பா. ஜெயசீலன்
முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது.
யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்கறது இல்லடா இப்போ பிரச்சனை..நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனகரதுதாண்டா பிரச்னை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரை போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும் போதும் தோன்றும்.
அம்பேத்கர் தலித்துகளிடம் கல்வியை வலியுறுத்தியதற்கும் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு கல்வி ஆலோசனை தருவதற்க்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அம்பேத்கர் தலித்துகளிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நவீன இந்தியாவின் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதன் மூலமான பொருளாதாரவலிமையை பெறுவதற்கும், தலித்துகளின் மேல் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான ஒரு வலுவான ஆயுதமாக கல்வியை பார்த்தார், வலியுறுத்தினார். ஆனால் சாதி ஹிந்துக்கள் தங்களிடம் நீதியை, ஜனநாயகத்தை வலியுறுத்தும். தலித்துகளிடம் “தம்பி இப்ப எல்லாம் யாருத்தம்பி சாதி பாக்குறா. அம்பேத்கர் எல்லாம் தலித்தா பொறந்து பெரிய ஆள வரலியா..அதுபோல நீங்களும் நல்லா படிச்சு வாங்க தம்பி” என்று பெரிய மனதோடு ஆலோசனை சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
அதாவது நான் எவ்ளோவ் பெரிய முட்டாள் நாயாக பைசாவுக்கு பெறாதா சாதியை நம்பும் அறிவிலியாக இருந்தாலும் நான் என் சாதி தரும் திமிரோடும் துடுக்கோடும் நடமாடுவேன் ஆனால் நீ என்னிடம் நீதியை கோரினால் நீ அம்பேத்கருக்கு இணையானவனாக இருக்கவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் சென்று பட்டம் பயின்று வந்தால் போனால் போவுது என்று கொஞ்சமாய் மரியாதை தருவோம் இதுதான் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு தரும் ஆலோசனை. இதே ஆலோசனையை மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும் தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறது. மாரி அவருடைய திரைக்கதையின் ஊடாகவும், சாதி ஹிந்துவான கதாநாயகியின் தந்தையின் குரல் மூலமாகவும்(“நல்லா படிங்க தம்பி…எதிர்காலத்துல எது வேணும்னா மாறலாம் இல்லையா”)தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறார்.
பரியனின் நண்பனாக வரும் சாதி ஹிந்து கதாபாத்திரம் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. அந்த பரியனின் நண்பனாக வரும் கதாபாத்திரம்தான் பெரும்பான்மையான சாதி ஹிந்து இளைஞர்களின் மனதை பிரதிபலிப்பதாகவும், அந்த இளைஞன் கதாபாத்திரம் பரியனின் வாழ்க்கையில் வந்த இன்னொரு தேவதை என்றெல்லாம் யார் சொல்கிறார்கள்? சாதி ஹிந்துக்களே சொல்லிக்கொள்கிறார்கள். சரி அந்த கதாபாத்திரத்தை மாரி எப்படி கையாண்டிருக்கிறார்?
கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் நேர்த்தியான சிகையலங்காரம், மீசை, நெற்றியில் தீற்றிய சந்தனம், கவனமாக அயர்ன் பண்ணப்பட்ட சட்டை என்று புழங்க பரியனின் நண்பன் கதாபாத்திரம் மிக கவனமாக ஒரு கோமாளியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிதுங்கும் தொந்தி, கோமாளிக்கான முக பாவனைகள், செய்கைகள் என்று அந்த கதாபாத்திரம் ஒரு காமெடி பீஸாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு என்று எந்த அரசியல் நிலைப்பாடோ, கருத்தோ, கோட்பாடோ, பார்வையோ கிடையாது.ஒரு வகையில் இயக்குனரால் ஒரு ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு உருண்டை பிடித்த சாணியை போல வடிவமைக்கப்பட்டுள்ள பரியின் கதாபாத்திரத்தை போலவே இந்த கதாபாத்திரமும் ஒரு தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு முட்டாள் கோமாளி கதாபாத்திரம் என்று புரிந்துகொள்வதற்கான வெளியை மாரியே உருவாக்கி தந்துள்ளார்.
எனவே இரண்டு தாழ்மையுணர்ச்சி கொண்டுள்ள உருட்டப்பட்ட சாணி உருண்டைகள் நட்பு பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? ஒடுக்கப்பட்டவரின் அரசியல் பேச விரும்பிய மாரிக்கு கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் கதாபாத்திரம் கோமாளியாகவும் பரிக்கு தோள்கொடுக்கும் நண்பன் கதாபாத்திரம் கம்பீரமானவனாகவும் ஏன் தோன்றவில்லை என்பதை நீங்கள் யோசித்தால் இந்த திரைப்படம் ஏன் தலித்துகளின் கலை அரசியலை சிறிதும் உள்வாங்கவில்லை என்பதும் இன்னும் சொன்னால் எப்படி தலித்துகளின் கலை அரசியலுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது என்பதையும் உணரமுடியும்.
இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் போன்ற எல்லா சம்பவங்களின் போதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான விவாத நிகழ்ச்சிகள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் சாதி வெறி பன்றிகள் திரும்ப திரும்ப முன்வைத்த பொறுக்கித்தனமான வாதங்களில் ஒன்று வசதியாக வளர்ந்த எங்கள் சாதி பெண்கள் தலித்துகளை திருமணம் செய்துகொண்டு சென்றால் சிரமப்படுவார்கள்.தலித்துகளால் எங்கள் பெண்களை பார்த்து கொள்ள முடியாது என்பது. எதோ தமிழகத்து சாதி ஹிந்துக்கள் forbes வெளியிடும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருபவர்களை போலவும் தமிழகத்திலேயே ஏழைகள் உள்ள சாதி என்று உள்ளதென்றால் அது தலித் சாதிதான் என்னும் பொருள்பட பேசுவதை கேட்கிறோம். ஆனால் உண்மை என்னவென்று நமக்கு தெரியும். வன்னியர்களும், தேவர்களும், கௌண்டர்களும் தங்கள் சாதிக்குள் சோற்றுக்கு வழியில்லாத எத்தனை பேர் உள்ளனர் என்று தெரிந்தும் தலித்துகள் தங்கள் வீட்டு பெண்களை மணம்முடித்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர் என்று நம்புவதையே விரும்புகிறார்கள்.
பரியின் அப்பா icici வங்கியில் மானேஜராக இருந்து ஜோவின் அப்பா ஆடுதிருடுபவராக இருந்திருந்தாலும் பரியின் முகத்தில் மூத்திரம்தான் விட்டுயிருப்பார்கள். ஏனென்றால் இங்கு பிரச்சனை என்பது சாதி வெறியும் சாதியை நம்பும் பன்றிகளும்தான். மாரிக்கு இந்த அடிப்படை பிரச்னையை எதிர்கொள்ள நேர்மையோ, அறிவோ, தைரியமோ இல்லை. அதனால் சாதி ஹிந்துக்கள் அச்சச்சோ என்று உச்சு கொட்டக்கூடிய ஒரு ஆபாசமான உலகை கட்டிமைக்கிறார். அதாவது குலசாமிக்காக மட்டுமே ஆணவ கொலைகள் செய்யும் பெரியவரும், எம்பொண்ணையும் கொன்னுருவாங்கடா என்று பரியிடம் அழும் தகப்பன்களும் புழங்கும் அதிரிபுதிரியான கற்பனா உலகம் மாரியினுடையது. மாரி பரியின் கதாபாத்திரத்தை சோற்றிற்கு வழியில்லாத ஒருவனாகவும் கதாநாயகி ஜோ தனது பெயரில் ஒரு கல்யாண மண்டபத்தை கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவளாகவும் வடிமைக்கிறார். இளவரசன் திவ்யா விஷயத்தில் இளவரசனின் பொருளாதார நிலை என்பது திவ்யாவை விட மேலானதாக இருந்ததாகவே நாம் அறிந்தோம். இருந்தும் இளவரசனுக்கு நடந்ததை நாம் அறிவோம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஆணவ கொலையில் கூட அந்த பைய்யன் நல்ல பொருளாதார பின்னணியையும், கல்வியையும் கொண்டவனாகவே இருக்கிறான். இருந்தும் அவன் கொல்லப்பட்டான்.
நிலைமை இப்படியிருக்க மாரி படைக்கும் பரி சோற்றிற்கு வழியில்லாத, தனது பென்சாயல் கொண்ட கூத்தாடி தகப்பனை வண்டிக்காரராக புனையும் கதாபாத்திரமாக வடிவமைத்து சாதி ஹிந்துக்கள் நிஜத்தில் வைக்கும் புனைவான கருத்துருவாக்கத்திற்கு இவர் புனைவில் நிஜம் சேர்க்கிறார். sairat திரைப்படத்தின் மீதும் எனக்கு இதே விமர்சனம் உண்டு. ஆனால் sairat படத்தில் அந்த பையன் தனக்கு ஏற்பட்டுள்ளது காதல் என்று பிரகடனப்படுத்தும் தைரியத்தோடுவாது இருந்தான். மாரியின் பரி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டையும் உருளுதடி என்று கடைசிவரை காதல் என்ற வார்த்தையை குறிப்பாக மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் சொல்ல அஞ்சுகிறான்.
மூஞ்சில் மூத்திரம் விட்டதுக்கு revenge எடுக்க வகுப்பறை பெஞ்சில் பெயர் எழுதிவைப்பது, “FLAMES” விளையாட்டு விளையாடும் தேவதை சாதிஹிண்டு நண்பனிடம் கோபித்துக்கொள்வது, பெண்கள் கழிவறையில் தள்ளிவிட்டு தாழ்ப்போட்டு சிறுபிள்ளைத்தனமான ரௌடியிசம் செய்வது, சென்னை சட்டக்கல்லூரி வன்முறையை ஒத்த காட்சிகளை சம்மந்தமில்லாமல் ட்ரைலரிலும், படத்திலும் பயன்படுத்தியது, இளவரசனின் சாவிற்கு எந்தவகையிலும் நீதி கோராதா ஒரு கதையில் இளவரசனின் கதையை சாதி ஹிந்துக்கள் விசிலடிக்கும் வியாபாரமாக்கியது என்று எத்தனையோ பிழைகள், எரிச்சல்கள். இருந்தாலும் இறுதியாக பரிக்கும், ஜோவிற்குமான என்னவென்று பெயர்வைக்கமுடியாத அந்த உன்னதமான, புனிதமான, காவியமான, கலாபூர்வமான, ஸ்ஸ்ப்ப்ப்ப்பா உறவை மாரி மிகக்கவனமாக பெயரிடாமல் தன்னுடைய படத்தையும் மதித்து படம் பார்க்கவரும் சாதி ஹிந்துக்கள் கிஞ்சித்தும் டென்ஷன் ஆவாதபடி தவிர்த்துள்ளார்.
இறுதிக்காட்சியில் கூட அது என்னானு தெரியத்துக்குள்ளாற அத பிச்சு போட்டிங்களே பாஸு என்றுதான் பரி சொல்கிறானே தவிர ஆமாம் எனக்கு அவளை பிடித்திருக்கிறது அவளை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. மாரி கேட்கும் நீதி என்பது உங்கள் பெண்களை எங்கள் பையன்கள் காதலித்தால் என்ன தப்பு என்பதை அல்ல..மாறாக எங்கள் பையன்கள் சும்மா தமாஸுக்கு உங்கள் பெண்களிடம் பேசினால் கூட அடித்து எங்கள் மூஞ்சில் மூத்திரம் விட்டு உங்கள் மூத்திரத்தை வீண்செய்யலாமா? உங்களுக்கு எதாவது urinal infection வந்துவிடப்போகிறது என்கின்ற அக்கறையில்தான் சொல்கிறேன் என்கின்ற ரீதியில் படத்தை முடிக்கிறார்.
இறுதிவரியாக “நீங்கள் நீங்களா இருக்கிற வர நாங்க நாயா இருக்கணும்னு நீங்க நினைக்கிற வர எதுவும் மாறாது” என்ற வசனத்தை விட ஒரு ஆபாசமான வசனத்தை யாரும் எழுதிவிட முடியாது. இந்த வசனம் சாதிஇந்துக்களின் மனநிலையிலும் தலித்துகளின் மனநிலையிலும் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று மாரி யோசித்துதான் எழுதினாரா..என்னுமோ மயிரு போங்க..
காலாவில் ஒரு அசாத்தியமான பாய்ச்சலை நிகழ்த்தி, தலித் கலையிலக்கிய தளத்தில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிறுவிய ரஞ்சித் இந்தப் படத்தை தயாரித்துள்ளது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ரஞ்சித் அடிக்கடி “நான் கடினப்பட்டு இழுத்துவந்த தேரை முன்னிழுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பின்னுழுத்து விடாதீர்கள்” என்ற அம்பேத்கரின் வரியை மேற்கோள் காட்டுவார். தலித் கலையிலக்கிய தளத்தில் ரஞ்சித் ஒரு அடி முன்நகர்த்திய தேரை தலைவன் மாரி ஒத்தையாளாக 10 அடி பின்னிழுத்து விட்டிருக்கிறார்.
பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.
I have read and agreed with most of your reviews here. Not on this one. While I understand where you are coming from and acknowledge your perspective, to expect all such movies to be assertive is highly unfair. We are dealing with a cross section of people and not just the Casteist extremists. We need both Black Panther and 12 years a Slave.
LikeLike
I have read and agreed with most of your reviews here. Not on this one. While I understand where you are coming from and acknowledge your perspective, to expect all such movies to be assertive is highly unfair. We are dealing with a cross section of people and not just the Casteist extremists. We need both Black Panther and 12 years a Slave.
LikeLike