மலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது.
‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ்.
இது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ ட்ரோல்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடினர். சில இந்துத்துவ அமைப்புகள் ஹரிஷின் கைகளை வெட்டப்போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.
இதனால், தொடர்கதையை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்தார் ஹரிஷ். தகுந்த சூழல் வரும்போது நாவலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அடங்கிய ஒரு வாரத்தில் ‘மீசை’ நாவல் வெளியாகியுள்ளது. டிசி புக்ஸ் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது.