அருண் நெடுஞ்செழியன்

#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு(மோடியை கொல்வதற்கான சதிவலை புனைவு, அதைதொடர்ந்த கைதுகள்!) எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது? ஏன் கவலை கொள்ள வைக்கிறது? ஏன் காவி நக்சல்கள் என்ற புதுக் கருத்துருவாக்கத்தை உருவாக்க வைக்கிறது?
விஷயம் இதுதான்.
தத்துவத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி,நடைமுறையில் ஆளும்வர்க்க நிறுவனங்களின் பகுதி;மூலதனத்திற்கும் கூலி உயர்வுக்குமான போராட்டத்தை பொருளாதார கூலிப் பிரச்சனை என்ற வரம்பிற்குட்படுத்துகிற தொழிற்சங்க சீர்திருதல்வாதம்;முதலாளித்துவ நாடாளுமன்ற புனிதத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கரைத்து மற்றொரு லிபரல் முதலாளித்துவ கட்சியாக,ஒப்பீட்டளவில் காங்கிரஸ்,பாஜக கட்சிக்கு சற்று மேம்பட்ட லிபரல் கட்சியாக தனது தத்துவ நடைமுறை செயல்பாடுகளை மேற்கொண்டுவருகிற சி பி எம் கட்சியின் ஊழியரான தோழர் அருணனிடன் “காவி நக்சல்”தான் எதிர்பார்க்க முடியுமே தவிர புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நடைமுறை அறைகூவல் அல்ல.
புரட்சியை நீண்டு செல்கிற சமூக சீர்திருத்தமாக வறித்துக்கொண்டு,அரை தசாப்த காலமாக கான்க்ரீட் கன்டீசன் காலத்திற்காக,நாடாளுமன்ற மைய அவையில் கட்சித் திட்டத்தை புதைத்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிற கடைந்தெடுத்த கம்யூனிச திரிபுவாத கட்சியின் ஊழியர்,சிந்தனையாளரிடம் “காவி நக்சல்”தான் எதிர்பார்க்க முடியுமே தவிர பாசிசத்திற்கு எதிராக டிமித்ரோவின் ஐக்கிய முன்னணிக்கான அறைக்கூவல் அல்ல!
ஆர் எஸ் எஸ் பாஜக அழுத்தத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பையடுத்து பரபரப்படைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தூணான நீதிமன்றத்தை காக்க வேண்டுமென்ற தோழர் பிரகாஷ் காரத்,சீதாரம் எச்சூரி கவலைகளோடு, அவர்களுக்கு தற்போது metoourban என்ற கவலையும் சேர்ந்துகொண்டது.
.இவர்களது கவலைகளுக்கு நாம் காது கொடுக்கும் முன்னர் இவர்களது கவலைகள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். அப்படியானால் இவர்களது கவலைகள்தான் என்ன? இவர்கள் புரட்சி வந்து விடுமோ என கவலைப் படுகிறார்கள்!நாடாளுமன்ற புனிதம் வீழ்த்தப்பட்டு விடுமோ என கவலை கொள்கிறார்கள்.ஆளும்வர்க்கத்தின் சட்டபூர்வ வன்முறையை சமாதானமாத்தால் வெல்லவேண்டுமெனவும் வங்கத்தையும் கேரளத்தையும் கைகாட்டுகிறார்கள். இவர்களது கவலைகளுக்கு தத்துவ விளக்கமளிக்கிறார்கள்.
சந்தர்ப்பவாத சீர்திருத்தல்வாத பாதைக்கு எதிரான மார்க்சின் கோதாவின் வேலைத் திட்டத்தையும்,ரோசா லக்சம்பர்க்கின் புரட்சியா? சீர்திருத்தமா? கட்டுரையை இவர்களது கட்சியின் பப்ளிகேஷன் வெளியிடுகிறது.இதைப் படிக்கிற கம்யூனிஸ்ட்கள், சீர்திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய பதிப்பை எளிதில் ஒரே மூச்சில் கண்டுகொள்ள அப்பாவித்தனமாக அவர்களே பிரச்சாரம் செய்கிறார்கள்!
மக்கள் விடுதலைக்கான புரட்சிகர போராட்ட வரலாற்றில் திரிபுவாத நிலையெடுத்து ஆளும்வர்க்கதின் பகுதியாக புரட்சிக்கு எதிரான எதிர்புரட்சிகர சக்தியாக பரிணமித்த கட்சிகளில் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சிக்கும் சோவியத்தின் மென்ஷவிக் கட்சிக்கும் “சிறப்பிடமுண்டு”.
வரலாற்றில் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின், மென்ஷ்விக்குகளின் சிறப்பிடத்திற்கு இந்தியாவின் சி பி எம் தற்போது கடும் சவால் விட்டு வருகிறது.
வங்கத்தில் ரெட் பிஜேபி என்ற பட்டம் பெற்றுள்ளார்கள். மாநில அதிகாரத்திற்கு வந்த காலங்களின் மக்கள் திரள் போராட்டங்களை போராளிகளை ஒடுக்கியது.தனது சந்தர்ப்பாவாத நடைமுறைகளை அம்பலப்படுத்தியவர்களை அதி தீவிர இடதுசாரியம் என முத்திரை குத்தி தனக்கு சந்தர்ப்பவாதத்திற்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இது எந்த எல்லைக்கு செல்கிறதென்றால் மார்க்சியத்தை கொச்சைப் படுத்தி எழுந்ததே நக்சலிசம் என்கிற எல்லைக்கு!
அதாவது மார்க்சின் வரலாற்று இயக்கவியல் பொருள்முதல் வாத தத்துவத்திற்கு(மார்க்சியம்) எதிராக நக்சல்பாரி பாரி என்ற குக்கிராமத்தில் எழுந்த ஆயுத எழுச்சியையும் அதன் தொடர்ச்சியையும் நிறுத்துகிற எல்லைக்கு செல்கிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு சமமாக மாவோவிய அமைப்புகளை முன்வைக்கிற எல்லைக்கு!.ஆர் எஸ் எஸ் சதிக்குள் விழுவதாக கூறிகிற தோழர் அருணன் அப்பாவத்தினமாக தனது ஆளும்வர்க்க சார்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர்களது சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்கு சரியான சொல் “மார்க்சிஸ்டு”அல்ல “முதலாளித்துவ சமூக ஜனநாயக சீர்திருத்தல்வாதி”!
முதலாளித்துவம் என்ற கசப்பான கடலில் சமூக சீர்திருத்தல்வாத எலுமிச்சை பழத்தை பிழிந்து சக்கரையும் கொட்டி,ஒரு இனிப்பான சோஷலிச கடலை உருவாக்க முனைகிற(ரோசாவின் கட்டுரை மொழியாக்கத்திலிருந்து!) சிபிஎம் கட்சியின் சிந்தனையாளருக்கு metoourban என்ற சொல் அமிலமாக எறிவதில் வியப்பில்லை.
வீரத் தெலுங்கான ஆயுதப் போராட்டதில் களமாடிய தோழர் சுந்தரையாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.
அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.