பீட்டர் துரைராஜ்
“நாவலைப் பாதி எழுதி முடித்தபோது, எங்கே உண்மை விடைபெறுகிறது, எங்கே கற்பனை நுழைகிறது என்பதில் எனக்கே சந்தேகம் தோன்றிவிட்டது ” என்று அ.முத்துலிங்கம் இந்த நாவல் பற்றி அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இலங்கை , கொக்குவில் கிராமத்தில் ‘ரயிலை வைத்து மணி சொன்ன நாளில்’ இருந்து தனது அனுபவங்களை, நினைவுகளை கோர்வையாக 46 அத்தியாயங்களில் இந்த நூலில் எழுதியிருக்கிறார் அ.முத்துலிங்கம்.
கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது அனுபவங்களை அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை நாவல் என்றே நாம் ஒப்புக்கொள்ளுவோம்.2008 ஆம் ஆண்டு தனது முதல் பதிப்பை இந்த நூல் கண்டுள்ளது.
ஊர்திருவிழாவில் தன் அம்மாவைத் தொலைத்த கதையில் தொடங்கும் இந்த நூல் , தன் ‘அக்காவின் சங்கீத சிட்சை’, தான் ‘பாடகன் ஆன கதை’ என பள்ளிக்காலம்,கல்லூரிக் காலம், உத்தியோக காலம்,சந்தித்த கதாபாத்திரங்கள் என 46 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு. ஆனால் இதை நாம் கதை என்று சொல்ல முடியாது. எந்த அத்தியாயத்திலிருந்தும் படிக்கலாம்.’ இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் ” என்ற பொறுப்புத் துறப்போடு(disclaim) இந்த நூல் தொடங்குகிறது.
நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். இந்த நூலும் எந்த வஞ்சனையும் இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள பல வாக்கியங்களை நான் அடிக்கோடிட்டு ரசித்துச் சிரித்தேன்.
அம்மாவுடன், அய்யாவுடன், அக்காவுடன், தங்கையுடன், மனைவியுடன், பேத்தியுடன் அவருக்கு உள்ள நினைவுகளின் கோவையே இந்த நூல். ஐ.நா.வில் பணிபுரிந்த போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். பல மனிதர்களை பார்த்து இருக்கிறார். இதில் கதை என்று ஏதும் இல்லாததால் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசிக்கக் கூடிய ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு.
‘உருப்படமாட்டாய்’ என்று சொன்ன ஆசிரியர் சொன்ன கட்டடத்தின் முன் சிறுநீர் கழித்த கண்ணதாசன், காதலியை சைக்கிளில் துரத்திய மதியாபரணம், 14 சமையல் புத்தகத்திலும் இல்லாத வட்டிலப்பம், தமிழ் ஈழத்தின் வரைபடத்தை ஒரு வரியில் பத்திரிக்கையாளர்களுக்குச் சொன்ன கேர்ணல் கிட்டு, ‘நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். சரி எனக்கு எப்போது ஓய்வு?’ என்று அவர் மனைவி கேட்ட கேள்வி போன்ற துணுக்குகள் மூலம் அ.முத்துலிங்கத்தின் ஜனநாயக பார்வையை, அரசியலை நாம் அவதானிக்க முடியும்.
மொத்தத்தில் துணுக்குத் தோரணங்களைக் கொண்ட நூல் இது.
உயிர்மை பதிப்பகம்/ 287 பக்கம்/ரூ.240/இரண்டாம் பதிப்பு 2014.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழில் தன் வாசித்த நூல்கள், ரசித்த சினிமாக்கள் குறித்து சமூக செயல்பாட்டாளர்களை நேர்கண்டும் எழுதி வருகிறார்.