பீட்டர் துரைராஜ்

இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன்.
பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சார்ந்த ரவியை,தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி ரேவதி திருமணம் செய்துகொள்கிறாள். எந்த நல்ல பழக்கமும் இல்லாத கணவனின் அடி,உதை,கொடுமைகளின் தொடர்ச்சியாக தீக்குளிப்புக்கு உள்ளாகிறாள். அவளை கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஓரிரு நாட்களில் மரிக்கிறாள். அவளது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுதான் கதை. திருப்பங்கள் இல்லை; சஸ்பென்ஸ் இல்லை. உரையாடல், உரையாடல். உரையாடல்தான்.
பர்மா நகரைச் சார்ந்த ரவிதான் கணவன். பர்மா அகதிக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை இவ்வளவு எதிர்மறையாக சித்தரிக்கும் காரணம் என்ன என்று தெரியவில்லை. அல்லது இது ஒரு யதேச்சையான நிகழ்வா? பொறியியல் பட்டதாரியான அவளை வேலைக்கு அனுப்ப அவள் கணவன் சம்மதிக்கவில்லை.நகைகளை விற்றுவிடுகிறான்.பெற்றோரிடம் பணம் கேட்கச் சொல்லி கொடுமைப்படுத்துகிறான். இவனுடைய கொடுமைகளுக்கு அவள் எதிர்வினை ஆற்றவேயில்லை.ஒரேயொரு அத்தியாயத்தில் மட்டுமே அவள் தன் தாயோடு மனதிற்குள் பேசுகிறாள்.ரவியின் தாய்,தங்கை நாவலில் அதிகமாக பேசப் படவில்லை.
இவள் தந்தை நடேசன் தலைமை ஆசிரியர், காவல் நிலையத்திற்கு வருவதை அவமானமாக நினைப்பவர்.தாய் அமராவதி. இவர்கள் மூலமாக சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.படிக்க வைத்து,ஆட்டோ ஓட்டும் ரவிக்கு திருமணம் செய்வித்து, இறக்கும் தருவாயில் தன் மகளை மருத்துவ மனநிலையில் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஊடாக கதை நகர்கிறது.அவர்களிடம் உள்ள பணம் உயிரை மீட்டுத் தருமா? ரேவதியின் கல்லூரித் தோழி அருண்மொழிதான் அவள் சகோதரனின் மனைவி. எல்லாம் சரி. இமையம் என்ன சொல்ல வரும் செய்தி என்ன? பேச விரும்பும் அரசியல் என்ன?
கோரிமேடு மருத்துவமனையின் தீக்காய வார்டு, அதில் வரும் உறவினர் மூலம் விதவிதமான சம்பவங்களை நூலாசிரியர் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். காவல் நிலையத்தில் பிரேத பரிசோதனைக்கு முன்பு நடக்கும் நிகழ்வுகள் இயல்பாக உள்ளது. கொளுத்திய கணவனை போலீசிடம் மாட்டி விடலாமா? கூடாதா என்பது பற்றி ஒரு விவாதமே நடக்கிறது. நமது உறவினரை மருத்துவமனையில் வைத்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நோயாளிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் பேசுகிற வசனங்களில் இமையத்தின் முத்திரை தெரிகிறது.
ஆனால் இந்த நாவல் பல கேள்விகளை என்னுள் எழுப்புகிறது. இது சொல்ல விரும்பும் செய்தி என்ன? விபத்துக்கு உள்ளானவளின் கணவன் நேரடியாக எங்கும் பேசப்படவில்லை. வர்க்க வேறுபட்டின் காரணமாக மட்டுமே ரேவதியின் பெற்றோர் தன் மருமகனை, பேரக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடியுமா என்ன?
பணத்தினால் ஒரு பயனும் இல்லை என்னும் பொருள்படும்படி ‘ செல்லாத பணம்’ என்று இந்த நாவலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.ஒரு பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? நாவலின் பெயர்க் காரணம் சரியாகத் தோன்றவில்லை.
கோரிமேடு மருத்துவமனை சென்று வந்த உணர்வை, காவல்நிலையம் சென்று வந்த உணர்வை, தீ விபத்தில் மாட்டிக் கொண்டவர்களோடு நாம் புழங்கிய உணர்வை இந்த நாவல் ஏற்படுத்தும்.
கிரியா பதிப்பகம் /ஜனவரி 2018/222 பக்கம்/ ரூ.285.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.