கனடாவின் மான்ட்ரியல் பல்கலை கழகத்தின் ஆய்வு மாணவி சோபியா, தூத்துக்குடி செல்லும் விமானத்திலும் தூத்துக்குடி விமான நிலையத்திலும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனைப் பார்த்து “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டார். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கமும் அதன் கையில் பொம்மையாக உள்ள தற்போதைய தமிழக அரசாங்கமும் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்றன. தனது கட்சியை பாசிச கட்சி என்ற சோபியா சொன்னதற்காக பாஜக தலைவர் கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். (பிறகு பிணையில் விடுவிக்கப் பட்டார். )அந்த முழக்கம் தன்னை பாதுகாப்பின்மையில் தள்ளியது என்று தமிழிசை சொல்கிறார். இந்த நிகழ்வு இன்றைய இந்தியாவையே குறிப்பாகச் சொல்கிறது: காவல்துறை படுகொலை செய்வதும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் ஆலையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லப்படாதபோது, பாசிஸ்டுகளால் நடத்தப்படும் ஓர் அரசாங்கத்துக்கு எதிராக முழக்கம் எழுப்புவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லப்படுகிறது.
சோபியா கைது தனிப்பட்ட ஒரு நிகழ்வல்ல ! புனே அரசு வழக்கறிஞர் உஜ்வாலா பவார் நீதிமன்றத்தில் பின்வருமாறு வாதாடினார்: மனித உரிமை வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் அய்ந்து பேரை ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது நியாயமானதே. ஏனென்றால் அவர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக உருவாகும் பாசிச எதிர்ப்பு முன்னணியில் ஒரு பகுதியினரே. குற்றச்சாட்டு தெளிவானதாக இருக்கிறது. மோடி அரசாங்கம் உண்மையில் பாசிஸ்டுதான் என்று அரசு வழக்கறிஞர் ஒப்புக்கொள்கிறார். ஏனென்றால் அவர் பாசிச எதிர்ப்பை அரசுக்கு எதிரான சதியுடன் சமனப்படுத்துகிறார். பாசிசத்தை ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசாங்கம்தான் பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளை குற்றங்களாகக் கருதி அவற்றை தீவிரவாதம் என்று சொல்லும்.
மோதிஹரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலை கழகத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார், வாஜ்பாய் மரணம் பாசிச யுகத்தின் முடிவு என்ற ஒரு பதிவு பற்றிய தனது கருத்தை பதிவு செய்ததற்காக படுகொலை கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். இங்கும் பாஜக தலைவர் ஒருவரை பாசிஸ்ட் என்று சொன்னதால் ஒரு பாசிச கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜகவின் பாசிச இயல்பை இதை விட வேறு எப்படி உறுதி செய்ய முடியும்?
2018 செப்டம்பர் 5ல் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிகிறது. அவரைக் கொன்றவர்கள், சங்பரிவாரின் பாசிச அரசியலுக்கு எதிராகப் பேசுபவர்களை இந்து விரோதிகள் என முத்திரை குத்தி அவர்களை படுகொலை செய்ய படுகொலை செய்பவர்களையும் தீவிரவாதிகளையும் ஊக்குவித்து பயிற்சி தரும் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாசிசத்துக்கு எதிராகப் பேசுவது, அகிம்சை வழியில் அமைப்பாக்குவது கூட மோடி அரசாங்கத்தால் தீவிரவாதம் என்று அழைக்கப்படுகிறது; இதே அரசாங்கம் சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்று சொல்ல மறுக்கிறது.
சனாதன் சன்ஸ்தா படுகொலைகள் செய்கிறது; ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்து இந்து ராஜ்ஜியம் உருவாக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்து பயங்கரவாதத்தை பரப்புகிறது. தனது அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்து இந்து ராஜ்ஜியம் உருவாக்க முனைகிறது என்று சனாதன் சன்ஸ்தா பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சியில் பகிரங்கமாக அறிவித்தார். இருப்பினும் அதுபோன்ற ஓர் அமைப்பு தடை செய்யப்படவில்லை. மாறாக, இன்று பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி, ஜுன் 2013ல் கோவாவில் சனாதன் சன்ஸ்தா நடத்திய இந்து மாநாட்டுக்கு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அனுப்பிய கடிதத்தில் சனாதன் சன்ஸ்தாவும் அது போன்ற அமைப்புகளும் தேசியவாத அமைப்புகள் என்று குறிப்பிட்டுள்ளார். சங் பரிவார் கனவு காண்கிற பாசிச இந்து தேசத்தைதான் சனாதன் சன்ஸ்தாபோல், மோடியும் அங்கீகரிக்கிறார், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான தற்போதைய இந்திய தேசத்தை அல்ல என்பது இதில் இருந்து தெரிகிறது. இதனால்தான் அரசாங்கம் சனாதன் சன்ஸ்தாவின் தீவிரவாத வலைப்பின்னலுக்கு எதிராக பேச, நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை போலும்.
ஆர்எஸ்எஸ்சின் அரசியல் அணிதான் பாஜக. பாசிச ஜெர்மனி மற்றும் இத்தாலி மாதிரிகளின் அடிப்படையில்தான் இந்து தேசம் பற்றிய தங்கள் கருத்தை 1930, 1940களில் ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் உருவாக்கினார்கள். உதாரணமாக ஆர்எஸ்எஸ்சின் நிறுவனர்களில் ஒருவரான கோல்வால்கர், நம்மை நமது தேசியத்தை வரையறுப்பது என்ற தனது நூலில், யூதர்கள் கொல்லப்பட்டதற்காக நாஜிக்களை பாராட்டுகிறார்; அதை ஜெர்மானிய இனத்தின் பெருமை என்கிறார்; இந்துஸ்தானில் இருக்கும் நாம் அதில் இருந்து பாடம் கற்று பயன் பெற வேண்டும் என்கிறார். இந்து தேசியவாதத்தின் கருத்தியலாளரான வி.டி.சாவர்க்கர், 1940ல் இந்து மகாசபையின் 22ஆவது அமர்வில் ஆற்றிய தலைமை உரையில், ஜெர்மனியையும் இத்தாலியையும் மாற்றியமைத்த நாஜி அல்லது பாசிச மந்திரக் கோல் தாக்கம் பற்றி சிலாகிக்கிறார். சங்பரிவார் மற்றும் பாஜகவைப் பொறுத்தவரை அப்படி சிலாகிப்பது பழைய விசயம் மட்டுமல்ல. 2004ல் மோடி ஆட்சி செய்த குஜராத்தில் பாடப்புத்தகங்களில், ஜெர்மனி அரசாங்கத்துக்கு ஹிட்லரால் கவுரவம் ஏற்பட்டது என்றும் ஜெர்மனியை தற்சார்புடையதாக ஆக்க விடாமுயற்சி எடுத்தார் என்றும் சாமான்ய மக்களுக்கு சாகச உணர்வை ஊட்டினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவை தற்சார்புடையதாக ஆக்குவது, இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் மந்திரக்கோலாக இருப்பது போன்ற மோடி அரசாங்கத்தின் பேச்சுகள் பொய்யாகிவிட்டன. கருப்புப் பணத்தை ஒழிப்பது என்று சொல்லப்பட்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பகற்றம் மிகப்பெரிய பொய் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பகற்றப்பட்ட பணத்தில் 93% வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கம் இப்போது மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது; மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது; வாராக்கடன்கள் அதிகரிக்கின்றன; விவசாய நெருக்கடி முற்றுகிறது; விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கும்பல் படுகொலைகள், உரிமை போராளிகளும் எழுத்தாளர்களும் படுகொலை செய்யப்படுவது ஆகியவற்றைத்தான் மோடி அரசாங்கம் தனது சாதனைகளாகக் காட்ட முடியும்.
இந்த நேரத்தில் தமிழக மாணவி எழுப்பிய முழக்கம் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்; ஜனநாயகம் பற்றி கவலைப்படும் இந்தியர் ஒவ்வொருவர் உதடுகளும் ஒலிக்க வேண்டும்.
#பாசிசபாஜகஆட்சி_ஒழிக!
- இ.க.க (மாலெ) விடுதலை CPIML_Liberation அறிக்கை
திடுமென வெளிப்பட்ட தீப்பொறி
சோபியா!
உன் முழக்கம்
இருள் கவிந்த வெளியில்
திடுமென பளிச்சென்று
வெளிப்பட்ட தீப்பொறி
ஒரு எரிமலை
கொதித்து வெளி கிளம்ப போவதன்
அறிகுறி
உன் முழக்கம்
வெறும் வார்த்தைகளின் குவியல்
அல்ல
ஆதிக்கத்தின் கரங்கள்
அன்று
தூத்துக்குடியில் தூக்கி பிடித்த
துப்பாக்கி சனியன்களில் இருந்து
வெளிப்பட்ட ரவைகளுக்கு
எதிராக இப்பொழுது
விர்ரென்று சீறிய
நியூட்டனின் மூன்றாம் விதி
மாட்டு கறியை முன்னிறுத்தி
மனிதக்கறி கேட்டு
பல்லிளித்த பாசிசங்கள்
ஒற்றை பண மதிப்பு இழப்பு உத்தரவால்
ஓட்டு மொத்த தேசத்தையே
தெருவில் இழுத்துவிட்ட கொடூரங்கள்
தலித்துகளும் முஸ்லீம்களும்
இந்த மண்ணில் தொடரந்து
மதவெறிக்கு பலியிடப்படும் கொடுங்கோன்மை கள்
இவற்றையெல்லாம் இவற்றையெல்லாம்
நீதிதேவதை கண்டிருந்தால்
நீதிதேவதை என் றொருத்தி உண்மையென்றால்
அவள் கண்களில் இருந்து
ஒரு ஜீவநதியே புறப்பட்டு இருக்கும்
இமயத்தையே சிறு கல்லென புரட்டி போட்டு இருக்கும்
எனில்
உன்னில் இருந்து
உயிர் பெற்ற சொற்கள்
சட்டத்திற்கு புறம்பாவது எப்படி?
தர்மத்திற்கு தீங்காவது எங்கனம் ?
LikeLike