தினகரன் செல்லையா
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் சென்றபோது மதுரையை ஒட்டி ஈழ அகதிகள் இருக்கும் முகாமிற்கு சென்று வந்ததிலிருந்து அவர்களின் அவல நிலை அடிக்கடி மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதில் பலவித சிக்கல்கள்.
உண்மையில் தமிழ்நாட்டில் உரிமைகளே இல்லாத கடைக்கோடி மனிதர்களாக,அடிமைகள் போல், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைவிட கொடுமையான நிலையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு ஆதரவாய் குரல் எழுப்புவோர் எவருமில்லை.
சமீபத்தில் தொ. பத்தினாதன் எழுதியிருக்கும் “தமிழகத்தின் ஈழ அகதிகள்” நூலை வாசிக்கும்போது எழுந்த எண்ணத்தை, மனவலியை விவரிப்பது கடினமே. விளிம்பு நிலைக்கும் கீழிருக்கும் தமிழகத்தின் ஈழ அகதிகளின் உரிமைக் குரலின் மொத்த பதிவாக இந்த நூல் இருப்பது வாசிக்கும் யாருக்கும் எளிதில் விளங்கும்.
“ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நடத்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத் தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே ‘போரின் மறுபக்கம்’ என்னும் சுயசரிதை நூலை எழுதிக் கவனம் பெற்ற பத்தினாதன் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாகக் கேட்கும் வினாக்கள் கூர்மையும் காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது.” என இந்த நூல் பற்றி பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தின் ஈழ அகதிகள் நூலின் சில வரிகள் :
// ஓட்டுரிமையிருந்தால் மட்டும் நாடிவரும் இடைநிலைச் சாதிச் சமூகம் எதுவுமற்ற அகதிகளுக்கு என்ன செய்வார்கள்? கொடுக்கல்-வாங்கல் -வியாபாரம் அதுவே நமக்கு உலகமயமாக்கல் மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுத்த பாடம்; அகதிகளிடம் திருப்பிக் கொடுக்க என்ன இருக்கிறது? ஓட்டு இருக்கிறதா? தலித் மக்களையும்விட ஒதுக்கப்படுகிறார்கள் அகதிகள். ஓட்டுரிமை உள்ள தலித்துகளின் நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அதற்கும் கீழ்நிலையே அகதிகளின் நிலை.
‘கல்வி அறிவில்லாத, அறியாமையின்
இருளில் தவிக்கும் இந்த ஏழை
தனக்கெதிரான சட்டங்களையோ
ஆட்காட்டிகளின் தீச்செயல்களையோ
வேலை கொடுப்போரின் கொடுமைகளையோ
எதிர்க்கும் சக்தியற்றவர்கள்’
என்று இந்திய வம்சாவழித் தமிழருக்காக முதன் முதலில் குரல் கொடுத்த பொன்னம்பலம் அருணாச்சலம் 1916 ஆம் ஆண்டு கூறியது இன்று தமிழ்நாட்டு ஈழத்தமிழ் அகதிகளுக்குக் கனகச்சிதமாகப் பொருந்துவதை எண்ணி என்ன செய்ய? //
// மெத்தப்படித்தவர்களின் அறிவுதான் இன்று உலகம் முழுவதும் அகதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆயுத உற்பத்தி பெருக பெருக அகதிகளும் பெருகிக்கொண்டேதான் இருப்பார்கள்.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். //
//தண்ணீர் இல்லை, மின்சாரமில்லை, கழிவறையில்லை, ரேஷன் கடையில்லை. 90களில் கட்டிக் கொடுத்த ஓலைக் கொட்டில் இன்றுவரை அப்படியே இருக்கிறது. இத்தனையும் மனிதன் வாழத் தேவையில்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சுதந்திரம் மட்டுமாவது வேண்டாமா?//
//இலங்கையில் சிங்களவர்களிடத்தில் அடிமையாக வாழ்வது கேவலமா? தமிழ்நாட்டிலே தமிழர்கள் வாழும் பகுதியில் “தொப்புள் கொடி உறவு” என்று அடிமையாக வாழ்வது கேவலமா?//
வலிகளோடு இந்த நூலை படிக்கும்போது ஒரு விடயம் நன்றாகவே விளங்கும், ஈழப் போரை முன்னிறுத்தி ஆதாயம் தேடும் எந்த ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ எவருமே தமிழ்நாட்டில் அடிமைகளை விட மோசமான நிலையில் இருக்கும் ஈழ அகதிகளை கண்டுகொள்வதில்லை என்பது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லாதவரையில் இவர்களுக்கு ஒரு விடிவு இல்லை என்பதைக் காரணம் கூறி கைகழுவுவதில் வல்லவர்கள் இவர்கள்!.
இந்திய அரசைக் சாக்காட்டி, வெளிநாடுகளில் வசதியாய் வாழும் ஈழத் தமிழர்கள் தமிழத்தில் உள்ள அகதிகளுக்கு உதவாமல் இருப்பது ஏனோ?
காலச்சுவடு பதிப்பகம்/96 பக்கம்/ரூ.80.
தினகரன் செல்லையா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்.