“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

“குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள? ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நினைவுக்கு வந்தது.

இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் கல்லூரியில் சேர்ந்தற்கு காரணம் ஒரு காங்கிரஸ் எம்.பி (அல்லது எம்.எல்.ஏ) என்று யதார்த்தமாக முகநூலில் எழுதியிருந்தார். இப்போதும் அப்படி வெள்ளந்தியாகவே ஒரு படத்தை இயக்கி உள்ளார். நாம் இந்தப் படத்தில் என்ன கதாப்பாத்திரமாக இருக்கிறோம் என்று எண்ணத் தோன்றும்.

2005 ஆண்டு நடைபெறும் கதை.திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயை வைத்துக் கொண்டு வேட்டையாடி பிழைப்பு நடத்தும் ஒரு தலீத் இளைஞன் சட்டம் படிக்க கல்லூரி செல்கிறான். அங்கு நடைபெறும் சம்பவங்களின் கோவைதான் ‘பரியேறும் பெருமாள்’ கதை.அது ஆண் பெண் இருவரும் படிக்கும் கல்லூரி. கல்லூரியில் சேரும் போது என்ன நிகழும்?

பரியேறும் பெருமாளுக்கு புரட்சிகர எண்ணமெல்லாம் இல்லை. SFI நடத்தும் மாணவர் போராட்டத்தை கடந்து செல்கிறான். மாஞ்சோலை போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. தன் கிராமத்து இளைஞர்களைப் போல அல்லாமல் தன்னை மோதுபவர்களைக் கண்டு விலகிச் செல்கிறான். கடலில் விழுந்த ஒரு கட்டுமரம் தப்பித்தவறி கரை சேர்வது போல சட்டக்கல்லூரியில் சேர்கிறான். முதலாமாண்டு அவனை ராகிங் செய்கிறார்கள்; மூன்றாம் ஆண்டு அவன் ராகிங் செய்கிறான். இந்தக் காலகட்டத்தில் நடக்கும் கதைதான் இது.

இவன் நண்பன் யோகி பாபு. அற்புதமான நடிப்பு. பரியேறும் பெருமாளாக நடிக்கும் கதிருக்கு ஈடாக நன்றாக நடித்து உள்ளார். யோகி பாபு என்ன சாதியாக இருப்பார் என்று படம் நடக்கும் போதே நம்மை யோசிக்க தோன்றுகிறது. இது இப்படத்தின் வெற்றி. யோகி பாபுவுக்கு தன் நண்பன் நன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எண்ணம் இல்லை. அவர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது ஆங்கிலம்தான்.

இக்கதையின் நாயகியுடன் அவன் பழகக் காரணம் ஆங்கிலம்தான். இவன் மீதுள்ள பச்சாதாபம்தான் அவளை பேச வைக்கிறது. கதையை நடத்தி செல்கிறது. ஆனால் அநியாயத்திற்கு ஒன்றும் தெரியாதவளாக இருக்கிறாளே ?

நம் சமூகத்தில் நடந்துள்ள எல்லா சாதீய ஒடுக்குமுறைகளும் இந்தப் படத்தில் வந்து செல்கின்றன. தடித்த வார்த்தைகளைப் பேசுவதால் இதனை கலைப்படம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். மனைவியோடு, நண்பணோடு, குடும்பத்தோடு ரசித்துப் பார்க்க கூடிய படம். சாதீயம் குறித்து உங்களுக்கு ஒரு தீவிரமான பார்வை இருந்தால் இதில் சொல்லப்படும் செய்திகள் விரிந்த பொருளை தரலாம். இல்லையென்றால் சாதாரணமான கதையாக உங்களுக்குத் தென்படலாம். பல ஆழமான செய்திகள் படிமங்களாக, போகிற போக்கில் சொல்லப்படுகின்றன.

இந்தப் படம் நம் முன் வைக்கும் எளிய கேள்வி? இந்த சமூக கொடுமையில் உங்கள் பங்கு என்ன? ஒரு ஊர்காரனாக, ஒரு நண்பணாக, அரசு இயந்திரம் போன்ற அதிகார மையங்களில் ஒரு துளியான உங்கள் பங்கு என்ன என்பதுதான். இது நம் ஒவ்வொருவரின் சமூக மனசாட்சியை பிடித்து உலுக்கும் கேள்வி.

சாதி இந்துவின் ‘செயற்பாட்டாளனாக’ வரும் பெரியவர். அப்பப்பா ஒரு வித்தியாசமான வில்லன். இதுவரை யாரும் பார்காத வில்லன். இவரைப் போன்றவர்களை நாம் எப்படி எதிர் கொள்வது? கதாநாயகியின் அண்ணனாக வருபவன் இந்த வில்லனின் வழித்தோன்றல்தான். சாதிக்காக உண்மையாக அழுகிறானே?

சமூக அழுத்தம் பரியேறும் பெருமாளை இயக்குகிறது. தன் தந்தை தன் கண் முன்னே படும் அவமானங்களை எதிர்கொள்ள வைக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு தேவதையாக ‘ கவிதா சொர்ணவல்லி’ போன்ற ஆசிரியர்கள் வருவார்கள். கல்லூரி முதல்வர்போல அமைதியாக உதவுவார்கள். தான் எதிர்கொள்ளும் சிறுமைகளை எதிர்கொண்டு முன்னேறுவான். அம்பேத்காரிய, மார்க்சிய, பெரியாரிய தத்துவங்களின் அமலாக்கத்தை இது போன்ற படங்கள் விரைவு படுத்தும்.

பீட்டர் துரைராஜ்; சினிமா-புத்தகங்கள் குறித்து டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.