சந்திரமோகன்

எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 திரைப் படமாகும். எந்திரன்/ரோபோ + நம்பமுடியாத முட்டாள் தனமான கற்பனைகள் + தொழில்நுட்ப பிரமாண்டம் = 2.0 படம். லைகா கம்பெனியின் 600 கோடி ரூபாய் வியாபாரம்!
“இது பறவைகளை பாதுகாக்கும் படம்; சுற்றுசூழலை வலியுறுத்தும் படம்” என்றெல்லாம் சில பதிவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர் ; இன்னும் சிலர் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டும் இருக்கலாம். இப் படத்துக்கு முற்போக்கு முகாமிலிருந்து வந்துள்ள பாராட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனித குலத்தின் அலட்சியத்திற்காக, விரக்தியுற்ற ஒரு பசுமை போராளியை கொலைகார வில்லனாக காட்டுவது தான் கதைக் கரு. ஒரு ராட்சச பறவை/பறவை மனிதனின் ஏற்படுத்தும் நாசத்தை எந்திரன்/ரோபோ தடுப்பது தான் படம். விஞ்ஞானி வசீகரன்/ரஜினி எதிர் டாக்டர் பஷிராஜன்/அக்சய் குமார் தான் திரைப்பட மாந்தர்கள்.
படத்தின் கதை:
செல்போன்களின்அளவற்ற பயன்பாட்டால் பறவைகள் & சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பசுமை போராளி டாக்டர் பஷிராஜன் கருதுகிறார். பறவைகள் காக்கப்பட வேண்டும் என அரசு, கார்ப்பரேட், மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
சென்னையில் பல இலட்சம் பேருடைய செல்போன்கள் காணாமல் போகிறது ; அரசாங்கம் விஞ்ஞானி வசீகரன் உதவியை நாடுகிறது. அவர் 5வது சக்தி பயன்படுத்தி எந்திரன்/ரோபோ சிட்டி உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.
மனிதனின் செயல்களையும் சக்திகளையும், பூமியில் இதுவரை மனித இனம் கண்டிராத ஒரு தீய சக்தி பயன்படுத்தினால் அது எவ்வகை இழப்புகளை ஏற்படுத்தும் எனவும் எந்தவிதமான தர்க்கம் / லாஜிக் இல்லாமல் இயக்குநர் ஷங்கர் கதை சொல்லியிருக்கிறார்.
எந்திரன் முதல் பாகத்தில் சிட்டியை தவறான ரோபோவாக்கி அதனாலேயே அழியும் வில்லனின் மகன், அதேபோல் அழிவு சத்தியை பயன்படுத்த நினைக்கிறார். அதை தடுக்க சிட்டியை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரனை நாடுகின்றனர். அவரும் சிட்டியை நியூ வெர்ஷனில் உருவாக்கி அழிவு சக்தியிலிருந்து மீட்டெடுக்கிறார். இது தான் படம். #சுற்றுச்சூழல்பாதுகாக்கமக்கள்அல்லதுசெயற்பாட்டாளர்கள்நடத்தும்போராட்டம் #அல்லஇந்தப்படம்.
தோழர்களே ! தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சாபக்கேடு ஷங்கர், ரஜினிகாந்த் போன்றவர்களின் படங்கள். முட்டாள் தனமான ஷங்கர் படத்துக்கு புளகாகிதம் அடைந்து உங்களால் எப்படி பாராட்டி எழுத முடிகிறது? உங்களைப் போன்றவர்கள்தான் எல்லா மதிப்பீடுகளையும் நீர்த்துப் போகச் செய்கிறீர்கள். செயற்கை அறிவு, டெக்னிகல் கற்பனை, பிரமாண்டம் கண்டு திகைத்துப் போய் விடுகிறீர்கள்.
“இந்த மனநிலைதான் இந்தியா வல்லரசாக வேண்டும் என நினைக்கும் மத்தியதரவர்க்க மனநிலை.
தமிழ் சினிமாவுக்கு ஷங்கரின் படங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டது ?
முட்டாள் தனமான கற்பனைகளுடன், அவரது படங்களில் சில வகை ஆபத்தான பண்புகள் உண்டு.
1)சமூகப் பிரச்சினைகளில் பார்ப்பன மேலாண்மையை முன்னிறுத்துவது
2) செயற்கை அறிவை டெக்னிகல் ஜோடனைகளுடன் பெருசாக்கி மூளையைக் காயடிப்பது, பகுத்தறிவு – அறிவியல் மனப்பான்மைக்கு முடிவு கட்டுவது
3)தனிமனித (ஆண்) சாகசம் : அ) ஒருநாள் முதல்வராக புரட்சி செய்யும் #முதல்வன் ஆ)அநீதியான அமைப்பை ஒரு #இந்தியன் மூலமாக ஒழித்துக் கட்டுவது இ)சிறுசிறு குற்றங்களை எல்லாம் ஒழித்துக் கட்டும் #அந்நியன் … எட்சட்ரா
4) ஆணாதிக்க அணுகுமுறையும், பெண்களை முக்கியத்துவமற்ற அழகு பதுமைகளாக/செக்சியான பண்டங்களாக மட்டுமே காட்டுவதும் ஆகும். 2.0 படத்திலும் பார்பி பொம்மை ரோபாவாக நிலா என்ற பெயரில் ஆமி ஜாக்ஸன் காட்டப்படுகிறார்.
நாம் புரிந்து கொள்ள வேண்டியவை :-
சிட்டுக் குருவிகள், பறவைகள், வன உயிர்கள், மரங்கள், வனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் ஆட்சியாளர்கள் கூட்டாக கொள்ளை அடிக்கின்றனர். அவர்கள்தான் எதிரிகள்! ஷங்கர், ரஜினி போன்றவர்கள்தான் எதிரிகள்! செல்போன்கள் எதிரிகள் அல்ல!அறிவியல் பகுத்தறிவு பார்வை நமக்கு வேண்டும்!
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.