வேந்தன். இல
கேட்கப்படும் கேள்விக்கு பின்னே சதி உள்ளதோ அல்லது யாரோ எழுதிக்கொடுத்ததோ. ஆனால் ஒரு கேள்வியையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ளும் பக்குவம் ஒரு தலைவருக்கு இருக்கவேண்டும். அப்படி இருப்பது தான் தலைமை பண்புக்கு அழகு. பெரியாரின் வரலாற்றை அறிந்த, அண்ணாவுடன் அரசியல் பயின்ற கலைஞருடன் வளர்ந்தவர் என்று சொல்லப்படும் மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கு இது இருக்க வேண்டும் என்று சொல்லித் தெரிய தேவையில்லை.
உணர்ச்சிவயப்பட்டு பேசுவதால், தான் சார்ந்திருக்கும் கொள்கைக்கும் கூட்டணிக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாததல்ல.
அரசியல் அதிகார பகிர்வு என்பது பற்றிய கேள்விக்கு “என் வீட்டில் உள்ளவர் கூட தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்” என்றும் சில தகவலையும் பதிலாக கொடுத்து ஆவேசமைடந்தார். அப்போதே உள்நோக்கம் கொண்ட கேள்வி என்று சற்று கோபத்துடன் சுதாகரித்து முடித்து கொண்டார். அவர் பேசியதை வைத்து அவர் வீட்டில் வேலை செய்யும் தலித் சமூகத்தினரை உதாரணமாக வைத்து அதிகாரபகிர்வை வைகோ பேசுவது ஆதிக்க மனநிலை என்று வன்னியரசு விமர்சித்தார்.
வெளியே பத்திரிக்கையாளர்களிடம் விலாவாரியாக 10நிமிடங்கள் மேலாக மறுப்பு தெரிவித்த தலைவர் வைகோ தோழர் வன்னியரசுவின் விமர்சனத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம். தான் அப்படி பொருள்பட கூறவில்லை. அது தவறு என்று உரிமையோடு சுட்டி காட்டியிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் “நெருப்பிடம் மோதாதே” என்று உணர்ச்சிவசப்படுவதும், “யார் சொல்லி பேசுகிறார் வன்னியரசு” என்பதும் “விசிகவிற்கு 30லட்சம் கொடுத்தேன்” என்று 10ஆண்டுகளுக்கு முன் நடந்ததை சொல்லிக்காட்டி (அதற்கு விளக்கம் தலைவர் திருமா தெரிவித்தார்) சாதாரண நபர் போல் பேசுவதெல்லாம் ஒரு தலைவருக்கு அழகல்ல. இது தான் உண்மையில் ஆதிக்க மனநிலை. உனக்கு அப்போது உதவி செய்தவன். நன்றியில்லாமல் பேசுவதா என்பது என்ன மாதிரியான பண்பு?
இது வைகோ தற்செயலாக இப்போதுதான் பேசுவதன்று. அவரின் பேச்சைக்கேட்பவர்களுக்கு புரிந்திருக்கும். தன் பேச்சில் எப்போதும் ‘தன்மேலாண்மை’ (Domination) பண்பு தூக்கலாக தெரியும். தோழமை கட்சிகள் இருக்கும் மேடைகளில் கூட பல நேரங்களில் வெளிப்படுத்தியதுண்டு. விசிக தலைவர் திருமா அவர்கள் பேசும் போது கூட பிரச்சாரத்தில் இடைமறித்து பேசியதற்கெல்லாம் அந்த மனநிலை தான் காரணம். அவர் சட்டமன்ற நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்தவர், இந்திய அளவில் பல மூத்த தலைவர்களுடன் நட்போடு இருந்தவர் இப்போதும் இருப்பவர், பல போராட்டங்களை நடத்திய அனுபவங்கள் உள்ளவர்கள் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை இவையெல்லாம் விசிக ஆட்களெல்லாம் நம்மை கேள்வி கேட்பதா என்ற அந்த மேட்டிமை மனநிலையை தந்திருக்கலாம். வைகோ அவதூறுகளை கண்டு பொறுக்காதவர் என்றால் மிகத் தரக்குறைவாக பேசிய H.ராஜா மீதே கண்ணியப் பண்பை கடைபிடிக்க முடிகிறது?
வைகோ உணர்ச்சிவயப்பட்டே பேசி பழகியவர். அப்படி பேசிப் பழகிய அவருக்கு சில நேரங்களில் கெடுவாய்ப்பாக அவருக்கு சறுக்கல்களையே தந்திருக்கின்றன.
என் வாழ்வில் நான் அதிர்ச்சி அடைந்தது..
கலைஞர் அவர்களை பற்றி ஒருமுறை “அவர் இந்த வேலை செய்வதற்கு பதில் அவரின் ஆதி குலத்தொழிலை செய்யலாம்” என்று வன்மமான கருத்தை உமிழ்ந்தார் (மறுநாள் கண்ணீர் மல்க மன்றாடி மன்னிப்பு கேட்டார்).
இப்படி உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே பேசுவதால், தான் சர்ச்சைக்குள்ளாவது மட்டுமல்லாமல் தான் பேசும் திராவிட கருத்தியலுக்கும், அரசியல் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை அவரது பேச்சு ஏற்படுத்துகிறது.
வைகோ ஜாதிய உணர்வற்றவர் சமத்துவ போராளி, பாஜக பாசிசத்தை எதிர்க்க ஒற்றுமையுடன் இணைந்து போராடும் சமூகநீதி போராளி என்றெல்லாம் கூறுவது உண்மையானால் அதன் வெளிப்பாடாகத்தான் அவரின் செயலும் பேச்சும் அமையவேண்டும். ஆனால் அவரது விசிகவிற்கான எதிர்கருத்து எதிரியின் கருத்துக்களை விட மோசமாக அமைந்துள்ளது.
இப்போது கூட சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வன்னியரசுவின் பதிவை நீக்க சொல்லியும் அதற்கு விளக்கம் கொடுத்தும் தன் பக்குவத்தை வெளிப்படுத்தியுள்ளார் விசிக தலைவர் திருமா அவர்கள்.
சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் திமுக கூட்டணி குறித்து பேசியதை பலர் கொளுத்தி போட்டபோது அதை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவந்தது விசிக தலைவர் திருமா- திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் சந்திப்பு. இது தான் சர்ச்சைகளை எதிர்கொள்வதும் அதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்களின் அணுகுமுறை; தலைமை பண்பின் இலக்கணம்.
யாகாவாராயினும் நாகாக்கா..
வேந்தன். இல, பத்திரிகையாளர்.