சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், பட்டியலின எம்.ஏ.க்கள், எம்.பிக்கள் தங்களை தேர்ந்தெடுத்த பட்டியிலின மக்களின் நலனுக்காக பேச வேண்டும் என பேசினார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பா. ரஞ்சித் பேசிய சில கருத்துக்கள் விவாதமாகியுள்ளது.
“தலித் மக்களுக்காக பேச முடியாவிட்டால், பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை தூக்கிப் போட்டு வந்தால் நாங்கள் அவர்களை வெற்றி பெற வைப்போம். தலித் அமைப்புகளுக்கிடையே கூட்டணியை உருவாக்குவோம். குறைந்தது 7 லோக்சபா தனி தொகுதிகளில் உழைப்போம்.. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தலித் அமைப்பினரை தேர்ந்தெடுப்போம்” என்றார். பா. ரஞ்சித்தின் கருத்து குறித்து வந்த சில முகநூல் எதிர்வினைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.
எழுத்தாளர் கொற்றவை:
பட்டியலின மக்களுக்கான பிரதிநிதிகள் கூட்டணி என்றால் மற்ற சாதி தொழிலாளர்களுக்காகவும், விவசாயக் கூலிகளுக்காகவும், இவர்களையெல்லாம் விட இன்னும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அனைத்து சாதிப் பெண்களுக்காகவும் எப்படி தொகுதிகளைப் பிரிக்கலாம்.. கூட்டணி வைக்கலாம்… என்பதை கேள்வியாக வைக்க வேண்டியுள்ளது.
அப்படியென்றால் மேற்சொன்னவர்களுக்கான தலைவர்கள் யார்? சாதிய அரசியலுக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் இளைஞர்களை, பெண்களை, அனைத்து சாதி உழைக்கும் வர்க்கத்தை மீட்பதற்கான மீட்பர்கள் யார்?
தொகுதிகள் யாது?
பெண்களின் ஓட்டுகளைப் பெற்று அந்தப் பன்றித் தொழுவத்திற்குள் நுழைந்தவர்கள் பெண்களுக்காக என்ன செய்துவிட்டார்கள்?
ஏழைகளின் ஒட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் அவர்களுக்காக என்ன செய்துவிட்டார்கள்… இப்படியும் கேட்கலாம்!
நாம் வெறும் சாதி மட்டுமல்ல வர்க்கமும் கூட… அதுவே அடிப்படை… மற்ற சாதி உழைக்கும் வர்க்கத்தை வென்றெடுக்காமல் இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.
திராவிட அரசியலின் போதாமைக்கு மாற்று தலித்திய (பட்டியல் இன மக்களை மட்டும் உள்ளடக்கிய) அரசியல் அல்ல.. அதற்கு மாற்று பாட்டாளி வர்க்க அரசியல் தலைமை அமைத்தல்…
விலக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் அதே அடையாளத்தின் கீழ் மீண்டும் மீண்டும் சிதறுண்டு போதல் என்பது நம்மை பலவீனப்படுத்தும்.. நம்மை பெரும்பான்மை ஆக்கிக்கொள்ளும் பொருளாதார நிலை சார்ந்த அணித்திரட்டலே மாற்று அரசியலாக இருக்க முடியும்.
சமத்துவம் நாடுவோர் சாதி, வர்க்கம், அரசு, ஆளும் வர்க்க பாராளுமன்ற நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சுரண்டல் என்றால் என்ன ஒடுக்குமுறை என்றால் என்ன என்பன குறித்து மார்க்சிய சமூக அறிவியலைக் கொண்டு காணும்போது புரட்சிகர அடிப்படை மாற்றம் உண்டாக்கத் தேவையான பாதையை, உத்தியை கண்டடைய முடியும்.
சுரண்டல் சமூகத்தை ஒழித்தால் மட்டுமே ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும்! இந்த சமுக அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு சாதியை ஒழிக்க முடியாது!
ஊடகவியலாளர் வேந்தன். இல
இயக்குனர் ரஞ்சித் பேசியது இது தான். “புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுக்கொடுத்த தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிக்கு வரும் பிற கட்சிகளின் MLAக்கள், MPக்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து பேச மறுக்கின்றனர். ஜாதிய ஆணவப்படுகொலைகள் நடைபெறும் போது தலித் இயக்கத்தைச்சேர்ந்த தலைவர்கள் தான் கண்டித்து பேசுகிறார்கள், களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
ஜாதி ஆணவ படுகொலையை கண்டிக்க திராணியில்லாதவர்கள் பதவிக்கு செல்வதை விட, தொடர்ந்து களமாடும் விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், BSP, RPI போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து MLAக்களாக வேண்டும் MPக்களாக வேண்டும். அப்போது இன்னும் கூடுதலாக பொறுப்போடு பேசுவார்கள்”
உடனே ரஞ்சித் தலித் கூட்டணி பேசிவிட்டார் என்று பலர் தலித் அரசியல் பேசுபவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க தொடங்கிவிட்டனர்.
தலித் வன்கொடுமைகள் நடக்கும் போது அதை பற்றி பேசுங்கள் என்று ‘தான் ஆதரிக்கும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்காத முற்போக்காளர்கள் (சிலர் கொடுத்தனர்)’ ரஞ்சித்தின் கோபத்தை விமர்சிக்கும் முன் தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளவேண்டும்.
ரஞ்சித்தின் கோபம் நியாயமானது. ஆனால் அதற்கான தீர்வை கொடுப்பதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். விசிக தலைவர் திருமா தேர்தல் பார்வையை ஒட்டி அதற்கு கொடுத்த பதில் சிறப்பு. அது தான் தோழமை சக்தியை அரவணைத்து அறிவுறுத்தும் பண்பு.
தலித் கூட்டணி நடைமுறைக்கு சாத்திமற்றது. தேர்தல் அரசியலில் பிளவை ஏற்படும் என்று விவாதிப்பது வேறு. ஆனால் அதைத் தாண்டி ‘இது பார்ப்பனீய கண்ணோட்டம்’ ‘சனாதன ஆதரவு’, ‘பார்ப்பன சக்திகளின் கையாள்’ என்று ஜாதி சேற்றை வாரி பூசி முத்திரை குத்துவது அயோக்கியத்தனம். அது முற்போக்காளர்களுக்கு அழகல்ல.
சமூக-அரசியல் விமர்சகர் பிரபா அழகர்:
நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசிய முன்னாள் எம்.எல்.ஏ முனைவர் செ.கு.தமிழரசன் (அம்பேத்கர் ஆரம்பித்த இந்திய குடியரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர்), அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்தது சரியில்லையென்றும், அது சதிச்செயலென்றும், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தின் முன் நிற்காது என்றும் சொல்கிறார். (யாரும் இதுவரை உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுக்கவில்லை என்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.)
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தாய் கழகமான புரட்சி பாரதம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய இன்னொரு தோழமை கட்சியான பகுஜன் சமாஜ் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத நிலைதான். ரஞ்சித் தன்னுடைய சமீபத்திய உரையில் பெயர் குறிப்பிட்ட நான்கு தலித் கட்சிகளுமே அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்காத அல்லது வெளிப்படையாக ஆதரிக்காத கட்சிகள்தான்.
கலைஞருக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய ரஞ்சித், கலைஞர் மீது தனக்கு விமர்சனங்களும் இருக்கின்றன அதை தற்போது பேசவிரும்பவில்லை என்றார். அந்த அளவுக்கு அறவுணர்வு கொண்ட ரஞ்சித், தன்னுடைய உரையில் கலைஞர் தலித் மக்களுக்காக செய்த சில சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டியவர், மிக மிக கவனமாக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று பாராட்டமல் தவிர்த்தார். பல ஆவேசங்களை கொட்டி தீர்க்கிற அவர், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசமுடியாத நெருக்கடி எங்கே இருந்து வருகிறது??
ரஞ்சித் தன் மனதளவில் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர் என்று நான் நினைக்கவில்லை, காரணம் அவர் சந்தையூர் தீண்டாமை சுவர் சிக்கலில் அருந்ததியர்கள் பக்கம்தான் நின்றார் என்பதை நான் மறைக்கநினைப்பவனில்லை. அதேபோல, ரஞ்சித் தயாரிப்பில் படம் இயக்கிய மாரி செல்வராஜ், தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக உயிர்விட்ட தோழர் நீலவேந்தனுக்கு தன்னுடைய முதல் விருதினை காணிக்கையாக்கிவர் என்பதும் குறிப்பிடதக்கது.
ஆனால், இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய அரசியல் என்பது, வெளிப்படையாக தலித் ஒற்றுமைக்கு எதிராக இயங்குபவர்களையும், இன்னொரு தலித் சமூகத்தின் நலனுக்கு விரோதமாக செயல்படுபவர்களையும் தன்னுடைய தோழமை சக்தியாகவும், அருந்தந்தியர் உள் இட ஒதுக்கீட்டை சாத்தியப் படுத்திய திமுகவை தலித் விரோத கட்சியாகவும் சித்தரிக்கும் அரசியல் என்பது ஆபத்தானது. தலித் மக்களுக்கே ஆபத்தானது.
தன்னை ஒரு புரட்சிகர தலித் விடுதலை வீரனாக வளர்த்துக்கொண்டிருக்கிற தோழர் ரஞ்சித் அவர்களே இவ்வளவு நேக்குபோக்காகவும், காரியவாத கள்ள மவுனவாதியாகவும், வரலாற்று இருட்டடிப்பாளராகவும் இருக்கும் போது, மூன்று பெரும் தலித் சமூகத்திற்கு மத்தியில் தான் சார்ந்த பெரும்பான்மை சமூகத்தின் மனம் நோகாதவாறுதான் தோழர் ரஞ்சித்தே பேசமுடிகிறது என்பதுதான் எதார்த்த சிக்கலாக இருக்கும்போது, ஒரு ஓட்டுக்கட்சியில் இருக்கிற சாதாரண எம்.எல்.ஏ , எம்.பிக்கள் பல சாதக பாதகங்களையும் அனுசரித்து வார்த்தைகளை அளந்து பேசுவது ஒன்றும் பஞ்சமா பாதகமான செயல் கிடையாது!!!
#ஜெய்பீம்