’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்

‘திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’ என்கிற இயக்குநர் பா. ரஞ்சித்தின் கேள்விக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பதில்…

“முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.
அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் – தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல்லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா – அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர்களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?
அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள் விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில்லையா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம்பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு – சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே ?

ஒரு எடுத்துக்காட்டு
கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.
பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.
சென்னை பெரம்பூரில் பெரியார் தலைமையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி… ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார்.
(நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.
தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர்வானவர்கள் என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன், பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.
(குடிஅரசு – 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன்னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடுமையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது – மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)
கள்ளக்குறிச்சி – தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)
சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)
இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)
திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)
சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)
திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)
லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)
அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932
லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)
சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)
தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)
சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)
சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)
திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)
பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)
சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)
சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)
ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)
திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு – இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிரயோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

” எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் – தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள் தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே.

முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது, மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன். அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும் கூட!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது – சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது. மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது. அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

நடந்திருக்கின்ற மாற்றங்களை பரிகசிப்பதோ, உதாசீனப்படுத்துவதோ, ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும், இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் – கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில் உசத்தி – தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.
இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற்றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது, பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு – சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா – இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? – அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி – தீண்டாமை ஒழிப்பு – மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே! திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது – யாருக்கோ தான் பயன்படும். கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல.

ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் – அதற்குமேல் விமர்சிக்கலாமா?

விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் – வரவேற்கிறோம். பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும்.

தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும். ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது.

தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.