புயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி

பாரதி தம்பி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

  1. முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிபறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை.

நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் போவதில்லை. அவர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். இருந்த கடைசி குடிசையையும் புயலுக்கு பறிகொடுத்து விட்டு நடுரோட்டில் நிற்கிறார்கள். கையேந்தி நிற்பவர்களை கயவர்களாக சித்தரிக்க வேண்டாம்.

நான்கு நாட்களாக கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்து காத்திருந்து; ஏற்கனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தை கூட விட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிபறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.

நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் 4 மெழுகுவர்த்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையை காட்டி கையெழுத்து போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.

  1. இரண்டாவது பிரச்சினை இன்னும் முக்கியமானது. நிவாரணப் பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த்தெரு முதலிலும் காலனி தெரு அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர் தெரு இருப்பதால் அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் கண்ட பெரும்பாலான ஊர்களில் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அந்த ஊரில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக புயலடித்த கணத்தில் இருந்து மக்களை காப்பாற்றி, பாதுகாத்து, நிவாரண வண்டிகளில் இருந்து பொருட்களைப் பெற்று பகிர்ந்தளித்து அந்த மக்களை உயிரோடு வைத்திருப்பது ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் இளைஞர் குழுக்கள்தான். சொல்லப்போனால் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்ற அளவில் இந்த புயல் நேரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். ஓரிரு இடங்களில் களநிலவரம் வேறாக இருக்கலாம். அதை பொதுமைப்படுத்த வேண்டாம்.

அரசாங்கம் கைவிட்டுவிட்ட நிலையில் சிவில் சமூகத்தின் அரவணைப்புடன் தற்போது உதவிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த சிவில் சமூகத்தின் பொது மனநிலையை; அறவுணர்ச்சியை எதிர் திசையில் செலுத்தும் இத்தகைய செய்திகளை நண்பர்கள்; தோழர்கள் பகிர வேண்டாம்.

எங்களுக்கு இவை போதும் மற்ற ஊர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்கு கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்கு தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுனருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. மதுரையில் இருந்து வந்துள்ள இளைஞர் குழு ஒன்று தலைஞாயிறு பகுதியில் தங்கி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு சமைத்து தருகின்றனர். அந்த நிவாரண முகாமில் தான் நேற்று நாங்கள் சாப்பிட்டோம். இதுவே கள நிலவரம். இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.

பாரதிதம்பி, பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.