ஜீவா

” தவறுதலாக இடம் மாறிய மண்ட்டோவின் கண்ணாடி ” – மண்ட்டோ திரைப்படத்தின் விமர்சனம்.
நொண்டி ஆட்டத்தில் கல்லைப்போட்டு விளையாட ஆரம்பிக்கும் சிறுமியை காட்டுவதில் தொடங்குகிறது மண்ட்டோ திரைப்படம்.
ஏன் அந்தக்காட்சியை படத்தின் முதல் காட்சியாக வைக்க வேண்டும்?
ஏனென்றால் இது ஒரு பெண்ணின் பார்வையில், ஒரு பெண் இயக்குனரின் பார்வையில், பெண்ணுடலுக்குள் ஒளிந்திருக்கும் அத்துணை அரசியல்வலியையும் அப்பட்டமாக சில வரிகளில், ஆண்களின் மூளையில் சம்மட்டியால் அடித்துப்பார்த்த கலகக்கார கலைஞன் மண்ட்டோவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை வேறு எப்படி துவங்க முடியும்.
“என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது…, என் இலக்கியத்தை எதிர்ப்பதைக்காட்டிலும், இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள் இதுதான் சிறந்த வழி” – சாதத் ஹசன் மண்ட்டோ.
கொஞ்சம் மண்ட்டோவின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சென்று அவரது வாழ்வியலை அவரது மூக்குக் கண்ணாடியின் துணையுடன் காட்சிப்படுத்தியிருக்கும் பெண் இயக்குனர் நந்திதா தாஸ் பாராட்டுக்குரியவரே. மண்ட்டோவின் சிறுகதையையும் அவரது வாழ்வையும் பின்னிப்பிணைத்திருப்பது திரைக்கதையின் வடிவம். இங்கு மண்ட்டோவின் வாழ்க்கையினூடே அவரது சிறுகதைகள் எங்கு தோன்றியிருக்கக்க்கூடும் என்கிற தொணியில் திரைக்கதையை முயன்றிருப்பது சிறப்பம்சம், அது உண்மையில் பெரும்பாலான இடங்களில் நம்பகத்தன்மையுடன்தான் இருக்கிறது.மண்ட்டோ என்கிற ஒரு கலகக்கார படைப்பாளியின் வாழ்க்கையின் ஒரு சில அத்தியாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முடிந்த அளவில் நேர்மையான சினிமாவாக கொடுத்திருப்பது பாராட்டத்தக்கதே.இந்திய ஒன்றியத்தின் விடுதலைக்கு சில வருடங்கள் முன்னும் பின்னும் நிகழும் கதைக்களம் பம்பாய் மற்றும் பாகிஸ்தான் என விரிந்து இறுதியில் இரு நாட்டுக்குமான எல்லையின் இடைவெளியில் ஒரு சீக்கியர் மரணிப்பதோடு முடிகிறது படம்.
பாகிஸ்தானில் ஜின்னா புகைப்படம், பான்கடையில் மண்ட்டோ வைத்திருந்த பண பாக்கி, நண்பன் ஷியாமை நெடுநாள் கழித்து பார்த்த பிறகு இருவரும் சொல்லிக்கொள்ளும் “ஹிப்டுல்லா”, தேனீர் கடையின் பெயர்மாற்றம், புகையிலைச்சுருளில் ஒளிந்துள்ள கெளரவம், சேமித்துவைத்திருக்கும் பேனாக்கள், மூன்றாவது முத்ததிற்கான கதை, சாய்ந்தே அமர்ந்து செல்லும் குதிரைவண்டி, ஷியாம் பணத்தை சட்டைப்பையிலிருந்து எடுக்கும்போது நண்பன்தானே என அதை சிந்தனையிலேயே எடுத்துக்கொள்ளாத ஒருவர், குடும்பம் பொறுப்பு குழந்தை என இருந்தாலும் அதை எப்போதுமே கவனத்தில் கொள்ளாத மனநிலைகொண்ட ஒரு மனிதர்,இப்படி பல காட்சிகளின் மூலம் மண்ட்டோவின் அருகில் நடந்துசென்று அவரது வாழ்வை பார்த்துவரலாம். இதற்கு பின்னால் உள்ள இயக்குநரின் அர்ப்பணிப்பு, ஆராய்ச்சி, தேடல்,வாசிப்பு, காட்சிப்படுத்துதலுக்கான கள ஆய்வு என்பது அளப்பரியது.
ஷியாமின் அன்பளிப்பை ஏற்காமல் விட்டுவிடுவது, அவனது கடிதத்தை பிரிக்காமல் இருப்பது, மனைவியிடம் மன்னிப்புகேட்டுவிட்டு தனியாக சென்றுவிடு என சொல்லும்போது, குறைந்தபட்சம் இந்த மது எனது உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது என்று சொல்லுமிடத்திலும், “தனது எழுத்திற்கு மதிப்பு அதிகம்” அதற்கு விலை நீ நிர்ணயிக்காதே என சண்டை போடும்போதும், நீதிமன்றத்தில் வாதிடும்போதும்,சக எழுத்தாளர்களுடன் விவாதிக்கும்போதும் மிக நுணுக்கமாக மண்ட்டோ என்கிற எழுத்தாளனின் மனவோட்டத்தை புரிந்துகொள்ளலாம்.
நவஸுதீன் மண்ட்டோவை தனது உடல் மொழியில், வசன உச்சரிப்பில், முகபாவனையில் சின்னச்சின்ன செயல்பாடுகளினூடேவும் பிரதிபலித்திருப்பது பாராட்டுதலுக்குறியது.குறிப்பாக தனது சகோதரியுடன் பெற்றோரின் நினைவிடத்தில் வரும் காட்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது சகோதரியிடமிருந்து தீப்பெட்டியை வாங்க சற்று நேரம் எடுத்துக்கொள்வது மண்ட்டோ என்ற எழுத்தாளன் எப்போதுமே ஏதோ சிந்தனையில் உளன்றுகொண்டு இருப்பவர் என்பதும், சாதாரண மனநிலைக்கு திரும்பவே அந்த கதாபாத்திரம் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை மிக யதார்த்தமாக பிரதிபலித்திருப்பார் நவாஸுதீன். அதுவே படத்தின் பல காட்சிகளில் அந்த மண்ட்டோ கதாபாத்திரம் இப்படிப்பட்டது என்பதன் நேர அளவை அதிகமாக்கிக்கொண்டே சென்று தனது மகளுக்கு மருந்து வாங்கி வரவே மறந்ததை எண்ணி வருத்தமுறும்போதும், பிரிவினை மற்றும் அதன் பாதிப்புகள் எவ்வளவு தூரம் மண்ட்டோவை பாதித்தது என்பதோடு, அதன் தாக்கம் எப்போதும் மனவோட்டத்தில் இருந்ததால் தான் தன்னால் சாதாரண மனநிலையில் நிலைகொள்ளாமல் அல்லாடினார் என்பதை தார்மீக ரீதியில் உணர்ந்து, முகபாவனை முதல் உடல்மொழி மற்றும் குரல் தெளிவு குறைவது வரை மிக நுணுக்கமாக, படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்திற்கு நேர்மையான அர்ப்பணிப்புடன் நடிப்பை திரையில் கொடுத்து, மண்ட்டோவிற்கு பங்காற்றியிருப்பார் நவாஸுதீன்.இந்த சிறிய உளவியல் சார்ந்த, கதாபாத்திரத்திற்கான அனைத்தையும் உள்வாங்கி இருந்தால் மட்டுமே, அதை நம்மை திரையில் நவாஸுதீனை பார்க்க வைக்காமல், அவரது நடிப்பின் மூலம் வெளிப்படும் மண்ட்டோவை தரிசிக்க வைத்தது.
சாபியாவாக ராசிகா டுகா, ஷியாமாக தஹிர்ராஜ் பாசின், நர்கிஸாக பெர்யானா வாஸிர், தயாரிப்பாளர் வேடத்தில் ரிஷி கபூர், இஸ்மத் சுக்தாயாக ராஜ்ஶ்ரீ தேஷ்பண்டே, அஷோக் குமாராக பானு உதய், குல்வந்த் கவுராக திவ்யா தத்தா என அனைவருமே தாங்கள் வரும் காட்சிகளுக்கேற்ற மாதிரி கச்சிதமாக நடித்திருப்பர்.மண்ட்டோவின் கதையில் வரும் கதாபாத்திரங்கள், மண்ட்டோவின் வாழ்கையில் வரும் கதாபாத்திரங்கள் என அந்தந்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தியிருப்பதும் மிகப்பெரும்பலம்.
இதற்கான நடிகர்களை தேர்வு செய்த ஹனி ட்ரெகான் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.ஏனென்றால் ஒரு படத்தில் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மை என்பது அந்த கதபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்கள் உடல் தோற்றம், பார்ப்பதற்கு அந்த கதாபாத்திரத்தினை ஒத்திருக்க வேண்டும் அதே நேரம் அவர்களின் உடலசைவையும், முக பாவனைகளையும் பார்வையான் பார்க்கும்போது அந்த கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை முதலில் வரவேண்டும் அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தினை வெளிக்கொணருவது நடிகரின் திறமை.அந்த வகையில் நடிகரின் தேர்வு என்கிற முக்கியப்பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
கார்த்திக் விஜய் என்கிற ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவில், மண்ட்டோவின் சிறுகதைகள் திரையில் விரியும் இடங்களில் எல்லாம் மிக நெருக்கமான அடர்த்தியான சட்டகத்தை (Frame)வைத்தும், மற்ற இடங்களில் எல்லாம் நாம் அந்த பழைய பம்பாயையும்,பாகிஸ்தானையும் பார்க்க ஏதுவாகவும், அதற்குள் மண்ட்டோவை உலவவிட்டபடி அந்த சட்டகம் என்பது சற்று விரிந்து இருக்கும்படி பதிவு செய்திருப்பார். மேலும், அரங்கத்திற்குள், வெளிப்புறத்தில் என கதையோட்டத்திற்கு தேவையான வகையில் ஒளியமைப்பு என்பது பார்வையாளனுக்கு உறுத்தாத வகையில், இயற்கையில் நமக்கு கிடைக்கும் ஒளிமூலத்தை(Natural Light Source)உணரவைத்திருப்பார்.இது நமக்கு எந்த ஒரு இடத்திலும் நம்மை திரையை விட்டு விலகாத வண்ணம் பார்க்க வைக்க உதவவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்துள்ளார்.அதே நேரம் ஒரேயொரு விளக்கு வெளிச்சம் தேவைப்படும் காட்சிகளில் அதை திறமையாக படம்பிடித்து பின் தயாரிப்பு வேலைகளில் என்ன வேலை செய்தால் திரையில் ஒளியமைப்பு வண்ணம் வரும் என்கிற தெளிவோடு கார்த்திக் விஜய் அவர்கள் ஒளிப்பதிவு,ஒளியமைப்பு, வண்ணக்கலவை இவற்றில் எல்லாம் வேலை செய்திருப்பார். குறிப்பாக சிறப்பம்சமாக மண்ட்டோ கதாபாத்திரம் அசையும் நேரம் அசைந்தும், அவரது சிறுகதைகளில் அவரது கண்களின் வழியே காமிராவை பயணிக்கச் செய்தும் இருப்பார்.பம்பாய் நகர தூசிகளினூடேயும், பாகிஸ்தானின் வீதிகளில் காலைநேர பனியின் ஊடே பச்சை வண்ணம் லேசான அளவில் நமது கண்களில் படரவிட்டிருப்பார். இது ஒருவிதத்தில் திரையில் அந்த 1940- களின் காலத்தையும் வண்ணத்தையும் பார்வையாளனுக்கு உணர்த்த மெனக்கெட்டு வெற்றிகண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
எது மண்ட்டோவின் சிறுகதை, எது மண்ட்டோவின் வாழ்க்கை என்பதில் பார்வையாளனை குழப்பாமல் இருக்க படத்தொகுப்பு என்பதன் பங்கு மிகப்பெரியது.படத்தொகுப்பில் அதற்கு காலமாற்றத்திற்கான (Transition) படத்தொகுப்பு உத்திகளை வெறும் கட் மட்டும் செய்து இருப்பது படத்தில் இருந்து நம்மை விலகச்செய்யாமல் இருக்க உதவியுள்ளது. உண்மையில் படத்தொகுப்பு என்பதுதான் ஒருபடத்தை பார்வையாளன் முழுவதும் உள்வாங்க முதல் காரணமாக உள்ளது என்பதை உணர்ந்து படத்தொகுப்பு செய்யப்பட்டிருக்கும்.இந்த மாதிரி பீரியட் படங்கள் என்றாலே ஆரம்பத்தில் பார்வையாளனுக்கு தோன்றும் முதல் எண்ணம் மிகவும் மெதுவாக படம் நகரும் என்பதே. அது இந்த படத்தில் பார்வையாளன் கண்டிப்பாக உணர வாய்ப்பில்லை, காரணம் படத்தொகுப்பு. எப்படியென்றால், படம் நிகழும் காலம், கதை நகரும் வேகம் அதை திரையில் சொல்லி பார்வையாளன் புரிந்து கொள்வதற்கான நேரம், திரைக்கதையில் மாறி மாறி சொல்லப்படும் காட்சிகளின் கோர்வை, அதே நேரம் பார்வையாளனுக்கு காட்சிகள் மாறுவது தெரியாத வண்ணம் கட் என்பது இடம்பெற்றிருப்பது உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில்கொண்டு படத்தொகுப்பை செய்திருப்பார் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத். இவர்தான் நந்திதா தாஸின் முந்தைய படமான ஃபிராக்/2008 (Firaaq – 2008) படத்தை படத்தொகுப்பு செய்து, அந்த படத்திற்கு படத்தொகுப்ப்ற்கான தேசிய விருதை ஏழாவது முறை வாங்கியவர்.
ஒலியில் மிகச்சிறப்பான படைப்பாக்கத்திறன் வெளிப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரேயொரு உதாரணம் – விபச்சாரியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் விபச்சார தரகன் அவளுடன் சண்டைபோடும்போது அங்கு எரிந்துகொண்டிருக்கும் மஞ்சள்நிற விளக்கில் அவளது தலைபட்டு அது ஆடிக்கொண்டே இருக்கும் சப்தம், சில நொடிகளில் வரும் அடுத்தகாட்சித்துணுக்கில் யார் இறந்திருப்பார் என பார்த்துக்கொண்டிருக்கும் போது மரக்கட்டையாலான கயிற்றுக்கட்டிலின் கட்டையில் அடிபட்டு அந்த விபச்சார தரகன் இறந்து விடுவான். இந்தக்காட்சியில் ஒலி என்பது மிக முக்கியமாக கதை சொல்லியிருக்கும்.
இந்த மாதிரியான வறலாற்று பின்புலத்துடன் தொடர்புடைய படங்களில் கலை இயக்கத்தின் வேலை என்பது அந்த காலகட்டத்தின் பொருள்கள், தெருவிளக்கு, வாகனங்கள், என அனைத்தையும் பற்றி ஆராய்ச்சி செய்து, அதை உண்மையாக திரைக்குள் இருக்கும்படி உருவாக்குவது என்பது மிகப்பெரிய படைப்பாக்கத்திறன் கொண்ட ஒரு வேலை. அது இந்த படத்தில் மண்ட்டோவின் “வண்ணமடிக்காத பென்சில்” (அந்த காலத்தில் பென்சில்கள் வண்ணமடித்து இருக்காது) என்பது முதல் கண்ணாடி சட்டகம், நாளிதழ், புகையிலைச்சுருள் பெட்டி, மரக்கட்டையாலான மண்ட்டோவின் பேனா சேமிக்கும் சிறிய பெட்டி, இப்படி சின்னச்சின்ன பொருள்களிலிருந்து கலவரம் நிகழ்ந்த பிறகான இடம் தெரு வீடுகள் எப்படி இருந்திருக்கும் என்பனவைகள் உட்பட ரிட்டா கோஷ் அவர்களின் கலை இயக்கம் நம்மை திரையில் அந்த காலகட்டத்திற்குள் பயணிக்கச்செய்ய பெரும்பங்கு ஆற்றியிருக்கும் என்பதே நிதர்சனம்.
படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு காட்சிக்கேற்ப, ஒளியமைப்பிற்கு ஏற்ப, நடிகர்களின் தோல் நிறத்திற்கேற்ப வெளிறிய ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் செய்திருக்கும் ஶ்ரீகாந்த் தேசாய்.
ஒலி வடிவமைப்பு செய்திருக்கும் ரசூல் பூக்குட்டி,நேரடி ஒலிக்கலவை செய்திருக்கும் அபிஷேக் திரிபதி,பின்னணி இசை கோர்வை செய்திருக்கும் ஷாஹிர் ஹுசைன் இப்படி திரையின் பின்புலத்தில் கைதேர்ந்த கலைஞர்கள் பங்களிப்பு பாராட்டுதலுக்குறியது.இவர்கள் இல்லாமல் இன்னும் பலர் திரைக்குப்பின்னால், திரையில் பெரும்பங்காற்றியதன் விளைவே இந்தப்படம்.
இர்ஃபான் கானைத்தான் தான் நடிக்கவைக்க நினைத்ததாக நந்திதா தாஸ் கூறியிருப்பது நினைவில் கொள்ளவேண்டும்.அவர் சிறந்த நடிகர் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மண்ட்டோ கதாபாத்திரத்திற்கு, மண்ட்டோவைப்போல மெலிந்த, கண்கள் உள்வாங்கிய, முகத்தில் நிச்சயமின்மை ஊடாடும் தன்மைகொண்ட, தாடை எலும்புகள் தெரிகிற ஒரு முகமும் அதற்கேற்ற உடலுக்கும் பொருந்திப்போகிறவர் நவாஸுதீனே சரியான தேர்வாக இருந்திருக்க முடியும்.
ஒருவேளை உண்மையில் மண்ட்டோவிற்கு, எங்கே தான் சிறைக்கு சென்றுவிடுவோம் என்கிற பயம் இருந்திருக்கலாம். ஆனால், அதை வழக்கமான க்ளிஷேவாக காட்சிப்படுத்தியிருப்பதால், அந்தக்காட்சியின் முன்னரே அதை யூகிக்க முடிகிறது.
படத்தின் இறுதிக்காட்சி மனநலம் பாதிக்கப்பட்ட சீக்கியர் எல்லையில் இறந்ததும் திரை இருண்ட பின்னர் ஏன் தனியாக மண்ட்டோவை காட்டி படத்தை முடிக்கவேண்டும் ?
பிரிவினை, கலவரம், பாதிப்புகள், வாழ்வாதார நெருக்கடிகள், குடும்பச்சிக்கல்கள், இப்படி விரிந்த காட்சிகள் அனைத்திலும் ஆழமாக எதுவுமே பதிந்து பார்வையாளனுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், படம் முடிந்ததும் பார்வையாளன் ஓ மண்ட்டோ இப்படிப்பட்டவரா., அவர் கதைகள் இதைச்சுற்றி எழுதப்பட்டதா,இப்படித்தான் அப்பொழுது இருந்ததா என்று எளிதில் கடந்துவிடும்படியான சிந்தனை ஓட்டமே மிஞ்சுகிறது.
வரலாறுகளில் படிக்கும்போது உணர்ந்த பிரிவினை என்பது ஓரளவிற்காவது அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டிருக்கலாம். அதோடு,மண்ட்டோவின் எழுத்துகளில் விரிந்த கதாபாத்திரங்கள், அந்த சிறுகதைகளை படித்ததில் இருந்த உள்மனம் கணக்கும் உணர்வு கண்டிப்பாக காட்சிகளில் இல்லை.
இது இங்கு ஒரு குறை இல்லை. நிதர்சனம். ஏனென்றால், இங்கு கலாச்சாரத்தின் அழுகிய வால் தணிக்கை குழுவரை நீண்டிருப்பது கண்கூடு.எனவேதான் அவை அந்த உணர்வை முழுவதுமாக கொடுக்க முடியாமல் போனதற்க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
அப்படி எடுக்கும் சுதந்திரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இது தடை செய்யப்பட்டிருக்கும். அதற்கு காரணம் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன மண்ட்டோவின் வாசகத்தில் உள்ளதுபோல் சமூகம் எப்படி இருந்தது அல்லது இருக்கிறது என்பதை காட்சிமொழியில் தோலுரிந்துபோயிருக்கும்.
கட்டுரையின் தலைப்பு ஏன் – ” தவறுதலாக இடம் மாறிய மண்ட்டோவின் கண்ணாடி ” –
வைத்தேன் என்றால், உண்மையில் பம்பாயை விட்டுவிட்டு இடம்மாறி பாகிஸ்தான் சென்றதை எண்ணி மிகுந்த வருத்தமுற்றார் மண்ட்டோ.இதை ஒரு குற்யீடாகவும் பார்க்கலாம்.மற்றொரு உண்மை என்னவெனில், எதை வைத்து சமூகத்தை மண்ட்டோ பார்த்து வந்தாரோ, எது அப்பட்டமாக சமூகத்தை மண்ட்டோவிற்க்கு காட்டியதோ அந்த மண்ட்டோவின் கண்ணாடி படத்தில், ஒரு காட்சியில் மேசை மீது கண்ணாடி இடம் மாறியிருக்கும்.வரலாற்றில் நடந்த அந்த பிழை படத்திலும் நடந்தேறியிருக்கிறது அந்தக்காட்சியில் மட்டும்.
அதன் பெயர் “காட்சித்துணுக்கின் தொடர்ச்சிப்பிழை”
மண்ட்டோ : ” மண்ட்டோவை காட்சியின் வாயிலாக உயிர்ப்பித்த படம் ” – 3.7/5
ஜீவா, சினிம பத்தி எழுத்தாளர்.