காட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்

சந்திரமோகன்

சந்திர மோகன்

கடந்த சில நாட்களில், சேலம் மாவட்டத்தில் வனங்களிலிருந்து வெளியேறி கிராமங்களுக்கு நுழைந்த காட்டு எருமை Indian Bison பற்றிய செய்திகள் பரபரப்புடன் வெளியாகியுள்ளன.

முதல் செய்தி:

1) சேர்வராயன் மலைப் பகுதியிலிருந்து வெளியேறி கன்னங்குறிச்சி கிராமத்தில் நுழைந்த காட்டெருமையை “மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்தில் கொண்டு போய் விடுகிறோம் ” என்ற பெயரில் அதை கொன்று விட்டனர்.

இரண்டாம் செய்தி:

2) விளாம்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஏழு காட்டெருமைகள் குள்ளம்பட்டி வனப்பகுதியில் நுழைந்துள்ளன; அவற்றை வெளியேற்ற வனத்துறை முயற்சி செய்கிறது.

குள்ளம்பட்டி எட்டுவழி சாலை பாதையில்தான் காட்டெருமைகள் அலைந்து கொண்டிருக்கின்றன என்பது மிகவும் கவனத்தை கோரும் தகவல் ஆகும்.

காட்டெருமைகள் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ள எட்டு வழி சாலை:

சேலம் – சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அலைன்மெண்ட்டானது, ஏற்கனவே சரக்குப் போக்குவரத்து மும்முரமாக இயங்கி வருகிற சேலம் வாணியம்பாடி சென்னை தடத்தின் சேலம் அரூர் நெடுஞ்சாலையின் அக்கம் பக்கமாகவே அமைகிறது. இந்த அரூர் மெயின் ரோட்டின் மேற்கு புறத்தில் சேர்வராயன் மலையும், கிழக்கு புறத்தில் அருநூத்து மலையும் கல்வராயன் மலையும் அமைந்துள்ளன.

எட்டு வழிச் சாலை செல்லும் குள்ளம்பட்டி வெள்ளியம்பட்டி குப்பனூர் அடிமலைப்புதூர் கிராமங்கள் வனங்களுக்கு மிக அருகாமையில் உள்ளவையாகும்; வன விலங்குகள் நடமாட்டம், மனிதர்- விலங்குகள் இடையே மோதல், பாதிப்பு பற்றிய தொடர் செய்திகள் ஊடகங்களில் அடிபடும் பகுதியும் ஆகும்.

சேர்வராயன் மலைக்கும் அருநூற்று மலைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 2 கி.மீ ஆகும். இரண்டு வனப்பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான காட்டெருமைகள், சிலவகை மான்கள், காட்டுப் பன்றிகள், குள்ளநரிகள்,கீரிகள், முயல்கள், மயில்கள் வாழ்கின்றன. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்கின்றன; தங்குகின்றன; திரும்புகின்றன.

கரடிகள், எறும்பு திண்ணிகள், மலைப் பாம்புகள், செந்நாய்கள், தேவாங்குகள், உடும்புகள் போன்றவை அருகி வருகின்றன /அழிந்து வருகின்றன. Endangered species ஆக மாறிவிட்டன.

விலங்கு சங்கிலியில் / Animals Chain விலங்குகளை அடித்து சாப்பிடும் சில மாமிச பட்சிணிகளின் (உதாரணம் : சிறுத்தைபுலி, கழுதைப்புலி, செந்நாய் …) எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் வேறு சில விலங்குகள் எண்ணிக்கை பெருகவும் செய்கின்றன.

காட்டெருமைகளும் அதன் வழித்தடமும்:

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972, முதல் பட்டியல், பகுதி 1 பாலூட்டிகள் [ The Wildlife Protection Act 1972, Schedule 1, Part 1 Mammals ] என்பதின் கீழ் வரிசை எண் 8 E ஆக வகைப்படுத்தப் பட்டுள்ள Gaur or Indian Bison, சர்வதேசிய அளவில் பாதுகாக்கப் படவேண்டிய விலங்கு இனமாகும். (IUCN Category).

இந்தியாவில் யானைக்கு அடுத்த படியாக மிகப்பெரிய தாவரங்கள் சாப்பிடும் விலங்கு காட்டெருமை ஆகும். புற்கள், செடி கொடிகள், இலைகள், பெரண்டைகள், பழங்கள் போன்றவை இவற்றின் உணவாகும். அதனுடைய சாணம் செடி கொடிகளுக்கான இயற்கையான உரமாகும். சாணம் மூலமாக காட்டெருமைகள் வெளியேற்றும் விதைகள் புதியதாக செடி கொடி மரங்களை உருவாக்க உதவுகிறது. பல்லுயிர் பெருக்கத்தில் இப்படியாக முக்கிய பங்கு வகிக்கிறது.

சராசரியாக 800 கிலோ துவங்கி 1300 கிலோ வரை எடை உள்ளதாகும். சில கி.மீ தூரத்தில் தனது உணவு, தண்ணீர், தங்குமிடம் ஆகியவற்றை அமைத்துக் கொள்கிறது. (யானைகள் போல நீண்ட தூரம் பயணம் செய்வதில்லை.). ஒரு பெண் காட்டெருமை தலைமையில் 15 முதல் 20 வரையில் ஒரு கூட்டமாக/மந்தையாக வாழ்கிறது. எண்ணிக்கை பெருகும் போது புதியதொரு மந்தையை உருவாக்கி கொள்கிறது.

1930 வரை தான், சேர்வராயன் மலைப் பகுதியில் சிறுத்தைகள் இருந்ததாலும், பின்னர் பலநூறாக இருந்த கழுதைப் புலிகள் மற்றும் செந்நாய்கள் போன்றவை பெரிதும் குறைந்து போனதாலும், சில நூறுகள் மட்டுமே என்று இருந்த காட்டெருமைகள் எண்ணிக்கை தற்சமயம் 5000 எண்ணிக்கையை எட்டி விட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எனினும், தமிழக வனத் துறையிடம் இந்த பகுதிகளில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை பற்றி எந்த ஆய்வும், விவரங்களும் இல்லை. த.நா வனத்துறையிடம் 2005ம் ஆண்டிற்குப் பிறகு Forest Working Plan என்பதே இல்லை என்பது விவாதிக்கப் படவேண்டிய முக்கிய பிரச்சினை ஆகும்.

டேனிஸ்பேட்டை முதல் அருநூற்றுமலை வரையிலான பைஸன் காரிடர்

சேர்வராயன் மலையின் மேற்கு புறமுள்ள டேனிஸ்பேட்டையில் துவங்கி, கிழக்கில் மஞ்சவாடி கணவாய் & அருநூற்று கணவாய் வழியாக கல்வராயன் மலை வரையிலான வனப் பகுதிகளில், காட்டெருமை வழித்தடம் /வாழ்விடம் விரிந்து அமைந்துள்ளது. 8 வழி பசுமை சாலை வனப் பகுதியில் இரண்டு கி.மீ தூரம் அமையத் திட்டமிடப் பட்டுள்ள மஞ்சவாடி கணவாயின் வெள்ளையப்பன் கோவில் அருகிலிருந்து தான், தினமும் காட்டெருமைகள் இடம் மாறுகின்றன.

சேர்வராயன் மலையிலிருந்து அருநூத்து மலைக்கு அங்கிருந்து இங்கும்:

இந்தப் பகுதியில் வசிக்கும் காட்டெருமைகள், உணவுக்காக குப்பனூர் ஊராட்சிக்குட் பட்ட கோணக்கல் கரடு என்கிற சுமார் 1300 ஏக்கர் பரப்பளவுள்ள மேய்ச்சல் புறம்போக்கு பகுதிக்குச் செல்கின்றன. வண்டிச் சோலை கரடு வரை இதன் மேய்ச்சல் பகுதி வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டியை தொட்டு கூட்டாத்துப்பட்டி ஊராட்சி வரை விரிவடைந்து சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கும் செல்கிறது.

சேர்வராயன் மலை ஏற்காட்டில் காப்பித் தோட்டங்கள் பெருக்கத்தினால், மேய்ச்சல் நிலப்பரப்புகளை இழந்ததாலும் … காட்டெருமைகளுக்கு இந்த பகுதி முக்கியமானதாக மாறிவிட்டது. இன்றளவும், கோணக்கல் கரட்டில், காட்டெருமைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியை ஊடறுத்து எட்டுவழி சாலை செல்வதாக திட்டமிடப்பட்டு உள்ளது.

விலங்குகள் பயன்படுத்தும் பல்வேறு நீர்நிலைகள் மீதும் இந்த ராட்சத சாலை செல்லத் திட்டமிடப்பட்டு உள்ளது. Access controlled Express way என்ற பெயரில் அரண்கள் போல சுவர்கள் அமைக்கப்பட்டால் வழித்தடம் அடைபட்டு போகும். இரவு நேர வாகன வெளிச்சம், ஒலி மாசு விலங்குகளின் நடமாட்டத்தை, செயல்பாட்டை பாதிக்கும். வன விலங்குகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழையும். மனிதன் விலங்கு மோதலில் இருதரப்பு உயிர்களும் பறிபோகும்.

தேவையா இந்த அழிவு?

மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் MOEF குறிப்பான வழிகாட்டுதலாக Specific ToRல் இந்த வனப் பகுதியை தவிர்க்க சொல்லிய போதும், கடந்த ஜூன் முதல் வாரத்தில், தமிழக அரசாங்கம் இந்தப் பகுதியிலுருந்து தான் “சர்வே” என்ற பெயரில் ஏழை, சிறு,குறு விவசாயிகள் மீது அராஜகமாக தாக்குதலை தொடுத்தது என்பது நினைவு கூரத் தக்கது.

மத்திய அரசே! Attention Wildlife Advisory Board காட்டெருமைகள் முதலாவது பட்டியலில் இடம் பெறுவதால்… சேர்வராயன் மலை முதல் அருநூத்து மலை வரையிலான இப்பகுதியை Bison காட்டெருமைகள் சரணாலயமாக அறிவித்திடுக! எட்டுவழி பசுமை விரைவுச் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காதே!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.