வி. சபேசன்
சில நாட்களுக்கு முன்னர் சீமானின் வீடியோ ஒன்று பார்த்தேன். தமிழ்நாடு ஏன் பெரியார் மண் என்று நரம்பு புடைக்க கோபத்தோடு அதில் சீமான் கூச்சலிடுகிறார். இது ஏன் சேர, சோழ, பாண்டிய மண் இல்லை, இது ஏன் முத்துராமலிங்கத் தேவர் மண் இல்லை, ஏன் வள்ளலார் மண் இல்லை என்று கதறுகிறார். தம்பிகள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
கவுசல்யா என்பவர் சங்கர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சாதி மறுப்புத் திருமணம். 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப் படையினரை ஏவி சங்கரை கொன்று போட்டார்கள். தாக்குதலில் கவுசல்யாவும் காயம் அடைந்தார்.
காதற் கணவன் கொடுரமாகக் கொல்லப்பட்டதில் கவுசல்யா நிலைகுலைந்து போனார். ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துக்கள் அவரை மீட்டெடுத்தன. சங்கரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடினார். தன்னைப் பெற்றெடுத்த தந்தைக்கும் தாய்க்கும், அவர்களுக்கு துணையாக நின்று திட்டம் போட்ட உறவினர்களுக்கும் நீதிமன்றத்தில் மரண தண்டனை வாங்கிக் கொடுத்தார். அவர்கள் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்து நடக்கிறது.
இன்று பறையிசைக் கலைஞரான சக்தி என்பவரை காதலித்து கவுசல்யா திருமணம் செய்து கொண்டார். ஜீன்சும் கருப்புச் சட்டையும் அணிந்து, தந்தை பெரியார் சிலை முன் நின்று, இருவரும் மாலை மாற்றி, உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யாவும் சக்தியும் பறையடித்து நடனமும் ஆடினார்.
உண்மையில் இவையெல்லாம் திரைப்படங்களில் கூடக் காண முடியாத காட்சிகள். தமிழ்நாடு வேறு யாருடைய மண்ணாக இருந்தாலும் கவுசல்யா வெள்ளைப் புடைவை அணிந்து வீட்டுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். அல்லது உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும். அதிகபட்சம் தனது சாதிய சமூகத்திற்கு கட்டுப்பட்டு, வெளியுலகின் தொடர்பை தவிர்த்து, சில ஆண்டுகள் கழித்து, தனது சாதியிலேயே பெற்றோர் விருப்பப்படி யாரே ஒருவனை மறுமணம் செய்து வாழ முடிந்திருக்கும்.
ஆனால் எங்கள் கவுசல்யா நிமிர்ந்து நிற்கிறார். கொலை செய்த பெற்றோரை சிறையில் தள்ளி, சாதியத்திற்கு எதிரான போராளியாக வடிவம் எடுத்து, காதலித்து மறுமணம் செய்து, பறை முழங்குகிறார். ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிப் போயுள்ள பெண்களுக்கு நம்பிக்கை தருபவராக, கவுசல்யா திகழ்கிறார்.
இந்த சிந்தனைகளை தந்தவர் பெரியார் ஒருவரே. அதனாற்தான் இது பெரியார் மண். யார் நரம்பு புடைக்கக் கத்தினாலும் தமிழ்நாடு பெரியார் மண் என்பது மாறவே மாறாது.
கவுசல்யாவிற்கும் சக்திக்கும் இனிய திருமண வாழ்த்துகள்!
வி. சபேசன், சமூக-அரசியல் விமர்சகர்.