பா. ஜீவ சுந்தரி
34 பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாகச் செயல்படுவது என முடிவெடுத்து பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்கள், மதம் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்படும் வெறியாட்டங்கள், படுகொலைகள் என அடுத்தடுத்து பெண்கள் பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான நிகழ்வு களுக்குப் பின் இனியொரு முறை பெண்கள் மீது இம்மாதிரியான வெறியாட்டங்கள் தொடரக்கூடாது என்ற முடிவுடன் இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்போதும் ஒருவித பதற்றத்துடனும் ஏக்கத்துடனும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், முன்பைக் காட்டிலும் வீரியத்துடன் அடுத்த வன்முறை பெண் மீது நிகழ்த்தப்படுவது மட்டும் குறைந்தபாடில்லை.
டெல்லியில் நிர்பயா மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையின் கொடூரம் நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது. தொடர்ச்சியாக சாதி, மத பேதமில்லாமல் இன்று வரை, சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர்களே மறந்து போகும் அளவுக்கு பலிகள் தொடர்வது வாடிக்கை என்பது போல் கடைசியாக சிறுமி ராஜலட்சுமி கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது நடந்தேறியிருக்கிறது. இப்போதும் கூட இதுவே கடைசியாக இருக்கட்டும் என மனமும் உதடுகளும் முணுமுணுக்கின்றன.
தமிழகத்தில், ஆளும் கட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு அது பற்றி எந்தக் கவலையாவது இருக்கிறதா? பத்தோடு பதினொன்றாகத்தான் இதையும் அரசு எண்ணுகிறது. ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத ‘சர்கார்’ படத்துக்காக, அதன் காட்சியமைப்புக்காக, அதில் பேசப்படும் வசனங்களுக்காக இவ்வளவு மும்முரமாக ஒரு ஆளும் கட்சியால் தெருவில் இறங்கி கலாட்டா செய்ய முடியுமென்றால், பதின்மூன்று வயது சிறுமி தன் தாயின் கண்ணெதிரில் கோழியை அறுப்பது போல் கழுத்தறுத்துக் கொல்லப்படுவதை ஏன் இந்த அரசு எந்தக் கேள்வியும் எழுப்பாமல் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது. ஏழையின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா?
இந்த ஊடகங்களுக்கும் அரசியல் குறித்த புரிதலற்ற ‘சர்கார்’ படம் பற்றி ஓயாமல் செய்தி வெளியிடுவதில் இருக்கும் அக்கறை, பிற செய்திகள் மீது கவனம் குவிக்க வேண்டும் என்பதில் ஏன் இல்லாமல் போகிறது?

36 பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பெண்கள் பிரச்சனை குறித்த முக்கியமான விஷயங்கள் பற்றி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், செய்தியாளர்கள் ஒரு நிகழ்வைப் பரபரப்பான செய்தியாகக் கொடுப்பதில் மட்டும்தான் அக்கறை என்பதை மீண்டும் நிரூபித்தார்கள்.
• 36 பெண்கள் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக்க் குரல் எழுப்புவது என்ற முடிவு.
• கொல்லப்பட்ட ராஜலட்சுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தலைமைச் செயலாளரைச் சந்தித்து நடந்து போன படுகொலைக்கு நியாயம் வழங்குமாறு மனு அளித்து அரசை நிர்பந்திப்பது என்பது அடுத்த முடிவு.
• உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்து மதத்தின் பெயராலும், சம்பிரதாயங்களின் பெயராலும் அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் இந்துத்துவ அமைப்புகள் குறித்தும், தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நினைக்கும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்புவது என்ற முடிவு.
• எப்போதோ தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து இப்போதாவது மனம் திறந்து பேச நினைக்கும் பெண்களின் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தருவது, அதற்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்கும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கு குறித்து கேள்வி எழுப்புவது என்ற முடிவு.
ஆனால், இன்றைக்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அனைத்தும் ராஜலட்சுமியின் பெற்றோரை சந்தித்துக் கேள்வி எழுப்புவதில் மட்டும்தான் பத்திரிகையாளர்களின் எண்ணக் குவியல் ஒருமுகப்பட்டிருந்தது. பிற விஷயங்கள் பற்றி அவர்களுக்கு எள் முனையளவும் அக்கறையில்லை. பொதுவாகப் பெண் சார்ந்த பிரச்சனைகள் பரபரப்புச் செய்திக்காக மட்டுமே அணுகப்படுகின்றன என்பதை அனுபவப்பூர்வமாக அவ்வளவு பேரும் உணர்ந்தோம். ’மீ டூ’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது லீனா மணிமேகலை, சின்மயி இருவரிடமும் சரமாரியாக வீசப்பட்ட வெட்கங்கெட்ட கேள்விகள் அவர்களின் ஆதிக்க மனப்போக்கையே வெளிப்படுத்தின. அதே போக்கில் ராஜலட்சுமியின் பெற்றோரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் உள்ளார்ந்த அக்கறையுடனோ, அந்தக் குடும்பத்துக்கு உண்மையிலேயே நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ரீதியிலோ அணுகப்படவில்லை. இதுதான் இன்றைய ஊடக உலகின் நிதர்சனம். ’சர்கார்’ பிரச்சனை அளவு கூட பெண்கள் பிரச்சனை, சமூகப் பிரச்சனைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்?
இவை அனைத்துக்கும் மேலாக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மனு கொடுக்கச் சென்ற ராஜலட்சுமியின் பெற்றோரை சந்திக்க மறுத்து விட்டார் என்பதுதான் உச்சபட்ச சோகம். அதற்கும் பயம் அல்லது அலட்சியம் இரண்டில் ஒன்றுதான் காரணம். இருவரை மட்டுமே சந்திப்பேன் என்று பிடிவாதம் எதற்கு? இருவர் என்றால் ராஜலட்சுமியின் பெற்றோர் மட்டும்தான், அவர்களுக்கு ஆதரவாகச் சென்ற பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க அவருக்கு மனமும் இல்லை; நேரமும் இல்லை.
பெண் சார்ந்த பிரச்சனைகள் இந்த அரசாலும், ஊடகங்களாலும் எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள். இப்படியே அது தொடரட்டும்.
பா. ஜீவசுந்தரி, செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.