பா. ஜெயசீலன்
அண்ணன் திருமாவளவனின் உரைகள் அசாத்தியமான கோட்பாட்டு விளக்கங்களை கொண்டவை. சாதி குறித்து பேசுகையில் அவர் பல்வேறு தருணங்களில் சொன்ன விளக்கம் “சாதி என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது”. அதாவது சாதி ஹிந்துக்கள் சாதியை பயில்வதற்கும், கடைபிடிப்பதற்கும், கட்டி காக்க விரும்புவதற்குமான அடிப்படை காரணம் சாதிய கட்டமைப்பினூடாக அவர்களுக்கு கிடைக்கும் அதிகாரமும், அந்த அதிகாரத்தின் ஊடாக அவர்கள் பெரும் சமூக, அரசியல், பொருளாதார நலன்களும்.
சில நூறு ஆண்டுகளாய் எந்த தகுதியும், தேர்வும் இல்லாமல் சாதி என்னும் இல்லாத ஒன்றை முன்வைத்து ஏரளமான சமூக பொருளாதார அனுகூலங்களை அனுபவித்து வரும் ஒருவனிடம் போய் நீதி கதைகள் சொல்லி அவன் மனதை மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? அம்பேத்கரின் வார்த்தையில் சொல்வதென்றால் மன்னராட்சி முடிவிற்கு வரவேண்டும் என்று எப்படி இங்கிலாந்து ராணி விரும்பமாட்டாரோ அதே போலத்தான் சாதி ஒழியவேண்டும் என்று சாதி ஹிந்துக்கள் விரும்பமாட்டார்கள்.
ஒரு அரசு பேருந்து அழகான மலையினூடாக சிலநூறு ஆண்டுகளாய் ஓடி கொண்டிருக்கிறது. அந்த பேருந்தில் மூன்று பேர் உட்கார கூடிய ஒரே ஒரு இருக்கை போடப்பட்டிருக்கிறது. அந்த இருக்கையில் தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் உட்காருவார்கள் உட்காரமுடியும். மற்றவர்கள் பேருந்தின் மேல்தளத்தில் ஏறி வானத்தை பார்த்து உட்கார்ந்துகொண்டுதான் வரவேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பேருந்தில் ஏராளம் இறங்கலாம். அவர்களுக்கு பிடித்த பாடல்களை போடச் சொல்லி கேட்கலாம். வேண்டிய வேகத்தில் பேருந்தை ஓட்டச் சொல்லலாம். இதுமட்டுமில்லாமல் அவர்கள் வண்டியில் ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் பேருந்தின் மேலிருப்பவர்கள் ஐயா நீங்க நல்லாயிருக்கணும் என்றுவேறு சொல்லவேண்டும் .
ஒருநாள் பேருந்தின் மேல்தொங்கிக்கொண்டிருந்த ஒரு நல்ல கதைசொல்லி காலில் கயிற்றை கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக தலைகீழாக தொங்கிகொண்டே தங்களது கஷ்டங்கள் குறித்தும், பேருந்தின் ஒரு மூலையில் தாங்களும் உட்கார்ந்துகொண்டால் நன்றாகத்தானே இருக்கும் என்னும் பாவனையில் கதறி அழுதபடி ஒரு நீதிகோரும் கதையை சீட்டில் உட்கார்ந்து கொண்டுவரும் அந்த குடும்பத்திடம் சொல்கிறான். இந்த சோக கதையை கேட்டு அந்த குடும்பமும் கண்ணீர் விடுகிறது.
பேருந்தில் உட்கார்ந்துகொண்டுவரும் திமிர் பிடித்த குடும்பம்தான் சாதி ஹிந்துக்கள். அவர்களிடம் தலைகீழாய் கயிற்றில் தொங்கியபடி நீதி கதைகள் சொன்னவர்தான் மாரி செல்வராஜ். இப்பொழுது நீதி கதையை கேட்ட அந்த குடும்பம் அடுத்த நாளிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அந்த பஸ்சை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த பேருந்தில் அனுபவித்து வரும் சொகுசு அவர்களுக்கு முந்தைய தலைமுறை இவர்களுக்கு விட்டு சென்றது. இவர்களும் இவர்களது அடுத்த தலைமுறைக்கு இதை அளித்து செல்லவே முயல்வார்கள். முடிந்தால் பேருந்தின் மேல்தளத்திலும் யாரும் ஏறாமல் செய்ய என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் யோசிப்பார்கள்.
பிறகு, அவர்களை எப்படி சீட்டிலிருந்து கிளப்புவது? மேலிருப்பவர்கள் எப்படி பேருந்துக்குள் வருவது? இதை செய்ய அந்த குடும்பத்தினரிடம் கண்ணை கசக்கி கொண்டு நீதிக்கதைகள் சொல்லாமல் அந்த குடும்பம் அனுபவித்துவரும் அதிகாரத்தை கைவிட ஒரு வலுவான காரணத்தை முன்வைக்கவேண்டும். எங்களை உள்ளே விடவில்லையென்றால் பஸ்ஸை கொளுத்திவிடுவோம். எல்லோரும் நடந்து செல்லலாம் என்று மிரட்டலாம். அல்லது நீங்கள் உங்கள் சீட்டில் எப்பொழுதும் போல உட்கார்ந்துகொண்டுவருங்கள். எங்களுக்கு நாங்களே சீட்டு செய்து அதில் உட்கார்ந்து வருகிறோம் என்று சமாதானம் பேசலாம். அல்லது அந்த பேருந்தைவிட ஒரு பெரிய பேருந்தை வாங்கி நாங்கள் அதில் பயணித்து கொள்கிறோம் என்று சவால் விடலாம். அல்லது உங்கள் குடும்பத்தை கொன்று எங்கள் வஞ்சம் தீர்ப்போம் என்று இறுதி எச்சரிக்கை செய்யலாம். மேல் சொன்ன காரணங்கள் அந்த குடும்பத்திடம் ஒரு சலனத்தை ஏற்படுத்துமா இல்லையா? ஏற்படுத்தும். அதற்கான உதாரணகள்தான் சமீபத்தில் வந்த கபாலி, காலா, மாவீரன் கிட்டு போன்ற படங்கள்.
தெரிந்தோ தெரியாமலோ மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் சாதி ஹிந்துக்களின் பரிவை கோரும் ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு அடிமையின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற பரிவைக்கோரும் தலித்துகளின் வெளிப்பாடுகள் சாதி ஹிந்துக்கள் அப்படியே ரசித்து ருசித்து enjoy பண்ணி சாப்பிட கூடிய லட்டுகள். ஜெயமோகனின் “நாயோடிகள்”, முதல் மரியாதையின் “ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமி” கதாபாத்திரம் போன்றவை சாதி ஹிந்துக்களுக்கு இளையராஜாவின் இனிமையான சோக பாடல்களை போல சுகமானவை. பரியேறும் பெருமாள் நெடுக்கவும் கழிவிரக்கமும், தாழ்மையுணர்ச்சியும் பிதுங்கி வழிகிறது. முக்கியமான சிலதை மட்டும் கேள்வியாக்கி நிறுத்தி கொள்கிறேன்.
ruthless assassinஆக வரும் சைத்தான் கி பச்சா பெரியவர் கொலைசெய்ய பணம் தந்தால் இதை பணத்திற்காக செய்யவில்லை குலசாமிக்காக செய்கிறேன் என்கிறார். ஒரு தலித் தன்னை வீழ்த்திவிட்ட பிறகு ஒரு சாமுராயை போல தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். அந்த பெரியவரின் கதாபாத்திர கண்ணியம் மிக கவனமாக நிலைநாட்டப்படுகிறது. யோசித்து பார்த்தால் தனது இறுதிமூச்சுவரை தனது நம்பிக்கைக்கு அவர் உண்மையாக இருந்திருக்கிறார். அவரை போன்ற ஒரு சைத்தான் கி பச்சா இந்தப் படத்தை பார்த்தால் இந்த பெரியவர் கதாபாத்திரம் நல்ல inspiration ஆக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க ஆணவ கொலைகளில் ஈடுபடும் சில்லறை பசங்கள் எதோ பணம் காசை பற்றி கவலைப்படாமல் லட்சியத்திற்காக மட்டுமே செயல்படும் சொந்த உயிரையும் இழக்க தயங்காத லட்சியவாதிகள் என்னும் தொனியில் கதாபாத்திரம் அமைப்பதற்கான காரணம், தேவை நம் சமூக சூழலில் என்ன? அந்த கதாபாத்திரம் மீது பார்வையாளனுக்கு ஏற்படும் கோபம் கூட பெரியவரின் சாதி வெறி சார்ந்தது அல்ல. அவர் கொல்ல பயன்படுத்தும் யுக்தி. உதவி கோரி, உதவி செய்பவரையே கொலை செய்யும் அந்த பாணிதான் what if it was me என்று பார்வையாளனுக்கு அந்த பெரியவர் மீது காண்டாகிறதே தவிர அவரது சாதி வெறி அல்ல.
தலித் பசங்க படிக்காதவனுங்க. இங்கிலிஷ் பேச தெரியாதவனுங்க. சோத்துக்கு வழியில்லாதவனுங்க. வித்தியாசமான முக ஜாடை அல்லது உடலமைப்பு அல்லது குறைந்தபட்சம் பான்பராக் பற்களோடாவது(தமிழ் திரைப்படங்களில் தலித்துகளின் பற்களின் அரசியல் பற்றியே தனியே ஒரு கட்டுரை எழுதலாம்) தலித்துகளின் குடும்பத்தில் யாராவது இருக்கவேண்டும் என்பது பொது புத்தி. ஒரு சாதி ஹிந்துவின் மனநிலையோடு மாரி, பரியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாரி சாதி ஹிந்துக்களின் எதிர்பார்ப்பை போலவே English பேச தெரியாதவன். அந்த வகுப்பிலிருக்கும் பெரும்பான்மையானவரக்ளுக்கு ஆங்கிலம் தெரியாது என்னும் பொழுது மாரி ஆங்கிலம் தெரியாததின் வலியை பொதிமாடு பரியின் மீதே சுமத்துகிறார். காதல் கொண்டேன் திரைப்படத்தில் கோட்டாவில் வந்தவன்தானே நீ என்று வாத்தியார் திட்டிக்கொண்டிருக்கும் பொழுதே கணக்கை முடிக்கும் வினோத் கதாபாத்திரம் இங்கு நினைகூறத்தக்கது. வினோத்தின் மேதமையை வியக்கும் திவ்யாவிற்கும், a for அம்பிகா என்று jo விடம் காமெடி செய்யும் பரிக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. பரி ஆங்கிலம் தெரிந்தவனாக இருந்து ஜோ ஆங்கிலம் தெரியாததின் வலியை அனுபவித்து பரி உதவி செய்திருந்தாலும் எதுவும் மாறியிருக்காது. ஆனால் பொது புத்தியை ஒத்துப் போனால்தான் கருப்பிக்கு வருக்கி கிடைக்கும் இல்லையா?

ஒரு கலை படைப்புக்கு நிறைய துரோகங்கள் செய்யலாம். அதில் ஒரு மிக நல்ல துரோகம் நமது இயக்குனர் பாலா செய்வது. பார்வையாளனுக்கு shock value ஏற்படுத்துவது. இதை மாரி பரியின் தந்தை கதாபாத்திரத்தின் மூலம் செய்திருக்கிறார். ஒரு காமெடி காட்சியில் ஆரோக்கியசாமி என்று பெயர் கொண்ட தாடி பாலாஜி தனக்கிருக்கும் நோய்களை அடுக்க அதற்கு விவேக் இந்த சின்ன உடம்பில் இவ்ளோ நோயாடா என்று சொல்வார். அதுபோல பரியின் கதாபாத்திரம் ஏற்கனவே சிறுநீரில் ஊறிய முகத்தோடு திரிய, பார்வையாளர்கள் என்ன ஜி இப்படி ஆகி போச்சு என்று கண்ணை கசக்க மாரி தக்காளி இப்ப இறக்கிறான் பாருங்கடா பெருசா என்னும் தொனியில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக என்னும் பாவனையில் பரியின் தந்தையை அறிமுகப்படுத்தி அவரை இவரே கொஞ்சம் காமெடிக்கும் பயன்படுத்திக்கொண்டு பின்பு துகிலுரிக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நல்லவேளையாக மாரி பரியின் அம்மா கதாபாத்திரத்தை சேதாரமில்லாமல் விட்டுவிடுகிறார்.
கவுசல்யாவின் அப்பாவும் அம்மாவும் இறுதி தீர்ப்புக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரவைக்கப்பட்டபொழுது அவர்கள் முகத்திலிருந்த புன்னகை நம்மை உறைய வைக்க கூடியது. இது நிஜம். மாரியின் படத்தில் வரும் ஜோவின் அப்பா “உன்ன கொல்றதுமில்லாம என் பொண்ணையும் கொன்னுடுவாங்கடா” என்று கண்ணை கசக்குவது புனைவு. பார்ப்பனர்கள் வந்துதான் இங்கு சாதி வந்தது என்று சொல்பவர்களிடம் ஓத்தா அவன் சொன்னா உங்களுக்கு எங்கட போச்சு அறிவு மயிராண்டிகளா என்று கேட்கத்தோன்றுவதை போல சமூக அழுத்தத்தின் காரணமாகத்தான் பெற்றோர் ஆணவ கொலைகள் செய்யும் நிலைக்கு ஆளாகிறார்கள் என்று சொல்பர்களிடமும் கேட்க தோன்றுகிறது. சாய்யிரத் படத்தில் கோமாளியை போல இருக்கும் கதாநாயகியின் அண்ணன் ஒரு தலித்தை உயரம் பத்தாமல் எகிறி அடிப்பான். கோமாளியை போல இருக்கும் அவனுக்கு அவனது சாதி தைரியத்தையும், துணிச்சலையும் அளிக்கிறது என்னும் பொருள்பட அந்தக் காட்சி இருக்கும். இந்தக் காட்சி தலித்துகளின் பார்வையில் அணுகப்படும் ஒரு காட்சிக்கான உதாரணம். ஜோவின் அண்ணன் ஒரு காட்சியில் சொல்கிறான் “அவன் மேல complaint தந்தா என் மீசைக்கு என்னடா மரியாதை” என்று. இது ஒரு சாதி ஹிந்து மனநிலைகொண்ட ஒருவரால் மட்டுமே எழுத முடிந்த வசனம். மாவீரன் கிட்டுவில் கிட்டு தனது காதலை தனது மக்களுக்காக, லட்சியத்திற்காக இழக்க தயாராகிறான். பரி மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் ஜோ எனக்கு என் கருப்பி மாதிரி என்கிறான் அழுத்தி கேக்கும் டீச்சரிடம் உங்களுக்கு கூட நான் சொல்றது புரியில இல்ல என்று சாதி ஹிந்துக்களின் மிரட்டலுக்கு முன் மண்டியிடுகிறான். அதனால்தான் சாதி ஹிந்துக்களிடம் மண்டியிடாத இளவரசன் தண்டவாளத்தில்கிடந்த பொழுது வராத, நீல வண்ணம் அடித்த கருப்பி சரியாக பரியை மட்டும் எழுப்பி காப்பாற்றிவிடுகிறது. சாதி ஹிந்துக்கள் சூப்பரப்பு என்று கருப்பி வந்தவுடன் விசிலடிக்கிறார்கள்.
இன்னும் சொல்ல இருந்தாலும் இறுதியாக தீண்டாமையை எதிர்ப்பது சாதி ஹிந்துக்களுடன் ஒரே குளத்தில் குளிக்கவோ, கோவிலுக்குள் நுழையவோ, தெருவில் புழங்கவோ அல்ல. அதனால் எந்த பயனும் ஏற்படபோவுதுமில்லை. தீண்டாமையை எதிர்ப்பதின் நோக்கம் அது தலித்துகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்று அம்பேத்கர் சொல்கிறார். ஓரு ஊரில் இரட்டை குவளை முறை இருந்து அங்கு தலித்துகள் போய் தங்களது காசையும் குடுத்து கொட்டாங்குச்சியில் தேநீர் வாங்கி குடிக்கிறார்கள் என்றால் நாம் அவர்களிடம் போய் இரண்டே இரண்டு வழிமுறைகளைத்தான் சொல்லவேண்டும். ஒன்று தேநீர் போடுவது ஒரு ராக்கெட் சயின்ஸ் கிடையாது, எனவே நீங்களே வீட்டில் போட்டு குடியுங்கள் இரண்டு அந்த தேநீர் கடையை தீவைத்து கொளுத்துங்கள். ஆனால் மாரி ரெண்டு டம்பளரில் தேநீர் ஊற்றி வைத்துக்கொண்டு சாதி ஹிந்துக்களை வாங்க பழகலாம் என்கிறார்கள். கட் செய்தால் “இனிமேல் தலித்துகளின் வீடுகளில் தினம் உணவு உண்பேன்” தமிழிசை அறிவிப்பு என்னும் செய்தியோடு செய்தித்தாள் தொங்குகிறது.
பி.கு.:
சந்தோஷ் நாராயணன் மகா கலைஞன். மாரி செல்வராஜின் அரசியல் போதாமையை தனது இசையால் பிழை நீக்குகிறார். “black panthers” இசையமைப்பாளர் Ludwig Göransson எப்படி ஒரு வெள்ளையினத்தவராக இருந்தாலும் கருப்பினத்தவரின் அரசியல் குரலை இசையால் மொழி பெயர்த்தாரோ அது போல சந்தோஷ் பார்ப்பனராக அறியப்பட்டலும் ஒடுக்கப்பட்டவரின் அரசியல் குரலையும், கலையையும் தொடர்ந்து தனது இசையால் உயர்த்திப்பிடிக்கிறார்.
கருப்பி பாடல் படம்பிடிக்கப்பட்ட விதம் அழகு. நான் பார்த்ததிலேயே இந்த பாடலில் வரும் அந்த குலுங்கும் கொட்டு மேளம்தான் தமிழில் படம்பிடிக்கப்பட்ட அழகான பறையிசை கருவி
மாரி செல்வராஜ் தனது குருவை போலவே செய் நேர்த்தி கொண்டவராகவும் அரசியல் போதாமை கொண்டவராகவும் தன்னை நிறுவுகிறார்.
ஒளிப்பதிவாளரின் பார்வையும் கோணமும் புத்துணர்வு ஊட்டுபவை.
பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.
’அரசியல் போதாமை’ என்பதை விட இது திட்டமிட்டு அரசியலற்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. எனது பதிவு ஒன்றில் ‘பரியேறும் பெருமாள்’ அல்ல இது ‘பிச்சையெடுக்கும் பெருமாள்’ என்று முடித்திருந்தேன். ஏன்? அது தான் தலித் அரசியல். தலித் அரசியல் என்பது ஒப்பாரி மட்டுமே. ஆதிக்க ஜாதிக்காரனின் கொடுமைகளை ஆவணப்படுத்தும் இலக்கியம் அல்லது அம்பலப்படுத்தும் அரசியல் மட்டுமே. அதில் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதற்கான அரசியல் இல்லை. அம்பேத்காரும் இந்து மதத்தை எதிர்த்து கடைசிவரைப் போராடாமல் ‘பவுத்தம்’ தழுவி ஒதுங்கிக்கொள்கிறார். ஒட்டுமொத்த ஜாதிக்கட்டமைப்பை, இந்து மதத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை சாகும் வரை எதிர்ப்பதற்கு இந்த மண்ணில் பெரியார் மட்டும் தான் கண்ணில் படுகிறார். பெரியாரை தலித்தியம் ஏற்க மறுப்பதால் பெரியாரிய இலக்குகளை எதிர்த்துப் போராடாமல் ஒப்பாரியோடு நிறுத்திக்கொள்கிறது. இது தலித் அரசியலின் எதார்த்தம்.
LikeLiked by 1 person
ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய இழிவை ஆங்காங்கே தெளித்து, காதல் எனும் நூலிழையில் (அது நட்பு என்றும் சொல்லலாம், அதற்கும் மேல ஏதோ ஒன்றாகவும் சொல்லலாம்) கட்டி இழுத்துச் செல்லப்படுகிறது கதை. இறுதியில், நான் நானாக இருக்கிறேன், நீ நீயாகவே இருந்துவிடு எனும் ‘புத்திமதி’ கூறி கழிவிறக்கத்தைக் கோரும் பரியனும் கறுப்பியும் சாதி இந்துக்களின் செல்லக்குட்டியாக இருப்பதில் வியப்பில்லை.
விமர்சனம் அருமை.
LikeLike