ஆதிவாசிகளுக்காகவும்,தலீத்துகளுக்காகவும்,சமூகத்தின் மற்ற நலிந்த பிரிவினருக்காகவும் போராடிவரும் சுதா பரத்வாஜ்,வெர்னான் கொன்சால்வஸ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா ஆகிய அறிவுஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வீடுகளில் நாடு முழுவதும் சோதனை நடந்து உள்ளன.இவர்களுக்கு ‘நகர நக்சல்பாரிகள்’ என்ற முத்திரை குத்தியுள்ளனர். சனாதன் சன்ஸ்தா ( Sanathan Sanstha) என்ற அமைப்பு ஈத் பண்டிகையின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்தது; கௌரி லங்கேஷ்,தாபோல்கர்,கோவிந்த் பன்சாரே போன்ற பகுத்தறிவாளர்களின் கொலைகளில் இந்த சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்புக்கு பங்கு உள்ளது; மக்களுடைய கவனத்தை இதிலிருந்து திருப்புவதற்காக இத்தகைய சோதனைகள் நடந்துள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.
மகாராட்டிரா மாநிலம், பீம் கொரேகானில் தலீத் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பிறகு தங்கள் வசம் உள்ள அமைப்புகளை பயன்படுத்தி ,இந்த அறிஞர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையும்,திரித்துக் கூறப்பட்ட கதைகளையும் சொல்லி அவர்களை மாவோயிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு உள்ளவர்கள் என்று மத்தியில் உள்ள பாஜக அரசும், மகாராட்டிர மாநில பாஜக அரசும் சொல்லி வருகின்றன. இதுபோன்ற ஜனநாயக, மக்கள் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், தற்போது ஆட்சியில் இருக்கும் பாசிச அரசின் கோர முகத்தை வெளிக் காட்டுகிறது. அனைத்து வகையான மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இத்தகைய அடக்குமுறைகள் தருகின்றன.
கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கோருகிறது; அவர்கள் மீது இட்டுக்கட்டி புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது.
– இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரன் வெளியிட்டுள்ள அறிக்கை.