”பெண்கள் தீட்டல்ல,புனிதமும் அல்ல!”

சபரிமலை பயண ஒருங்கிணைப்பு  மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம்

தோழமைகளே,

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய பிற முற்போக்கு பெண்கள் அமைப்புகள் போன்றதல்ல மனிதி. வீட்டுக்குள் காலம் காலமாக முடக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள் பேசி கொள்ள, பகிர்ந்து கொள்ள, பொது பிரச்சினைகளை புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல அரசியல் பட, அதன் அடிப்படையில் காலாச்சார ஏற்பு, மறுப்புகளுக்குள் தங்கள் செயல்பாட்டை தேர்ந்தெடுத்து கொள்ள, தங்களுக்கு இடப்பட்டிருக்கும் விலங்குகளை தாங்களாகவே உடைத்தெறிய என அமைத்து கொள்ளப்பட்ட ஒரு எளிய பொதுமேடை. இந்த மேடையில் கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், பெரியாரிய, அம்பேத்காரிய கருத்தியல் சார்ந்த அமைப்புகளை சார்ந்தோர், படித்தோர், பெரிதாய் படிக்காதோர், அதிமுக, திமுக , விசிக , கம்யூனிஸ்டு, கட்சிகளுக்கு ஓட்டளிப்போர், வாழ்வாதாரத்துக்காக எளிய வேலைகள் செய்து குடும்பங்களை தலைமையேற்று நடத்தி கொண்டிருக்கும் பெண்கள் முதல் வானூர்தி ஓட்டும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மிக அதிகபட்ச நேர்மையுடன் எவ்வித கருத்து திணிப்பும் செய்திடாத அதே சமயம் கருத்தியல் உரையாடல்கள் மூலம் அவர்களை சுயமரியாதை சமத்துவ முற்போக்கு சிந்தனைகளுடன் ஒன்றுபடுத்துவதே இறுதி நோக்கம். இத்தகைய பின்னணியில் தான் பெண்களுக்கு சமூகத்தில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை உடனுக்குடன் அம்பலப்படுத்துவதும், இயக்கம் காண்பதும், முதல் ஆளாக எதிர்ப்பை பதிவு செய்வதிலும் மனிதி முன்னின்றுருக்கிறது. இதை பொது சமூகமும் பார்த்து கொண்டிருக்கிறது.

இந்த பின்னணியில் தான் சபரிமலைக்கு பெண்கள் வரலாம் என நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்த போது அந்த தீர்ப்பின் பக்கத்தில் நாம் நிற்க வேண்டுமென முடிவு செய்தோம். நாம் அறிவியலை ஏற்பவர்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் தான் என்பதில் எவ்வித குழப்பமோ, மாற்று கருத்தோ இல்லை. நம்முடைய அரசியலை இதே பெண்களிடம் தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. அது உரையாடலுடன் கூடிய நிகழ்வாக அதுவாக நடக்கும் வரை, நம்பிக்கையுள்ளோர் உண்மை புரிந்து நம்மோடு வரும்வரை அவர்களின் கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுப்போம்.

இந்த பரந்து பட்ட விவாதங்களும், மாற்று கருத்துக்களும் கணக்கிலெடுத்து கொண்ட பிறகே சபரிமலை பயணம் செல்ல விரும்பும் பெண்களுக்கு அதை ஒருங்கிணைத்து கொடுப்பதில் உடன் நிற்பது என்ற முடிவு எட்ட பட்டது. இருப்பினும் தீர்ப்பு வந்த நாள் தொடங்கி இன்று வரை பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி வரும் இந்துத்துவ, மதவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கி வந்தது மனிதி. எங்களுக்கு அய்யப்பனை காட்டிலும் எங்கள் பெண்களின் பாதுகாப்பே முதன்மையானது. ஆகவே கேரள அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தெளிவான அறிக்கை விடட்டும் என காத்திருந்தோம். ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் தோழர்களுடன் தொடர்ந்து உரையாடி கொண்டிருந்தோம், கேரள இடது சாரி அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் நெருக்கடி தரும் நோக்கத்தோடு இத்தீர்ப்பை அரசியலாக்கி கொண்டிருப்பதை புரிந்திருக்கிறோம் என சொன்னோம். மனிதி சார்பாக இது குறித்து ஒரு கடிதம் கேரள அரசுக்கு அனுப்பவும் தயார் செய்து வந்தோம். ஆகவே குறிக்கப்பட்ட அக்டோபர் 17 நாள் தள்ளி போடப்பட்டது.

அதே அக்டோபர் 17 கோயில் நடை திறக்கப்பட்டதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எவ்வித கோட்பாடுகளின், அமைப்புகளின் பின்புலமற்ற பெண்கள் கடுமையான தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் மீறி கோயிலுக்குள் நுழைந்திருப்பதை மனிதி பெருமிதத்துடன் பார்க்கிறது.வரவேற்கிறது. கலாச்சார காவல்களின் முதல் தகர்வாக இதை கருதுகிறது.

அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சபரிமலை நுழைவு ஒருங்கிணைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்வதோடு, போகக் கூடாது என்கிற தொனி மிக தெளிவாகவும், போகலாம் என்கிற தொனி தயக்கமாகவும், சன்னமாகவும் பல பேரிடம் இருந்து வருகிறது குறிப்பாக பெண்களிடம் இருந்தே வருகிறது. அதிகார, ஆணவ குரலே இவ்வளவு திமிருடன் எழும் போது ஒடுக்கப்படுகிற நம் குரல் எவ்வளவு கர்ஜனையுடன், திமிருடன் ஓங்கி ஒலிக்க வேண்டும்? நாம் தீட்டல்ல,புனிதமும் அல்ல எல்லா உரிமைகளும் உடைய ஆதி மனுஷிகள் என உரக்க பேசுவோம்! பழமைவாத காது சவ்வுகள் கிழியும் வரை உரக்க பேசுவோம்!

நன்றி.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.