேறினர்.
இந்தப் போராட்டங்கள் கூலி உயர்வு போன்ற பொருளாதாரக் கோரிக்கை களுக்காக மட்டுமல்லாமல் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுக்கு எதிராகவும் நடந்தவை. அதனால்தான் “போடீ என்று சொன்னால் போடா என்று சொல்; அடித்தால் திருப்பி அடி” என்று பி. சீனிவாச ராவ் முழங்கினார். இந்த முழக்கம் தஞ்சைத் தரணி மட்டுமல்லாமல் நிலப்பிரபுத்துவம் நிலவிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது.
ஆனால் போராட்டங்கள் ஒருபோதும் பின் வாங்கியதில்லை.
களப்பலிகளை விதைத்து ஒவ்வொரு வெற்றியாகப் பெற்றது. 12 படியாக இருந்த வாரம் 16, 18 25, 55 என உயர்ந்தது; மறுபக்கத்தில் சாணிப்பால், சவுக்கடி, நுகத்தடியில் பூட்டுதல் போன்ற தண்டனைகள் மாறின. மொத்தத்தில் நில உடைமைத்துவத்தின் இறுக்கம் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்த இடங்களில் எல்லாம் தளர்ந்தது. இந்த வயிற்றெரிச்சல் தான் நெல் உற்பத்தியாளர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடுதான் வெண்மணி படுகொலைகள்.
பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் இதனை வர்க்கக் கண்ணோட்ட அடிப்படையில் நிலவுடைமைக் கொடுமைக்கு எதிராக வளர்த்தெடுத்தாலும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுகளை ஒழிக்கும் கோரிக்கைகளையும் முன்னெடுத்தனர். இதில் பெரும்பான்மையோர் தலித் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.
அவர்கள் இப் போராட்டங்களைச் சமூகப் படிநிலை அடிப்படையில் முன்னெடுத்திருக்காவிட்டாலும் அக் கோரிக்கைகளையும் உள்ளடக்கியதுதான் செங்கொடி இயக்கம். ஆனால் அவர்கள் இதனை வர்க்கப் போராட்டமாகக் காட்டிக்கொள்வதைப்போல சமூகப் போராட்டமாகக் காட்டிக் கொள்வதில்லை.
ஆகவே தான், கீழத்தஞ்சைப் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு கள ஆய்வான ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ புத்தகத்தின் துணைத் தலைப்பில் ’தலித்’ என்ற சொல்லைச் சேர்த்து ’தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு’ எனத் தலைப்பிட்டேன்.
இப் போராட்டங்களில் செங்கொடி சங்கம் இல்லாத இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களும் சிறப்பாக இயங்கியுள்ளன.
இப் போராட்டங்களின் விளைவாகக் காவிரி கடைமடை மாவட்டங்களில் நிலப்பகிர்வு அதிகமாக நடைபெற்று நிலக்குவியல் தகர்க்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்த தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் உழுத நிலங்களுக்கு உடைமையாளர்களாக உள்ளனர்.
ஆனால் இன்று எல்லா உரிமைகளும் பறி போகும் நிலைமை உள்ளது. காவிரி கடைமடைப் பகுதிகளில் எதிர்காலத்தில் விவசாயம் இருக்குமா என்பது தெரியவில்லை. தஞ்சையைப் பாலைவனமாக்க கார்ப்பரேட்டுகளும் மத மோதல்களைத் தூண்ட பாசிசமும் கை கோர்த்துள்ளது.
இடதுசாரி சக்திகளும் அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளும் இணைந்து போராட வேண்டிய இச் சூழ்நிலையில் தமிழ் இந்து தலையங்கம் விஷமத்தனமாக இருக்கிறது. இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளின் அணி சேர்க்கையை வலியுறுத்தும் தோழர் ரவிகுமாரும் இதே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பணசாமி, எழுத்தாளர்; மூத்த பத்திரிகையாளர்.