தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன்

நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சமயம் கடந்த 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. வனத்தையும் அதன் இயற்கை வளங்களையும் ஆங்கிலேய அரசாங்கம் சொத்தாக பாவித்தது. அதன் அடிப்படையில் வனத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த சமயம் உருவாக்கிய வனக்கொள்கை உதவியது. வனத்தில் வாழ்ந்து அந்த வனத்தை நிர்வகித்து வந்த பழங்குடி மக்கள் உரிமைகளை அதன் பின்னிட்டு இழந்தனர்.

தமிழகத்தைப் பொருத்து 2015 ஆண்டு கணக்கெடுப்பின் படி 26,345 சதுர மைல்கள் வனத்தின் பரப்பளவு. இது நிலப்பரப்பில் 20.26 சதவிகிதம். இவற்றில் காப்புக்காடுகள் பெரும்பாலானவை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வரையறை செய்யப்படாத நிலப்பகுதியும் இதில் அடங்கும். வனம்
இயற்கையின் பெரும் கொடை மட்டுமல்ல. அது அடிப்படை வாழ்வாதாரத்தின் அடிப்படை. கானுயிர்கள் ,மனிதர்கள் என பலரின் வாழ்க்கை இணைந்த பகுதி வனம்.

காலனிஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முதல் வனக்கொள்கையானது காலனி ஆதிக்க நலனையும் அந்த ஆட்சிக்கு தக்கபடி வன சுரண்டலையும் அனுமதித்த்து. நாடு விடுதலையடைந்த பின்பு 1952 ஆண்டு இரண்டாவதாக விடுதலை இந்தியாவின் வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. பழைய காலனி ஆதிக்க சிந்தனை மற்றும் வனத்தையும் பழங்குடி மக்களையும் சுரண்டும் வகையிலும் மேலும் கூடுதலாக வனத்துறையின் தயவில் பழங்குடி மக்கள் வாழ நிர்பந்திக்கப்பட்ட அவலம் நிகழ்ந்த்து.

பின்னர் 1988 ஆண்டு வனத்தின் பரப்பு குறைந்து வருவதாகவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும், வனத்தின் பாரம்பரியத்தையும் மண் அரிப்பை தடுக்கவும், நீர் பிடிப்புப் பகுதியில் உள்ள ஆறு மற்றும் குளங்களின் பராமரிப்பு , பாலை வனங்களின் பரவலை தடுத்தல், சமூக காடுகள் என்ற நோக்கங்களை முன் வைத்து உருவாக்கப்பட்ட்து. ஆனால் பழங்குடி மக்கள் வனத்திலிருந்து அன்னியப்படும் வகையில் செயல்பாடுகள் அமைந்தன. கானுயிர் பாதுகாப்பு என்பது வெறும் வனத்துறை சார்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. பழங்குடிகள் அன்னியப்படுத்தப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

வனத்துறையினர் மற்றும் கானுயிர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நிகழ்ந்த இந்த தொடர் அச்சுறுத்தல்களின் வெளிப்பாடாய் உச்சநீதிமன்றத்தில் பழங்குடிகளை வெளியேற்றினால்தான் வனம் பாதுகாக்கப்படும் என கருத்து முன் வைக்கப்பட்ட்து. அதன் விளைவாய் பழங்குடிகளை வன நிலங்களிலிருந்து வெளியேற்றும் நிகழ்வும் நடந்தேறியது. நாடு முழுவதும் பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இப் போராட்டத்தில் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியான பாதிப்புகளை அறிந்த பின் மத்திய பழங்குடி நலத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் இந்தியாவில் பழங்குடி மக்களுக்கு வரலாற்று அநீதி நிகழத்தப்பட்டதாக கூறியது.

அதன் தொடர்ச்சியாக சமூக சனநாயக, பழங்குடி செயல்பாட்டாளர்களின் தொடர் முயற்சியால் 2006 ஆண்டு வன உரிமைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட்து. பாரம்பரியமாக மூன்று தலைமுறை நிலத்தில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு மற்றும் வனத்தில் வாழும் பிற மக்களுக்கு அதிகபட்சம் நான்கு ஹெக்டேர் விவசாய பூமி வழங்க சட்டம் வகை செய்தது.

இச் சட்டம் இதற்கு முன்பு இருந்த வனச்சட்டங்களின் படி வனத்தினை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகளுக்கு மாற்றாக கிராம சபை என்ற கூட்டு சமூகம் வனத்தை நிவகிக்கும் அதிகாரத்தை வழங்கியது. அரசுதுறைகளால் வனம் பாதுகாக்கப்படவில்லை என்பதால் சமூகம் இணைந்து வனத்தையும் அதன் பாரம்பரிய சூழலை பேண வழிவகைசெய்தது. இதனால் இந்த சட்ட்த்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் இந்த சட்டம் 2016 வரை நடைமுறைக்கு வராமல் வனத்துறையினர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி சட்டத்தின் பயன் நிறைவேற்றுவதை தடுத்து வைத்தனர். தமிழகம் வெறும் ஒரு சதவிகித பட்டாக்கள் கூட வன உரிமைச்சட்டத்தின் படி இன்றளவும் வழங்கவில்லை.

இச் சூழலில் சமூகத்தில் மாறி வரும் அரசியல், பொருளாதார நிலைகளில் கடும் முதலாளியம் (crony capitalism) என்ற அரசாங்கத்தினை நடத்துவதிலிருந்து அதன் ஆட்சியாளர்களை மற்றும் அதிகாரிகளை தீர்மானிக்கும் வரை அணைத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் இசைவு கீழ் நடைபெறும் இன்றைய சூழலில் 2018 ஆண்டுக்கான வனக்கொள்கையினை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.  கடந்த 2016 ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு பழங்குடி செயல்பாட்டாளர்களால் எதிர்ப்பை எதிர்கொண்ட வனக்கொள்கையின் மறு வடிவமே இந்த புதிய வனக்கொள்கை.

வனத்தை இயற்கையின் காப்பு என்ற கொள்கை நிலைபாட்டிற்கு எதிராக வனத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடலும், வனச்சூழலை பணமதிப்பில் மதிப்பிடுவதில் துவங்குகின்றது இந்த வரைவுக் கொள்கை.மேலும் வனத்திற்காக ஒரு வன கழகத்தையும், வனச்சூழல் தகவல் அமைப்பை உருவாக்குவது என்றும் இக் கொள்கை உள்ளது. கடந்த 1988 ஆண்டு இருந்த வன காப்பு மற்றும் பழங்குடிகள் மற்றும் வனத்தில் வசிப்போரின் வாழ்வாதாரம் என்ற கோட்பாடுகளுக்கு பதிலாக வன உற்பத்தி (forest production) என்ற கொள்கையினை வெளிப்படுத்துகின்றது. காட்டினை சார்ந்து உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக காடு பார்க்கப்படுகின்றது. தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி (industrial plantation) என்ற உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பதும் சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் அச்சுறுத்தலான யூக்கலிபிட்டஸ் என்ற தைல மரம் மற்றும் நெட்டுலிங்க மரங்களை வளர்த்து தொழிற்சாலைகளுக்கு தருவது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வனத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து எதையும் குறிப்பிடாத வகையிலும் உள்ளது. மேலும் வன மக்களின் தேவைகளை பாதிக்கின்ற வகையில் தொழிற்சாலைகளுக்காக எதும் செய்யக்கூடாது என்ற பழைய கொள்கை கைவிடப்படுகின்றது. வன உரிமைச்சட்டத்தின் படி அமைக்கப்பட்ட கிராம சபையின் செயல்பாடுகள் புதிய வனக்கொள்கையால் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

வனத்தை பழங்குடி மக்களும் வனம் சார்ந்த பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்களும் நிர்வகிப்பதற்கு பதிலாக அரசு மற்றும் தனியார் பங்கேற்ப்பு (public private partnership) என்ற கொள்கை முன் வைக்கப்படுகின்றது. இது வனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் வெளிப்பாடு. பொதுத்துறை நிருவன்ங்கள் தனியார் மயமாக்கம் செய்யப்படும் முன் இந்த கோட்பாட்டைச் சொல்லியே தனியார் மயம் துவங்கும் என்பதே வரலாறு. கடந்த காலங்களில் நடைமுறையில் வனத்துறையின் செயல்பாடுகளால் தோல்வியடைந்த கூட்டு வன நிர்வாகம்(join forest management ) என்ற கோட்பாடும் தனியார் உடன் இணைத்து முன் வைக்கப்படுகின்றது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த வனக்கொள்கையானது இன்றளவும் வரைவு நிலையில் உள்ளது. மத்திய பழங்குடி அமைச்சகம் இந்த வரைவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் மேலும் பல பழங்குடி இயக்கங்கள் வனத்தை வெறும் இலாப நோக்கில் பார்க்கும் இந்த கொள்கை முடிவால் வனமும் அதை சார்ந்த மக்களின் நலனும் பறிக்கப்படும் என்றும் அரச வன்முறைகளைக்கொண்டு அடக்கி ஒடுக்கி தனியார் கம்பெனிகள் ,கார்பரேட்டுகள் மக்களையும் வாழ விடாமல் ,வனத்தையும் அழித்துவிடக்கூடும் என அஞ்சுகின்றனர். தங்களின் எதிர்ப்பை பகிர்ந்துள்ளனர்.

மத்திய அரசின் வனக்கொள்கையை ஒட்டி ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் மாநில வரைவுக் கொள்கையினை உருவாக்கவேண்டும். ஆனால் மத்திய அரசின் கொள்கையே இன்னும் முடிவாகவில்லை. மத்திய அரசு வனக் கொள்கையானது முடிவாகா நிலையில் அவசரமாக தமிழக அரசு 2018 ஜீன் மாதம் தனது மாநில வனக் கொள்கையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு காட்டும் இந்த அவசரம் மத்திய அரசாங்கம் முடிவு செய்யாத கொள்கையினை மாநில அரசுகளை விட்டு நிறைவேற்றிக்காட்டும் கார்பரேட் தந்திரம் என பழங்குடி செயல்பட்டாளர் சி.ஆர்.பிஜாய் போன்றோர் கருதுகின்றனர்.

இது முற்றிலும் முரணானது. இந்த கொள்கையானது புலிகள் காப்பக பகுதியிலிருந்து பழங்குடி மக்களையும் பிற மக்களையும் அப்புறப்படுத்தப்போவதாக கூறுகின்றது. இது வன காப்புச்சட்டத்தில் கானுயிர் பூங்கா அமைப்பதற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களும், விலங்குகளும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சூழலை உருவாக்குவது என்ற கோட்பாடுக்கு எதிரானது. மேலும் வெறும் ஒரு சதவிகிதம் கூட வன உரிமைச்சட்ட்த்தை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, வன உரிமைச்சட்ட்த்தின் வழி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் கார்பரேட் கம்பெனிகளின் இலாபத்திற்க்காய் அவர்களின் வாழ்வாதரத்திலிருந்து விரட்டப்படுகின்றனர். சொந்த மக்களின் மீது அரசு போரை நடத்துகின்றது. நாடு முழுவதும் தனியார், கார்பரேட் இலாபத்தை முன்னிருத்தும் கொள்கை சமூக அமைதிக்கும் சனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல்.

சமூக,சனநாயக, பழங்குடி ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கவனம் கொள்ளவேண்டும். வாழ்வாதாரம் இழக்கப்படும் மக்கள் மண்ணிலிருந்து விரட்டப்படும் சோகம் கொடுமையானது. சனநாயக சமூகத்தில் வனத்தை பாதுகாப்ப்பது மிக அவசியம். அது வனத்துறை அல்லது அரசு தலையீடுகளால் சாத்தியமில்லை. பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மக்கள் அதன் சமூகம் நிர்வகிக்கும் வகையில் வனத்தை சனநாயகப்படுத்துவதில் உள்ளது.

ச. பாலமுருகன், மனித உரிமை செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.