குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
என்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்?’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.
பாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.