தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமைக்கான சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை: கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

தன்பால் ஈர்ப்பானது உயிரினங்களுக்குள் தொன்றுதொட்டே இருந்துவந்துள்ளது. கால்நடைகளிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் வரை அனைத்திலுமே தன்பாலீர்ப்பு இருப்பதாக அறிவியல் கூறுகிறது. மனித இனத்திலும் தன்பாலீர்ப்பு இருந்ததற்கான ஆதாரமாக ஓவியங்களும், சிற்பங்களும் இன்றும் காணக்கிடைக்கின்றன. ஆனால், மனிதயினத்தில் நாகரிகம் வளர வளர அதிகாரம் கொண்ட, பெரும்பான்மை தரப்பின் விருப்பு வெறுப்புகள் கட்டுப்பாடுகளாகவும், விதிகளாகவும், பின்னாளில் சட்டங்களாகவும் உருவாயின.

அப்படி தன்பாலீர்ப்பிற்கு எதிரான சட்டங்கள் என்று பார்த்தால், குதவழி உடலுறவை குற்றச்செயலாக்கும் இங்கிலாந்து பொது சட்டத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் 1290-இல் ஃப்ளேட்டா மற்றும் 1300-இல் பிரிட்டன் ஆகிய நூல்களில் அறியப்படுகிறது. இந்த இரண்டு நூல்களுமே குதவழி உடலுறவில் ஈடுபடுபவர்களை உயிரோடு எரித்துக் கொல்ல வேண்டுமென்று குறிப்பிடுகின்றன.

பின்னர், இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி ஆட்சிக்காலத்தில் குதவழி உடலுறவு தூக்கு தண்டனைக்குரிய குற்றமாக பகரி (குதவழி உடலுறவு) சட்டம், 1533-இல் கொண்டுவரப்பட்டது. அதுவே 1563-இல் இங்கிலாந்து இராணி ஒன்றாம் எலிசபெத்தால் மறு-இயற்றம் செய்யப்பட்டு, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த காலனிகளிலும் குதவழி உடலுறவை குற்றமாக்குவதை வழிவகுக்கும் சாசனமானது. எனினும், வாய்வழி பாலியல் செயல்கள் குதவழி உடலுறவின் பொருள் வரையறையிலிருந்து 1817-இல் நீக்கப்பட்டது. 1861-ஆம் ஆண்டு குதவழி உடலுறவுக்கான தூக்கு தண்டனையும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின்போது இன்றைய இந்திய எல்லைக்குள் குதவழி உடலுறவை ‘இயற்கைக்கு எதிரான’ குற்றமாக்கி, அதனை தண்டிப்பதற்காக இந்திய தண்டனை சட்டம், 1860-இல் பிரிவு 377 கொண்டுவரப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 377 கூறுவதாவது:

இயற்கைக்கு மாறான குற்றங்கள்:

ஒருவர் தன்னிச்சையாக, ஓர் ஆணுடன் அல்லது ஒரு பெண்ணுடன் அல்லது ஒரு மிருகத்துடன் இயற்கைக்கு மாறாகப் புணர்ச்சி செய்வது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

விளக்கம்:

இந்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கு அவசியமான உடலுறவை ஏற்படுத்த, ஊடுருவலே போதுமானது.

இந்த சட்டப்பிரிவை கூர்ந்து கவனித்தோமேயானால், எதிர்பாலீர்ப்பை மட்டுமே பொதுமைப்படுத்தி, அதாவது இனப்பெருக்கத்தை மட்டுமே மையமாக கொண்டு, மற்ற பாலியல் ஈர்ப்புகளையும், செயல்களையும் இயற்கைக்கு எதிரானதாக வகைப்படுத்தியிருப்பது விளங்கும். இதன் காரணமாகவே, இக்குற்றத்திற்கு வயது வரம்போ, வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதமோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

இந்தியக் குற்றப் பிரிவு 377 அடிப்படையாக கொண்டிருந்த ஆங்கில சட்டமானது, தன்பாலீர்ப்பிற்கும், 21 வயது நிரம்பியவர்கள் ஒருமித்த சம்மதத்துடன் குதவழி உடலுறவில் ஈடுபடும் செயல்களுக்கும் குற்றவிலக்கு அளிக்க வேண்டும் என்ற வொல்பெண்டேன் குழுவின் பரிந்துரையின்படி பாலியல் குற்றங்கள் சட்டம், 1967-இன் மூலமாக பிரிட்டனில் சீர்திருத்தப்பட்டது. இருந்தாலும், இந்தியாவில் அதன் சீர்திருத்தத்திற்கான எவ்வித அறிகுறிகளுமின்றி அப்படியே இருந்தது.

தன்பாலீர்ப்பிற்கு எதிரான சட்டங்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சட்டமாக இருந்தது, இருக்கிறது. ஆரம்ப காலத்தில், தன்பாலீர்ப்பு மனநோயாக கருதப்பட்டு, தன்பாலீர்ப்பாளர்கள் பலவித உளவியல் மற்றும் சமூக கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், தன்பாலீர்ப்பானது சமூக ஒழுக்கம் சார்ந்ததாக கருதப்பட்டு, சமூக புறக்கணிப்பு, இழிவுப்படுத்துதல், கௌரவ கொலைகள் மற்றும் தற்கொலைகள் என தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான சமூக கொடுமைகள் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. எனவே, தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின, இடையிலிங்க, குயர் (LGBTQI) சமூகத்தினர் அவரவர் நாடுகளில் பலவேறு உரிமை போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் போராட்டங்களினால், தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் அடையாள அங்கீகாரமும் வரத்தொடங்கின.

கிட்டத்தட்ட, 100-இற்கும் மேலான நாடுகள் தன்பாலீர்ப்பாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து, வயதுவந்தவர்களின் ஒருமித்த குதவழி உடலுறவுக்கு எதிரான சட்டங்களை நீக்கியும், ஓர்பால் திருமணங்களை அங்கீகரித்தும், அந்த தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கவும் சட்டங்கள் கொண்டுவந்தன. வயதுவந்தவர்களின் ஒருமித்த குதவழி உடலுறவிற்கு 1791-இல் குற்றவிலக்களித்து, தன்பாலீர்ப்பை அங்கீகரித்த முதல் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் 1900-இற்கு முன்பே தன்பாலீர்ப்புக்கு குற்றவிலக்கு அளித்துவிட்டன. அறிவியல் ஆராய்ச்சிகளிலும் தன்பாலீர்ப்பு மனநோய் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. 1973-ஆம் ஆண்டு தன்பாலீர்ப்பானது ஒரு மனநோயோ அல்லது நோயோ இல்லையென்று அமெரிக்க உளவியல் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி, அதனை நோய்கள் பட்டியலிலிருந்தும் நீக்கியது.

ஆயினும், ஈரான், சூடான், சவுதி அரேபியா, ஏமன் ஆகிய நாடுகளில் முழுமையாகவும், சோமாலியா மற்றும் மேற்கு நைஜீரியாவின் சில பகுதிகளிலும் தன்பாலீர்ப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் அரசு சாரா குழுக்களால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா உள்ளிட்ட 90-இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுள் தண்டனை வரையிலுமான சிறைக்குற்றமாக இருந்தது.

இந்நிலையில் தான், 2001-ஆம் ஆண்டு நாஸ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதத்துடனான குதவழி உடலுறவை குற்றச்செயலாக்கும் இந்திய தண்டனைப் பிரிவு 377-ஆனது, இந்திய அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15, 19 மற்றும் 21 ஆகியவற்றில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதினால், அதன் செல்லுபடித்தன்மையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தொடுத்தது. மனுதாரருக்கு சாதகமான எந்த வழக்கு விளைவும் இல்லையென்றும், ஒரு சட்டத்தின் செல்லுபடித்தன்மையை ஆய்வுக்குட்படுத்த கோரும் மனுவை ஏற்க முடியாது என்றும் 2004-இல் தில்லி உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யுமளவில் வழக்கின் தன்மை இல்லையென்றும், இவ்வழக்கு பரிசீலனைக்குரியது என்றும் 2006-இல் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையிலேயே, நாஸ் அறக்கட்டளையின் வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தன்பாலீர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் சட்ட அங்கீகார கோரிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது இந்திய அரசியலமைப்பு என்றால், அது மிகையாகாது.

எழுதப்பட்ட அரசியலமைப்புகளில், உலகிலேயே மிகவும் நீளமானதாக கருதப்படும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளானது, இன்றைய சூழலுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் ஏற்படும் எவ்வித உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் வகையில் வரையப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 1) சட்டத்தின் முன் சமயுரிமை மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு [உறுப்பு 14], 2) மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டிற்கு தடை [உறுப்பு 15], 3) பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் [உறுப்பு 19], 4) வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர பாதுகாப்பு [உறுப்பு 21] ஆகியவை இந்திய அரசியலைப்பில் அடிப்படை உரிமைகளாக உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றில் எந்தவொரு உறுப்பிற்கு பொருள்விளக்கம் கொடுத்தாலும், இறுதியில் சமமான கண்ணிய வாழ்வுரிமையையே வந்தடையும். அத்தகைய வாழ்வுரிமையானது, தனி மனிதயுரிமை இன்றி அமையாது. இந்த உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் தான் தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வுரிமைக்கு குற்றப்பிரிவு 377-இலிருந்து விலக்களிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில், தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின, இடையிலிங்க, குயர் (LGBTQI) சமூகத்தினருக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திடம் தன்னார்வ அமைப்புகள் பலவும் முறையிட்டன. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையமும் தன்பாலீர்ப்பின் குற்றச்செயலாக்கலையும், தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளையும் ஆவணப்படுத்தியது. அந்த அறிக்கையின் விளைவாக, நவம்பர் 2006-இல், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் பாலியல் போக்கு மற்றும் பாலின அடையாளம் பற்றிய சர்வதேச நிபுணர் குழு கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. அதில், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை தன்பாலீர்ப்பு தொடர்புடையவைகளில் நடைமுறைப்படுவதற்கான வழிவகைகளை விவாதித்து, அதுதொடர்பான கொள்கைகளின் தொகுப்பொன்றும் நிறுவப்பட்டது. அவை, ‘யோக்யகர்த்தா கொள்கைகள்’ என்று பங்கேற்ற நாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் இந்தியாவும் பங்கேற்று, கையெழுத்திட்டது.

[குறிப்பு: இரண்டாம் உலகப் போரில், மனித உயிர்கள் மீதான மதிப்பில்லாது, பலரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து எட்டு கோடி, அதாவது 1940 உலக மக்கள்தொகையில் 3% என்று மதிப்பிடப்படுகிறது. மனிதர்கள் அடிமைகளாகவும், கண்ணியமற்ற முறையிலும் அடக்குமுறைக்கு ஆளானதையடுத்து, உலகநாடுகள் பலவும் ஒன்றிணைந்து மனித இனத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்கும்-வலியுறுத்தும் வகையில் “மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிவிப்பு” ஒன்றை ஒருமனதாக ஏற்று வெளியிட்டது. அதன் நடைமுறைப்படுத்துதலை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

“அனைத்து மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமமான கண்ணியத்துடனும், உரிமைகளுடனும் பிறக்கிறார்கள்” என்று அதன் முதல் உறுப்பு கூறுகிறது.]

அதுமட்டுமல்லாது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிவிப்பைத் தொடர்ந்து வந்த சமூகம் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை, யோக்யகர்த்தா கொள்கைகள் என எதனை எடுத்துக்கொண்டாலும் தனியுரிமையும், கண்ணியமுமே மனிதர்களின் முதல் அடிப்படை உரிமையாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தன்பாலீர்ப்பு தொடர்பான சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் போன்ற தன்பாலீர்ப்பு குறித்த சட்டவியல் வளர்ச்சியை பார்த்தாலும் கூட பாலுணர்வு மற்றும் பாலினம் குறித்த புரிதல் கால சூழலிற்கேற்ப விரிவடைந்தே வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே, தற்போதைய தனியுரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றவைகள் குறித்த விவாதங்களும், சட்ட மாற்றங்களும். இவற்றை கொண்டு காணும் பொழுது, தன்பாலீர்ப்பாளர்களை அவர்களின் பாலியல் போக்கிற்காக இழிவுப்படுத்துவதும், ஒரு சட்டப்பிரிவின் கீழ் துன்புறுத்துவதும் ஏற்புடையதன்று.

இதன் காரணமாகவே, ஒருவரின் பாலியல் தேர்வு அத்தனிநபரின் உரிமை என்றும், அதனை தடுப்பதோ அல்லது அதனடிப்படையில் ஒருவரின் கண்ணியத்திற்கு இடையூறு விளைவிப்பதோ, இந்திய அரசியலைப்பு உறுதிப்படுத்தியிருக்கும் அந்நபரின் அடிப்படை வாழ்வுரிமையையே பாதிக்கிறது என்று கருதி, ஒருமித்த சம்மதத்துடன் குதவழி உடலுறவில் ஈடுபடும் தன்பாலீர்ப்பாளர்களின் பாகுபாடற்ற கண்ணிய வாழ்க்கைக்கு குற்றப்பிரிவு 377 எதிராக இருக்கிறது என்று 2009-ஆம் ஆண்டு அப்போதைய தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி டாக்டர் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் படி, 18 வயதடைந்து ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் செயல்கள் மற்றும் குதவழி உடலுறவில் ஈடுபடுபவர்கள் குற்றவிலக்கு பெறுவர். சம்மதமில்லாத குதவழி உடலுறவோ, 18 வயதடையாத சிறார்களுடனான புணர்வழியல்லாத குதவழி உடலுறவோ பிரிவு 377-இன்படி குற்றமாகவே தொடரும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து பல தனிநபர்களும், மத மற்றும் கலாச்சார அமைப்புகளும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்க்வி மற்றும் சுதன்சு ஜோதி முகோபதாயா அடங்கிய அமர்வு, கீழ்வரும் காரணங்களுக்காக தில்லி உயர் நீதிமன்றத்தின் தன்பாலீர்ப்பாளர்களை குற்றப்பிரிவு 377-இலிருந்து விலக்களித்த தீர்ப்பை தள்ளுபடி செய்தது:

1) 1950-ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் ஏற்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 30 திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டின் திருத்தமானது பிரிவு 377 இடம்பெற்ற பாலியல் குற்றங்களை கையாள்கிறது. 172-ஆவது சட்ட ஆணைய அறிக்கையும் அப்பிரிவை நீக்க குறிப்பாக பரிந்துரைத்தது. இருப்பினும், பாராளுமன்றம் அதனை திருத்தவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ இல்லை. இந்திய மக்களின் பிரதிநிதிகளாலான மக்களவை இதனை நீக்காமல் இருப்பதே சரி என்று எண்ணியிருப்பது இதிலிருந்து விளங்குகிறது. தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என இந்திய கூட்டமைப்பு முடிவு செய்தபோதிலும், பாராளுமன்றம் எவ்வித சட்டத்திருத்தமும் செய்யாததிலிருந்து, இது மேலும் உறுதியாகிறது. இது அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மையிலிருந்து விலக்களிக்காத போதிலும், அதன் தன்மை, நோக்கம், வரம்பு ஆகியவைகளை புரிந்துக்கொள்ள வழிகாட்டுகிறது.

2) இப்பிரிவின் கீழ் வரும் செயல்களின் பட்டியலை உருவாக்குவது மிகவும் கடினம். இப்பிரிவின் மேலோட்டமான பொருள் மற்றும் சட்டமாக்கலின் வரலாற்றின் ஒளியில் காணும் பொழுது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377, வயது மற்றும் ஒப்புதல் வரையறையின்றி பொருந்தும். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377, ஒரு குறிப்பிட்ட மக்களையோ அல்லது அடையாளத்தையோ அல்லது போக்கையோ குற்றமாக்கவில்லை. மாறாக, குற்றமாகும் சில செயல்களையே அடையாளப்படுத்துகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தகைய தடையானது, பாலின அடையாளம் மற்றும் போக்கை கடந்து பாலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகிறது.

3) பாலியல் சிறுபான்மையினருக்கெதிரான அரசு நிறுவனங்களின் பாகுபாட்டையோ, அதன் விளைவாக ஏற்பட்ட அடிப்படை மனிதயுரிமை மறுப்பையோ காட்டும் சம்பவங்களின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரரான நாஸ் அறக்கட்டளை தவறிவிட்டது. அதோடு, பாலியல் சிறுபான்மையினருக்கெதிராக பொது மக்களோ அல்லது அதிகாரிகளோ செய்த துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் குறித்த வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்கவும் தவறிவிட்டது.

4) உறுப்பு 14-இன் படி, சமமான நிலையிலிருந்து வருபவர்கள் மட்டுமே, சமமான நடைமுறை உரிமைகளின் கீழ் நிவாரணமும், பாகுபாடற்ற சமமான பாதுகாப்பும் கோர முடியும். இயல்பாக புணர்வழி உடலுறவில் ஈடுப்படுபவர்களும், இயற்கைக்கு எதிராக குதவழி உடலுறவில் ஈடுபவர்களும் வெவ்வேறு வகையினர் ஆவர். எனவே, பிரிவு 377 தன்னிச்சையானதென்றோ, அறிவுக்கு பொருந்தாத வகையில் பிரிக்கிறதென்றோ இரண்டாம் வகையினர் கோர முடியாது. பிரிவு 377-ஆனது வெறுமனே ஒரு குற்றத்தை வரையறுத்து, அதற்கான தண்டனையை குறிப்பிடுகிறது.

5) இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-இன் கூறுகளை படிக்கும் போது, நாட்டின் மக்கட்தொகையில் மிகவும் சிறிய அளவே தன்பாலீர்ப்பாளர்கள், ஈர்ப்பாலுணர்வாளர்கள் அல்லது மாற்றுப்பாலினத்தவர்கள் உள்ளனர் என்பதையும், வெளியிடப்பட்ட ஆணைகளின் படி கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக 200-இற்கும் குறைவான நபர்களே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-இன் கீழான குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தில்லி உயர் நீதிமன்ற அமர்வு காணத்தவறிவிட்டது. ஆக, அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15 மற்றும் 21 ஆகியவற்றிற்கு முரணானதாக அறிவிக்க இது உறுதியான அடிப்படையாகாது.

6) காவல்துறை அதிகாரிகளும், மற்றவர்களும் இப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது இப்பிரிவின் தன்னிச்சைத்தன்மையை காட்டவில்லை. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ திருத்துவதை முடிவெடுக்க, சட்டமன்றத்திற்கு வேண்டுமானால் இது தொடர்புடைய காரணியாக இருக்கலாம்.

7) தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின நபர்களின் உரிமைகள் என்று சொல்லப்படுபவைகளை பாதுகாக்கும் ஆதங்கத்தில், தனியுரிமை, சுய அதிகாரம், கண்ணியம் ஆகிய உரிமைகளை இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 மீறுவதாக வெளி அதிகார வரம்புகளின் தீர்ப்புகளை பெருமளவு சார்ந்திருக்கிறது உயர் நீதிமன்றம். இந்த உரிமையின் பல்வேறு அம்சங்கள்மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையிலும், பாலியல் சிறுபான்மையினரின் அவல நிலையை தெரிவிக்கும் வகையிலும் இந்த தீர்ப்புகள் இருந்தாலும், அவற்றை இந்திய சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் செல்லுபடித்தன்மையை முடிவு செய்ய அப்படியே கண்ணைக் கட்டிக்கொண்டு பயன்படுத்த முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளை அலட்சியப்படுத்துவதாகவும், அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஓர்பாலீர்ப்பு வெறுப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இருப்பினும், தன்பாலீர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தீர்ப்பின் விளைவுத்தன்மையை கருதி, ‘பாலியல் உரிமை’, ‘பாலியல் சுய அதிகாரம்’, மற்றும் ‘பாலியல் இணையரை தேர்வு செய்யும் உரிமை’ ஆகியவைகளை அரசியலமைப்பின் உறுப்பு 21-இல் உறுதிசெய்யப்பட்டுள்ள வாழ்வுரிமையின் பகுதியாக அறிவிக்கவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானதாக அறிவிக்கவும் உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுதாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பின்வரும் காரணங்களுக்காக வழக்கை ஏற்றுக்கொண்டது:

“இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘இயற்கைக்கு மாறான உடலுறவு’ என்ற சொல்லாடல் கவனிக்கப்பட வேண்டியது. இயற்கையின் ஆணையை உறுதிப்படுத்துவதென்பது நிலையான நிகழ்வன்று. சமூக அறநெறியும் கூட காலத்திற்கேற்ப மாறும். சட்டமும் வாழ்க்கைக்கேற்ப தகவமைத்துக்கொள்கிறது. அதற்கிணங்க மாற்றமும் இடம்பெறுகிறது. சமூகம் அறநெறியாக கருதுவதை, அரசியலமைப்பு கொண்டிருக்க வேண்டியதில்லை. தனிநபர் சுய அதிகாரமும், தனிநபர் பாலியல் போக்கும், அரசியலமைப்பின் அறநெறிக்கு அவசியமானதாக இல்லாதவரைக்கும், அதன் மீதான கட்டுப்பாடு தேவையற்றது. ஒருவருக்கு இயற்கையாக தோன்றுவது, மற்றொருவருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த இயற்கையான பாலியல் போக்கும், விருப்பமும் சட்டத்தை மீறாமலும், அச்சட்டம் அரசியலமைப்பின் உறுப்பு 21-இன் கீழான ஒரு தனிநபரின் உரிமையை கட்டுப்படுத்தாமலோ, சிதைக்காமலோ இருக்க வேண்டும். தங்களின் விருப்பத்தை செயல்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களோ அல்லது தனிநபர்களோ பயத்தின் பிடியில் இருக்க கூடாது. இதனை நாங்கள் கூறும் பொழுது, சட்டத்திற்கு யாரும் பயப்படக் கூடாது என்பதாக புரிந்துக்கொள்ள கூடாது. ஏனெனில், சட்டத்தின் மீதான பயமே நாகரிக சமூகத்தை கட்டமைக்கிறது. ஆனால், அந்த சட்டம் அரசியலமைப்பு அளவுருக்களில் ஏற்புடையதாக இருக்க வேண்டும். அதுவே லிட்மஸ் சோதனை ஆகும்.

பிரிவு 377-இல் ஒருமித்த சம்மதத்துடன் குதவழி உடலுறவில் ஈடுபடும் வயதுவந்தவர்களின் செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிக்கு எதிராக மட்டுமே முறையீடு செய்வதாக மனுதாரரின் வழக்கறிஞர் நேர்மையாக கூறினார். இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றத்தின் இருவர் அமர்வு வழங்கிய தீர்ப்பின் மறுபரிசீலனை தேவைப்படுகிறது.”

இவ்வழக்கின் தன்மையும், இதில் எழுப்பப்பட்ட சிக்கல்களையும் கருதி, இவ்வழக்கை பெரும்பான்மை அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து மூவர் அமர்வு கருத்து தெரிவித்தது. அதன்படி, இந்திய தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா அவர்களை உள்ளடிக்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, தனியுரிமை தொடர்பான வழக்கில் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி திரு. ஜெகதீஷ் சிங் கெஹார் அவர்களை உள்ளடக்கிய ஒம்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் படி,

“தனியுரிமையானது அரசியலமைப்பின் உறுப்பு 21-இன் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகவும், அரசியலமைப்பின் பகுதி III-ஆல் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரங்களின் பகுதியாகவும் பாதுகாக்கப்படுகிறது.”

இந்த தீர்ப்பில் பல சாராம்சங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், தன்பாலீர்ப்பு, பாலியல் நோக்கு குறித்த விவாதங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

“தன்பாலீர்ப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற இருவர் அமர்வின் தீர்ப்பில் அரசியலமைப்பின் உறுப்பு 21-இன் தனியுரிமை அடிப்படையிலான கோரிக்கையை நிராகரித்த காரணங்கள் அரசியலமைப்பின் அடிப்படையில் ஏற்புடையவை அல்ல. தன்பாலீர்ப்பு, ஈர்ப்பாலுணர்வு அல்லது மாற்றுப்பாலின நபர்கள் மக்கட்தொகையின் எண்ணிக்கையில் மிகச்சிறிய அளவு இருக்கிறார்கள் என்பது அவர்களின் தனியுரிமையை மறுக்க ஒரு நிலையான ஆதாரம் அல்ல.

அரசியலமைப்பு பாதுகாப்பின் புனிதத்தன்மையைக் கொண்ட உரிமைகளை புறக்கணிப்பதற்கான சரியான ஆதாரத்தை, பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் சோதனை வழங்குவதில்லை. பாலியல் சிறுபான்மையினரின் கருத்துக்கள், நம்பிக்கைகள் அல்லது வாழ்க்கைமுறை ‘மையநீரோட்டத்துடன்’ ஒத்துப் போகவில்லை என்ற எளிய காரணத்திற்காக பாகுபாட்டின் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். ஆயினும், சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு ஜனநாயக அரசியலமைப்பில், பிற குடிமக்களுக்கு வழங்கப்படும் சுதந்திரங்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமைகளின் பாதுகாப்பு எவ்வளவு புனிதமானதோ, அது போலானதே அவர்களின் உரிமைகளும். பாலியல் போக்கு என்பது தனியுரிமையின் ஒரு முக்கிய பண்பு ஆகும். பாலியல் போக்கின் அடிப்படையிலான பாகுபாடு என்பது ஒரு தனிநபரின் கண்ணியம் மற்றும் சுய மதிப்புக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சமுதாயத்தில் ஒவ்வொரு நபரின் பாலியல் போக்கும் சமமான தளத்தில்பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமத்துவம் கோருகிறது. தனியுரிமையும், பாலியல் போக்கின் பாதுகாப்பும் அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15 மற்றும் 21 ஆகியவைகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் மையமாக அமைந்துள்ளது.

[…] அவர்களின் உரிமைகள் சொல்லப்படுபவைகள் அல்ல. ஆனால் அரசியலமைப்பு கோட்பாட்டில் நிறுவப்பட்டுள்ள உண்மையான உரிமைகள். வாழ்வுரிமையில் உள்ளார்ந்து இருப்பவை. தனியுரிமை மற்றும் கண்ணியத்தில் வசிப்பவை. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தின் சாரமாக அமைபவை. பாலியல் போக்கு என்பது அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு நபரின் அடையாளத்தையும் பாதுகாப்பதையே சமமான பாதுகாப்பு கோருகிறது.”

பிரிவு 377-இற்கு எதிரான விசாரணை ஏற்கனவே இந்நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வின் முன் நிலுவையில் உள்ளதால், அதன் அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மையை முறையான நடைமுறையில் முடிவு செய்ய விட்டுவிடுகிறோம் என்று கூறினாலும், பிரிவு 377-இற்கு எதிரான வழக்கின் முடிவை இந்த தீர்ப்பு பூடகமாக வழிநடத்துவதாகவும், வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. ஐவர் அமர்வின் விசாரணையில் இருந்த வழக்கின் தன்மை குறித்து, அதனை விடவும் அதிகாரம் வாய்ந்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்திருந்ததும் கூட, பிரிவு 377-இற்கு எதிரான வழக்கில் இத்தீர்ப்பு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக இருந்தது.

பிரிவு 377-இன் செல்லுபடித்தன்மையை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே எடுத்துக்காட்டிவிட்ட நிலையில், அதனை உரிய நடைமுறையில் தனியொரு தீர்ப்பாக வருவது மட்டுமே எஞ்சியிருந்தது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றமாக்கப்பட்டு வந்த ஒரு சிறும்பான்மை சமூகத்தின் பாலியல் அடையாள உரிமைகள், சமகால மனித உரிமை வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் சமத்துவத்தன்மையையே முடிவு செய்யும் வழக்காக இது அமைந்ததால், தீர்ப்பின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

உலகத்தின் எதிர்பார்ப்பின்படியே, தனியுரிமை உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகள், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், உடன்படிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கள், அத்தீர்ப்புகளுக்கு அடிநாதமாகவும், அச்சர்வதேச மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகவும் அமைந்த சமத்துவ-பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15, 19 மற்றும் 21 ஆகியவற்றின்படி தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமை கீழ்வரும் அவதானிப்புகளோடு இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது:

1) வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதத்துடனான உடலுறவை, குதவழி உடலுறவு குற்றமாகவோ, விருப்பமற்ற உடலுறவாகவோ கருத முடியாது. பாலியல் போக்கென்பது ஒருவரின் அடையாளத்தின் உள்ளார்ந்த அம்சமாக விளங்குவதால், மாற்ற முடியாதது. தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வானது அவர்களின் தனிப்பட்ட தேர்வுரிமையை செயல்படுத்தும், சுய அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயலாகும். எனவே, தன்பாலீர்ப்பாளர்களின் ஒருமித்த சம்மதத்துடனான உடலுறவை குற்றச்செயலாக்கும் பிரிவு 377, அவர்களின் பாலின போக்கின் அடிப்படையில் அவர்களை பாரபட்சமாக நடத்துகிறது. எனவே, அது அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 19 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறது.

2) அடிப்படை உரிமைகளானது, அவர்கள் சிறுப்பின்மையினரா இல்லையா என்ற வேறுபாடுகள் இன்றி சமமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. நவீன ஜனநாயகங்கள், பெரும்பான்மையின் விதி மற்றும் அரசியலமைப்பின் பகுதி III-இல் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு என்ற இரட்டைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அரசியலமைப்பின் திட்டத்தின்படி, பெரும்பான்மை ஆட்சி செய்யும் பொழுது, இன்னபிற எல்லா குடிமக்களை போல சிறுபான்மையினரும் பகுதி III-இன் கீழ் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளாலும், சுதந்திரங்களாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

3) பிரிவு 377-இன் பொருள் விளக்கத்தை கொண்டு பார்த்தால் ஒட்டுமொத்த தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின (LGBT) சமூகத்தினரின் பாலியல் செயல்களும் ‘இயற்கைக்கு எதிரான’ குற்றமாக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது.

4) பிரிவு 377-இன் அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மைக்காக அதன் கூறுகளை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது, வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதத்துடனான பாலியல் செயல்களுக்கு பிரிவு 377-இலிருந்து குற்றவிலக்கு அளிப்பது அவசியமாகிறது.

5) நூற்றாண்டுகளாய் அல்லல்பட்டுவரும் இச்சமூகத்தினரிடமும், அவர்களின் குடும்பத்திடமும் வரலாறு மன்னிப்பு கோர வேண்டியிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஒடுக்குமுறை மற்றும் தண்டனை ஆகியவைகளின் பயத்துடனே வாழ தள்ளப்பட்டிருக்கிறார்கள். மனித பாலியல் போக்கில், தன்பாலீர்ப்பும் ஒரு இயல்பான தன்மை என்பதை அங்கீகரிக்க பொதுசமூகம் தவறியிருக்கிறது. இப்பிரிவின் தவறான செயல்படுத்துதல் உறுப்பு 14-இல் உறுதிசெய்யப்பட்டுள்ள அவர்களின் அடிப்படை சமத்துவ உரிமையை மறுத்திருக்கிறது. உறுப்புகள் 15 மற்றும் 21-இல் உறுதிசெய்யப்பட்டுள்ள பாகுபாட்டின்மை மற்றும் கண்ணியம், தனியுரிமையுடனான அடிப்படை வாழ்வுரிமையை மீறியிருக்கிறது. எனவே, குற்றமற்றவர்கள் என்ற ஒரு வாழ்க்கையை வாழ தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின (LGBT) சமூகத்தினர் தகுதியுடவையவர்கள்.

தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமைகளை அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் கூட, இது ‘ஒரு படி’ முன்னேற்றம்தான். சமூக மெய்மை என்பது இன்னும் பலமைல் தூரத்தில் இருக்கிறது. தன்பாலீர்ப்பின் அங்கீகாரத்தை தொடர்ந்து, ஓர்பால் திருமண உரிமை, ஓர்பால் தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமை என அவர்களின் போராட்டம் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. மனிதனை மனிதனே ஒடுக்குவதை காட்டிலும், இயற்கைக்கு எதிரானது எதுவுமில்லை என்பதை உணர்வோமாக!

மே 2006-ஆம் ஆண்டு கணக்கின்படி, 92 நாடுகளில் தன்பாலீர்ப்பு குற்றமாக இருந்தது. இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, செப்டம்பர் 2018-இன் கணக்குப்படி, இது 73-ஆக குறைந்திருக்கிறது. மனிதமும், மனித இனத்தின் பன்முகத்தன்மையும் விளங்கிக்கொள்ளும் போது சமூக அறநெறி, கலாசாரம் என்ற பெயரில் சக மனிதர்களை ஒடுக்கும், பாகுபாட்டோடு நடத்தும் தன்மை குறைந்து, சமத்துவம் தழைக்கும். ஆனால், அப்புரிதல் ஏற்பட நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சட்டவியல் அதனை நிகழ்த்திக்கொண்டுதான் கொண்டுதான் இருக்கும்.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்; செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.