முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே..
எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:
காலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை.
இந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி பரம்பரை வாரிசுரிமை (சொத்துரிமையிலும்) சம உரிமைகள் இருக்கும் வகையில் இச்சட்டம் (இந்து வாரிசுரிமை – தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989) நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆணைப் போலவே பெண்ணுக்கும் சொத்துரிமை கிடைத்தது. கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இந்த உரிமை நிலை நாட்டப்பட்டது.
அதேபோல் அனைத்துத் தமிழக அரசுப் பணியிடங்க ளிலும் (இட ஒதுக்கீடுகளை உள்ளடக்கி) பெண்களுக்கு 30% ஒதுக்கப்பட்டு அமலாக்கப் பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான்.
அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.
இந்த மூன்று சட்டங்களுமே பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்குவதிலும் பெண்ணை அதிகாரப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றக்கூடியவை.
பெண்கள் இருக்கும் காலம்தோறும் நினைக்கப்படுவீர்கள் அய்யா கலைஞரே….
என்றும் நிலைத்து நீடித்திருக்கும் ஒரு நூற்றாண்டு கால வாழ்வு உங்களது….
எழுத்தாளர் குட்டி ரேவதி:
சென்ற ஆண்டுகளில் மரித்த அரசியல் தலைவர்கள் தந்த அனுபவங்கள் எல்லாம் வேறாய் இருக்க, கலைஞரின் மறைவு மதிப்புமிக்கதாகவும் முதுபெரும் தலைவருக்கான எல்லா மரியாதைகளுடனும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.
போராடி, எழுதி, முழங்கி, சிறைப்பட்டு, மேடையேறி, அரியணையேறி, எதிர்த்து, முரண்பட்டு, விமர்சிக்கப்பட்டு, வீழ்ந்து, எழுந்து, வெளிச்சமாகி நீண்ட காலம் நம்மிடையே வாழ்ந்து பல களங்கள் கண்டு உதயஞாயிறொப்ப உதித்து மறைந்து எழுந்து எவருக்கும் நிகரில்லா தலைவனாகியவரை இவ்வளவு காலத்தொலைவு சளைக்காமல் ஓடிவந்தவரை வழியனுப்ப நாம் புதிய பாதைகளை வகுக்கவேண்டும்! புதிய உணர்வு கொள்ளவேண்டும்! வழக்கமான தலைவரும் அல்ல, வழக்கமான மரணமும் அன்று!
எழுத்தாளர் தீபா ஜானகிராமன்:
நம்மைத் தயார்படுத்திக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனாலும் காலமான செய்தி பார்த்ததும் கலங்கிப் போனது மனம்.
அடிமட்டத்திலிருந்து ஒருவர் அரசியல் தலைமை ஏற்க முடியும் என்பதற்கான கடைசி நம்பிக்கை அவருடன் செல்கிறது.
ஆறுதலுக்கான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. எதுவும் அவருடைய தொண்டர்களுக்கும், அபிமானிகளுக்கும் பயன்படப்போவதில்லை. அது தான் அவரின் பெருஞ்சாதனை.
வரலாறைத் தந்துவிட்டு வரலாறு மறைந்திருக்கிறது.
ஊடகவியலாளர் கார்த்திகா குமாரி:
திமுக வின் முதல் கூட்டத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு கூட்டம் விடாமல் சென்றவர் என் தாத்தா. ஒன்றிரண்டு முறை என்னையும் அழைத்து சென்றது உண்டு. அப்போது எனக்கு ஐந்து ஆறு வயதுதான் இருக்கும். ஒருமுறை அவரிடம் ‘திமுக ன்னா என்ன தாத்தா ‘ என்று கேட்டேன். அதற்கு அவர் யோசிக்காமல் சொன்ன பதில் ‘திரு மு கருணாநிதி என்பதன் சுருக்கம் தான் திமுக’.
இத்தனை வருடங்கள் கடந்தும் மனதில் நிற்கும் பதில் இது. அதற்கு அவர் ஏற்றவரும் கூட.
போய் வா உதயசூரியனே…