“ஏன் அவர் பெரியார்?” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

1938-இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்து “என் மனம் நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது” என்றார் தந்தை பெரியார். அதுபோல, ஏன் அவர் பெரியார்? என்பதை, பெரியார் திடலில், அதுவும் பெரியாரின் பிறந்த நாளன்று பேசுவதை எண்ணும் போது என் மனமும் நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.

சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி. ஒரே சேறும், சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட சொன்னபோது பலரும் சாப்பிடவில்லை. ஆனால், பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துக் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். இதைக்கண்ட பெண் தலைவர்கள் சிலர், காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம், நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அந்த திருமணத்தை பெரியாருடன் தலைமை ஏற்று நடத்தியர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அவருடன் பேசிக்கொண்டிருந்த பிற பெண் தலைவர்கள் நாராயணி அம்மையார் மற்றும் டாக்டர் தருமாம்பாள் அம்மையார். அப்போது அவர்கள் பேசி முடிவுசெய்த பட்டம் தான் “பெரியார்”.

1938, நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி, “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, அத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்திய பெண் தலைவர்களான திருவரங்க நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ் அம்மையார், தாமரைக்கண்ணி அம்மையார், நாராயணி அம்மையார், டாக்டர் தருமாம்பாள் அம்மையார், மலர்முகத்தம்மையார், இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார் மற்றும் கலைமகளம்மையார் ஆகியோர் கூடி அப்பட்டத்தை வழங்கினர். அந்த பட்டத்தை வழங்கிய பெண் தலைவர்களோ, அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட 5000 பங்கேற்பாளர்களில் எவருமே கூட, ‘பெரியார்’ என்ற அப்பட்டம் காலத்தை கடந்தும் அவரது பெயராக நிலைக்கொள்ளும் என்று எண்ணியிருக்க மாட்டார்கள்.

அப்படி இந்தியாவில் அதுவரையிலும் தோன்றிய சீர்திருத்த தலைவர்கள் செய்ய இயலாமல் போன என்னென்ன வேலைகளை பெரியார் செய்தார் என்று பார்க்கவேண்டுமானால், நாம் அந்த காலக்கட்டத்திற்கு போக வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.

ஜாதி – தீண்டாமை ஒழிப்பு:

மனிதர்களை பிறப்பால் பாகுபடுத்தி, அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு பிரிவினைகளை உண்டாக்கும் ஜாதியை ஒழிப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகவே கொண்டிருந்தார் தந்தை பெரியார்.

பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பில் ஜாதிப்பெயரை பெயருக்குப்பின்னால் சேர்த்துக்கொள்வதென்பது மரியாதையாக கருதப்பட்டு, இயல்பானதொரு வழக்கமாகவும் இருந்துவந்தது. தந்தை பெரியாரும் கூட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டு வந்தார். 18.12.1927 வரை, ‘குடிஅரசு’ இதழிலும் அவரது பெயர் அப்படியே குறிப்பிடப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் ‘நாயக்கர்’ என்றாலே பெரியாரைக் குறிக்கும் நிலைமையும் கூட இருந்தது. ஆனால், ஜாதி ஒழிப்பின் வடிவமாக, ஜாதி பெயர்களை நீக்கும் ஒரு இயக்கத்தை கட்டமைத்தவர் தந்தை பெரியார். அந்தவகையில், 25.12.1927-ஆம் தேதிய ‘குடிஅரசு’ இதழ் முதல், அவரது பெயரில் நாயக்கர் என்பது வெட்டப்பட்டது.

அதனை அவரோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில், “பட்டப் பெயர்கள் ஜாதி குலங்களைக் குறிப்பதாலும், அவற்றின் மூலம் சமூகப் பிரிவுகளை வளர்த்துக்கொண்டு போவதாலும், மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும்” என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

ஜாதியமும், தீண்டாமைக் கொடுமைகளும் மிகவும் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், பொது இடங்களை பயன்படுத்தவோ, நீர்நிலைகளிலிருந்து குடிநீர் எடுக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பயணசீட்டோ, நுழைவுச் சீட்டோ வாங்கும் பொருளாதார தகுதி இருந்தாலும் கூட, நாடகங்களை பார்க்கவோ, பேருந்தில் பயணிக்கவோ ஒடுக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த அனுமதி சீட்டுகளிலேயே பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று அச்சிடப்பட்டிருக்கும். காங்கேயம் ஊத்துக்குளி பேருந்தில் பயணசீட்டு வாங்கி உட்கார்ந்திருந்த திரு. ஜான்பால் அவர்கள் ஆதிதிராவிடர் என்று அறிந்து, ஜாதி இந்துக்களின் உதவியோடு பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். இது 1926-இல், 1927-இல் திருப்பத்தூர் கட்டுக்குடிப்பட்டி என்னும் சிற்றூரில், மற்ற ஜாதியினரின் வீதிவழியே குடிநீர் எடுக்க ‘பள்ளர்’ சமூகத்தினர் செல்லக்கூடாது என்று மிகவும் முரட்டுத்தனமாக தடைசெய்யப்பட்டனர்.

இத்தகைய கொடுமைகளை தொடர்ந்து கண்டித்து வந்த பெரியார்,

“மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களையெல்லாம் பொது மக்கள் பின்பற்றக் கூடாதென்றும், வருணாசிரமத்தையும், அதன் முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ள கூடாது” என்றும்;

“மனித நாகரிகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் தீண்டாமையை ஒழித்து, எல்லா தெருக்கள், குளங்கள், கிணறுகள், பள்ளிக்கூடங்கள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள் முதலிய பொது இடங்களில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்; அப்படி பொது இடங்களில நுழைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிமை வழங்க வேண்டும், அதையும் மீறி தீண்டாமையைக் கடைப்பிடிப்போருக்கு 6 மாத சிறை தண்டனை என்று உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும்; இவ்வுரிமை மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து அறப்போரில் குதிக்க அனைவரையும் தயார் செய்வது” என்று அரைக்கூவல் விடுத்து, அவற்றை 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு, 1930 ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாடு, 1932 லால்குடி தீண்டப்படாத கிறித்துவர் மாநாடு, 1933 லால்குடி ஆதிதிராவிட கிறித்துவ மாநாடு, 1936 திருச்செங்கோடு ஆதிதிராவிட மாநாடு, 1937 ஆம்பூர் ஆதிதிராவிட மாநாடு, 1938 அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மாநாடு என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியான மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றினார்.

“ஜாதியும், தீண்டாமையும் பலமாய் இருந்துவருவதற்கு கடவுளும், மதமும் ஒரு வகையில் காரணம். இனி, அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்” என்று 1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் பேசியதோடு, கடவுள் மறுப்பையும், மத எதிர்ப்பையும் திராவிட இயக்க கொள்கைகளாகவே ஆக்கினார்.

“தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோய்; தீண்டாமை ஒழிய வேண்டுமானால், பார்ப்பனியம் ஒழிய வேண்டும்” என்று 1931 விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பார்ப்பனர்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களை கண்டிக்கவும் பெரியார் தவறவில்லை. “பறையன் என்ற இழிவு நீங்காமல் உங்களது சூத்திர இழிவை நீங்கள் போக்கிக் கொள்ள முடியாது” என்று இடித்துரைத்தார் பெரியார். “எவனாவது உயர் ஜாதி என சொல்லிக்கொண்டு குறுக்கே வந்தால் அவனை அடித்து விரட்டுங்கள்” என்று பட்டியலினத்தவரிடமும் கூறினார்.

“மனித உரிமைகளைப் பெற அரசு தடையையும் மீறுவோம்; தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போர் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள்” என்று திருமங்கலத்திலும்;

“ஜாதிகளை ஒழிப்பதே திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. நம் இயக்கமும், பழங்குடி மக்களும் நகமும், சதையும் போல” என்று திருச்சி மான்பிடிமங்கலத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கடுமையாக எதிர்த்து வந்த பெரியார், இவற்றை வெறும் தீர்மானங்களோடும், உரைகளோடும் நிறுத்திக்கொள்ளாமல், ஜாதி ஒழிப்பிற்கான போராட்டங்களாக முன்னெடுத்து அவரும், அவரது தொண்டர்களும் சிறைசெல்லவும் தயங்கவில்லை.

ஒருபுறம் “அரசியலமைப்பில் தாழ்ந்த வகுப்பினருக்கு தனித்தொகுதியே அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று 1931 சேலம் ஆதிதிராவிட மாநாட்டில் பேசியும், செயல்பட்டும் வந்த பெரியார், எம்.சி. இராஜா போன்ற ஆதிதிராவிட தலைவர்களே டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தை ஆதரித்த போதிலும், அம்பேத்கரின் சமூக நீதி பாதையில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

“ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்” என்று ஐரோப்பாவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பெரியார் தந்தி அனுப்பியதே இதற்கு ஆதாரமாகவும், சமூக நீதியின் மீதான பெரியாரின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கல்வி – வேலைவாய்ப்பு – மொழி:

ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகளோடு சேர்த்து, உரிமை மீட்பையையும் ஒரு இயக்கமாக கட்டமைக்கிறார் தந்தை பெரியார். அதென்ன உரிமை மீட்பு என்றால், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பால் ஒழிக்கப்பட்டுவரும் தமிழ் மொழியையும், தமிழ் அடையாளத்தையும் மீட்பது, ஜாதிய தீண்டாமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அதன் விளைவாக வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிற்கு எதிராக கல்வி கொள்கைகள் என நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க பல போராட்டங்களையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

1920 ஆம் ஆண்டிற்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கல்லூரிகளில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதும், வெற்றி பெறுவதும் என்ற நிலை இருந்தது. பொது பணியிடங்களிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, “எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும்” என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை ஒன்றை அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பானகல் அரசர் பிறப்பித்தார். மேற்குப்பிட்ட ஆணை, 1921-இல் வந்திருந்தாலும், செயல்படுத்தும் அதிகாரிகளாக பார்ப்பனர்களே இருந்தமையால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

அதோடு மட்டுமில்லாமல், வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனரல்லாதோர் மீது கட்டாயப்படுத்தும் விதமாக, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்துவந்த பார்ப்பனர்கள், தமிழ்வழி கல்வியை முற்றிலுமாக மறுத்ததோடு, நமது கல்வி உரிமையை மறுக்க பலவித சூழ்ச்சிகளையும் செய்தனர். அதற்கு திருவையாறு தமிழ் கல்லூரியே ஒரு சிறந்த உதாரணம்.

திருவையாறு தமிழ் கல்லூரியை பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டும் இருந்தது என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதிவைத்திருப்பதால் அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியிருக்கின்றனர்.

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலியாரும், மன்னர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று அவரது உயிலை படிக்க முயற்சித்தனர். அது முழுக்க முழுக்க வடமொழியில் எழுதப்பட்டிருந்தால், அவர்களால் படித்தறிய இயலவில்லை.

தமிழும், வடமொழியும் நன்கறிந்த புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொடுத்து கேட்டபொழுது, உயிலைப் படித்த ஞானியார் சிரித்துவிட்டு கூறினாராம், இடமும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்று கூறப்படவில்லை என்று.

அதற்கும் பார்ப்பனர்கள் விடை கூறினார். என்ன தெரியுமா? கல்வி என்றால் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம் என்று. தமிழ்வேளும், செல்வகேசவராயரும் அடங்கா சினம் கொண்டு இச்செய்தியை சர் ஏ டி பன்னீர் செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின் அவரது முயற்சியால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி தமிழும் அங்கு படாமாகியது. பிறகு படிப்படியாக, பல்வேறு தமிழ் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.

ஆக, பார்ப்பனர்களின் இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க, நீதி கட்சி ஆட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த, கல்வி தொடர்பான தீர்மானங்கள் பலவற்றையும் தனது மாநாடுகளில் கொண்டுவந்த வண்ணமே இருந்தார் பெரியார். “இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்” என்ற கொள்கையை வற்புறுத்தியதோடு, பார்ப்பனரல்லாத மாணவர்கள் என்று மட்டுமில்லாமல், “தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக வழங்கி மற்ற வகுப்பு சிறுவர்களைப் போலவே உயர்த்த வேண்டும்”, “உயர்கல்விக்கு வகுப்புவாரி விகிதப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”, “காலியாகும் பணியிடங்களை நிரப்பும்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றும் 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றினார். கட்டாய தாய்மொழிவழிக் கல்வி, வேண்டுமானால் பொது மொழியாக ஆட்சி மொழியை கற்பிக்கலாம், இரு பாலருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி போன்ற தீர்மானங்களும் அடுத்தடுத்த சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணுரிமை:

பொது சமூக – கல்வி நிலை இவ்வாறென்றால், அக்காலத்தில் பெண்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவு இயக்கத்தில், ஜாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு போன்ற பல பணிகள் இருந்தாலும், பெண்ணுரிமை பணிகளுக்கு என்றுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

1910 – 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஆடவர் கல்லூரிகளில் பயின்ற பெண்கள் 30 பேர். சென்னை மாகாணம் என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நான்கு பகுதிகளும் அடங்கியதாகும். இதில்,

மாநிலக்கல்லுரியில் பயின்ற பெண்கள் – 17
கள்ளிக்கோட்டை ஜமாரின் கல்லுரி – 4
கள்ளிக்கோட்டை ஜெர்மன் மிஷினரி கல்லூரி – 2
திருச்சி எஸ் பி ஜி கல்லூரி – 1
ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி – 1

மொத்தம் – 25.

எப்படி தேடிப்பார்த்தாலும், இங்கும் 25 பேர் பற்றிய கணக்கே கிடைக்கின்றது. எனவே தான், பெண்களின் கல்வி விகித சூழ்நிலையைக் கண்டு, முதல் சுயமரியாதை மாநாட்டிற்கு முன்பிருந்தே கூட பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய உரிமைகளை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார் தந்தை பெரியார்.

“பிறப்பால் ஆண், பெண் என்ற பால் பேதம் ஒழிக்கப்பட வேண்டும்; எல்லா பொது பள்ளிக்கூடங்களிலும், ஆண்-பெண், உயர்வு-தாழ்வு வித்தியாசமில்லாமல் இருபாலருக்கும் ஆரம்பக் கட்டாய இலவச தாய்மொழிவழிக் கல்வி; பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்திவிடாமல், முதலில் 16 வயது வரையிலும் பள்ளிக்கு செலவிட வேண்டுமென்றும், பின்பு 30 வயது வரை படிக்க வைக்க வேண்டுமென்றும்; ஆண்களுக்கு நிகரான எந்த தொழிலையும் பெண்களும் மேற்கொள்ள சம உரிமையும், நேரமும் கொடுக்கப்பட வேண்டும்; பள்ளிக்கூட ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு அதிக இடம்; ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முழுவதிலும் பெண்களையே நியமிக்க வேண்டும்; பெண்களை மருத்துவத் தொழிலுக்கு, ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் தற்பொழுது எடுப்பது போதாது, காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டும்; சங்கத்திற்கு போதிய பண உதவி பெற்று, படித்த பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தி, சிற்றூர்களில் உள்ள படிக்காத, விழிப்புணர்வு இல்லாத பெண்களுக்கு கல்வியை கற்பிப்பதுடன், நமது இயக்கக் கொள்கைகளையும் கற்பிக்க வேண்டும்” என முதல் சுயமரியாதை மாநாட்டிலும், அடுத்தடுத்த சுயமரியாதை, மகளிர், இளைஞர் மாநாட்டிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இவற்றிற்கெல்லாம் தடையாக இருக்கின்றவைகளை போக்கும் வகையிலும், பெண்கள் விடுதலைக்காகவும்,

“பெண்களின் திருமண வயது 16 ஆகவும், ஆண்களின் திருமண வயது 19 ஆகவும் சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும்; ஜாதி-மத பேதமின்றி தங்கள் இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை ; வாழ விருப்பமில்லாதவர்களின் விவாகரத்து உரிமை; கைம்பெண்கள் மறுமணம்; அதற்கேற்ற சட்டங்களை இயற்ற வேண்டும்”

“ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து மற்றும் வாரிசு உரிமை; பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்துபோனால், அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துக்களும் அவனது மனைவி முழு சுதந்திரத்துடன் அனுபவிக்கும் உரிமை; ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் குழந்தைகளின் காப்புநிலை, அதாவது கார்டியன் உரிமை மற்றும் தத்தெடுக்கும் உரிமை”

“குழந்தை திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தை எல்லாப் பகுதிகளிலும் அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; எதிர்கால வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடியாத சிறுமிகளை கடவுளின் பேரால் பொட்டுக்கட்டி, பொருளுக்காக நிர்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க வேண்டும்; சிறுவயதுப் பெண் குழந்தைகளை பொதுவில் ஆடவும், பாடவும் விட்டு பொருள் சம்பாதிக்க தேவடியாள்களாக தயாரிக்கும் வழக்கத்தை கண்டிப்பதோடு, இந்திய சட்டசபையில் திரு. ஜெயகர் கொண்டுவந்திருக்கும் பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிரான மசோதாவையும், சென்னை சட்டசபையில், டாக்டர் முத்துலட்சுமி கொண்டுவந்த மசோதாவையும் முழுமனதாக ஆதரித்து, அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகிறது; தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; விபச்சார விடுதிகளை ஒழிக்க வேண்டும்” ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியதோடு,

“இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதாயிருந்தால், மறுமண விருப்பம்கொண்ட கைம்பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்; விபச்சாரத்திற்கு அடிப்படையாய் அர்த்தமற்ற முறையில் கட்டப்பட்ட பொட்டுக்களை அறுத்தெறிந்துவிட்டு வரும் சகோதரிகளை ஆதரித்து திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்ற அறைக்கூவலையும் விடுத்தார்.

பெண்களின் சமத்துவ – அரசியல் உரிமைகளையும் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களுக்காக போராடி வீட்டை விட்டு வெளியேறும், வெளியேற்றப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக தங்க ‘பெண்கள் நிலையம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றார். இன்றைய காலத்தில், வீட்டை விட்டு வெளியில் வருவதோ, கிடைத்த அடிப்படை கல்வியைக் கொண்டு வேலை தேடிக்கொள்வதோ, பெண்களுக்கான தங்குமிடங்களோ எளிமையாக இருந்தாலும், இவற்றையெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாத காலத்தில், 3 வயது குழந்தைகளும் விதவைகளாக ஆக்கப்பட்ட 1920 – 30களில் இவற்றையெல்லாம் தந்தை பெரியார் பேசினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பெண்களின் சமத்துவ உரிமைகளையும், பெண் கல்வியையும், விடுதலையையும், பெண்களுக்கான பாதுகாப்பு மைய்யத்தையும், அதே 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்ற ஆண்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, “ஆண்கள் சிறை சென்றதை பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?” என்று பேசி, பெண்களை போராட தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கும் செல்கிறார் பெரியார்.

இவற்றையெல்லாம் செய்துவந்த பெரியார், பெண் விடுதலைக்கு தடையாக இருப்பவைகளை தகர்க்கும் வகையில், கர்ப்பத்தடையையும், கருத்தடை சாதன பயன்பாட்டையும் எப்போதும் வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இன்றைய அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் கூட பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான, மாதவிடாய் வலி ஆகியவற்றிற்கு கருத்தடை சாதமே சிறந்த நிவாரணமாக கையாளப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில், இளம் பெண்களுக்கும் கூட இது பொருத்தப்படும். இதனை பொருத்திய ஒரு ஆண்டிற்குள்ளாகவே பெண்களின் மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். ஒரு வேளை, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், அதனை எடுத்துவிட்டு, பிள்ளைப்பேறுக்கு பிறகு மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். இதை தான் அன்றே கர்ப்பப்பையை அறுத்தெறியுங்கள் என்றார் தந்தை பெரியார். அறுத்தெறியுங்கள் என்றால் அதை அப்படியே பொருள் கொள்ள கூடாது. பெண்களின் சுதந்திர வாழ்வுரிமையை முழுமையாக அனுபவிக்க தடையாக இருக்கும் கர்ப்பப்பை தொடர்பான இன்னல்களையும், தொல்லைகளையும் அறுத்தெறியுங்கள் என்று பொருள்.

புதுமைகளை வரவேற்பதிலும், விஞ்ஞானத்தை ஒரு தொலைநோக்கு பார்வையிலிருந்து முன்னுணர்ந்து, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும், அவற்றை மக்களிடம் வலியுறுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் பெரியார்.

ஆனால், இந்தியாவில், ‘கற்பு’ என்ற மூடத்தனத்தின் காரணமாக, திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கருத்தடை சாதனத்தை பொருத்துவதில்லை. இதையும் பெரியார் விட்டு வைக்கவில்லை. பெண் விடுதலை வேண்டுமானால், “ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான கற்புமுறை வேண்டும்” என்கிறார்.

பெரியார் இன்றிருந்திருந்தால், “கன்னிப்பெண்களும் கருத்தடை சாதனத்தின் பயனைப்பெற்று, வலி இல்லாத, கட்டுப்பாடுகள் இல்லாத முழுமையாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருப்பார். இதை இனிவரும் உலகின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்!

சுயமரியாதை திருமணம்:

தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதன் ஒரு படியாக, ஆண் பெண் இருபாலரின் சரிநிகரான உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில், தாலி இல்லாத ஜாதி-மத மறுப்பு சுயமரியாதை திருமணங்களை வலியுறுத்தினார்.

இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க போன்ற பற்பல நாடுகளில் நண்பர்களாக வாழும் முறையே பெரிதும் காணப்படுகிறது. அதுபோல, நம் நாட்டிலும், “திருமணம் செய்துகொள்ளாமலேயே நண்பர்களாக வாழும் முறை வர வேண்டும்” என்றார்.

1928-இல் அருப்புக்கோட்டை சுக்கிலநத்தத்தில் நடந்த சுயமரியாதை திருமணப் புரட்சியை அதன் தொடக்கமாகவே பார்க்கிறேன். அச்சிற்றூரில் சுயமரியாதை நெறியில் வளர்ந்த அரங்கசாமி ரெட்டியார் பார்ப்பனரை விடுத்து பெரியாரை கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பெரியாரும் சம்மதிக்க, அரங்கசாமிக்கும், நாகம்மாள் மற்றும் இரத்தினம்மாள் ஆகியோருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அறிந்த ஆவல்சூரன்பட்டியை சேர்ந்த கோபால்சாமி ரெடியாரும் பெரியார் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினார். முதல் திருமண மேடையிலேயே இரண்டாவது திருமணமும் முடிவாயிற்று.

காலை முதல் திருமணத்தையும், முற்பகல் 11 மணிக்கு இரண்டாவது திருமணத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மாரி ரெட்டியார், சுயமரியாதை திருமணத்தின் நடைமுறையையும், சிறப்பையும் கண்டுணர்ந்து அதே நாளில் பார்பனரைக் கொண்டு செய்வதாய் இருந்த அவரது திருமணத்தை நிறுத்தி, அதே மேடையில் பகல் 12 மணிக்கு மூன்றாவது சுயமரியாதை திருமணமாக செய்துக்கொண்டார்.

இதன் நீட்சியாக இனி 116 ஊர்களில் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்களை செய்விக்க உறுதிபூண்டார்.

சமூக – அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை. ஜாதியை குறித்து பேசும்போதெல்லாம், பெண்ணடிமைத்தனம் இருப்பதே ஜாதியை காப்பாற்ற தான் என்று அம்பேத்கர் பேசி வந்திருந்தாலும், தென்னாட்டை பொறுத்தவரை, ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் குறித்த பன்முகப்பட்ட பார்வையோ, அதன் ஊடறுத்தன்மை குறித்த நுணுக்கமான அறிவோ, பெரியாரை தவிர வேறு எவருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை. பார்ப்பனரல்லாதார் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பல்வேறு சமூக நீதி உரிமைகளையும், பெண் விடுதலையோடு ஒரு சேர முன்னிறுத்தி வந்ததே பெரியாரின் தனிச் சிறப்பாக இருந்தது.

இதன் காரணமாகவே, அன்றைய தினம் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்களெல்லாம் அவர்மீது கொண்ட அன்பிற்காக, அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினர்.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர்.

பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் வழக்குரைஞர் கிருபா முனுசாமி ஆற்றிய உரை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.