பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை

ஸ்ரீபதி பத்மநாபா

பாண்டியனைக் கொன்று தன் இடமுலை திருகி வீசி மதுரையை எரித்தாள் அவள். அதன் பின்னர் மதுரை விட்டு நீங்கி வையையாற்றின் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாட்டை அடைந்து அங்கு திருச்செங்குன்று என்ற மலை மீதேறி ஓர் வேங்கை மரத்தின் நிழலில் வந்து நின்றாள். அங்கு தேவர்கள் பூமாரி பொழிய ஆகாயத்தினின்றும் அழகிய விமானம் கீழே இறங்க, அவ்விமானத்தில் தெய்வ வடிவோடு கோவலன் இலங்க, கண்ணகி களிகூர்ந்து அவ்விமானத்திலேறி விண்ணுலகடைந்தாள்.
*
செங்குன்றூருக்கு (இன்று பிரளயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் செங்கன்னூர்) சேரன் செங்குட்டுவன் வருகிறான். அங்கு மக்கள் வியந்தோதும் கண்ணகியின் கதையைக் கேட்கிறான். இமயத்திலிருந்து எடுத்து வந்த ஒரு கல் கொண்டு சிலை வடித்து செங்கமலவல்லி எனும் தெய்வமாக்குகிறான்.
*
பல நூற்றாண்டு ஐதீகத்தின் கீற்றுகள் இவை. இன்றும் இந்தக் கோவிலில் கண்ணகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். அதுவும் தன் மாதவிடாய் நாட்கள்கூட இன்னும் தீராத ருதுவதியாய்.
*
கேரளத்தில் கோட்டயம் திருவல்லா கடந்து சபரிமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் செங்கன்னூர். பம்பை ஆற்றங்கரையில் பரந்து விரிந்து கிடக்கிறது செங்கன்னூர் மகாதேவர் கோவில்.

பெயரில் ஆண் தெய்வம் இருந்தாலும் செங்கன்னூர் பகவதி என்றுதான் சொல்வார்கள்.

இந்தக் கோவிலின் மேல்சாந்திக்கு மற்ற கோவிலின் சாந்திகளில் இருந்து வேறுபட்ட ஒரு முக்கியமான நித்தியக்கடன் ஒன்று உண்டு. இரவுகளில் இணத்தோர்த்து (இணைத்துவர்த்து) உடுத்துறங்கும் தேவியின் உடையாடையில் மாதவிடாயின் அம்சம் ஏதேனும் இருக்கிறதா என்று தினமும் காலையில் பரிசோதிக்கும் கடன் அது.

தூமையின் அம்சம் இருக்குமாயின் அந்த உடையாடையை கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார் அவர். கோவிலின் தந்திரி வகையினரான தாழமண் மற்றும் வஞ்சிப்புழை இல்லத்தைச் சேர்ந்த மூத்த பெண்கள் யாரேனும் வந்து விலக்கை உறுதிப்படுத்துகிறார்கள். ‘திருப்பூத்து’ உறுதியானவுடன் தேவியின் நடை அடைக்கப் படுகிறது. ஸ்ரீகோவிலுக்கு வெளியே நாலம்பலத்து க்குள் ஏதேனும் ஓர் இடத்தில் உற்சவ தேவியாகிறாள் அவள். இப்போது அவள் தமிழ் மரபுப்படி வெள்ளை ஆடையணிந்த செங்கமலவல்லி.

நான்காம் நாள். பம்பை நதிக்கரையின் மித்திரக் கடவுத்துறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்குப் புனித நீராட்டு செய்யப்படுகிறது. திருப்பூத்து ஆறாட்டு. பின் யானையின் மீது அமர்ந்து கோவிலுக்குச் செல்கிறாள். கோவில் வாசலில் மகாதேவன் அவளுக்காக இன்னொரு யானையில் காத்துக்கொண்டிருக்கிறார். நாலம்பலத்தை மும்முறை பிரதட்சணம் செய்கிறார்கள். மகாதேவன் கிழக்குத் திசையிலும் வல்லி மேற்குத் திசையிலுமாகத் தங்கள் நடைகளுக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.

கொடுங்கல்லூர் தேவி புராணத்திலும் கண்ணகி வந்து சேர்ந்த காதை இவ்வாறே இருக்கிறது. ஆனால் கொடுங்கல்லூர் தேவிக்கு இந்த மாதவிடாய் நாட்கள் இல்லை.

முன்பெல்லாம் மாதம் தவறாமல் ஏற்பட்டுக் கொண்டிருந்த(!) விலக்கின் கிரமம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும், பக்தர்களிடம் திருப்பூத்து ஆறாட்டின் மகிமை இன்னும் மங்கி விடவில்லை. தேவியின் திருப்பூத்து உடையாடை பக்தர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. அது வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் என்பது ஒரு நம்பிக்கை.

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, முன்னாள் கவர்னர் ஜோதி வெங்கடாசலம், சித்திரைத் திருநாள் மஹாராஜா, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரும் இந்த உடையாடைக் காணிக்கையைப் பெற்றிருக்கின்றனர். தேவியின் உடையாடையைப் பெறுவதற்கு முன்பதிவு அவசியம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு அந்தத் தூமைத் துணி முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் ‘மலையாளக் கரையோரம்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து இந்தப் பத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி பத்மநாபா எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.