குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

செகோஸ்லோவாகியா கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த ஜீலியஸ் பூசிக் , நாஜி இராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டு தான் சந்தித்த அனுபவங்களை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். அவரது இறப்பிற்கு பின்பு ‘தூக்கு மேடைக் குறிப்புகள்’ என்ற பெயரில் வெளியான அந்த நூல் இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் பல பதிப்புகளை, பல மொழிகளில் இன்று வரை கண்டுவருகிறது. குணா கவியழகனின் விடமேறிய கனவு நாவலைப் படித்துக் கொண்டு இருந்த போது எனக்கு ஜூலியஸ் பூசிக்தான் நினைவுக்கு வந்தார்.

தன் காதலியைவிட்டு, தன் குடும்பத்தினரை விட்டு, தன் கிராமத்தை விட்டு ஈழ விடுதலைக்கு எண்ணற்ற இளைஞர்கள் போர்களத்தில் இருந்தனர். இப்போது ஈழம் கிடைத்துவிடும், அடுத்தமாதம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இருக்கிறார்கள். எல்லாமே தூசாகத் தெரிகிறது. ஆனால் பிரபாகரனை கொன்றாகிவிட்டது; இறுதி யுத்தத்தில் தோல்வி ஏற்பட்டுவிட்டது. இப்போது போராளிகளின் நிலைமை! இதுதான் ஒருவரிக் கதை.

இந்த நாவல் பிரபாகரன் இறப்புக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கிறது. சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்ட ஒரு போராளி ‘அரச பள்ளிக் கூடமாக’ இருந்து ‘புனர்வாழ்வு முகமாக’ மாற்றப்பட்ட இடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான்.

இவன் யார்? என்ன பெயர்? என்ன ரேங்? இது எதுவும் சிங்கள இராணுவத்துக்குத் தெரியாது. அதற்கு எவ்வளவு விவரங்கள் தெரியும் என்று இவனுக்கு தெரியாது. இந்த ஆடு புலி ஆட்டம்தான் கதை.

முகாமில் மலங்கழிப்பதோ, தண்ணீரைப் பெற்று உடலைத் துடைத்துக் கொள்வதோ ஒரு பிரச்சினை இல்லை. அற்பனாக நடிக்க வேண்டும்; அது தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கேள்விக்கு பதில் சொல்லுவதைவிட கேள்வி எதற்காக கேட்கப்படுகிறது என்பது முக்கியம். ஒத்திசைவு இருக்க வேண்டும். பதில்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அப்பப்பா! அற்புதமான நாவல். உளவியல் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைக்கும் அளவுக்கு செறிவு நிறைந்த நாவல். இலங்கைத் தமிழ் என்பதால் படிக்க சற்று சிரமமாக உள்ளது. ஆனால், கதை நம்மை இழுத்துச் செல்கிறது.

‘தோழர்களுடனேயே பகைமையுறுதல்’ ‘கூட்டுணர்வை இழத்தல்’, ‘தம்மை வழி நடத்தியவர்களிடத்தில் எந்த மகிமையும் இல்லை என இழிவுபெற வைத்தல்’ ‘சக தோழர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என அஞ்சித்தாமே எதிரியிடம் பாதுகாப்புத் தேடுதல்’ என எல்லாமும் முகாமில் நடக்கின்றன. ஆனாலும் ராசு அண்ணன், வர்மன், சுரேன், சஞ்சய் அண்ணன் இவர்களோடு கோசிகன் (உண்மையான பெயர்!) தப்பிக்க திட்டமிடுகிறான். ஒருவரை ஒருவர் நம்பியும் நம்பாமலும் பயணிக்கிறார்கள்.

இவ்வளவு பலவீனங்களுக்கு இடையிலும் ‘அக இயக்கத்தை’ அவதானிக்கிறார்கள். மஞ்சள் பத்திரிக்கை மூலம் செய்தி பரிமாற்றம் நடக்கிறது. இராணுவத்திற்கும் இராணுவ போலீசுக்கும் உள்ள முரண்பாடுகளை; இராணுவத்திற்கும் காவலுக்கும் உள்ள முரண்பாடுகளை; ‘கழுவிகளை’ பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிங்கள அடித்தட்டு மக்களை ஒடுக்கவே, தமிழ் பிரச்சினை கருவியாக கையாளப்பட்டு வருகிறது என்ற எண்ணம் குணா கவியழகனுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ சி்ங்கள காவல் பெண் நிசானியை அவ்வளவு உயர்வாக சித்திரிக்கிறார். அவளுடைய உதவிக்கு எதுவும் ஈடாகாது. நாவலின் இறுதிப் பகுதி உணர்ச்சிப்பிழம்பாக உள்ளது. அவன் அப்பா என்ன தவறு செய்தார்? அவன் காதலி என்ன செய்வாள்.

மரணத்திலிருந்து திரும்பிய ஒருவனால்தான் இவ்வளவு சுவைபட, தர்க்கத்தோடு, விலாவாரியாக சொல்ல முடியும். தோற்றபிறகு தான்சார்ந்த இயக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் தயக்கம். இது இவருடைய இரண்டாவது நாவல். தான்பட்ட சிரமங்களை, தன் பாரங்களை, தன் மனக் குமுறல்களை இறக்கிவைக்க குணா கவியழகன் இதனை எழுதி இருக்கிறாரோ?

அகல், 348 ஏ, டிடிகே சாலை, இராயப்பேட்டை, சென்னை௧4
256பக்கம் /ரூ. 240/ மே2015.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.