கணேசன் சந்திரசேகரன்
கடந்த இரண்டு மாதங்களாக ஐநா சபையிலும், ஐரோப்பிய ஒன்றியங்களிலும், உலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாண்பினை காக்கவும், அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக நின்றவர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்கினை எதிர் கொள்ளவும், தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்காக தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட 13 தமிழர்களின் உயிர் தியாகத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் அலைந்து திரிந்து கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து இந்திய அரசால் கைது செய்யப்பட்டார். “Look Out Notice” என்று கூறப்படும் தேடப்படும் குற்றவாளிகளுக்கான முறையைப் பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வந்து இறங்கினாலும் கைது செய்யும் வண்ணம் இந்திய அரசு அறிவித்திருந்தது. ஊழல் செய்தவர்கள், கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கடுமையான தண்டனைகளில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் மட்டுமே இதுபோன்ற வழக்கங்களின் அடிப்படையில் கைது செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் வெளிப்படையாக தனது அரசியல் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நபராகவும், உலகத்தில் பல்வேறு நாடுகளில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும், பெரும் ஆதரவையும் பெற்று இருக்கும் ஒரு தமிழ் தேசிய அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை ஒரு குற்றவாளியைப் போல் காட்டி கைது செய்வது மட்டுமல்லாமல் பல மணி நேரங்கள் யாரிடமும் தொடர்பில் கொள்ள முடியாத வண்ணம் தனி அறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பொதுமக்களும் இயக்க அரசியல் கருத்தியல் வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.
1984 ஆம் ஆண்டு போபால் நச்சு வாயு விபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காரணமாயிருந்த வாரன் ஆண்டர்சன் என்ற கொலை குற்றவாளியை இதே இந்திய ஒன்றிய அரசு கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பத்திரமாக அவனது நாட்டிற்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தது. அதன்பின்பு வாரன் ஆண்டர்சன் எந்த இடத்திலும் கோபால் வழக்கில் இந்திய நீதிமன்றங்களில் வந்து நிற்கவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.
2016 ஆம் ஆண்டு 9000 கோடிக்கு மேல் வங்கி கடன் வாங்கி ஏமாற்றிய விஜய் மல்லையாவை பத்திரமாக வெளிநாடு செல்ல அரசு எந்திரங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தன. இன்றுவரை அந்தக் குற்றவாளி இந்திய ஒன்றியத்தின் எந்த சிறையில் அடைக்கப்படவில்லை.
நடப்பு 2018 ஆம் ஆண்டில், சுமார் 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட வேண்டிய நீரவ் மோடி பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததில் யாருடைய கை வேலை செய்தது என்பது இந்தியா முழுவதும் அறிந்த ஒன்று. இன்று வரை இந்த குற்றவாளி இந்திய ஒன்றிய நீதிமன்றத்தில் வந்து நிற்கவில்லை.
இதே ஆண்டில் சுமார் 2000 கோடிகளுக்கு மேல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஊழல் செய்த லலித் மோடி வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் அவர்களால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு பத்திரமாக இந்தியாவை விட்டு அனுப்பிவைக்கப்பட்டார். இன்று வரை இந்த குற்றவாளி இந்திய ஒன்றிய நீதிமன்றத்தில் வந்து நிற்கவில்லை.
சமூக செயல்பாட்டாளர்கள் கௌரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரின் கொலைக்கு காரணமாக இருந்த மையப் புள்ளிகள் யாவையும் இன்னும் தொடப்படாமலேயே இருக்கின்றன. அந்த குற்றவாளிகள் எந்த ஒரு நீதிமன்றத்தின் படிகளையும் மிதிக்கவில்லை.
தமிழகத்தை உலுக்கிய சங்கர மடத்தை சேர்ந்த சங்கரராமன் கொலைவழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஜெயேந்திரன் விடுதலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இன்று வரை சங்கர்ராமன் கொலைக்கு காரணமானவர்கள் என்று யாரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.
காடுகளை அழித்து மடங்களை கட்டி காசு பார்க்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் மீது, நடிகை ரஞ்சிதாவோடு தவறான தொடர்பு இருந்ததாக வீடியோ ஆதாரங்கள் தரப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நித்தியானந்தா மீது, ஊடக பெண் நிருபர்கள் மற்றும் ஊழியர்களை தவறான வழியில் தான் அந்தப் பதவியை அடைந்தார்கள் என்று கூறி அவமானப்படுத்திய எஸ்வி சேகர் மீது எந்த ஒரு சிறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏனென்றால் இந்திய ஒன்றியத்தின் பார்ப்பனிய அரசிற்கு (அது காங்கிரஸ் ஆனாலும் சரி, பாஜக ஆனாலும் சரி) இவர்களெல்லாம் தேசபக்தர்களாக தெரிகின்றனர்.
ஆனால் 2009 ஈழ இனப்படுகொலைக்கு பின்பு வெகுண்டு எழுந்த பல்வேறு தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் இந்த அரசுக்கு தேச விரோதிகளாக பெறுகின்றனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்ட 13 பேருக்கு நியாயம் கேட்டு ஐநா மன்றத்தில் கேள்வி எழுப்பியதையே நேரடி காரணமாகக் காட்டி இந்த முறை தோழர் திருமுருகன் காந்தியை கைது செய்திருக்கிறது இந்த மானங்கெட்ட இந்திய அரசு.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, ஸ்டெர்லைட்டை எதிர்த்து பேசினால் தேசத்துரோக வழக்கு போடப்படும் என்றால், இந்திய ஒன்றியம் யாருக்கான நாடு என்பதையும், அதில் அமையும் அரசு யாருக்கான அரசு என்பதையும் மக்கள் விழிப்போடு அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே நாட்டில் ஆளும் வர்க்கம் என்பது அதை எதிர்த்து கேள்வி கேட்பவரை எதிரியாக நினைப்பதென்பது உலகம் முழுதும் இருவரும் அடக்குமுறைதான். ஆனால் இந்திய ஒன்றியத்தில் தான் ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அது செய்யும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக பேசிய காரணத்திற்காக 13 பேர் அரசு எந்திரங்களால் கொலை செய்யப்படுவதும், அதனைக் கண்டித்து போராடினால், கேள்வி கேட்டால் தேசத்துரோக வழக்குகள் போடப்படுவதும் என்று ஒரு பாசிச கருத்தியலில் உச்சகட்டத்தில் நின்று கொண்டு அடக்குமுறை நடத்தப்படுகின்றன.
வரலாற்று படிமங்கள் எத்தனை இருந்தாலும், இந்த மடையர்களுக்கு ஒரு புரட்சியின், ஒரு எழுச்சியின், ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை தன்மையை புரிந்து கொள்ள முடியாது என்பதை இந்தக் கைதுகள் தெளிவாக காட்டுகின்றன. எவ்வளவு பெரிய ராணுவம் இருந்தாலும், எத்தகைய காவல் துறை கட்டமைப்பு இருந்தாலும் மக்களின் சக்தி தான் இறுதியில் வெல்லக் கூடியது என்பது அடிப்படை அரசியல் என்றறியாத இவர்கள் மக்களின் குரலை பிரதிபலிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள் தலைவர்களையும் முகாந்திரம் இல்லாத வழக்குகளில் அடைத்து வைப்பதன் மூலம் யாரோ ஒரு சிலருக்கு தங்களுடைய விசுவாசத்தைக் காட்டி தாங்கள் முன்பு செய்த ஊழல்களில் வழக்குகளிலிருந்தும், சேர்த்து வைத்த சொத்துக்களுக்கும் பாதுகாப்பு தேடுவதைத் தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை.
தோழர் திருமுருகன் காந்தி தனிமரம் அல்ல, ஓர் இயக்க அரசியல் செயல்பாடுகளில் மொத்த வடிவமாக நிற்கின்றார். பெரியாரிய, தலித்திய, மார்க்ஸிசிய தத்துவங்களை இன்னும் நேர்மையாக முன்வைக்கும் சமூக இயக்கங்கள் தோழர் திருமுருகன் காந்தியின் பின்னால் நிற்பதை இந்த அரசு உணர்ந்திருந்தாலும், உண்மை பக்கம் நிற்பதற்கு பதில், தங்களில் யார் சிறந்த அடிமை என்று நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் நலனை காப்பதற்கும், பார்ப்பனியத்தின் மனுநீதியை நிலைநிறுத்துவதற்கும் இவர்கள் செய்யும் அறம்பிழைத்த செயல்களுக்கு மக்கள் சரியான பதில் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்நிலையில் தமிழகத்தின் தினத்தந்தி செய்தித்தாள் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், தோழர் திருமுருகன் காந்தி தலைமறைவாக இருந்ததாகவும், இந்தியா வந்த உடன் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஊடக தர்மம் என்பது ஏதோ அடிமட்டத்தில் இருக்கும் இரண்டு மூன்று பேரைப் பற்றி விசாரணை செய்து எழுதுவது அல்ல. அரசு தவறிழைக்கும் போது அந்த தவறின் உண்மைத்தன்மையை மக்களுக்கு வெளிப்படையாகவும், பயமின்றியும் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்கள், இது போன்று இந்திய பார்ப்பனிய அரசிற்கு ஒத்து ஊதும் வேலையை செய்வது என்பது மக்களாட்சி முறைக்கு உகந்தது அல்ல.
இதுபற்றி தினத்தந்தி அலுவலகத்தில் கேட்ட போது, காவல்துறை கொடுத்த தகவலை நேரடியாக மொழிபெயர்த்து போட்டதாகவும், தவறுதலாகதான் அந்த செய்தி அத்தகைய விளக்கத்தை கொடுத்துள்ளதாகவும், நாளை (11-08-2018) உடனடியாக மறுப்பு தெரிவிக்க போவதாகவும் பதில் கொடுத்தனர். தமிழகத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் பாமர மக்கள் மற்றும் கிராமங்கள் நோக்கி கொண்டு செல்லப்படும் ஒரு செய்தித்தாள் நிறுவனம் உண்மைத் தன்மையை ஆராயாமல் காவல்துறை சொன்ன ஒரு செய்தியை நேரடியாக போட்டு விட்டோம் என்று சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வருத்தம் தெரிவித்து , மன்னிப்பு கேட்கப் போவதாக கூறி இருப்பதனால் ஒரு நாள் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.
தொடர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளில் கருவியாக இருப்பது காவல்துறை தான். காவல்துறை வரும் ஏவல் துறைதான் அவர்களை நொந்து பயனில்லை என்று எங்கள் முன்னணி தோழர்கள் எங்களுக்கு அறிவுரை கூறும் போதெல்லாம் சற்று நெருடலாகவே இருக்கும். இந்த முறை அந்த நெருடல் இன்னும் அதிகமாகத் தான் இருக்கிறது. இரண்டு நாள் தொடர்ந்து இரவு வேலையாகவோ அல்லது வெளியூர் காவல் பணிக்கு செல்ல நேரிட்டால் கூட மூன்றாவது நாள் அவசர அவசரமாக ஓடி வந்து தங்கள் குழந்தைகளை பார்க்க துடிக்கும் இதே காவல் அதிகாரிகள், சுமார் இரண்டு மாதங்களாக வெளிநாடுகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒருவர் தன் குழந்தையின் முகத்தை கூட காண அனுமதிக்காத இந்த ‘மனிதத்தன்மையற்ற செயல்’ கட்சி, இயக்கம் என்று சாராமல் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டிய ஒன்று என்பதை நாங்கள் முன்மொழிய விரும்புகின்றோம்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை. எப்போது தமிழீழ மாவீரன் முத்துக்குமார் தன் உடலை தீக்கிரையாக்கி அறிவாயுதமாக ஏந்துங்கள் என்று எங்களுக்குக் கட்டளையிட்டாரோ, அன்று முதல் கருத்தியல் போர்களிலும், நேரடி மக்கள் பல போராட்டங்களில் மட்டுமே நாங்கள் பங்கு கொண்டு இருக்கின்றோம். ஒரு மக்களாட்சி தன்மையோடு கூடிய இயக்கத்தினை சீண்டி, அதை தடுமாறச் செய்யும் யுக்தியை இந்திய ஒன்றிய அரசு பலமுறை கையில் எடுத்திருக்கிறது. அதை திருத்திக் கொள்வதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் சிறந்த ஒன்றாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் எங்கள் பாதையும், கொள்கையும், சித்தாந்தமும் மாறப்போவதில்லை. ஆனால் எங்கள் தோழர்கள் மீது நீங்கள் தொடுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறை, எங்கள் போராட்டங்களின் வீரியத்தையும், வடிவத்தையும் மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஒரு குண்டர் சட்டத்தின் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம், மே 17 இயக்கத்தினையும், தோழர் திருமுருகன் காந்தியையும் அறிமுகப்படுத்தியது எடப்பாடியின் எடுபுடி அரசு. இன்று ஒரு தேசத் துரோக வழக்கின் மூலம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் மே 17 இயக்கத்தினை அறிமுகப்படுத்த இந்திய பார்ப்பனிய அரசு முடிவெடுத்து விட்டது நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். அதேநேரம் கைது செய்யப்பட்டுள்ள தோழரின் உடல் மற்றும் மன நலத்திற்கு எந்த தீங்கையும் ஏற்படும் என்றால், கைது செய்த காவல் துறைக்கும், செய்யச்சொன்ன இந்திய அரசுக்கும் போதாத வேலை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஒரு திருமுருகன் காந்தியை சீண்டி விட்டு, ஓராயிரம் திருமுருகன் காந்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.