இரா. முருகவேள்

ஹீலர் பாஸ்கர் பேசும் மருந்தில்லா மருத்துவம், செவிவழி தொடு மருத்துவம், வீட்டுப் பிரசவம் ஆல்டர்நேட் தெரபி ஆகியவை தமிழர் மரபே இல்லை.
தமிழ் சமூகம் அக்கால அறிவியல் வளர்ச்சி அனுமதித்த அளவில் மிகச் சிறந்த மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் உருவாக்கியது. நோய்களையும் மருந்துகளையும் ஆவணப்படுத்தியது.
உள்ளூர் மட்டத்தில் கைதேர்ந்த மருத்துவச்சிகளும், தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவ அவர்களை விடப் பெரிய மருத்துவர்களும் கொண்ட ஒரு வலைப்பின்னல் இயங்கியது.
நோய்களைக் குணப்படுத்தவும், பிரசவத்துக்கும் நிபுணர்கள் உதவி தேவை என்பதை முழுவதும் உணர்ந்த சமூகமாக அக்கால தமிழ் சமூகம் இருந்தது.
ஈழ எழுத்தாளர் டேனியலின் அடிமைகள் நாவலில் உள்ளூர் மருத்துவச்சியால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரசவம் சிக்கலானபோது ஒரு தலை சிறந்த மருத்துவர் வந்து நிலைமையைச் சமாளிப்பதாக வரும்.
ஒவ்வொரு ஊரிலும் சிறந்த எலும்புமுறிவு நிபுணர்களும், தங்கி சிகிச்சை பெறும் நிலையங்களும் உண்டு. புத்துர் கட்டு, பெத்தே கவுடர் மருத்துவசாலை போன்றவைை உண்டு. நீவுவதிலும், சுளுக்கெடுப்பதிலும் தேர்ந்த குஸ்தி வாத்தியார்கள் இருந்தனர்.
பிற்காலச் சோழர் காலத்தில் குந்தவையே வைத்தியசாலை நடத்தியதாக வரலாறு இருக்கிறது.
தமிழ் சமூகம் மருத்துவமனைகளையும் மருத்துவத்தையும் மறுத்த சமூகம் அல்ல. வளர்ச்சியடைந்த பல மருத்துவமுறைகள் இல்லாமல் ஒரு சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்க முடியாது.
ஹீலர் பாஸ்கர் சொல்வது சித்தா, ஆயுர்வேதம், அலோபதி போல மருத்துவ முறையல்ல. ஒருவிதமான நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது.
மயிலிறகைக் கொண்டு குணப்படுத்தும் சமணர்கள், திருநீற்றைக் கொண்டு குணப்படுத்தும் சைவர்கள் ஆகியோருக்கு எதிராக விஞ்ஞானபூர்வ மருத்துவத்துக்காக நின்று போராடிய சித்த மருத்துவர்கள் இதை ஒருபோதும் தமிழர் மரபு என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இரா. முருகவேள், எழுத்தாளர்.