பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

ஆணவக் கொலைகள் குறித்து செய்திகளில் பார்க்கும்போதும், படிக்கும்போதே அதன் கொடூரம் நடுங்கச் செய்யும். இதனாலே இந்த படத்தைப் பார்க்க தயங்கினேன். ஆனால், படத்தை திரையரங்கில் பார்த்தபோது ‘நல்லவேளை இவ்ளோ நல்ல படத்தை நான் தவறவிடவில்லை’ என்று நிம்மதி கொண்டேன்.

‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு’ – இப்படி முழுமையாக சொன்னால்தான் அம்மா சத்தியமா முழுமையாக இருக்கும். மனிதனை மிருகம் ஆக்க வேண்டும் என்றால் சாதி, இன, நிற பாகுபாடு என்ற மூன்று மந்திரம் போதும். எவ்வளவு படித்த மனிதனிற்குள்ளும் இந்த மிருகம் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய நிறத்தால் ஒரு மனிதன் கொல்லப்படுகிறான் என்பது எல்லாம் எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்று நான் பலமுறை யோசித்தது உண்டு. யாரும் கண்ணால்கூட பார்க்க முடியாத சாதியை சாமி மாதிரி வைத்து காப்பாற்ற எத்தனை கொலைகளும் செய்யத் துணிகிறான்.

இந்தப் படத்தில் கருப்பியின் மரண வீட்டிற்குச் சென்ற பார்வையாளர்களை தனக்குள் புதைத்து கொள்கிறார் பரியேறும் பெருமாள். இதனாலேயே படத்தின் மீதி முழுவதும் நாம் பரியாக வாழ்ந்து விடுகிறோம். சின்ன வயதில் இருந்தே எந்த குழந்தையிடமும் ‘என்ன ஆக போற?’னு கேட்டால், “டாக்டர், போலீஸ்” என்று சொல்லும்போது ‘ஏன் அப்படி ஆக வேண்டும்’ என்பதற்கு ஒரு பின் காரணமும் யோசித்து வைத்திருப்பர். இது சிறுவயதில் வேடிக்கையாக இருந்தாலும், அது அவர்களுக்குள் ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதுவே அவர்கள் வெறிகொண்ட லட்சியமாக மாறிவிடும். அப்படித்தான் இந்த ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பிஎல் மேல ஒரு கோடு’.

படத்தின் முதல் பாதியில் ஆங்கிலம் தெரியவில்லை என்று அவனை எவ்வளவு அவமானம் படுத்தும்போதும், அது தன்னுடைய இயலாமை என்ற ரீதியில் அதைக் கடந்து போகும் பெருமாள் தனக்கு புரிகிற மாதிரி சொல்லித் தரும் ஜோ தேவதையாக தெரிவதில் இருந்தே பிள்ளைகளுக்கு நடத்துவது புரிகிறதா என்ற புரிதல் கூட இல்லாத – அதைச் சிறிதும் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் தேவதைக்கு எதிர்பதமாக தான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

சாதி, சாமி என்ற இல்லாத எதை மனிதன் கொண்டாடும்போதும் அங்கே உயிர் பலி என்பது உறுதி. சாதி வெறி என்பது எல்லாம் சமுதாயத்திலும் ஊறிப் போய் இருக்கிறது என்பதற்கும் அதை வேறோடு அழிப்பது மட்டுமே வழி என்பதற்கும் சான்று படத்தில் வரும் முதியவர். அவரை திரையில் காணும்போது எல்லாம் நமக்கு நா வரண்டு ஒரு படபடப்பை உண்டு பண்ணுகிறார். யாரும் நினைக்காத வேலையில் அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு செல்லும்போது இதுவரை சாதி வெறியில் உயிரை பலி கொடுத்த பல காதல் ஜோடிகள் இப்படி ஓர் அரக்கன் கையில் நொடிப் பொழுதில் இறந்து இருப்பார்கள் என்று நினைக்கும்போது பதற்றம் ஏற்படுகிறது.

கொலை செய்வதைவிட கொடுமையானது, ஒருவரை அவமானப்படுத்துவது. அது அவர்களை மனதளவில் கொன்றுவிடும். கத்தியை விட கூர்மையான ஆயுதம் நாக்கு என்பர். ஆம், பலரை கூனி, குறுகி அடக்கி வைத்து இருப்பதும் சாதி வெறியில் உளவியல் துன்பம் கொடுத்து, அவனை சிந்திக்க விடாமல் நடுநடுங்க செய்வதும் இன்றளவும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்று சொல்லும் அரசுப் பள்ளிகள் சிலவற்றில் குழந்தைகளை சாதிய ரீதியில் அணுகி, கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படும்போதும் சீறிப் பாய்வது இல்லை. சட்டங்கள் எல்லாம் சாதியை ஒழிப்பதற்கு என்று அறிவு ஜீவித்தனமாய் பேசுவதும், சட்டம் எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று நம்புவதும் முட்டாள் தனம். உளவியல் ரீதியாய் கூட சக மனிதனை அவமானப்படுத்தாமலும், பாகுபாடு இல்லாமலும் பார்க்க முடிகிறதோ அன்று மட்டுமே சாதி ஒழியும்.

கூத்து கட்டும் நடன கலைஞராய் வரும் பெருமாளின் அப்பா எந்த இடத்திலும் தன்னுடைய தன்னம்பிக்கையையும், கலை ஆர்வத்தையும் விட்டு கொடுக்காத மரியாதைக்குரிய மனிதர். “உங்க அப்பாவ இன்னைக்கு நேத்தா அவமானப்படுத்துறாங்க” என்று சொல்லும் அம்மாவின் வார்த்தையில் இந்த சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பு, நம்பிக்கை எல்லாம் போய் வெறுமை மட்டுமே இருக்கிறது என்பது புரியும்போது நமக்குள் யாரோ செருப்பை கொண்டு அறைந்தது போல் இருந்தது.

கருப்பி ஓர் இனத்தின் அடையாளமாய், ஓர் உணர்வின் அடையாளமாய், ஒரு விடுதலையின் அடையாளமாய், ஒரு மாற்றத்தின் அடையாளமாய் என்றும் நமக்குள் சுற்றி வருவாள். முதல் காட்சியில் நாய்க்கு நேருவது தொடர்ந்து மனிதனுக்கும் நிகழும்போது அந்த இடத்தில மனிதன் எவ்வளவு கேவலமாய் சக மனிதனால் சாதி வெறிகொண்டு நடத்தப்படுகிறான் என்பது சாதி வெறி ஆட்டத்தின் உச்சம். எல்லா நிலையும் மாறும் என்று ஜோ வின் அப்பாவை போல நாமும் நம்புவோம் இப்போதைக்கு.

ஆணவக் கொலைகள், சாதிய பாகுபாட்டின் நீள அகல ஆழம் சொல்லும் இந்தப் படம் மனிதனை மனிதன் எவ்வளவு கேவலமாய் பார்க்கிறான் என்பதை காட்டும் ஒரு பாடம். பல வருடங்கள் கழித்து சாதி இல்லாத ஒரு சமூகமாய் இந்தச் சமூகம் மாறி இருந்தால் பல ஆணவக் கொலைகள் மறைக்கப்படாமல் அவர்கள் பட்ட துயருக்கு இது ஒரு சான்றாய் அமையும்.

கே. ஏ. பத்மஜா, சினிமா பத்தி எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.