சரா சுப்ரமணியம்

மண்ட்டோவை வாசித்தது இல்லை. ஓராண்டுக்கு முன்பு தேநீர் நேரமொன்றில் மண்ட்டோ பற்றி நண்பரும் இதழாளருமான முத்துக்குமார் பேசினார். அவர் தந்த அறிமுகத்திலேயே மண்ட்டோ மீது ஈர்ப்பு தொற்றியது. நான் அதை வெளிப்படுத்த, மறுநாளே தன்னிடம் இருந்த ‘மண்ட்டோ படைப்புகள்’ எனும் சற்றே பெரிய புத்தகத்தைத் தந்தார். ‘புலம்’ வெளியிட்ட அந்நூலைத் தொகுத்து – மொழியாக்கம் செய்தவர் ராமாநுஜம்.
ஏதோ கோளாறுமிகு ஆர்வத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டாலும், வழக்கம்போல் அந்தப் புத்தகத்தையும் படிக்காமலயே அடுக்கி வைத்தேன். ஆனால், அந்தப் புத்தகத்தில் இருந்த மண்ட்டோவின் முகம் மட்டும் என் மனத்தில் படிந்திருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, நான் கண்டு வியக்கும் நடிகர் நவாஸுதீனை வைத்து மண்ட்டோவின் வாழ்க்கை வரலாற்றை என் நேசத்துக்குரிய திரைப்பட ஆளுமை நந்திதா தாஸ் ‘மண்ட்டோ’ எனும் பெயரில் ஒரு படம் இயக்கி வருவதை அறிந்ததும் சிலிர்ப்பு கொண்டேன். ‘திரையரங்கில் நிச்சயம் பார்த்துவிட வேண்டும்; படப்பிடிப்பு முடியும் முன்பே மண்ட்டோவின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தேன். எந்தத் தீர்மானம்தான் இதுவரை முழுமையாக நிறைவேறியிருக்கிறது?
*
தியேட்டருக்குப் போகும் மனநிலை இல்லாத சூழலில் ‘மண்ட்டோ’ திரைப்படம் வெளியானது. நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இன்பாக்ஸ் செய்து உடனே பார்த்திட தூண்டினார். ‘பார்க்க முயற்சிக்கலாம்’ என்றளவில் மட்டுமே இருந்தேன். அப்போதுதான் ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. சேலத்தில் இருந்து நண்பரும் பள்ளி ஆசிரியருமான பால சரவணன் பேசினார். “‘மண்ட்டோ’ இங்கு ரிலீஸாகலை. சென்னை கிளம்பி வருகிறேன்” என்றார்.
ஒரு பக்கம் வியப்பு; இன்னொரு பக்கம் வெட்கக் கேடு. மண்ட்டோ படத்தைப் பார்ப்பதற்காகவே சேலத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் என்பது வியப்பு. ‘பைக்கெட்டும் தூரத்தில் படம் இருக்க, நமக்கு அந்தப் பேரார்வம் இல்லாமல் போய்விட்டதே’ என்பது வெட்கக் கேடு.
புதன்கிழமை இரவு 7.10 மணி காட்சி. முதல் நாள் இரவே ‘மண்ட்டோ – படைப்புகள்’ புத்தகத்தைப் புரட்டினேன். ‘காலித்’ எனும் சிறுகதையை வாசித்தேன். மிரட்டல். சரி, மண்ட்டோ பற்றி ஓரளவேனும் அறியலாம் என அந்தப் புத்தகத்தின் ஆரம்பப் பகுதியில் இடம்பெற்ற ‘மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பு’ மற்றும் ராமாநுஜம் எழுதிய முன்னுரையை வாசித்தேன். 16 பக்கங்கள். உடனே மண்ட்டோவை பார்க்க மனம் துடித்தது. ‘மண்ட்டோ’வுடன் திரையில் உறவாடுவதற்கு முழுமையாகத் தயாரானேன்.
*
இருவரும் படம் பார்த்தோம். அடுத்த அரை மணிநேரம் படம் பற்றியே நானும் பாலசரவணனும் பேசினோம். ‘நிறைவான படைப்பு இது’ என்றார். என் மனத்தில் முழுக்க முழுக்க ‘மண்ட்டோ’ ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
படம் தொடங்கியதில் இருந்தே மண்ட்டோவுடன் 40-களுக்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். அந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய ப்ரொடக்ஷன் டிசைன் ஒர்க் நுட்பமாக இருந்தது. காட்சிகள் நகர நகர பின்புலம் பின்னுக்குத் தள்ளப்பட்ட மண்ட்டோவின் பேச்சு – செயலில் மட்டுமே கவனம் குவிந்தது. அந்த அளவுக்கு கதாபாத்திரம் கூர்மையாக இருந்தது மட்டுமின்றி, தன் அசாத்திய நடிப்பாற்றலால் தன்னை மறைத்துவிட்டு மண்ட்டோவை மட்டுமே திரையில் காட்டினார் நவாஸுதீன்.
காட்சிகளின் ஊடாக கதையை நகர்த்திய நந்திதா தாஸ், மண்ட்டோவின் மேற்கோள்கள், மண்ட்டோவின் படைப்புகளைக் கொண்டே வசனங்களால் ப்யூர் சினிமாவுக்கான அடர்த்தியைக் கூட்டியிருந்தார். நந்திதா தாஸ் திரையில் காட்டிய மண்ட்டோவை ராமாநுஜம் தன் 16 பக்க முன்னுரைப் பகுதியில் பெருமளவில் எனக்குக் காட்டிவிட்டதை உணர முடிந்தது. நந்திதா தாஸும் நாமாநுஜமும் மண்ட்டோவை எந்த அளவுக்கு முழுமையாக உள்வாங்கியிருந்தனர் என்பது உரைத்தது.
மண்ட்டோவை மண்ட்டோவாக மட்டுமே காட்டியதுதான் நந்திதா தாஸ் என்பவர் மிகப் பெரிய திரை ஆளுமை என்பதை மீண்டும் மெய்ப்பித்தது. ஆம், எந்த ஓர் இடத்திலும் மண்ட்டோவை ரொமான்ட்டிசைஸ் செய்யவே இல்லை. இலக்கியத்தில் மண்ட்டோவின் மேன்மையையும், குடும்ப வாழ்க்கையில் சூழல் காரணிகளால் ஒரு கணவன் – தந்தையாக முழுமை தர இயலாத போதாமையையும் கச்சிதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, மண்ட்டோவின் மனைவியின் துயர நிலையைப் பதிவு செய்த விதம், மண்ட்டோவின் குடும்ப வாழ்க்கைத் தோல்வியை குத்திக் காட்டியது.
பம்பாய் மீதும், நண்பர்கள் மீதும் மண்ட்டோ கொண்டிருந்த ஈடுபாடுகளை காட்சிகளின் ஊடாகவும், வசனங்களின் வாயிலாகவும் தெரியபடுத்தியதும் சிறப்பு.
மிகக் குறிப்பாக, திரைக்கதையில் மண்ட்டோவின் மூன்று முக்கிய சிறுகதைகளை காட்சியாகக் காண்பித்தது தனி சிலிர்ப்பனுபவம், அந்த மூன்று கதைகளின் ஊடாக மண்ட்டோவின் இலக்கிய மேதமையையும், மனவோட்டத்தையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாகக் கடத்த முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.
இந்திய சுதந்திரம் மீதான மண்ட்டோவின் பார்வை மிக முக்கியமானது. சுதந்திர இந்தியாவை விட்டுப் பிரிந்து பிரிந்த பாகிஸ்தானை நோக்கிச் செல்ல முடிவு செய்த இடம், இன்றளவும் உளவியல் ரீதியிலான பிரிவினைவாதப் போக்கின் தாக்கத்துக்குச் சான்று. மண்ட்டோவுக்கு மட்டுமல்ல; பெரும்பாலான பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சிக்குரிய இடம் அது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை காலத்தின் நிலையை சில காட்சிகளின் வழியாக நமக்கு நந்திதா தாஸ் புகப்பட்டது, அவர் கையாண்ட திரைமொழியின் பக்குவத்தைச் சொல்லும்.
கதாபாத்திர தெரிவுகள் தொடங்கி தொழில்நுட்பக் கலைகளின் பங்களிப்புகள் வரை ஒட்டுமொத்த குழுவின் அசாத்திய திறமையையும் உழைப்பையும் காட்சிகளுடன் ஒன்றிப்போய்விட்டதால் கவனிக்கத் தவறுவது நடக்கும். இதற்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும். உரசிய தீக்குச்சியில் வரும் தீத்துளியில் சிகரெட் பற்றவைக்கப்படும். தீக்குச்சி உரசல் சத்தம் மட்டுமின்றி, சிகரெட்டில் தீப்பற்றும் சத்தமும் கச்சிதமாகக் கேட்கும். துல்லியத்தன்மைக்கு மண்ட்டோ குழு கொடுத்துள்ள முக்கியத்துவத்துக்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
சுந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் சொகுசாக வலம் வந்த மாண்ட்டோ ஆகட்டும்; பாகிஸ்தானில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடி, குடியும் புகையுமாக உடல்வாடும் மண்ட்டோவாகட்டும், வெவ்வேறு முகபாவனைகளால் தெறிக்கவிடும் நீதிமன்றக் காட்சிகளாகட்டும் … மண்ட்டோவை நாம் நேரில் பார்ப்பதற்காகவே நவாஸுதீன் எனும் நடிகன் உருவெடுத்தானோ எனும் சந்தேகம் எழுகிறது. இது க்ளிஷேதான், ஆனாலும் நிஜம்: மண்ட்டோவாலேயே இப்படிக் கச்சிதமாக மண்ட்டோவாக நடிப்பில் வாழ்ந்திருக்க முடியாது.
*
எனக்கு இங்கே எழும் ஒற்றைக் கேள்வி: நந்திதா தாஸ் ஏன் மண்ட்டோவை தேர்ந்தெடுத்தார்?
இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்துக்குப் பிறகு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதப் போக்கு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இங்கே தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது கண்கூடு. இந்தப் ‘பைத்தியக்கார’த்தனத்தைச் சாடுவதற்கு சமகால நிகழ்வுகள் – புனைவுகள் சார்ந்து சினிமா படைத்து திரையிடுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
எனவே, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறார். நிகழ்காலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்தும் சமகால பிரச்சினையை அப்போதே அழுத்தமாகப் பேசியதுடன், அதனால் பாதிக்கப்பட்ட எழுத்தாளரான மண்ட்டோவை நந்திதா தாஸ் நாடியிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாகவே, பிரிவினையின் கோரமுகத்தைக் காட்டும் மண்ட்டோவின் சிறுகதை ஒன்றுடன், மண்ட்டோவின் வாழ்க்கை வரலாறு சினிமாவின் க்ளைமாக்ஸ் ஆக வைத்திருக்கிறார் நந்திதா தாஸ்.
சமகால அரசியல் சூழலின் தன்மையை மண்ட்டோவின் வழியாக நந்திதா தாஸ் சொன்ன விதத்தில், அவர் அப்படி சொன்னதாக நான் நம்பிய விதத்தில், என்னைப் பொறுத்தவரையில் ‘மண்ட்டோ’ ஒரு க்ளாஸிக்.
‘றெக்கையை முறித்தெடுத்துவிட்டு பறக்கவிடுவதான் சுதந்திரமா?’ என்று மண்ட்டோ எழுப்பும் கேள்வி இன்றைக்கும் பொருத்தமானது. அப்படி றெக்கை முறித்தெடுக்கப்பட்ட ஒரு சுதந்திரப் பறவைக்கு என்ன நேரும் என்பதையும் தன் வாழ்க்கை மூலமே மண்ட்டோ காட்டிச் சென்றதை நமக்குத் தெளிவாக விளங்கவைக்கிறது ‘மண்ட்டோ’ எனும் இந்த மகத்தான திரைப் படைப்பு.
சரி, நந்திதா தாஸ் – நவாஸுதீனின் ‘மண்ட்டோ’ எந்த விதமான தாக்கத்தைத் தரக்கூடும்.
மண்ட்டோவுடன் எழுத்துக்கள் வழியாக பழகியவர்களுக்கு நிறைவைத் தரும் – நண்பர் பாலசரவணனை போல.
மண்ட்டோவை அதிகம் தெரியாதவர்களுக்கு அவர் எழுத்துகளை நோக்கி நகர்த்தும் – என்னைப் போல.
*
இங்கே ‘மண்ட்டோ – படைப்புகள்’ நூலில் தொகுப்பாசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான ராமாநுஜம் தனது முன்னுரையில் எழுதியவற்றின் தொடக்க பாராவை அப்படியா பதிய விரும்புகிறேன். அது, திரையில் மண்ட்டோவை உள்வாங்க உங்களில் சிலருக்கு உதவுக்கூடும். அந்தப் பாரா:
“இறந்தவர்களைக் கொச்சைப்படுத்தி அவர்களின் அந்தரங்கங்களைத் திருடியவன் என்றும், அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் என்றும், இடதுசாரி இயக்கங்களால் பிற்போக்குவாதி என்றும், சில இலக்கியவாதிகளால் அகங்காரம் கொண்டவன் என்றும், பலவிதமான பார்வைகளிலும் அதன் எல்லையில் இருந்து மண்ட்டோ விமர்சிக்கப்பட்டார். மண்ட்டோவின் மரணத்திற்குப் பிறகு, ‘ஏன் அவரின் மரணத்தை இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறீர்கள்? எதற்காக அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைகள் சிறப்பு மலர்களை கொண்டு வருகின்றன? ஆபாசத்தை வைத்துப் புகழ் பெற்றவன் ஒழிந்தததற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்ற கருத்து ஒரு வாசகரால் முன்வைக்கப்பட்டது. இந்த எல்லா விமர்சனங்களையும் மீறி மண்ட்டோ இந்தியத் துணைக் கண்டத்தின் மிகச் சிறந்த எழுத்தாளன் என்று அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சரா சுப்ரமணியம், ஊடகவியலாளர்; ‘றெக்கை’ சிறார் இதழின் ஆசிரியர். சினிமா பத்தி எழுத்தாளர்.